சொல்.60

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .60 [ 29 /10/2018 ]

எங்கள் ஊரில் சுடலை மாடனுக்கு எதிரில் ஒரு சிறிய குட்டி மாடன் வைத்திருப்பர் . எதிர் மாடன் இல்லாவிடில் சுடலை மாடனை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது கிராமத்து வழக்கு !

எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு இருக்கும் . எதிர்ப்பு இல்லாவிடில் எது நண்மை எது தீமை என்பதுகூட தெரியாமல் போய்விடும் . வாழ்வதில்கூட சுவராசியம் போய்விடும் .எதிர்த்து வெல்வதில்தான் ஒரு த்ரில் இருக்கும் . தனிமனிதர் ,இயக்கம் ,நிறுவனம் எதுவாயினும் விதி அதுவே!

எல்லாவற்றையும்விட மிக முக்கியம் எதிர்த்து கேட்க நாதியில்லாத போது கடிவாளம் இல்லாத குதிரையாய் தறிகெட்டு ஓடி எங்காவது விழுந்து காலை ஒடிப்பதோ பேரிழப்பை சந்திப்பதோதான் நடக்கும் .

உங்கள் பேச்சுக்கு ,செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் எல்லோரும் எதிரியல்ல ;உங்கள் நலனில் அக்கறை கொண்டோரும் உண்டு . தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ,பொறாமை போன்ற காரணங்களாலும் சிலர் எதிர்க்கக்கூடும் . அதனை ஸ்பீடு பிரேக்கராகக் கருதி வாழ்க்கை சக்கரத்தை எச்சரிக்கையாக ஓட்டி முன்செல்ல முயலவேண்டுமே தவிர அங்கேயே மல்லுக்கட்டிக்கொண்டு முடங்கிவிடக்கூடாது .

மார்பில் பதிந்த விழுப்புண் மட்டுமல்ல ; முதுகில் தாங்கிய காயமும் பல பாடங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கும் . நேருக்கு நேர் எதிர் கொள்ள வேண்டிய எதிர்ப்பு ,கண்டு கொள்ளாமல் புறந்தள்ள வேண்டிய எதிர்பு , எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய எதிர்ப்பு , நயவஞ்சகமாக பின்னப்பட்ட எதிர்ப்பு , நாமே உருவாக்கிக் கொண்ட எதிர்ப்பு , அவசரப்பட்டோ ஆசைப்பட்டோ அசுரகதியில் செயல்பட்டு சிக்கிக்கொண்ட நெருப்பு வளையம் , இப்படி எத்தனையோ உண்டு .அதைச் சரியாக இனங் காண்பதே வெற்றியின் முதல் படி .

எதிர்ப்பைக் கண்டு மலைக்கவும் கூடாது ; எதிர்ப்பை சரியாக எடை போடாமல் வலையில் சிக்கிக் கொள்ளவும் கூடாது .தடை தாண்டிய ஓட்டமே வெற்றிகரமான வாழ்க்கை என்பதறிக !
 Su Po Agathiyalingam
0 comments :

Post a Comment