ராமர் ஐயப்பன் ரக்சிய சந்திப்பு

Posted by அகத்தீ Labels:



ராமர் ஐயப்பன் ரகசியச் சந்திப்பு



நடுநிசி சபரிமலையே நிசப்தத்தில் உறைந்து போயுள்ளது .

வன விலங்குகளும் பறவைகளும்கூட ஆழ்ந்த நித்திரையில் லயித்து கிடக்கின்றன.

அனுமார் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து வருகிறார் .அவர் முதுகில் ராமர் கவலையோடு வீற்றிருக்கிறார் .

அனுமாரின் வருகையைக் கண்டு ஐயப்பன் சன்னதிக் கதவு தானே திறந்து கொள்கிறது .

ஏதோ அசாதாரண சமிக்ஞை வர ஐயப்பன் திடுக்கிட்டுக் கண் விழித்தார் .

அனுமார் முதுகிலிருந்து ராமர் குதித்தார் . ராமனைக் கண்ட ஐயப்பன் மகிழ்ந்து எப்போதும் வாபரைக் கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்வது போல் உளம் மகிழ வாழ்த்தினார் .அனுமாரையும் அதேபோல் அணைத்து மகிழ்வித்தார் .

 “ சீதாப் பிராட்டியை அழைத்து வரவில்லையா ?” என ஐயப்பன் அன்போடு வினவ …

 “ நீயோ பிரமச்சாரி பிரச்சனை இல்லை .இவனுக காவியம் எழுத என் பொண்டாட்டியைக்கூட என்னிடமிருந்து பிரித்துவிட்டான்கள் ….” என ராமன் கண் கலங்கினார் .

 “ அதை ஏன் கேட்கிறீங்க … வாபர் என் உயிர் நண்பர் .. எங்களுக்கு மத பேதமெல்லாம் கிடையாது … எங்கள எல்லோரும் பார்க்கலாம் … அதையும் தடை செய்ய மல்லுக் கட்டுறானுக … போகிற போக்கைப் பார்த்தால் என் உயிர் நண்பன வாபருக்கு என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு …”

அங்கே நடுநிசி அமைதியையும் தாண்டி ஒரு பீதி நிறைந்த அமைதி நிலவியது … சற்று நேரத்துக்குப் பின் மூச்சுவிட்ட ராமர் சொன்னார் ;

 “ இவனுக சிம்மாசனத்தை பிடிக்க என்னைப் பகடைக் காயாயாக்கி ரொம்ம நாளாய் உருட்டிக்கிட்டிருக்கானுக ….. நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்க்கிறேன் … அவனுக திருந்துறாப்ல தெரியல … நாற்காலி மோகம் உச்சந் தலைக்கு ஏறி இப்போ உன்னையும் பதம் பார்க்க ஆரம்பிச்சிட்டானுக…மனசு கேட்கல அதுதான் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன் …”

 “ எனக்கும் கவலையா இருக்கு… வெள்ளம் வந்தப்போ சம்மந்தமே இல்லாம என் தலையை உருட்டினானுக … பத்து காசு கொடுக்காம எங்க ஜனங்கள தவிக்க விட்டானுக … இப்ப என்னடான்னா என்னை பார்க்க தாய்க்குலம் வரக்கூடாதாம் குதிக்கிறானுக … சித்தி கேட்டாள் என்பதற்காக புலிப்பால் கொண்டு வந்த நானா என் பிரம்மச்சாரியத்தை உடைத்து பெண்களிடம் வம்பு செய்துவிடுவேன் .. என்னை ஏன் இப்படிக் கேவலப்படுத்துறானுக ..”

ஐயப்பன் தேம்பி அழ மலையே குலுங்கியது .

“ எல்லாம் இறைவன் படைப்புன்னு நம்ம பேருல சொல்லிக்கிறவன் நம்ம கருவறைக்கு எந்த சாதி வரலாம் ,எந்த சாதி வரகூடாது ,பெண்கள் வரக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டு நம்மை அசிங்கப்படுத்துறானுக … நம்ம என்னமோ சமஸ்கிருததில பிஎச் டி வாங்கின மாதிரியும் தமிழ் ,மலையாளம் எல்லாம் நமக்கு தெரியாதுன்னும் வம்பு பண்றான் …” ராமர் அவர் பங்குக்கு புலம்பினார் .

 “ என் பெயரை பஜ்ரங்தள்னு வச்சிகிட்டு கலவரம் செய்து இடிக்கிறான் .. கொழுத்துறான் .. பெண்ணுங்கள பாலியல் வன்மம் பண்றான் … நாங்க விலங்குதான் ஆனால் சங்கிகள் மாதிரி அநாகரீகமாக ஈரமே இல்லாம நடந்துக்க மாட்டோம்…” இடையில் அனுமார் தன் காயத்தை திறந்து காட்டினார் .

 “ இவனுக பழையபடி சிம்மாசனத்துக்கு வந்து தேசத்தையே அவங்க கார்ப்பரேட் எஜமானன்களுக்குத் தாரைவார்க்க நம்மள பலிகடா ஆக்குறானுகளே எப்படித் தப்புவது ?” – ராமர் கேட்க .

இருவரும் மண்டையைக் குடையலாயினர் .

 “ ஐயப்பா !இப்படிச் செய்தாலென்ன ..”

 “ சொல்லுங்க ராமா !”

 “ பேசாமல் எங்காவது வேற நாட்டுக்கு ஓடிப்போயிரலாமா ?”

 “ அட ! நீங்க ஒண்ணு ராமா இன்னும் வெவரம் தெரியாமலே இருக்கீங்க … இங்க பழநியில முருகன வெளி நாட்டுக்கு கடத்திட்டுப் போயிட்டு டூப்ளிகேட்ட வச்சு ஏமாற்றுறானுக .. நாமோ ஓடிப்போயிட்டா நிம்மதின்னு டூப்ளிகேட்ட வச்சு கச்சிதமா காய் நகர்த்திருவானுக..!”

 “ அப்படின்னா பேசாமல் மதம் மாறிரலாமா ?”

 “ நமக்கு எல்லாம் ஒண்ணுதான் . ஆனால் இவனுக நம்மள உயிரோடு எரிச்சே போடுவானுக …ராமா அது வேலைக்கு ஆவாது …”

 “ என்ன செய்யலாம் … ஐயப்பா நீயே சொல்லு மகாபலின்னு நல்லவன் வாழ்ந்த பூமி உனக்குத் தெரியும் …”

 “ ராமா ! இவ்வளவு நாள் பொறுத்திட்டோம் … பல்லக் கடிச்சிட்டு இன்னும் ஆறுமாசம் இருப்போம் … நம்ம ஜனங்க ரொம்ப நல்லவங்க பழையபடி ஏமாற மாட்டாங்க … இவனுகள தொரத்தி அடிச்சிருவாங்க … ஃபிடல் காஸ்டிரோன்னு ஒருத்தரு சொன்னாராமே ‘ வரலாறு என்னை விடுதலை செய்யும்னு… அப்படி வரலாறு நம்மை விடுதலை செய்யும்னு நம்பி காத்திருப்போம் .. ஜனங்கள்ட்ட உண்மையைப் பேசுவோம் .நிச்சயம் விடியும் ..!!”

 “ கரெட் ஐயப்பா ! காத்திருப்போம் ! ஜனங்கள்ட்ட உண்மையப் பேசுவோம் … ஐயையோ இன்னும் கொஞ்ச நேரத்தில சூரியன் உதயமாயிடும் .. நம்ம இரண்டு பேரையும் இங்க ஒண்ணாப் பாத்தாப் போதும் அந்நிய சதின்னு நமக்கு எதிரா அந்த அமுக்குஷா  கூட்டம் கத்த ஆரம்பிச்சிரும் .. அதனால விடை பெறுகிறேன் ஐயப்பா !”

 ஐயப்பன் இருவரையு வாவரை அணைத்து மகிழ்வது போல் அணைத்து வழியனுப்பினான் .

 “அடுத்த முறை சீதாப்பிராடியோடு வருக! என ஐயப்பன் சொல்ல … அங்கே மூவரும் சிரித்ததில் சபரிமலையே அதிர்ந்திருக்கும் .

 “நிச்சயம் சீதாப்பிராட்டியோடு வருவேன்” என்றவாறே அனுமார் முதுகில் ஏறி ராமர் பறந்தார் .

பொழுது மெல்ல புலரத் தொடங்கியது …

சு.பொ.அகத்தியலிங்கம் .


0 comments :

Post a Comment