இது என் வாழ்க்கைப் பாடம் .

Posted by அகத்தீ Labels:

 




பெங்களூரில் வாழ்கிற பிற மாநிலத்தவர் கன்னட மொழியில் உரையாட கற்றுக்கொள்ள வேண்டும் “ என்கிறார் மாநில முதல்வர் சீத்தாராமய்யா .

 

பெங்களூரில் வாழும் மலையாளிகள் கன்னடம் கற்றுக்கொள்ள வசதியாக மாலைநேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றொரு செய்தி .

 

இரண்டையும் சரியான கருத்தாகவே நான் கருதுகிறேன் .பிற மாநிலத்தவரை வெளியேறச் சொல்லவில்லை , உரையாட எங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் பயிற்சி தருகிறோம் என்கிறார்கள் . இது சரியான நடைமுறையே .

 

தமிழ்நாட்டிலும் அரசு இதனை அடியொற்றி முன்கை எடுக்கலாமே !

 

தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் புலம் பெயர்ந்த தொழிலளார்களுக்கு தமிழ் இலவசமாகக் கற்றுக்கொடுக்க மாலைநேர காலைநேர வகுப்புகள் நடத்தலாமே ! சிஐடியு முன்கை எடுக்கலாமே !

 

நீங்கள் வட இந்தியாவில் வேலை செய்ய நேரலாம் ஆகவே இந்தி கற்றுகொள்ளுங்கள் எனச் சொல்வதிலாவது கொஞ்சம் லாஜிக் இருப்பதுபோல் தோற்றம் காட்டும் .அதே நேரம்  தேவை வரும் போது அவரவர் எந்த மொழி வேண்டுமாயினும் கற்றுக்கொள்வர் என்பதே வரலாறு .இப்போதே இந்தி படி என்பதில் நியாயமில்லை . சங்கிகளுக்கு இது புரியவில்லை.

 

ஆனால் இங்கு தமிழ்நாட்டில் பிழைக்க வந்துள்ள மக்களிடம் உரையாட தமிழ்நாட்டவர் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்பது எவ்விதத்திலும் நியாயமல்ல .நாம் அங்கு போனாலும் அவர்கள் இங்கு வந்தாலும் நாம்தான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அநீதி .அதைத்தான் சங்கிகள் நியாயப்படுத்தி ஊளையிடுகிறார்கள் !அவர்களை தமிழ் கற்றுக்கொள்ளச் சொல்ல மாட்டார்கள் .

 

 

நான் பெங்களூர் போய் பத்து வருடங்கள் கடந்துவிட்டன . இன்னும் ஒற்றை கன்னட வார்த்தை கற்றுக்கொள்ளவில்லை .எனக்கான சூழல் அப்படி .மொழி கற்றுக்கொள்வதில் நாட்டமும் அக்கறையும் எனக்கு மிகமிகக் குறைவு . என்னைப் பார்த்த உடன் எல்லோரும் எப்படியாவது தமிழில் பேச முயன்று விடுகிறார்கள் . நான் வாழ்வதும் கிட்டத்தட்ட ஓசூர் பார்டர் என்பதாலும் எனக்கு பெங்களூர் நகருக்கு போவதைவிட ஓசூர் போவதே எளிது என்பதாலும் இங்கு வாழ்வோர்களுக்கு தமிழ் தெரிகிறது என்பதாலும் நான் கன்னடம் கற்றுக்கொள்ளவில்லை .

 

மொழி துவேஷம் எனக்கு இல்லை. இந்தி மொழித் திணிப்புக்கே நான் எதிரி . என் இணையர் தமிழில் முதுகலை பயின்றவர் . தமிழ் மீடியத்துடன் தெலுங்கு மீடியமும் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்ததால் தெலுங்கும் கொஞ்சம் அறிவாளர் .  கன்னடம் கற்க அவருக்கும் இங்கு என்னைப்போல் வாய்ப்பு அமையவில்லை .ஆயினும் என்னைவிட மேல். நான் நாஞ்சில் நாட்டுக்காரன் என்பதால் மலையாளமும் கொஞ்சம் புரியும். நான் அடிக்கடி டெல்லி போயிருக்கிறேன் .பிற மாநிலங்களுக்கும் போயிருக்கிறேன் .இந்தி தெரிந்து கொள்ளவே இல்லை . முயற்சியும் என் பக்கம் இல்லவே இல்லை .இதுவும் பிழைதான். ஆங்கிலத்தில் பேசினால் ஓரளவு புரியும் . வாசித்தும் புரிந்து கொள்வேன் .பேச்சும் எழுத்தும் சுத்தமாக வரவே வராது .என் சக்தி என் முயற்சி அம்புடுத்தான்.

 

என் மகள் தமிழ் காதலி .கவிதை மீது நாட்டம் அதிகம் . கணவன் வழி சென்னைத் தெலுங்கும் அத்துப்படி . பெங்களூரில் டீச்சராக வேலை செய்து கன்னடமும் தேர்ந்து விட்டாள் .ஆங்கிலமும் நன்கு பேசுவாள் .மொழி கற்றுக்கொள்வதில் பேரார்வம் காட்டுவாள் .

 

என் மருமகள் தமிழ் ,மலையாளம் ,ஆங்கிலம் கொஞ்சம் தெலுங்கு ,இந்தி இப்போது கொஞ்சம் ஸ்பானிஷ் எல்லாம் அறிவாள். மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் உண்டு .

 

என் மகனும் மருமகனும் தேவையின் கட்டாயத்தில் கன்னடம் கொஞ்சம் அறிவர் . இப்போது வெளிநாடு போய்விட்டதால் அதற்கும் வாய்ப்பு குறைவு . பேரன் பேத்திகளிலும் இரண்டு பேர் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள் . இரண்டு பேருக்கு ஆர்வம் குறைவு .

 

எம் தீக்கதிர் அலுவலகத்தில் இந்தி படித்த இரண்டு பேர் உண்டு .ஆனால் இந்தியில் எது சந்தேகம் கேட்டாலும் தெரியாது . காரணம் அன்றாட பழக்கம் இல்லை .இப்போது என் வீட்டருகே சமஸ்கிருதம் பயின்ற ஒருவர் உண்டு . சமஸ்கிருத சுலோகத்துக்கு அர்த்தம் கேட்டால் தெரியாது .

 

மொழியை ஒரு பாடமாக கற்பது என்பதும் வாழ்க்கைப் பயன்பாட்டில் கற்பது என்பதும் வேறு வேறு . எம்மொழியும் பேசப்பேசவே பழகும் .கேட்க கேட்கவே புரியும் .அதற்கு வாய்ப்பு இல்லாத போது வெறும் மொழிப்படிப்பு கைகொடுக்காது .

 

கர்நாடகாவில் ,மேற்குவங்கத்தில் ,கேரளாவில் மும்மொழித் திட்டம் உண்டு .இந்தி பாடம் உண்டு .ஆயின் பெங்களூர் ,கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கு வெளியே பெரும்பாலோருக்கு இந்தியில் உரையாடத் தெரியாது .ஏனெனில் தேவையும் இல்லை ;வாய்ப்பும் இல்லை .

 

எந்த மொழியையும் தேவை வரும் போது கற்பது அவசியம் .தயக்கம் கூடாது .எந்த மொழியையும் யார் மீதும் யாரும் திணிக்கவும் கூடாது .அவரவர் தாய் மொழி அவரவருக்கு இனிமை .

 

இது என் வாழ்க்கைப் பாடம் . உங்களுக்கும் இப்படி அனுபவம் இருக்குமே !

 

சுபொஅ.

01/08/24.


0 comments :

Post a Comment