சொல் .43.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .43 [ 11 /10/2018 ]

 “கார்த்திகை மாதத்து நாயென” – ஒரு சொல் வழக்கு உண்டு .விலங்குகளின் பாலியல் வேட்கை குறிப்பிட்ட ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் மிகும் .இதனை இனப்பெருக்க காலம் என்பர் .மீனுக்கும் அப்படி உண்டு .எல்லா உயிரினங்களுக்கும் அப்படி உண்டு .

ஆனால் மனித இனம் மட்டுமே ஆண்டு முழுவதும் பாலியல் வேட்கையை சுமந்து திரிகிறது .இதற்கு வயதோ பாலினமோ நேரம்காலமோ தடை இல்லை. உடல் இச்சையாக மட்டும் அல்ல ,மனதாலும் இச்சை கொள்ளும் உயிரினம் மனித இனம் மட்டுமே என நான் நினைக்கிறேன் . அறிவியலாளர் தெளிவுபடுத்தட்டும் .

மனிதரின் பாலியல் வேட்கை கற்பனைக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது .ஓவியமாய் ,சிற்பமாய் ,கதையாய் ,கவிதையாய் படைப்பின் சகல பரிமாணங்களிலும் பாலியல் தலைநீட்டும் . சிக்மன் பிராய்டு சகல நோய்க்கும் சமூக நோய்க்கும் இந்த பாலியல் ஈர்ப்பே மையமெனச் சொல்ல .இன்னும் விவாதம் முடியவில்லை .அது தனி.

பாலியல் வேட்கை ,பாலியல் தேர்வு எதுவும் பிழை அல்ல ; எப்போதெனில் பாலின சமத்துவம் பேணப்படும் போதே ! ஆண் ,பெண் இருபாலரிடமும் பிழையான புரிதலும் போக்கும் உண்டு .இது ஒரு வழிப்பாதை அல்ல .

ஆயின் ஆணின் செயல்களை ஏதாவது ஒரு வகையில் நியாயப்படுத்தி ஒப்புக் கொள்ளும் அல்லது கண்டு கொள்ளாமல் ஒதுக்கச் சொல்லும் சமூகம் பெண் என வரின் சீதையைப் போல் நெருப்புக் குண்டத்தில் இறங்கச் சொல்கிறது .

இது சமூக நடப்பாய் உள்ளது .வீட்டில் இது பெரும் ஒழுக்க வேலி என புனித முலாம் பூசப்பட்டு பெண்ணுக்கு மட்டுமே  பூட்டும் அநீதி நிறைந்திருக்கிறது .இது அநீதி ,குற்றம் என்கிற புரிதல் வீட்டில் இல்லவே இல்லை .

கற்புநிலை எனச் சொல்லவந்தால் அதை இருகட்சிக்கும் பொதுவில் வைக்கும் நாள் எந்நாளோ ?

பாலியல் புரிதல் பிழையற அமைய ,ஒவ்வொரு ஆணோடும் பெண்ணோடும் பாலியல் விவாதம் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயமோ ? யார் யாரோடு எப்படி உரையாடுவது என்பதே மிகமுக்கியம் .

0 comments :

Post a Comment