எங்களையும் கவனியுங்கள் இப்படிக்கு முதுமை

Posted by அகத்தீ Labels:

 

எங்களையும் கவனியுங்கள் இப்படிக்கு முதுமை – சு.பொ.அகத்தியலிங்கம்

எங்களையும் கவனியுங்கள் இப்படிக்கு முதுமை – சு.பொ.அகத்தியலிங்கம்
  • PublishedSeptember 20, 2025

’முதியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதும்’,  ’முதியோருக்கு பாதபூஜை செய்வதும்தான்’ முதியோரை மதிக்கும் வழிமுறை அல்ல ;  அவை ’வெறும் சடங்குகளே’ அன்றி வேறில்லை. இவற்றில் யாருக்கேனும் ஈர்ப்பு இருந்து செய்தால் எமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்த நடிப்புக்கும் நாட்டில் முதியோர்கள் படும் துன்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. முதியோர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் துயரங்களையும்  பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகும் .

தன்னோடு வாழ்ந்தவர்கள் ஒவ்வொருவராய் விடைபெற தன் மரணம் எப்போது என எதிர்பார்த்து நாட்களைக் கடத்தும் முதுமையின் பேச்சுத் துணைக்கும் ஆளில்லா கொடுமையை எல்லாம் எப்படி எழுதித்தீர்ப்பது ?

முதியோர்கள் நலன் பேண தனி ஆணையம் அமைத்து இந்தியாவுக்கே கேரள இடது ஜனநாயக அரசு முன்னோடி மாநிலம் ஆகியுள்ளது. இந்தியா முழுவதும் முதியோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆரோக்கியமான உரையாடலுக்கு இம்முன்னெடுப்பு மையப் புள்ளி ஆகி உள்ளது .

2050 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 20 விழுக்காடு அதாவது ஒவ்வொரு ஐந்து பேரிலும் ஒருவர் முதியோராக இருப்பர் ; அதாவது அறுபது வயதைக் கடந்தவராக இருப்பர். பொதுவாக அறுபது வயதைக் கடந்தவர்களையே முதியோர் எனக் கருதுகிறோம்.  மருத்துவ அறிவியலின் வியத்தகு வளர்ச்சி காரணமாக சராசரி வாழ்நாள் கூடிக்கொண்டே போகிறது .

இந்தியா விடுதலை அடைந்த போது சராசரி வாழ்நாள் 30 ஆண்டுகளே!  “ஆனால் இன்றைக்கு அற்ப ஆயுளில் செத்துப் போவதாகவும் நம் மூதாதையர்கள் நூறாண்டு வாழ்ந்ததாகவும்.” உண்மைக்கு மாறாக பேசித் திரிகிறோம். தற்போது முதுமை என்பதை எழுபது வயதாக்க ஒன்றிய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. உலகின் பலநாடுகளில் இப்போதெல்லாம் எழுபது வயதைத் தாண்டினால் தான் முதியோர் எனக் கருதப்படுவார்கள். வெளிநாட்டு விமானப் பயணங்களில் இதனைக் காணலாம் .

இன்னும் பதினைந்து ஆண்டுகளில் 100 வயதைத் தாண்டியே உலகில் ஒரு விழுக்காட்டினர் வாழ்வார்களாம். அதுவே சில லட்சமாகும். இந்தியாவில் 60 வயதைக் கடந்தவர்கள் தோரயமாக பத்து கோடிப்பேர் உள்ளனர். 70 வயதைக் கடந்தோர் தோராயமாக 4 கோடிப்பேர். 80 வயதைக் கடந்தோர் தோராயமாக ஒரு கோடியைத் தாண்டிவிட்டதாம்.

இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகம் உள்ள முதல் இரண்டு மாநிலங்கள்

  1. கேரளா மக்கள் தொகையில் 16.5 % முதியோர்கள்
  2. தமிழ்நாடு 13.6 % முதியோர்கள்

கடைசி இரண்டு மாநிலங்கள்

  1. பீகார் 6.8 % முதியோர்கள்
  2. உ.பி 8.1 % முதியோர்கள்

முதல் மாநிலம் கேரளா முதியோர் ஆணையம் அமைத்து முந்திக்கொண்டுவிட்டது இரண்டாவதாக உள்ள தமிழ்நாடு பின் தொடர வேண்டாமா ?

முதியோர்களை வெறும் வயது சார்ந்து மட்டும் பார்க்க முடியாது . பொருளாதார சமூகப் பின்னணி சார்ந்தும் பகுத்துப் பார்த்தால் தாம் பிரச்சனையின் ஆழம் புரியும். பொதுவாக மூன்று வகைப் படுத்தலாம்.

சுதந்திரமானவர் [ Independent ]

இவர்கள் முதுமையை சமாளிக்கும் வசதி வாய்ப்பு பெற்றவர்கள். தமிழ்நாட்டில் 10 % க்கும் குறைவானவர்களே இதில் அடங்குவர் .

யாரையேனும் அண்டி காலந்தள்ள வேண்டியவர்கள் [Depentent ] இவர்கள் தமிழ்நாட்டில் 20 % மேல் உள்ளனர். இவர்கள் சமூக பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆயினும் ஏதோ ஒர் ஆதரவு இருக்கிறது. பிரச்சனைகளும் உண்டு

ஆதரவற்றோர் [ Destitute ].

எந்த ஆதரவும் இன்றி சோற்றுக்கும் துணிக்குமே அல்லாடும் ஆதரவற்றோர். தமிழ் நாட்டில் உள்ள முதியோர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினருக்கு மேல் இவர்கள் தான் உள்ளனர்.

பொதுப்பிரச்சனைகள்

இவர்கள் எல்லோருக்குமே உடல் சார்ந்த நோய்கள் வலிகள் பிரச்சனைகள் உண்டு. ஆனால் அதை எதிர்கொள்ள எல்லோருக்கும் சமவாய்ப்பு கிடைக்காது என்பதுதான் கசப்பான உண்மை. அதே போல் உணவு, உடை, தங்குமிடம் எதிலும் ஒரு சமவாய்ப்பற்ற சமூகமே நம் இந்திய சமூகம். முதியோர் நிலையும் அப்படித்தான்.

மூட்டுவலி, வாதம், சர்க்கரை, இரத்த அழுத்தம், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை , பர்கின்ஸ்சான் எனப்படும் முடக்குவாதம் உள்ளிட்ட நோய்கள் முதியோர்களை வாட்டும். இதுபோக இதயவலி, மாரடைப்பு, சிறுநீரக பிரச்சனை, வயிற்றுப் பிரச்சனை, புற்றுநோய் போன்ற பெரும் சிக்கல்களும் உண்டு .

கணிசமான பகுதியினர் ’ஞாபகமறதி’ [Dementia] நோயால் அவதியுறுகின்றனர் . இந்தியா முழுவதும் 80 லட்சத்துக்கும் அதிகமான முதியோர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது விரைவில் இரட்டிப்பாகும் என சுகாதர ஆய்வறிக்கைகள் எச்சரிக்கை மணி அடிக்கிறது. ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் பாதிப்பை பெருமளவு குறைக்கலாம். இதில் வேடிக்கை என்னவெனில் இந்நோய் தனக்கு இருப்பதை பெரும்பாலோர் அறியவில்லை. ஆரம்ப அறிகுறிகளை கவனிப்பதே இல்லை.  சுற்றி உள்ளோரும் கவனிப்பதில்லை. இது பற்றிய பொது சமூக விழிப்புணர்வும் மிகக்குறைவு .

நோய்கள் என்பது முதியோர்கள் எல்லோருக்குமே பொதுவானது ஆனால் மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்கிறதா? இது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.  தமிழ்நாடு முதியோர் கொள்கை இது குறித்து அதிகம் பேசி இருக்கிறது. ஆனால் சர்க்கரை, இரத்த அழுத்தம் இவற்றுக்கு வீடுதேடி மருந்து கொடுப்பது என்கிற அளவிலேயே நின்று போய்விட்டது. ’முதியோரியல் துறை’ [Geriatric ] எனும் மருத்துவப் பிரிவு குறித்து பேசப்பட்டாலும் அதற்க்கு காட்டப்படும் கவனம் போதுமானதில்லை .

முதியோர் கண், காது, பல் எல்லாம் பழுதுபடுவது இயற்கை. ஆயின் மருத்துவ காப்பீடு பல்லுக்கு மொத்தமாக இல்லை, கண், காது அறுவை சிகிட்சைக்கு உண்டு. ஆனால் காது கேளாமை முதியோரிடம் அதிகம். காது கேட்கும் கருவிக்கு காப்பீட்டில் இடம் கிடையாது. கண் கண்ணாடிக்கும் அதுதான். அரசுகள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் .

முதியோர்கள் வசிப்பிடம், மருத்துவம், உதவி, பொழுதுபோக்கு, திறமையைப் பயன்படுத்தல் என பல கோணங்களில் கேரளா, தமிழ்நாட்டு முதியோர் கொள்கை பேசினும் ; கேரளம் முதல் அடியை எடுத்துவைத்துவிட்டது. தமிழ் நாடு எப்போது அடியெடுத்து வைக்கும் என கேள்வி எழுகிறது .

பிரச்சனைகள் பற்றி இருப்பார்வை  

முதியோர் பிரச்சனைகள் பற்றி இரண்டு பார்வை பொது வெளியில் பேசப்படுகிறது. ஒன்று, கூட்டுக் குடும்பம் சிதைவதே முதியோர்கள் சிக்கலுக்கு காரணம். இரண்டு அரசுக்கு முதியோர்கள் நலன் காக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு. முன்னதைச் சொல்லி கலாச்சார உபதேசம் செய்து கடமையை முடித்துக் கொள்ள முயல்வது ஒன்றிய அரசு. கேரளாவும் தமிழ்நாடும் பின்னதில் கொள்கை அடிப்படையில் நிற்கிறது. அதுகேரலாவில் செயல் வடிவத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அது இன்னும் செயலில் இல்லை. செயல் வடிவம் பெற வேண்டியுள்ளது .

குருமூர்த்தி, ஆர் எஸ் எஸ் மோகன் பகத் போன்றோர் ‘ஓய்வூதியம்’ என்பதே மேற்கத்திய கலாச்சாரம் ; கூட்டுக் குடும்பமும் பிள்ளைகள் பெற்றோரைப் பேணுவதும்தான் நம் பண்பாடு என முடித்துவிடுகின்றனர். அதனையே சொல்லிக்கொடுப்போம் என வாய் வித்தாரம் காட்டுகின்றனர். பாதபூஜை ,காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது என சடங்குகளில் அனைத்து பிரச்சனைகளையும் மறைத்து முலாம் பூச முயல்கின்றனர். வசதி அற்ற முதியோர்கள் கோயில் அன்னதானத்தை நம்பி கோயில் சார்ந்து வாழ்வது புண்ணியமாகும் என்கின்றனர். லட்சக்கணக்கான விதவைகளை வாரனாசியில் அனாதைகளாய்  தவிக்க விட்டுவிட்டு செல்வதையே இந்து மதச் சம்பிரதாயம்  புனிதம் எனக் கொண்டாடும் இவர்களிடம் மனித உரிமை மனித மதிப்பு சார்ந்த முதியோர் கொள்கையை எதிர்பார்க்க முடியுமா ?

கேரள முதியோர் கொள்கை

கேரள முதியோர் கொள்கை இப்படிச் சொல்கிறது , “ கூட்டுக்குடும்பம் எனும் வலிமையான தூண் முதியோர்களைத் தாங்கி நின்றது. ஆயின் நவீனமயமாக்கலும் உலகமயமாக்கலும் கூட்டுகுடும்பத்தை சிதைத்து அழித்துவிட்டது. அந்த இடத்தில் தனித்தனிக் குடும்பங்கள் வந்துவிட்டன. தனிநபர்போக்கும் சுயநலமும் ஓங்கி [ individualistic and self centered thoughts ] இளைய தலைமுறை தனிக்குடித்தனம் நோக்கி செல்லும் போது முதியோர் நலன் புறக்கணிக்கப்படுகிறது. கேரளாவில் மாறிவரும் குடும்ப வடிவம், தனிநபர் வாழ்நாள் அதிகரிப்பு, விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகள் மிகப்பெரும் அளவில் அரிக்கப்பட்டுள்ள சூழல், மாறிவரும் நம்பிக்கைகள் மற்றும் வாழ்முறையோடு பொருந்திப் போவதில் முதியோர்களுக்கும் மிகப்பெரிய மனத்தடை உள்ளது. அதிலும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் வேகத்தோடு பொருந்திப் போவதில் முதியோர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ளுகின்றனர்.”

29 பக்க கேரள முதியோர் கொள்கையில் பொருளாதார உதவி, மருத்துவ உதவி, பணம் செலுத்துகிற / இலவச முதியோர் இல்லங்கள், பகல் நேரக் காப்பகங்கள், முதியோர் ஓய்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் ஆரோக்கியத்திற்கும் வாய்ப்பாகும் ’முதியோர் பூங்காக்கள்’ என விரிவாக முன்மொழிகிறது. இவற்றை எல்லம் ஒழுங்கு படுத்த முதியோர் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொத்தை பிடுங்கிவிட்டு பெற்றோரை தவிக்க விடுவோரை தண்டிக்ககவும் சொத்தை முதியோருக்கு மீட்டுக் கொடுக்கவும், பிச்சை எடுக்கும் முதியோர்கள், தெருவில் ஆதரவற்று கவனிப்பாரற்று சுற்றும் முதியோர்களை முதியோர் இல்லம் கொண்டு சேர்த்து பாதுகாப்பது உள்ளிட்ட நல்ல கூறுகள் அந்த கொள்கை அறிக்கையில் உள்ளது. அவை முதியோர் ஆணையதின் கடமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு கொள்கை அறிக்கை

தமிழ்நாட்டு கொள்கை அறிக்கையும் உடல் நலம், சமூக பாதுகாப்பு , குடியிருப்பு என பத்து முக்கிய விசயங்களை  உரக்கப் பேசினாலும் இன்னும் செயலில் இல்லை. முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் பாதிப் பேருக்கே வழங்கப்படுவதாக புள்ளிவிபரம் சொல்கிறது.  முதியோருக்கு தனி ரேஷன் கார்டு, அடையாள அட்டை போன்றவை பேச்சோடு நிற்கிறது. கர்நாடகாவில் முதியோருக்கு தனி அடையாள அட்டை உண்டு. அதுவும் பெங்களூரில் மட்டும்தான்.

ஒன்றிய அரசின் பார்வை

முதியோர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசின் பார்வை மிகவும் பழுதுபட்டது. ரயில்வேயில் வழங்கப்பட்ட கட்டணச் சலுகைகைப் பிடுங்கி பல ஆயிரம் கோடி சேர்த்தவர்கள் அவர்கள். இபிஎப் எனப்படும் ஊழியர் காப்பீட்டு நிதி பல்லாயிரம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு குறைந்த வட்டியில் அள்ளிக்கொடுத்துவிட்டு, ஊழியர்களுக்கு நியாயமான  ஓய்வூதியம் உயர்த்தாமல் நீதிமன்றப் படிக்கட்டுகளில் பல ஆண்டுகளாக தவிக்க விட்டுள்ளது. வங்கிகளில் சேமிப்புக்கு முதியோருக்கு கொடுக்கும் வட்டி விகிதம் பணவீக்கத்தை ஈடுகட்டுவதாகக்கூட இல்லை .

முதியோர் இல்லங்கள் குறித்த தவறான பார்வை  

’முதியோர் இல்லங்களை சீரழிவின் சின்னங்களாக’ கவிதை வாசிப்பதும் ஆன்மீகக் கூட்டங்களில் அர்ச்சிப்பதும் தான் இங்கு பெரும் வியாதியாகி உள்ளது. மாற்றமடைந்துள்ள சமூகச் சூழலில் முதியோர் இல்லங்களின் தேவை குறித்து சமூக விழிப்புணர்வே இல்லை. முதியோர் இல்லங்கள் காலத்தின் கட்டாயம். ஆம்! ஆதரவற்றோருக்கு மட்டுமல்ல ; மாறிவரும் காலச் சூழலில் வேலை தேடியும் பிழைப்பு நிமித்தமும் தொழில் சார்ந்தும் புலம் பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ள இளைய தலைமுறையினரின் பெற்றோர்களுக்கும் முதியோர் இல்லம் தேவை .

பல்வேறு பொருளாதார அடுக்குகளாகப் பிரிந்து கிடக்கும் சமூகத்தில். எல்லோருக்கும் தேவையானதை ஒன்றுபோல உடனடியாக எதிர்பார்க்க முடியாதுதான். காசுக்கேற்ற தோசையாகத்தான் இருக்கும். எல்லாம் சரி தான்! ஆனால் குறைந்த பட்ச மனித மதிப்பு மனித உரிமையைப் பேணுவதாக முதியோர் இல்லங்கள் இருக்க வேண்டாமா ? காசுக்கோ இலவசமோ முதுமை மதிக்கப்படக்கூடிய இல்லம் தேவை.

அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பூங்காக்கள், பொது இடங்கள், நடை பாதை எதுவாயினும் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் அணுகத் தக்கதாக அமைக்கப்பட வேண்டும். அதில் முதியோர்களுக்கு முன்னுரிமை வேண்டும் .

முதியோர்கள் ஏற்றுகொள்ள வேண்டியது

முதியோர்களும் கால ஓட்டத்தைப் புரிந்து கொண்டு தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். பழைய கித்தாப்போடு இப்போதும்  திரியக்கூடாது. “எல்லாம் எங்களுக்குத்தான் தெரியும் ; இப்போது நீங்க செய்வதெல்லாம் தப்பு ; எங்க காலம் பொற்காலம் ; இப்போது எல்லாம் கெட்டுப் போச்சு …” இப்படி பேசிக்கொண்டு இளைய தலைமுறையோடு மல்லுக்கு நிற்கக்கூடாது. நீங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என அடம் பிடிக்கக்கூடாது . புத்திமதி சொல்வதை நிறுத்திவிட்டு கேட்டால் மட்டும் ஆலோசனை சொல்லுங்கள் ; அதனை ஏற்பதும் நிராகரிப்பதும்கூட அவர்கள் உரிமை என உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். இளைய தலைமுறை உங்களைக் கொண்டாடுவதும் , கண்டதும் தெறித்து ஓடுவதும்;  உங்கள் அணுகுமுறையைப் பொறுத்ததே என உணர்க !

முதியோர்கள் இயன்றவரை தங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள். தமது கல்வி அறிவை. இதர திறமைகளை பொதுக்காரியங்களுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்த முயல வேண்டும். அதே சமயம் பதவி அது இது என எதிர்பார்க்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் சாதி மத வெறிக்கு துணைபோகக்கூடாது. ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து படிக்கவும் சக்திக்கு உட்பட்டு உழைக்கவும் தயாராக வேண்டும். முதுமை வரமும் அல்ல சாபமும் அல்ல இயல்பு என ஏற்று வாழப்பழகுவீர் !

 

கட்டுரையாளர் சு.பொ.அகத்தியலிங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஸ்தாபன தலைவராக பணியாற்றியவர், பின்னர் தீக்கதிர் நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். மார்க்சியம் என்றால் என்ன ? உள்ளிட்ட மார்க்சிய அடிப்படை விளக்க  நூல்களை எழுதியுள்ளார். ’முதுமை : வரமா ? சாபமா ?’ எனும் தலைப்பில் 48 பக்கங்கள் அளவிற்கு ஒரு சிறிய மிக முக்கியமான நூலொன்று எழுதி 2022 இல் வெளியிட்டுள்ளார்.  

 

 

0 comments :

Post a Comment