நம்மை சுற்றி சுற்றி………………….

Posted by அகத்தீ Labels:

 


நம்மை சுற்றி சுற்றி………………….

 

குறுக்குசால் ஓட்டுவது” என்றொரு சொற்றொடர் உண்டு . அதாவது நீ ஒன்றை பேசும் போது திசை மாற்றி வேறொன்றாக திரிப்பது . பொதுவாக இதனை எதிரிகள்தான் செய்வார் . ஆனால் சில நேரம் நண்பர்கள் இப்படிச் செய்யும் போது மிகவும் வருத்தம் மேலிடும் .ஏனெனில் நாமும் அதே தொணியில் பதில் சொல்ல முடியாது அல்லவா ? அப்படி ஒரு சங்கடம் அண்மையில் நேர்ந்தது .

 

பொதுவாக தோழர்  சுபவி யோ அவரது குழுவினரோ பேசுவதை பலநேரங்களில் பகிர்ந்து இருக்கிறோம் . பாசிச எதிர்ப்பு போரில் ஆயுதமாக்கி இருக்கிறோம் . தற்போது சிபிஎம் செயலாளர் ப.சண்முகம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசும் போது , காதல் திருமணம் சாதிமறுப்பு செய்வோரை ஆணவக்கொலை செய்யும் சூழலில் அப்படி செய்வோர் எங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார் . அவர் பேசுகிறபோது அதற்கு இப்போது ஏற்பாடு இல்லை என்று சொன்னது ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தைத்தான் . அவர் எங்கேயும் ‘ சுயமரியாதைத் திருமணம்’ என்று சொல்லவே இல்லை .அப்படி இருக்க தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இருப்பது சண்முகத்துக்கு தெரியாதா என நீட்டி முழக்கி ஒரு சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார் . சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி பதில் சொல்வது முறையல்ல . சகோதரியின் மாமா கம்யூனிஸ்ட் என்றும் அவர் காதல் திருமணத்திற்கு எதிராக இருந்தாரென்று பதிவிட்டிருக்கிறார் . உண்மையாக இருக்கலாம் . சிபிஎம் கட்சியில் இப்படிபட்ட சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . நானும் என் அண்மைப் பதிவொன்றில் இதனைச் சுட்டியுள்ளேன் . திமுக ,தி.க கட்சிகளும் இப்படி சில தர்ம சங்கடங்களை சந்தித்திருக்கும் . நம் சமூக அமைப்பில் சாதி உணர்வை ஒழிப்பதென்பது இடைவிடா தொடர் போராட்டமே ! அதை சகோதரியும் ஒப்புக் கொள்கிறார் .ஆயினும் சண்முகத்தையும் சிபிஎம் யும் தனிமைப்படுத்தி தாக்க முயல்வது தோழமைக்கு அழகா ? நட்போடுதான் இப்போதும்  கேட்கிறோம்.

 

இப்போது நீயா நானாவின் நாய் விவாதம் பேசுபொருளாகி இருக்கிறது . அது ஒரு ரிக்கார்டட் அண்ட் எடிட் ஷோ தான் . நெடுங்காலமாகவே இப்படித்தான் நடந்து வருகிறது . மொழிப் பிரச்சனை குறித்த ஓர் விவாதத்தை வெளியே வரவிடாமலே சங்கிகள் தடுத்தனர் என்பது அண்மைச் செய்தி .மறக்க முடியுமா?  நீயா நானா தலைப்பும் விவாதமும் எப்போதும் பட்டிமன்ற பாணி  ஒரு வெகுஜன ஊடகத்தின் சமரச வழியே ! அதில் கொஞ்சம் முற்போக்கு சாய்மானம் சில வேளை தென்படலாம் . அதற்கு மேல் செல்ல முடியாது ஏனெனில் அந்த நிகழ்ச்சி விளம்பரதாரரை சார்ந்து வாழ்வதே . நாய் விவாதத்திலும் அதுவே . அரசின் அலட்சியப் போக்கு தொண்டு நிறுவன ஊழல் போன்ற பலவற்றை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டோர் மீது அனுதாபத்தோடு மட்டுமே அணுகியது . வெறிநாய் ரேபிஸ் நாய்க்கு எதிரான கோபமாக குவிமையமாக்காமல் பொதுவான நாய் எதிர்ப்போர் ஆதரிப்போர் என மாற்றியது இதெல்லாம் கார்ப்பரேட் மீடியா ஸ்டைலே . ஆனால் நாய்கடியால் பாதிக்கப்பட்டோரின் கோபம் ஆக்ரோஷமாக வெளிப்பட்டுவிட்டது நல்ல அம்சம். இப்போது விலங்கபிமானிகளான தொண்டு நிறுவனப் புள்ளிகள் தங்கள் பேச்சு எடிட் செய்யப்பட்டுவிட்டது முழுவீடியோ போடுக என கூக்குரல் போடுவதும் , நீதிமன்றம் போவதும் அவர்களின் தோல்வியைப் பறை சாற்றுகிறது . அந்த ஷோ ’எப்போதுமே எடிட்டட் ஷோதான்’ என தெரியாமலா வந்தார்கள் ? அவ்வளவு அப்பிராணிகளா அவர்கள் ? நம்பமுடியவில்லை … நம்பமுடிய வில்லை…

 

யூ டியூப்பர்களின் ,டிவிக்களின் அரசியல் பரபரப்பு பேச்சுகளின் தரம் கவலை அளிக்கிறது .ஒற்றைவரி , ஒற்றைச் சொல் , அங்கும் இங்கும் வெட்டி ஒட்டிய துண்டுப் படங்கள் இவைதான் நம்மை பரபரப்பாக அரசியல் சமுதாய பிரச்சனைகளை பேசவைக்கும் எனில் சமூகத்தின் மீதான் அக்கறை அல்ல அது ; முழுக்க முழுக்க நாம் எதை பார்க்க வேண்டும் எதைப் பேச வேண்டும் எப்படி சிந்திக்க வேண்டும் என நமக்கு கடிவாளம் போடும் கார்ப்பரேட் யுக ஆளும் வர்க்க கருத்துத் திணிப்பு நாடகமே ! எங்கும் இப்போது நடப்பது அதுவே !

 

ஆக , உண்மையை ஊடகங்களில் தேடுவது தரையில் மணலில் விழுந்த ஊசியைத் தேடுவதே !

 

சுபொஅ.

03/08/25.

 


தண்ணீர்… தண்ணீர் …

Posted by அகத்தீ Labels:

 


தண்ணீர்… தண்ணீர் …

 

”காலை எட்டு மணி சுகர் லெவல் குறையும் நேரம்  பல் தேய்க்காமல்” டீ பிஸ்கெட் சாப்பிட்டாச்சு …

அப்படியே ஒரு மணி நேரம் கழித்து டிபன்  ஹோட்டலில் ஆர்டர் பண்ணி வரவழைத்து சாப்பிட்டாசு ..

காலைக்கடன் முடிக்காமல் பாட்டில் குடிநீரில் முகம் கழுவி புறப்பட்டாச்சு ..”

இப்படி ஒரு செய்தியை பதிவிட்டாலே ‘ என்னாச்சு இவருக்கு ?’ என கேள்வி எழும் .

 

எங்கள் அடுக்ககத்தில் சனிக்கிழமை காலை எல்லோரும் சந்தித்த பிரச்சனையை என் பாணியில் சொன்னேன் அவ்வளவுதான்.

 

எங்கள் அடுக்ககத்தில் முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவே தண்ணீர் பிரச்சனை … காலைக்குள் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை… காலையில் கடும் நெருக்கடி சொட்டுத்தண்ணி இல்லை .. நான்கு கேன் தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் சனிக்கிழமை பொழுது ஓடியது … தண்ணீர் வாங்காவிடில் மேலே விவரித்த நிலைதான  ஏற்பட்டிருக்கும்.

 

அந்த அடுக்ககத்தில் வீடு வாங்கும் போது 2017 ல் பின்னால் ஏரி , சுற்றி சோளவயல் காற்றும் நீரும் சுற்றுச்சூழலும் ஈர்த்தன . பொதுவாய் பெங்களூரில் பல இடங்களில் அப்போதே தண்ணீர் பஞ்சம் . பின்னால் உள்ள ஏரி பெங்களூரின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்று . இங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்காது என நம்பினோம்.

 

இங்கு வந்த பிறகு ஒரு நாள் ஏரியிலிருந்து துர்நாற்றம் … மெல்ல விசாரித்த போது அருகிலுள்ள ஒரு மருந்து தொழிற்சாலை தன் ரசாயணக் கழிவுகளை ஏரிக்கு திருப்பிவிட்டுவிட்டது . அதன் பின் அது தொடர்கதை ஆனது .அதிகார வர்க்கம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு குறட்டை விட்டது . விளைவு ஏரிக்கரை ஓரம் செழிதோங்கி நின்ற மரங்கள் பட்டுப் போயின ; கருப்பு நிறமானது .பசுமை தொலைந்தது .மீன்கள் செத்து மடிந்தன . குப்பைக் கழிவுகளின் தேக்கமாக ஏரி சிதிலமடைந்தது.

 

 

ஏரியைத் தூய்மைப்படுத்த கோரிக்கை எழுந்தது .தன்னார்வ அமைப்புகள் வழக்கு தொடுத்தன .அவர்கள் வழியில் போராடின . அவர்களின் கையெழுத்து இயக்கங்களில் நான் கொஞ்சம் பங்கேற்றேன் . ஒருவழியாக நீதிமன்றம் தலையிட , அரசு மற்றும்  தனியார் கூட்டுறவுடன்  ஏரியை மீட்டு புனரமைத்து  படகுத்துறையுடன் பூங்காவாக மாற்றுவதாக அறிவித்தது .

 

அந்தப் பகுதி சோளவயல்கள் காணாமல் போயின , சுற்றி அடுக்குமாடி வீடுகள் முளைத்தன . எங்கள் அடுக்ககத்தில் 450 அடி யில் நான்கு ஆழ்துளைக் கிணறு உண்டு .இப்போது சுற்றி சுற்றி 800 அடி / ஆயிரம் அடி பலர் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டிவிட்டனர்

 .  ஆழ்துளாய் கிணறுகளை இருபதடிக்கு ஒன்று போட்டால் பூமி தாங்குமா ? இதனைக் கட்டுப்படுத்த சட்ட வழிகாட்டல் உண்டா ? கண்காணிப்பு உண்டா ? டேங்கரில் தண்ணீர் விற்கும் கம்பெனிகள் நான்கு வந்தன 1500 அடி ஆழ்குழாய் போட்டு உறிஞ்சினர் . கட்டுப்படுத்துவது யார் ? எங்கள் அடுக்கக தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது .

 

ஏரி மீட்பு பணி துவங்கி விட்டது .மகிழ்ச்சி . ரசாயண கழிவு கலந்த நீர் வடிக்கப்பட்டுவிட்டது … பணிகள் துவங்கி விட்டன . ஏரி இப்போது மைதானமாக காட்சி அளிக்கிறது .. பணி முடிய ஓராண்டாகும் என்கின்றனர் ..மேலும் நீளலாம்…ஏரியை மீட்டால் போதும்….

 

ஏரி தண்ணீர் வற்றியதும் எங்கள் அடுக்கக குழாய் கண்ணீர் சிந்தத் துவங்கிவிட்டன . சுமார் நூறு குடித்தனங்களுக்கு டேங்கரில் தண்ணீர் எனில் என்ன ஆகும் ?  இன்னும் நூறு வீடுகள் காலியாக உள்ளன .அவற்றிலும் குடிவந்தால் என்ன ஆகும் ?நீர் நிபுணர்கள் ஆலோசனை ஆய்வு என தொடங்கி உள்ளனர் .. தற்காலிகமாக டேங்கரே கதி . மெயிண்டனன்ஸ் சார்ஜ் அதிகரிக்கலாம் . இது வளர்ச்சியின் சவால்தான் . ஆனால் எச்சரிக்கை .

 

நாங்கள் இங்கு வந்ததுதான் 2017 ஆனால் 2010 லேயே இங்கு பணி துவங்கி விட்டது . ஆழ்துளை கிணறுகள் கட்டுமானம் தொடங்கி இன்றுவரை தண்ணீர் தந்துள்ளன. இப்போது அவை சோர்ந்துவிட்டதோ !

 

இது ஓர் அடுக்ககப் பிரச்சனை மட்டுமல்ல ; போதிய திட்டமிடல் இன்றி வீங்கிப் பெருக்கும் புறநகர்கள் எல்லாம் சந்திக்கும் சவால் . வெள்ளமும் வறட்சியும் இயற்கையானவை .அதில் திட்டமிடலின்றி சிக்கிக் கொள்ளும் வீக்கம் வளர்ச்சியா ? அரசுகள் யோசித்து முறைப்படுத்த வேண்டாமா ?

 

பெங்களூர் இப்போதே போக்குவரத்து நெரிசல் மேலும் பலபகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு டேங்கர் லாரியே கதி  மழை வந்தால் திணறல் … வருங்காலம் மிகவும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ஆட்சியாளர்கள் ?

 

சுபொஅ.

02/08/25.