நான்தான் நான் என்பதை நிரூபிக்க…..

Posted by அகத்தீ Labels:

 



நான்தான் நான் என்பதை நிரூபிக்க…..

 

கைக்கு வந்து ரொம்ப நாளாச்சு . எப்படியோ தப்பிக்  கீழடுக்குப் போய்விட்டது .இன்று வேறு ஒன்றைத் தேட இந்நூல் சிக்கியது .வாசித்தேன் .எழுதுகிறேன்.

 

 “ தெரியுமா ! நம்ம நம்மதானா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்க அரசாங்கம் போலீசுக்கு உத்தரவு போட்டிருக்கு .அதனால் நான் ஸ்டேசனுக்கு போகணும்.”

 

“ ஸ்டேசனுக்குப் போகணுமா,நீங்களா ,ஏன் ?”

 

“ நான்தான் நான் என்பதை நிரூபிக்க.”

 

“ எதுக்காக ?”

 

“ அரசாங்கத்தின் உத்தரவு “ என்று சொல்லியவாறே தேநீர் கோப்பையை மேசையின் மேல் வைத்துவிட்டு சத்யபிரதன் மிக விரைவாக கிணற்றுப் பக்கம் போனான்.

 

மேலே உள்ள வரிகளைப் படித்த பின்னர் உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையா ? உளறலாக உணர்கிறீர்களா ? ஏதோ தத்துவ கிறுக்கல் என நீங்கள் நினைக்கிறீர்களா ?

 

நினைக்கலாம் தப்பில்லை . ஆனால் ஒவ்வொரு சொல்லும் வலியின் வார்த்தைகள் .

 

தேபேஷ் ராய் [ 1936 -2020 ] கிழக்கு வங்களாத்தில் பிறந்து மேற்கு வங்காளத்தில் வாழ்ந்தவர் .இலக்கியவாதி.எழுத்தாளர் .சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் .  இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அகதிகளாக வந்தவர்களின் வாழ்க்கை வலியை  “அகதிகள்” எனும் சிறுகதையாய் எள்ளல் மிக்க நடையில் அதி அற்புத புனைவாக்கி உள்ளார் .பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது .பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

 

சத்யபிரதன் , அவர் மனைவி அணிமா , மகள்A அஞ்சு மூவரைச் சுற்றித்தான் கதை . இவர்களின் பூர்வீகத்தைக் கண்டறிய காவல் நிலையத்தில் எழும் கேள்விகளே சிறுகதை ஆகி உள்ளது .

 

சத்யபிரதன் யார் ? அணிதா யார் ? அஞ்சு யார் ? எனாமுல் யார் ? அவன் நல்லவனா ? கெட்டவனா ? ஊர் ஏது ? இவர்கள் அசலா ? போலியா ? செத்துவிட்டவர்களா ? வாழ்பவர்களா ? எப்படி கண்டு பிடிப்பது ? எப்படி நிரூபிப்பது ? இப்படி இருக்குமா ? அப்படி இருக்குமா ? இவர் அவரா ? அவரும் இவரும் ஒன்றா ? அவர் வேறு இவர் வேறா ?இப்படி  ஒரு துப்பறியும் நிபுணர் போல் அலசி ,குழப்பி ,கேள்வி கேட்டு அகதிகளின் வாழ்க்கை வலியை நமக்கு கடத்தி விடுகிறது .இச்சிறுகதை .

 

மோடி அரசு குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது . இதனை அமலாக்க முனைந்தால் இந்த சிறுகதையை மிஞ்சும் ஆயிரம் கேள்விகளையும் வலிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் . ஆகவே இச்சிறுகதையை வாசிப்பது குடியுரிமைச் சட்டத்தை வலுவோடு எதிர்க்க உணர்வூட்டும் !

 

 

 “நான் நான்தான் என்பதை நிரூபிக்கச் சொல்லும்” குடியுரிமைச் சட்டத்தை அமலாக்கினால் அதன் கொடூரவலி எப்படி இருக்கும் ? சொல்லவே முடியாது .இச்சிறுகதை அதனைத் தொட்டுக் காட்டுகிறது .முழுவதும் சொல்லில் அடங்கா… வலி … வலி … ரணம் …. ரணம்….

 

இந்த இடத்தில் என் அனுபவம் ஒன்றைச் சுட்டுவது பொருத்தமாயிருக்கும் . என் மகள் பெங்களூரில் இருந்த போது அவள் பணியாற்றிய பள்ளியில் 14 வயதே ஆன கதிஜா என்றொரு பெண் உதவியாளராக பணியாற்றி வந்தார் . எலக்ட்டிரானிக் சிட்டி அருகே சிக்காரிபாளையத்தைச் சார்ந்தவர் .அப்பெண்ணுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடும் நடந்தது .என் மகள் திருமணத்துக்குப் போய் வந்தாள் . என் மகள் வேறு பள்ளிக்கு மாறிவிட்டாள் .

 

கதிஜாவும் வேலையைவிட்டு நின்றுவிட்டாள்.அதன் பின் என் பேத்தியை பார்த்துக் கொள்ள கதிஜா பொறுப்பாளி ஆனாள் . காலையில் வந்தால் மாலைவரை என் மகள் வீட்டில் இருப்பாள் . என் பேத்தி அவள் பொறுப்பில்தான் .என் பேத்தி  அவளோடு ஒட்டிக் கொண்டாள் .கன்னடம் பேசக் கற்றது கதிஜாவிடம்தான் . கதிஜா பிறந்தது படித்தது எல்லாம் சிக்காரி பாளையம்தான்.

 

திடீரென்று போலிஸார் கதிஜாவையும் அவர் அம்மாவையும் மூன்று நாளில் ரயில் ஏற வேண்டும் என உத்தரவிட்டனர் .ரயில் டிக்கெட்டும் கொடுத்தனர் . எடியூரப்பா  [பாஜக] ஆட்சியில் வங்கதேச அகதி என வெளியேற்றப்பட்ட குடும்பத்தில் அதுவும் ஒன்றானது . கதிஜா அம்மாவுக்கும் வங்கதேசம் எங்கு இருக்கும் என்றுகூட தெரியாது .வங்கமொழி பேசும் முஸ்லீம் அவ்வளவுதான்.

 

கதிஜா என் மகளிடம் சொல்கிறாள் , “ அக்கா , ஊருக்கு போனதும் டவுண் பஸ் எதுன்னு கண்டு பிடிச்சு வேலைக்கு வறேன்…” ஆம் வங்கதேசம் எங்கிருக்கு ? அது வேறு நாடு எதுவும் தெரியாது .சிக்காரிபாளையம் தவிர வேறு எதுவும் தெரியாது .

 

இப்போது கதிஜா பேச்சு வந்தாலும் என் மகள் அவளை எண்ணிக் கண் கலங்குவாள் .

 

பிழைக்க இடம் பெயர்ந்தவர்களை  இனங்கண்டு வெளியேற்றுவது எவ்வளவு கொடுமையானது . வலி மிக்கது . இந்த சம்பவமும் இந்த சிறுகதையும் வெவ்வேறல்ல வலியின் பல முகங்கள் .

 

இந்த  “அகதிகள்” சிறுகதையை ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்.

 

நன்கு மொழிபெயர்த்திருக்கிற ஞா .சத்தீஸ்வரனுக்கு வாழ்த்துகள் .

 

 

அகதிகள் , [32 பக்க சிறுகதை ]

ஆசிரியர் : தேபேஷ் ராய் ,தமிழில் : ஞா .சத்தீஸ்வரன் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail :   bharathiputhakalayam@gmail.com   /    www.thamizhbooks.com

பக்கங்கள் : 32 , விலை : ரூ.25 /


0 comments :

Post a Comment