இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு வயது நூறு ….. காயங்களைத் தடவிப் பார்க்கிறேன்….

Posted by அகத்தீ Labels:

 


இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு வயது நூறு …..

 

காயங்களைத் தடவிப் பார்க்கிறேன்.

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

ஒரு தனிமனிதருக்கு வயது நூறு என்பதும் ; ஒரு இயக்கத்துக்கு வயது நூறு என்பதும் ஒன்றல்ல . அந்த இயக்கம் நூறாண்டோடு முடிவதல்ல ; வெல்வதும் ,வாழ்வதும் ,தொடர்வதும் அதன் இலட்சியம் சார்ந்ததும் ; சமூகத் தேவை சார்ந்ததும் ஆகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தேவை முடியவில்லை .முன்னிலும் அதிக தியாகத்தையும் போராட்டத்தையும் வரலாறு கோரி நிற்கிறது .

 

இந்திய கம்யூனிச இயக்கத்தில் முதல் நாற்று தாஸ்கண்டில் 1920 அக்டோபர் 17 அன்று நடப்பட்டது . அது குறித்துப் பேச வரலாற்று ஏட்டைப் புரட்டினால் கிட்டத்தட்ட அதற்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான எண்ணம் முளைவிட்டதை அறிய முடிகிறது .

 

 இந்திய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது . ஆங்கிலேய அரசாங்கத்தினை அனைவரும் வெறுக்கின்றனர் .வரிக் கொடுமை தாள முடியாததாக இருக்கின்றது .அப்படி வசூலிக்கப்படும் வரியும் ஆடம்பர நிர்வாக அமைப்பிற்குத் தீனி போடவே சரியாக இருக்கிறது .இதர இடங்களில் உள்ளது போலவே இங்கும் எந்தத் தொழிலாளர்கள் செல்வத்தினை உருவாக்குகிறார்களோ ; அந்தத் தொழிலாளர்கள் வறுமையில் வாட ; அந்தச் செல்வத்தினைக் கொண்டு ஆடம்பர வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர் .அகிலத்தின் கிளை ஒன்று இங்கே தொடங்கப்படுமானால் அகிலத்தின் கொள்கைகள்  தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டும்.”

 

1971 ஆகஸ்ட் 15 ஆம் நாள்சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலம்என்கிற சர்வதேச அமைப்பின் பேரவையில் கொல்கத்தாவிலிருந்து எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை வாசித்து கீழ்கண்ட முடிவையும் எடுத்துள்ளது .அக்கூட்டத்தில் கார்ல் மார்க்சும் ,பிரடெரிக் எங்கெல்சும் பங்கேற்றிருந்தனர் என்பது கூடுதல் செய்தி .

 

 இந்தியாவில் அகிலத்தின் ஒரு கிளையினை ஆரம்பிக்க அதிகாரம் அளிக்கக் கோரி கல்கத்தாவிலிருந்து வந்த ஒருவர் எழுதிய கடிதத்தினை செயலாளர் வாசித்தார் . அப்படியொரு கிளை அமைக்க ஆலோசனைக் கடிதம் எழுதும்படி செயலாளருக்கு பணிக்கப்பட்டது. அதே சமயம் அப்படி அமைக்கப்படும் கிளை சுயசார்புடையதாக இருக்க வேண்டும் என்றும் ; அதில் இந்தியர்களை உறுப்பினர்களாக்கும் அவசியத்தினை உணர்ந்திருக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடும்படி செயலாளருக்கு பணிக்கப்பட்டது .”

 

இக்கடிதம் எழுதியவர் யார் ? அந்த முயற்சி என்ன ஆனது ? விவரம் முழுமையாகக் கிடைக்கவில்லை . ஆனால் இங்கு காங்கிரஸ் கட்சியே 1885 ல் தான் தொடங்கப்பட்டது .அப்படி காங்கிரஸைத் துவக்கியதிலும் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் பங்கு குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. பெருமளவு தொழிற்சாலைகள் உருவாகாத காலம் அது . 1894 கணக்குப் படியேகூட 815 தொழிற் சாலைகள் இருந்தனஅவற்றில் 3.5லட்சம் தொழிலாளர்களே இருந்தனர் . ஆகவே அந்த கிளை அமைப்பு முயற்சி வெறும் எண்ணத்தோடு முடிந்திருக்கூடும் .

 

1917 ல் ரஷ்யப் புரட்சி வெற்றி பெறும் முன்பே இந்தியாவில் கம்யூனிசம் ,சோஷலிசம் , லெனின் ,மார்க்ஸ் , வர்க்கப் போராட்டம் போன்ற கருத்தோட்டங்கள் வந்து சேர்ந்து விட்டன .

 

வெளிநாட்டில் இயங்கிய புரட்சியாளர்கள் சோகன் சிங் பகான் , லாலா ஹர்தயாள் தலைமையில் 1913 ஏப்ரல் 13 ல் அமெரிக்காவில் ஒன்றுகூடினர் . ’அமெரிக்க பசுபிக் பிராந்திய ஹிந்த் கழகம்துவக்கினர் . இவர்கள் நடத்திய பத்திரிகைக்கு  கத்தார் [ புரட்சி] என்று பெயர் . இதனால் இக்கட்சி கதார் கட்சி என்றேஅழைக்கப்பட்டது . 1914 ல்  காமகட்டமாருஎன்ற ஜப்பான் கப்பலில் இக்கட்சி சார்பில் 400 பேர் புறப்பட்டனர் .கனடாவில் தரை இறங்க அனுமதிக்கப்பட வில்லை . பாபா குர்தித் சிங் தலைமையில் பலர் கடலில் குதித்து தப்பிக்க முயற்சித்தனர் . பிரிட்டிஷ் போர்க் கப்பல் சுற்றி வளைத்தது; மோதல் நடந்தது . துப்பாக்கிச் சூடு நடந்தது . இதில் ஓர் பிரிட்டிஷ் அதிகாரி உட்பட22 பேர் கொல்லப்பட்டனர் . ஏராளமானோரை கைது செய்யப்பட்டனர் . பலர் தப்பித்து கரையோர கிராமங்களில் தலைமறைவாயினர் .

 

முதல் உலகப் போர் தொடங்கியதும் கத்தார் கட்சி தலைமையினர் வேண்டுகோள்விட புரட்சியாளர் நாடு திரும்பினர் . ஆனால் அவர்களை நடுக்கடலிலேயே பிரிட்டிஷார் கைது செய்தனர் . அப்போதும் பலர் தப்பி இங்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் . துரோகி காட்டிக் கொடுத்ததால் சிக்கிக் கொண்டனர் . லாகூர் சதி வழக்கு 291 பேர் மீது புனையப்பட்டது .42 பேருக்குத் தூக்குத் தண்டனையும் 114 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது . கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து .ஆறு பேர் மட்டுமே தூக்கிலிடப்பட்டனர் .எஞ்சியோர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர் . பலருக்கு தண்டனை குறைக்கப்பட்டது .கத்தார் போராளிகளில் பெரும்பாலோர் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர் என்பது சாதாரணச் செய்தி அல்ல . தண்டனை பெற்ற ரத்தன் சிங் ,சந்தோஷ்சிங் 1922 ல் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தில் லெனினோடு பங்கேற்றனர் என்பது குறிபிடத் தக்கது .

 

லெனின் உன்னதமான தலைவர் அவர் நடத்தி வெற்றி பெற்ற சோசலிசப் புரட்சியி தூண்டுதலால் நான் உற்சாகமும், உணர்வும் கொண்டு தொழிலாளர் இயக்கத்தில் இறங்கிவேலை செய்ய முன் வந்தேன். அவர் காட்டிய வழியில் தொழிலாளர்கள் முன்செல்லவேண்டும். மேலும், “ தொழிலாளர்கள் பெருங்கிளர்ச்சி செய்து பொருளுடைமைபெறுவதோடு, அரசையும் தங்கள் வழி திருப்பிட வேண்டும்.தொழிலாளர் அரசாட்சியில் மனித தருமத்துக்கு அழிவு நேராது என்பது திண்ணம்

 

இப்படிச் சொன்னவர் தமிழ்த் தென்றல் திரு. வி. . 1918 ஆம் ஆண்டு உருவான முதல் தொழிற்சங்கம் பி அண்ட் சி ஆலைத் தொழிலாளர் சங்கமான சென்னைத் தொழிலாளர் சங்கமாகும் . இதில் வாடியா ,திரு.வி. ,திவான்பகதூர்  கேசவபிள்ளை , இராமஞ்சலு நாயுடு ,செல்வபதிச் செட்டியார் , என பலரும் நிர்வாகிகளாகச் செயல்பட்டனர் . சக்கரைச் செட்டியாரும் திரு வி கவுடன் தொழிற் சங்க கட்டமைப்பில் ஈடுபட்டவர் .திரு வி ,சக்கரைச் செட்டியார் போன்றோர் இறுதிவரை கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவில்லை .ஆயின் தமிழகத்தில் கம்யூனிச பயிர் வளர உழுது பாடுபட்டவர் அவர்கள் .

 

நேரு ,தாகூர் ,ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் லெனினைப் பற்றியும் சோஷலிசம் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டனர் .

 

முதல் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நாடெங்கும் தொழிலாளரிடையே போராட்ட எழுச்சியை உருவாக்கியது . இந்தியாவின் முக்கிய தொழில் நகரங்கள் அனைத்திலும் வேலை நிறுத்தங்கள் வெடித்தெழுந்த காலகட்டம்ரயில்வேயிம்லும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் போராட்டம் வெடித்த காலகட்டம் இது .இதன் கடும் எதிரொலிகாங்கிரஸ் கட்சியிலும் எதிரொலித்தது . 1920 செப்டம்பர் மாதம் காங்கிரஸ் மாநாட்டில்தலைமையுரையில் லாலா லஜபதிராய் வெளிப்படையாகச் சொன்னவரிகள் கொதிநிலையின் அளவீடு ஆகும் .

 

நாம் புரட்சிகரமான காலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை கண்டு நம் கண்களை மூடிக் கொள்வதில் எவ்வித பயனுமில்லை .இயல்பாகவும் பாரம்பரியமான முறையிலும் நாம் புரட்சியை விரும்பாதவர்கள்தான் .பாரம்பரியமாக நாம் மிக மெதுவாகச் செல்கின்ற மக்கள்தாம் .எனினும் நகர்ந்து செல்வது என நாம் தீர்மானித்த பிறகு,நாம் விரைவாகவும் வேகமாகவும் அடியெடுத்து வைத்து நகர்வோம். உயிரோடு இருக்கின்ற எந்த இனமும் அதன் உயிர் வாழ்வின் போது புரட்சிகளில் இருந்து முற்றிலுமாக தப்பித்துவிடமுடியாது .”

 

ரஜினி பாமிதத்தை மேற்கோள் காட்டி சுகுமால் சென் கூறுகிறார் , “ இதன் தொடர்ச்சியாகமார்க்சிய தத்துவத்தின் முதல் ஒளிக்கீற்று இந்தியாவை வந்தடைந்ததும் ,இந்திய சமூகத்தில்தெளிவு பெற்ற ஒரு பிரிவினர்துவக்கத்தில் சிறியதாக இருப்பினும்கூட இந்த புரட்சிகரத்தத்துவத்தால் கவரப்பட்டனர் . இந்திய அரசியல் வானில் இப்புரட்சியின் செல்வாக்கை நேரடியாக உணரத் தலைப்பட்டனர்.”

 

ஆம் . 1920 ஆக்ஸ்ட் 17 ல் தாஷ்கண்டில் கம்யூனிஸ்ட் இயக்கக் கிளை பிறந்தாலும் அதற்கு முன்பே கர்ப்பச் சூழல் இந்திய அரசியல் வானில் தெளிவாக உணரப்பட்டது.

 

முதல் உலகப் போர் முடிவில் துருக்கி மீது பிரிட்டனும் பிரான்சும் தங்கள் ஆதிக்க வளையத்தை இறுக்கினர் .துருக்கி உடைக்கப்பட்டது . உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் துருக்கியை தங்களின் புனித அரசாகக் கருதினர் . துருக்கி காலிபாவின் பதவியை பிரிட்டிஷார் பறித்தது .முஸ்லீம்களின் கோபத்தைக் கிளறியது . இவர்கள் துருக்கி நோக்கி கால்நடையாகவே புறப்பட்டனர் . இந்த இயக்கம்கிலாபத் [எதிர்ப்பு] எனப்பட்டது . மீட்கக் கிளம்பியோர் முஜாஹித்கள் அல்லது ஹிஸ்ரத்கள் என அழைக்கப்பட்டனர் .

 

இப்படி பயணப்பட்டோரை ஆப்கானிதானில் சந்தித்தவர் எம் .பி பி டி ஆச்சார்யா. தமிழ்நாட்டைச் சார்ந்த இவரின்முழுப் பெயர் மண்டையம் பிரதிவாதி பயங்கரம் திருமாலாச்சாரியார்.கன்னடம் பூர்விகம் பல தலைமுறையாக திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் வசித்தவர் .ஆஷ்துரை  கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர் . வெளிநாட்டில் வாழ்ந்த தீவிரவாத குழுக்குகளோடு தொடர்பு கொண்டவர் . 1919 மே 7 அன்று லெனினைச் சந்தித்த குழுவில் இடம் பெற்றவர் .காபூலில் நிழல் இந்திய அரசை அமைத்து அதன் பிரதமராக இருந்தவர் உத்திரப்பிரதேசைச் சார்ந்த குறுநில மன்னர் ராஜா மகேந்திர பிரதாப் சிங் [ 1957 ல் வாஜ்பாயை மதுரா தொகுதியில் தோற்கடித்தவர்] . அவருடன் எம் பி பி டிஆச்சார்யா,செண்பகராம் பிள்ளை ,அப்துல்ராய் , பஞ்சாபி திலீப் சிங் ,பர்கத்துல்லா ,இப்ராஹிம் ஆகியோர் லெனினைச் சந்தித்துள்ளனர் .

 

இந்த எம் பி பி டி ஆச்சார்யாவும் அப்துல் ராயும் ஆப்கானிஸ்தானில் முஜாஹிர்களை  சந்தித்து கம்யூனிசம் பற்றி பேசினர் .விவாதித்தனர் . முகமது ஷாபிக் சித்திக் தலைமையில் ஐந்து பேரை வென்றெடுத்தனர் .அவர்கள் தாஷ்கண்ட் சென்றனர்.  இது போல் எண்பதுக்கும் மேற்படோர் கருத்தால் கவரப்பட்டு மாஸ்கோ ராணுவப் பள்ளிக்குச் சென்றனர் .

 

தாஷ்கண்ட் சென்ற முகமது ஷாபிக் சித்திக் அங்குஜமீந்தார்என ஒரு ஏட்டை கம்யூனிஸ்ட் பிரச்சாரத்துக்காகத் துவக்கினார் . இந்தியாவில் கம்யூனிச பிரச்சாரத்துக்காகத் துவக்கப்பட்ட முதல் ஏடு இதுவே .ஒரே இதழுடன் இதன் ஆயுள் முடிந்தது . அங்கு இவர்களால்இந்திய புரட்சியாளர் சங்கமும்துவக்கப்பட்டது .

 

இந்தச் சூழலில் 1920 அக்டோபர் 17 ஆம் நாள் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது . வங்கத்திலிருந்து சென்ற புரட்சியாளர் நரேந்திரநாத் [ இவர் தன் பெயரை மனபேந்திர நாத் ராய்எம் என் ராய் என மாற்றிக் கொண்டார் ], அவரது மனைவி ஐரோப்பியரான ஈவிலின் டிரெண்ட் ராய் , அபானி முகர்ஜி ,அவரது மனைவி ரஷ்யரான ரோசாபிட்டிங் , முகமது ஷாபிக் சித்திக்,தமிழகத்தைச் சார்ந்த எம் பி பி டி ஆச்சார்யா ஆகியோர் அக்கிளையில் இருந்தனர் . முகமது ஷாபிக் சித்திக் செயலாளரானார் .

 

இவர்களையும் மாஸ்கோ ராணுவக் கல்லூரியில் பயின்ற முஜாஹிர்களையும் சந்தித்த லெனில் இந்தியா செல்லுமாறும் ; இந்திய விடுதலைப் போரில் பங்கு பெறுமாறும் ; இந்தியச் சூழலை நன்கு கணித்து அதற்கொப்ப கட்சியைக் கட்டுமாறும் ஆலோசனை வழங்கி அனுப்பினார் .

 

முதல் அகிலத்தின் வழிகாட்டுதலும் சரிலெனின் ஆலோசனையும் சரி-  இந்தியச் சூழலை நன்கு கணித்து ; சுதேசித் தன்மையுடன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுகஎன்பதாகத்தான் இருந்தது. ஆனால் நாடு திரும்பியோர் சந்தித்தது அடுக்கடுக்கான சதி வழக்குகளே !

 

1921 ல் முதலில் நாடு திரும்பிய முகமது அக்பரும் அவரது பணியாளர் பகதூரும் பெஷவாரில் கைது செய்யப்பட்டு  முதல்  தாஷ்கண்ட்பெஷவார் சதி வழக்குதொடுக்கப்பட்டது . அக்பரின் தந்தை ஹபிசுல்லானும் கைது செய்யப்பட்டார் .வழக்கு நீதிபதி பிரேசர் முகமது முன் விசாரணைக்கு வந்தது.

 

 இப்போது வெறும் மத நம்பிக்கை ஏற்று அநீதியாய் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் போலவே அன்றும் செயல்பட்டிருக்கிறது . “ அமைக்கப்பட்ட அரசுகளை எல்லாம் அகற்றுவதே போல்ஷ்விக்குகளின் போக்கு என்பது ஒரு பொது அறிவாகும் .அந்தபொது அறிவினைவைத்தே தீர்ப்பு வழங்க முடியும் எனச் சொல்லி மாஸ்கோ ராணுவப் பள்ளியில் பயின்றவர் என்பதால் அக்பருக்கு மூன்றாண்டு சிறையும் ; பகதூருக்கு ஓராண்டு சிறையும் ; ஹபிசுல்லான் விடுவிக்கப்பட்டார் .

 

சிறையில் இருக்கும் போது அக்பர் ரகசிய கடிதம் எழுதி புரட்சிக்கு தூபம் போட்டதாக அக்பர் மீது மீண்டும் வழக்கு .கடிதம் பெற்றதாக முகமது ஹாசன் , குலாம் மெகபூ இருவரும் வழக்கில் சேர்க்கப்படனர் . இது  இரண்டாம் தாஷ்கண்ட்பெஷவார் சதி வழக்குஎன அழைக்கப்பட்டது . இதில் அக்பருக்கு பழைய தண்டனையும் சேர்ந்து பத்தாண்டு கடுங்காவல் தண்டனை . ஹாசன் ,மெகபூ இருவருக்கும் மூன்றாண்டு தனிமைச் சிறை .

 

மாஸ்கோ ராணுவப் பள்ளியில் பயின்ற 11 பேர் சவுகத் உஸ்மானி தலைமையில் பனியியிலும் மழையிலும் நடந்து இந்திய எல்லையைத் தொடுமுன் கைது செய்யப்பட்டனர் .அக்பர்ஷா,பெரோஷுதீன் , ஹபிப் அகமது ,அப்துல் மஜீத் ,ரபீக் அகமது ,சுல்தான் முகமது ,காவ்கர் ரஹமான் கான்,அப்துல் குவாதர் ,குலாம் அகமது ,பிடா அலி உள்ளிட்ட 11 பேர் கைதாகினர் .குலாம் அகமதும் ,பிடா அலியும் அரசு தரப்பு சாட்சியாய் தடம் மாறினர் .அப்துல் குவாதர் போலிஸ் உளவாளி என்பதால் விடுவிக்கப்பட்டார் .விசாரணை முழுக்க முழுக்க ரகசியமாய் நடந்தது . அக்பர் ஷா ,காவ்கர் ரஹமான்கான் இருவருக்கும் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும் இதரர்களுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது . இது    மூன்றாம் தாஷ்கண்ட்பெஷவார் சதி வழக்காகும் .

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதற் கிளைச் செயலாளர் முகமது ஷாபிக் சித்திக் இந்தியாவிற்குள் வந்து கட்சிப் பணியாற்ற வந்தார் , 1923 டிசம்பர் 10 ல் சுற்றி வளைக்கப்பட்டார் . இரகசிய விசாரணைக்குப் பின் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். இதுநான்காம் தஷ்கண்ட்பெஷவார் சதி வழக்குஎனப்படும்.

 

பாசில் இலாகி குர்மான் மாஸ்கோவில் கம்யூனிசக் கல்வி பயின்றார் என்பதற்காக 1927 ல் கைது செய்யப்பட்டு ; இரகசிய விசாரணைக்குப் பின் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார் .இது  ஐந்தாம் தாஷ்கண்ட்பெஷவார் சதி வழக்காகும் .

 

இப்படி ஐந்து தாஷ்கண்டு பெஷ்ச்வார் சதி வழக்குகளால் மட்டுமல்ல அடுத்து கான்பூர் சதி வழக்கு , மீரட் சதி வழக்கு என அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்து கம்யூனிச சிசுவைக் கொல்ல முயற்சித்தது . சிசுக்கொலையை மீறி எழுந்ததே வரலாறு .

 

1922, 1923களில்  இந்திய சுதந்திரத்தின் முன்னணிஎன்ற பெயரில் பெர்லினிலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, அதிகாரப்பூர்வமான முறையில் ஓர் இதழ் வெளியிடப்பட்டது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைப் பரப்பிட இந்த ஏடு உதவியது. இதனை சகித்துக் கொள்ள முடியாமல் இவ்விதழ் இந்தியாவிற்குள் வருவதைத் பிரிட்டிஷ் அரசு தடை செய்தது.

 

சென்னையில் சிங்காரவேலர் பம்பாயில்எஸ்..டாங்கே, கல்கத்தாவில் முசாபர் அகமது என மூவரும் ,மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு பிரச்சாரத்தை அவ்வழியில் செய்யலாயினர் .

 

இவர்கள் மூவரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள் எனில் அது மிகையாகாது .

 

சென்னையில் சிங்காரவேலர் மார்க்சியத் தத்துவத்தை தொழிலாளிகளிடையே பரப்புவதற்காகதொழிலாளன்மற்றும்  லேபர் கிஸான் கெஜட்என்ற இரு பத்திரிகைகளைத் தொடங்கினார்.

 

1922ஆம் ஆண்டில் இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரில் நடைபெற்ற காங்கிரஸ்கட்சியின்அகில இந்திய மாநாட்டில் அவர் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை எடுத்துக் கூறினார். அந்தமாநாட்டில் தொழிலாளர் குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வழிமொழிந்து அவர் எழுச்சிமிக்கஉரையாற்றினார். “உலகக் கம்யூனிஸ்ட்டுகளின்சிறப்பிற்குரிய வரிசை முறையில் உலக நலனில்அக்கறையுள்ள மாபெரும்இயக்கத்தின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன்என்ற அறிவிப்புடன் தன் உரையை தொடங்கிய சிங்காரவேலர் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு ஓர் எச்சரிக்கைவிடுத்தார். “ஆகையால்பூர்ஷ்வாக்களே! கவனித்துக் கேளுங்கள். நான் சொல்வதை உற்றுக் கேளுங்கள்.இந்தியத் தொழிலாளர்கள் விழிப்புற்றுள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வெளிநாட்டிலுள்ளஅவர்களின் தோழர்களைப் போலவே. குன்றுகளுக்கப்பால், கடல்களுக்கப்பால்,பெருங்கடல்களுக்கப்பால் அவர்கள் காண்கின்றனர். உலகத் தொழிலாளர்எல்லோருடனும்உண்மையான தோழமையுணர்வு கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்க.நீங்கள் இன்று அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இவர்கள் தங்கள் வலிமையை இப்போதுஉணர்ந்துள்ளனர்என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

1923ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக மே தினத்தை சென்னையில் இரண்டு இடங்களில் சிறப்பாகக் கொண்டாடினார். அதே நாளில்  தொழிலாளர் - விவசாயிகள் கட்சிஎன்றதொழிலாளி வர்க்கக் கட்சியை உருவாக்கினார். அரசியல் கட்சி இருந்தால்தான் தொழிலாளிகளைஅமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்தி அவர்களுக்குமார்க்சிய அரசியல் வழிகாட்டல் கொடுக்க முடியும்என்று அவர் கருதினார்.

 

இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிபூரண சுயராஜ்யம்கோரிக்கையை எழுப்பவே இல்லை . டொமினியன் அந்தஸ்து என்பதோடு நின்று கொண்டது .1921 ல் அகமதாபாத் மாநாட்டுக்கு  ஹஸ்ரத் மொஹனி ,ஸ்வாமி குமரானந்தா ஆகிய இரு கம்யூனிஸ்டுகள் பூரண சுயராஜ்ய தீர்மானத்தை அனுப்பினர் . ஆனால் விவாதத்திற்கு ஏற்கப்படவில்லை .1922 கயா மாநாட்டில் தன் பேச்சில் சிங்கார வேலர் பூரண சுயராஜ்யம் வலியுறுத்தினர் . 1923 ல் கல்கத்தா மாநாட்டில் தொழிலாளர் ஊர்வலமாக வந்து பூரண சுயராஜ்யம் தீர்மானம் நிறை வேற்றினர் .காங்கிரஸ் ஏற்கவில்லை . இறுதியில் 1929 ல் லக்னோவில் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் நிறை வேற்றியது .

 

தாஷ்கண்ட் பெஷவார் சதி வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதேகான்பூர் சதி வழக்கைபிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்டுகள் மீது புனைந்தது . 155 பேர் மீது வழக்கு போட முதலில் முயற்சித்துபின்னர் 11 என பட்டியல் தயாரித்தது ; அதில் சம்பூர்ணா நந்தா , சத்யபத்தா , டாக்டர் மணிலால் , எம் எஸ் வேலாயுதன் ,ஹம்சுதின் ஹாசன் என ஐவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டனர்.1924 மார்ச் 6 ஆம் நாள் எஸ் டாங்கே , சிங்காரவேலர் இருவரும் கைது செய்யப்பட்டனர் . சிங்காரவேலரின் மூப்பு ,பிணி காரணமாக விடுவிக்கப்பட்டார் . இறுதியில் காக்கா பாபு என அழைக்கப்பட்ட முசாபர் அகமது , எஸ் டாங்கே , நளினி குப்தா , சவுகத் உஸ்மானி என ஐவர் மீது மட்டும் கீழ்கண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது .

 

 ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் அகிலம் எனும் புரட்சிகர அமைப்பு உள்ளது . எம் என் ராயின் கட்டுப்பாட்டில் அதன் கிளையொன்று இந்தியாவிலே அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது .அதன் நோக்கங்களில் ஒன்று இந்தியாவில் இருக்கும் நம் மேன்மைதங்கிய சக்கரவர்த்தியாரின் ஆட்சியினை அகற்றுவதாகும் . அவர்கள் தலைமையில் இயங்கிய மக்கள் கட்சி அதாவது தொழிலாளர் விவசாயிகள் அமைப்பு போன்றவற்றை பயன் படுத்த திட்டமிட்டுள்ளனர் .இதே நோக்கத்திற்காக இந்திய தேசிய காங்கிரஸையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவு செய்துள்ளனர் .”

 

இந்த குற்றச்சாட்டே அன்றைய கம்யூனிஸ் பற்றிய சித்தரத்தை அளிக்குமே ! விசாரணை பகீரங்கமாக நடந்தது .கம்யூன்ஸ்டுகள் வழக்கு மன்றத்தைப் பிரச்சார மேடையாக மாற்றினர் .1924 மார்ச் 21 அன்று  இன் பிரகார்என்கிற வெளிநாட்டு ஏட்டில் எம் என் ராய் எழுதிய உணர்ச்சி மிக்க கடிதம் லண்டனிலும் இந்தியாவிலும் பேரலையை தோற்றுவிற்றது .

 

வழக்கை விசாரித்த நீதிபதி எச் ஹோம் கொடூரமானவர் . செளரி செளரி வழக்கில் 177 விவசாயிக்கு தூக்குத் தண்டனை விதித்தவர் . அவர் தன் தீர்ப்பில் நால்வரும் ரஷ்ய போல்ஷ்விக் உளவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றுகூறி நான்காண்டு கடுங்காவல் தண்டையை நால்வருக்கும் வழங்கினார் .

 

 

1925ஆம் ஆண்டில் கான்பூர் சதிவழக்கில் முதலில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சத்யபக்தா  முன்முயற்சியால் கான்பூர் நகரில் ஒரு கம்யூனிஸ்ட் மாநாடு கூட்டப்பட்டது .  இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிஎன தனித இந்திய அமைப்பை தொடங்க அவர் முன் மொழிந்தார் .ஆனால் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் அங்கமாகவே தொடங்க இதரர் விரும்பினர் . சத்யபத்தா மாநாடு நடக்கும் முன் வெளியேறினார் . சிங்கார வேலர் தலைமையில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது .

 

1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பம்பாய் ஜவுளி ஆலைதொழிலாளிகள் மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது . ஆறுமாத காலம் நீடித்தது . எஸ் டாங்கே தலைமை தாங்கி நடத்தினார். இதைத் தொடர்ந்துகிர்ணி காம்கார் சங்கம் (ஜவுளி ஆலைத் தொழிலாளர் சங்கம்) என்ற ஆசியாவிலேயே மிகப்பெரியசங்கத்தை டாங்கே உருவாக்கினார். பின்னர் மராத்தி மொழியில் கிராந்தி (புரட்சி) என்ற சோசலிசஏட்டை தன்னை ஆசிரியராகக் கொண்டு டாங்கே வெளியிட்டார். இந்தியாவின் பிரபலபேச்சாளர்களுள் ஒருவரான டாங்கே இந்தி, மராட்டி மொழிகளில் மிக எளிய முறையில் பம்பாய்தொழிலாளிகளுக்கு வர்க்கப் போராட்டத்தை விவரித்து அவர்களை ஈர்த்தார். இது அவரை பம்பாய்தொழிலாளி வர்க்கத்தின் மிகப் பிரபலமான தலைவராக்கியது.பம்பாயில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க இயக்கம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளைக் கொண்டுபலமடைந்தது.

 

இதே காலகட்டத்தில் சென்னையில் பல்வேறு தொழிற் சங்கங்கள் வீறுடன் எழுந்தன .திரு வி ,சக்கரைச் செட்டியார் ,முகுந்தலால் சர்க்கார் என பலர் ஈடுபட்டனர் .போராட்டம் ,அடக்குமுறை .வழக்கு என நீண்டது . வங்கத்திலும் இதே நிலைதான்.

 

  அமைதியைக் குலைக்கும் கம்யூனிஸ்ட் கொள்கை பரவுவதால் கவலையாக இருக்கிறது.” என 1929 ல் மத்திய சட்டசபையில் வைஸ்ராய் இர்வின் குறிப்பிட்டார்.

 

தொழிலாளி வர்க்க இயக்கம் பல மடைந்து வருவதையும், நீண்ட காலம் நீடித்த வேலைநிறுத்தத்தை நடத்தியதையும் கண்டு கவலைகொண்ட ஆங்கிலேய அரசாங்கம்  கம்யூனிஸ்ட்டுகள் மீது மீண்டும் ஒரு கடும் தாக்குதலைத்தொடுத்தது. அதுதான் 1929ஆம் ஆண்டின் மீரட் சதிவழக்கு.

 

பிரிட்டனில் இருந்து வரும் கம்யூனிஸ்ட் தலைவர்களைக் கைது செய்ய தனிச் சட்டம் போடப்பட்டது . அதன் பின் 1929 மார்ச் 30 கைது வேட்டை துவங்கியது . 32 பேர் கைது செய்யப்பட்டனர் .வழக்கை கொல்கத்தாவிலோ ,மும்பையிலோ நடத்தினால் விளம்பரம் அதிகம் கிடைத்துவிடும் எனக் கருதி மீரட்டில் நடந்த ஓர் விவசாயைகள் தொழிலாளர்கள் மாநாட்டைக் காரணம் காட்டி மீரட்டில் நடத்தியது .

 

வரலாற்றில் நெடுங்காலம் நடந்த சதிவழக்கு இது . கிட்டத்தட்ட மூன்று ஆண்டு ஏழுமாதம் விசாரணை . 320 பேர் அரசு சாட்சிகள் .3500 ஆவணங்கள் என நீண்டது .கம்யூனிஸ்டுகள் வழக்கு மேடையை கம்யூனிஸ்ட் இயக்க பிரச்சார மேடை ஆக்கினர் . மூவர் விடுவிக்கப்பட்டனர் .முசாபர் அகமதுக்கு ஆயுள் தண்டனை . பிலிப்ஸ் பிரெட்[பிரிட்டிஷார்] ,டாங்கே ,நிம்கர் , ஜோக்லேகர் , காட்டே ஆகியோருக்கு 12 ஆண்டு சிறை ; பென் பிராட்லே [பிரிடிஷார்], மிராஜ்கர் , சவுகத் உஸ்மானி , அப்துல் மஜித் ஆகியோருக்கு 10 ஆண்டுச் சிறை ; ஏனையோருக்கு 7 ஆண்டு ,ஐந்து ஆண்டு தண்டனைகள் .

 

இந்த வழக்கின் போதே காந்தியும் நேருவும் சிறையில் கம்யூனிஸ்டுகளை சந்தித்து சட்ட மறுப்பு இயக்க ஆதரவு கேட்டனர் . குடியரசு ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய உணர்ச்சி கொப்பளிக்கும் கட்டுரையில் குறிப்பிட்டார் ;

 

 பொதுவுடைமைக் கொள்கை என்பதை 27 பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரை சமணர்களைக் கழுவிலேற்றியது போல நடுத்தெருவில் நிறுத்தி கழுவிலேற்றிக் கொல்வதன் மூலமோ அடக்கி விடலாம் என நினைப்பது கொழுந்து விட்டெரியும் நெருப்பை நெய்விட்டு அணைத்துவிடலாம் என்று எண்ணுவது போல்த்தான் போய் முடியும் . ஆடவே மீரட்டின் முடிவை நாம் மேளதாளத்துடன் வரவேற்பதுடன் , தண்டனை அடைந்த தோழர்களை மனமார ,வாயார ,கையாராப் பாராட்டுகிறோம்.முக்காலும் பாராட்டுகிறோம்.நமக்கும் நம் போன்ற வாலிபர்களுக்கும் இப்பெரும்பேறு கிடைக்கவில்லையே என வருந்தி மற்றொரு முறை பாராடுகிறோம்.”

இப்படி நாடு தழுவிய சதி வழக்கு மட்டுமல்ல நெல்லை சதி வழக்கு ,மதுரை சதி வழக்கு , சென்னை சதி வழக்கு என்பன போன்று நாடெங்கும் எண்ணற்ற சதி வழக்குகளைச் சந்தித்து நெருப்பில் நீந்தி வந்தது கம்யூனிஸ்ட் இயக்கம் .கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷ் ஆட்சியில் பெரும்பாலும் தடை செய்யப்பட்டே இருந்தது . எனவே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைதே இயங்கியது உண்டு .காங்கிரஸ் சோஷலிஸ்ட்  கட்சியோ காங்கிராஸ் கட்சியின் உள்ளே இயங்கியது . ஆக ஒன்றுக்குள் ஒன்றக அதாவது காங்கிரஸ் கட்சியிக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிகாங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் கட்சி என்றே 1934 முதல் 1940 வரை இயங்கியது .

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் ஹைதர் கான் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி கப்பல் தொழிலாளியாக பல நாடுகளுக்குபயணம் சென்றார். அதையொட்டி அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த போது பஞ்சாப் புரட்சிவீரர்களை, இந்துஸ்தான் கத்தர் கட்சித் தோழர்களை சந்தித்துப் பேசிய போது கம்யூனிஸ்ட்டாகமாறினார். பின்னர் இந்தியா திரும்பிய பிறகு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுகிற பணியில் தன்னைஈடுபடுத்திக் கொண்டார்.

 

மீரட் சதி வழக்கில் அமீர் ஹைதர் கானை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்யமுயன்ற போது தலைமறைவாகி சென்னைக்கு வந்தார். சென்னையில் அவருக்கு அறிமுகமோ,ஆதரவோ இல்லாத சூழ்நிலையில் அவர் ஒவ்வொரு நாள் தங்குவதற்கும், ஒவ்வொரு நாள் உணவிற்கும்விவரிக்க முடியாத கஷ்டங்களை சந்தித்தார். இருப்பினும் அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு இளைஞர்களை கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கிற பணியை மேற்கொண்டார்.

 

காங்கிரஸ்கட்சியின் தீவிர தொண்டர்களாக பணியாற்றிய பலரை சந்தித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பால்ஈர்ப்பதற்கு முயற்சித்தார். இவருடைய முன்முயற்சியினால் சத்தியநாராயண ராவும், நீதிக்கட்சியைச்சார்ந்த ராஜ வடிவேலுவும் முழுநேர ஊழியராக மாறினார்கள். அந்நிய துணி புறக்கணிப்புபோராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தோழர் பி.ராமமூர்த்தியைச் சந்தித்து பேசி அவரும்கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். பெங்களூரில் தங்கியிருந்த பி. சுந்தரய்யாவைச் சந்தித்துகம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக மாற்றினார்.இந்த நிலையில் அமீர் ஹைதர் கானை தீவிரமாக தேடிய காவல்துறை அவரை கைது செய்தது.

கிருஷ்ணபிள்ளை ,இஎம்எஸ், கே.தாமோதரன் , என் சி சேகர் ,.கே .கோபாலன் போன்றோர் கம்யூனிஸ்ட் ஆனார்கள் .

 

தமிழகத்தில் அமீர் ஹைதர்கான் முயற்சியால் சென்னை லயோலா கல்லூரியில் படித்த சுந்தரய்யா கம்யூனிஸ்ட் ஆனார் .ராஜ வடிவேலு ,ரஷ்ய மாணிக்கம் , கம்மம்பாடி சத்திய நாராயணா, வி.கே. நரசிம்மன் போன்றோர் மார்க்சிஸ்ட் சிந்தனைக்கு வந்தனர். அப்போது சிங்காரவேலர் திருச்சி சிறையில் தண்டனைக் கைதியாக இருந்துள்ளார். பி.ராமமூர்த்தி ,சீனிவாசராவ் , .ஜீவானந்தம் ,இளங்கோ உள்ளிட்ட பலர் கம்யூனிஸ்டாக மாறினர் .1936 ல் தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் கிளை ஆரம்பிக்கப்பட்டது .

 

 

இந்தியாவில் ஏஐடியுசி எனப்படும் அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் , ஏஐஎஸ் எப் எனப்படும் அனைத்திந்திய மாண்வர் பெருமன்றம் , அகில இந்திய விவசாயிகள் சங்கம் . அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் , அனைத்திந்திய சிவில் உரிமைக் கழகம் என உருவான வர்க்க ,வெகுஜன அமைப்புகள் எல்லாவற்றிலும் கம்யூனிஸ்டுகளின் முன்கை எடுப்பும் பங்கும் மிக அதிகம் . இவை வெறும் அமைப்பாக இல்லாமல் இடதுசாரிப் பார்வையில் இந்திய அரசியலை முன்னோட்டு உந்தும் விசைத் தளங்களாக விளங்கின . சமஸ்தானங்களிலும் விடுதலைப் போரை முன்னெடுத்தது கம்யூனிஸ்டுகளே !அந்தமான் சிறையில் வதைபட்ட பெரும்பாலோர் கம்யூனிஸ்டாகளாகவே புடம் போடப்பட்டனர்.

 

இப்படித்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்ப நாட்கள் இருந்தன .

 

கம்யூனிஸ் இயக்கம் சிபிஐ ,சிபிஎம் ,நக்சலைட் என பிளவுபட்டதும்கூட கொள்கை சார்ந்ததே .சிலர் சீனக் கட்சி ,ரஷ்யக் கட்சி என கொச்சையாய் சொல்லும் காரணம் சரியல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு குரு பீடம் ரஷ்யாவும் அல்ல ;சீனாவும் அல்ல என்பதே சிபிஎம் நிலை .மார்க்சும் லெனினும் காட்டிய வழியும் அதுவே .மேலே அதைச் சுட்டியுள்ளோம்.

 

இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் மக்களுக்காக மிக அதிகம் போராடியவர் கம்யூனிஸ்டுகளே !இன்றும் போராடுவோர் அவர்களே!

 

சிறைச் சித்திரவதைகளை அதிகம் சந்தித்ததும்உயிர் பலிகளை வேறெந்த இயக்கத்தையும் விட அதிகம் தந்ததும் கம்யூனிஸ்டுகளே !இப்போதும் இதுவே !

 

அவதூறுகளை அதிகம் எதிர்கொண்ட இயக்கம் கம்யூனிஸ்டுகளே ! இன்றும் தொடர்கிறது .

 

ஊடக பலமின்றி பணபலமிக்க சுரண்டும் கூட்டத்தை எதிர்த்து நிற்கும் இயக்கம் கம்யூனிஸ்டுகளே !

 

கம்யூனிச இயக்க வெற்றி வெறும் தேர்தல் கணக்கு அல்ல ; அதையும் தாண்டி மெய்யான சமூக மாற்றத்தை நோக்கியது . சாதி ,மதம் ,வர்க்கம் என பல்வேறு தடைகளை நொறுக்கி முன்னெற வேண்டிய வரலாற்று கட்டாயத்தில் உள்ளது . மதவெறி இந்துத்துவா வெறியோடு ஆட்டம் போடும் சூழலில் அதற்கு எதிராக களமாட பெரியாரிஸ்டுகள்அம்பேத்கரிஸ்டுகள்கம்யூனிஸ்டுகள் இணைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம். இடதுசாரி ஒற்றுமை என்கிற அதிமுக்கிய தேவை முன்னிற்கிறது .

 

நூறாண்டு வரலாற்றின் ஒரு நொடியே .நாம் செல்ல வேண்டியது பெரும் தொலைவே !

 

திரு. வி.கவுக்கு 1943 ஆம் ஆண்டு மணிவிழா நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு தொழிலாளர் இயக்கம் பற்றி கீழ்க்ண்டவாறு பேசினார்.

 

பதினாராயிரம் முறை

தொழிலாளர் இயக்கம்

தடுக்கி விழுந்திருக்கிறது.

மீண்டும்எழுந்துள்ளது.

குரல்வளை நெரிக்கப்பட்டு

மூச்சு திணறடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களால் கட்டுண்டது.

போர்ப்படையால் அடக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கைகளால்பழிக்கப்பட்டு உள்ளது.

மதவாதிகளால் அச்சுறுத்தல்பட்டுள்ளது.

ஓடுகாலிகளால் கைவிடப்பட்டுள்ளது.

ஓட்டுண்ணிகளால் இரையாக்கப்பட்டுள்ளது. தலைவர்களால்துரோகமிழைக்கப்பட்டுள்ளது.

இவை அத்தனையும் இருந்த போதிலும்,

இன்று இந்தப்புவிக்கோளம்

என்றமே கண்டிராத வகையில்

உயிர்த்துடிப்போடு,

எதிர்கால வாய்ப்புடையசக்தியாக விளங்கி வருகிறது.

அதன் இலட்சியப் பணி

அடிமைத் தனத்திலிருந்து

உலகத்தொழிலாளர்களை

விடுதலை செய்வதேயாகும்.

இந்த இலட்சியத்தின் நிறைவேற்றம்

சூரியஉதயம் போன்று சர்வ நிச்சயம்,”

 

என்று அமெரிக்கத் தொழிற்சங்கத் தலைவர்யூஜின்டெப்ஸ் கூறியதை திரு.வி... எடுத்துரைத்தார். மேலும், “தொழிலாளர் இயக்கம் நம்நாட்டைச் சூழ்ந்துள்ள இருளைப் போக்க வல்ல ஒளியாகும்.” – என்றும் அறிவித்தார்.

 

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழாச் செய்தியாக அதையே திரும்பவும் உரக்கச் சொல்கிறோம்.

 

2019 ஜனவரி தமிழன் எக்ஸ்பிரஸ் இணைய இதழில் வெளியானது .

 

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment