இன்று சென்னை நாளாம் ...

Posted by அகத்தீ Labels:

 


இன்று சென்னை நாளாம் ...
எனக்கும் சென்னைக்குமான உறவை அசைபோடுகிறேன்.
என் அப்பா ,அம்மா ,அண்ணன் ,பிழைப்பு தேடி குமரிமாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து 1967 கடைசியில் சென்னை வந்துவிட்டனர் .தம்பியை சின்னப் பிள்ளை என்பதால் கூடவே அழைத்து வந்துவிட்டனர் . வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலியை சுமந்தபடி ...
நான் மட்டும் அக்கா வீட்டில் இருந்தபடி பத்தாம் வகுப்புபைத் தொடர்ந்தேன் .
1968 கோடை விடுமுறையில் என் அத்தானின் நண்பர் ஐயப்பன் என்பவரோடு சென்னைக்கு பயணப்பட்டேன் .
அப்போது குமரிக்கு ரயில் கிடையாது . பஸ் கூட நேரடியாகக் கிடையாது .ஆகவே நாகர்கோவில் டூ திருச்சி அதன் பின் திருச்சி டூ சென்னை என பஸ் பயணம் தான் .நான் வந்த பஸ் தாழையூத்து ரயில் கிராசிங்கில் நின்றபோது ஒரு ரயில் கடந்து போனது . முதன் முதலாய் ரயிலை நேரில் பார்த்தது அப்போதுதான்.
ஐயப்பன் என்பவர் மாமபலத்தில் அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துப் போய் குளிக்க வைத்து , நாலு பிரட் சாப்பிட வைத்தார் . எனக்கு காய்ச்சல் இல்லையே ஏன் பிரட் சாப்பிடச் சொல்கிறார் என நான் எண்ணிய காலம் அது .
பின் பஸ்ஸில் என்னை அழைத்துக் கொண்டு வந்து கிண்டி கிளாஸ் பேக்டிரியில் பணியாற்றிக் கொண்டிருந்த என் அப்பாவிடம் ஒப்படைத்தார் .
அப்பா அழைத்துக் கொண்டு போய் ஒரு கடையில் டீயும் பட்டர் பிஸ்கடும் வாங்கிக் கொடுத்தார் .பின் பேக்டிரி வாசலில் வாச்மேன் அருகே உட்கார வைத்துவிட்டார் . மதியம் அவர் கொண்டு வந்த புளிசாதத்தை எனக்குக் கொடுத்தார் .அப்போதுதான் அறிமுகமான மாடர்ன் பிரட்டை வாங்கி வந்து அவர் சாப்பிட்டார் .எனக்கும் பாதி கொடுத்தார் . மேனஜரிடம் பெர்மிசன் வாங்கி எனக்கு பேக்டிரியை சுற்றிக் காண்பித்தார் .எனக்கு பெருமையாய் இருந்தது .
ஆக ,முதன் முதல் ரயிலைப் பார்த்தேன் .பேக்டிரி பார்த்தேன் .மகிழ்ச்சி . மாலை வீடு திரும்புகையில் மின்சார ரயிலில் கிண்டி முதல் குரோம் பேட்டை வரை அப்பா அழைத்துப் போனார் .என் முதல் ரயில் பயணம். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும் .
குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் ஒரு குடிசைவீட்டில் வாழ்ந்ததே முதல் சென்னை அனுபவம் . குரோம்பேட்டை நேரு போர்ட் ஹைஸ்கூலில் 11 வது வகுப்பு படித்தேன் .கல்வி அதிகாரி அய்யன்பெருமாள் பிள்ளை எங்கள் ஊர்க்காரர். அவர்தான் அப்பள்ளியில் நான் சேர உதவினார் .
நான் முதன் முதல் பயணித்த மின்சார ரயில் மீட்டர் கேஜ் . அதனை ப்ராடுகேஜ் அகலரயில் ஆக்க வேண்டும் என கோரிக்கை முழக்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வாலிபர் சங்கமும் ,மாதர் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ரயில் நிலையமாக ஆர்ப்பாட்டம் நடத்தியதும் ;கையெழுத்து இயக்கம் நடத்தியதும் ; எங்கள் கோரிக்கை வென்றதும் பின்னர் என் அனுபவம் ஆனது .
எனக்கு சுசீந்திரத்திலேயே பெரியார் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலும் , சென்னையில் 11 வது படிக்கும் போதே திமுக அரசியல் என்னை இழுத்தது . குரோம்பேட்டை ராதா நகரில் இருந்த அண்ணா நற்பணி மன்றம் என் மாலைநேர பொழுதுபோக்கானது .எல்லா பத்திரிகைகளையும் அங்குதான் படிப்பேன். அண்ணா இறந்த போது பள்ளி ஆண்டுவிழா மலரில் அண்ணா குறித்து நான் எழுதிய கட்டுரையே அச்சில் பார்த்த என் முதல் எழுத்து .
பின்னர் மெல்ல மெல்ல இடதுசாரி அரசியல் என்னை ஆட்கொண்டது .கம்யூனிஸ்ட் ஆனேன்.பழவந்தங்கலும் சைதாப்பேட்டையும் என் ஆரம்ப்கால அரசியல் களங்கள் .
நான் அன்று பார்த்த சென்னை இன்றில்லை . சென்னை எவ்வளவோ மாறிவிட்டது .
என்னை பெரிதும் செதுக்கியது சென்னையே !
சுபொஅ.
22/8/24

0 comments :

Post a Comment