வலதுசாரிகளின் கை ஓங்கும் காலத்தில்

Posted by அகத்தீ Labels:

 


வலதுசாரிகளின் கை ஓங்கும் காலத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் ?

ஐரோப்பா , இந்தியா ,இலங்கை ,வங்கதேசம் சொல்லும் பாடம்.

 

இன்று ஐரோப்பாவில் தீவிர வலதுசாரிகள் எழுச்சி பெற்று வருவதும் , ஆட்சி அதிகாரம் அவர்கள் கைக்கு மாறி வருவதும் மிகுந்த கவலையளிக்கும் செய்தியாகும் . இரண்டாயிரங்களின் நடுப்பகுதியில் தொடங்கிய இப்போக்கு இன்று தீவிரப்பட்டுள்ளது . சோவியத் யூனியன் தகர்வுக்கு பின்னணியில் ,நவ தாராளமய உலகமய தனியார் மய கொள்கைகள் அமுலாக்கம்  தொடங்கிய பின்னணியில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது . பிரிட்டனில் தொழிற்கட்சியே வலதுசாரி சார்பு எடுப்பதை புரிந்து கொள்ள வேண்டும் . இது குறித்து  “காக்ககைச் சிறகினிலே ” மாத இதழில் ரூபன் சிவராஜ் என்பவர் எழுதியுள்ள ,” ஐரோப்பா: தீவிர வலதுசாரி எழுச்சியும் ஆட்சி அதிகாரமும்” கட்டுரை மிக முக்கியமானது. [ வாய்ப்புள்ளோர் அக்கட்டுரையைத் தேடி வாசிக்கவும்.]

 

அக்கட்டுரையின் இறுதிப் பத்தியில் அவர் குறிப்பிடுவது நம் கவனத்துக்கு உரியது ;

 

“ இது குறித்து ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியராகவும் ; தேசியவாதம் மற்றும் வலது கவர்ச்சிவாதம் சார்ந்த ஆய்வாளருமான எலிசபெட்டா காசினா வோல்ஃப் [ Eilsabetta Cassina Wolff ] விவரிக்கையில் , ஐரோப்பியாவிலுள்ள பல தீவிர வலதுசாரிக் கட்சிகளின் பொதுத்தன்மை என்பது ,அவை சிக்கலான காலங்களிற் தேசிய பழமைவாத நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக விளக்குகிறார் ,பயத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்திற்கு உறுதியான பிடிமானங்கள் அவசியமானவை .குடும்ப அமைப்பு ,தேவாலயம் ,மற்றும் தேசம் ,தேசியம் ஆகிய பாரம்பரியங்கள் மற்றும் பாரம்பரியக் கொள்கைகளில் அவர்கள் பிடிமானங்கள் வெளிப்படும் .அத்தோடு அவை நிரந்தரமான பெறுமானங்களையுடையவை என்றும் அவர் விளக்குகின்றார். மக்கள் ஆதரவை உருத்திரட்டி நெருக்கடிகளுக்கான தீர்வுத் திட்டங்களை முன்வைத்து நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதில் இடதுசாரிகளின் தோல்வியும் வலதுசாரிகளின் எழுச்சிக்கான துணைக்காரணி .தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான வலுவான முன்னணிகளைத் தட்டி எழுப்பும் திராணி இடதுசாரிகளிடத்தில் இல்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.”

 

ஐரோப்பா குறித்தே இக்கட்டுரை பேசினும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வலது மதவாத மாற்றம் , இலங்கையில் சரியான அரசியல் சித்தாந்த தலைமைத்துவம் இல்லா மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் , வங்க தேசத்தில் இப்போது நடந்தேறும் தன்னெழுச்சி கலவரம் எல்லாம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையே . ஏகாதிபத்திய கொடுங்கரம் எல்லாவற்றிலும் ஒளிந்திருப்பதை நாம் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிவிட முடியாது . இந்தப் பின்னணியில் இன்று தீக்கதிரில் வெளிவந்த சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எம் ஏ பேபி எழுதிய “இரும்புப் பெண்மணியின் வீழ்ச்சி! சாதனை படைத்த ஷேக் ஹசீனா மக்கள் உணர்வுகளை மதிக்கத் தவறினார் ” எனும் கட்டுரை மிக முக்கியமானது .அதில் இரண்டு பத்திகளை இங்கு நினைவூட்டுகிறேன்.

 

 “மாணவர் பிரதிநிதிகள் பரிந்துரைத்தபடி, எண்பத்து மூன்று வயதான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்காலப் பிரதமராகிறார். ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தற்காலிகமாக தஞ்ச மடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் கொள்கைகளை விமர்சித்து வந்தவர் முகமது யூனுஸ். இவர் கிராமிய வங்கி மூலம் ஏழைகளுக்கு சிறுகடன் வழங்கி, வறுமை ஒழிப்பில் உலக கவனத்தைப் பெற்ற மாதிரியை உருவாக்கியவர். விமர்சனங்களால் கோபமடைந்த பிரதமர் ஷேக் ஹசீனா, நிதிக் குற்றங்களுக்காக முஹம்மது யூனுஸை கைது செய்து, சிறையில் அடைக்க முயன்றது விவாதமானது.”

 

 

 “தற்போது நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ள சூழலில், வங்க தேசத்தில் என்ன வகையான அரசியல் மாற்று அமைப்பு உருவாகிறது என்பது மிக முக்கியமானது. வங்கதேசத்தில் உள்ள வலதுசாரி - தீவிரவாத சக்திகளால் தற்போதைய சூழ்நிலையை சுரண்ட முயற்சிக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமான விசயம். வங்க தேச கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேற்கு பாகிஸ்தானைப் போல இல்லாவிட்டாலும், இராணுவம் ஆட்சியதிகாரத்தை தனது பிடிக்குள் கொண்டுவர ஆர்வமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் வங்கதேசத்திலும் காணப்படுகின்றன. ”

 

ஆக ,இன்றைய உலகில் தீவிர வலதுசாரிவாதம் முன்னுக்கு வந்துள்ள ஆபத்தை நெஞ்சில் நிறுத்தி ; பாசிச எதிர்ப்புப் போருக்கான விரிவான நிகழ்ச்சிநிரலையும் , ஐக்கிய முன்னணியையும் , பண்பாட்டு முன்னெடுப்புகளையும் , இளைஞர்கள் மாணவர்களைத் திரட்டுவதில் முன்னுரிமையும் வழங்க இடதுசாரிகள் வியூகம் அமைக்க வேண்டும் . அதில் ஏற்படும் தோல்விகளும் சறுக்கல்களும் வலதுசாரிகளுக்கே சாதகமாகும்.

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

09/08/2024, 


0 comments :

Post a Comment