போதையின் அரசியலும் சமூகச் சவால்களும்.

Posted by அகத்தீ Labels:

 





“ஒவ்வொரு நாளும்

சுமார் 700 பேருக்கு மேல்

போதைக்குப் பலியாகின்றனர்…”

 

போதையின் அரசியலும் சமூகச் சவால்களும்.

 

சு.பொ.அகத்தியலிங்கம்

 

[ காக்கைச் சிறகினலே ,இலக்கிய மாத இதழ் , ஆகஸ்ட் 2024 ல் இடம் பெற்ற கட்டுரை . உங்கள் பார்வைக்காக…. சற்று பெரிதுதான் .ஆயினும் , இதன் முக்கிய்த்துவம் கருதி முழுதாய் வாசிப்பீர்கள் என நம்புகிறேன்.]

 

 திரிபுராவில் போதை ஊசி மூலம் எய்டஸ் தொற்றுக்கு உள்ளாகி 47 உயர் கல்வி மாணவர்கள் பலியாகி இருக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலம் என்பதால் இச்செய்தியை ஊடகங்கள் விவாதிக்காது.

 

உலகெங்கிலும் 15- 64 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு ஆறுபேரிலும் ஒருத்தர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்.

 

2017 கணக்குப்படி உலகெங்கும் போதையால் உயிரிழந்தோர் கணக்கு மட்டும் ஆண்டு தோறும் தோராயமாக இரண்டரை லட்சம் பேர். இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

 

அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 700 பேருக்கு மேல் போதைக்குப் பலியாகின்றனர். ஒவ்வொரு மணி நேரத்திலும் சராசரியாக 30 பேருக்கு மேல் போதை காவு கொள்கிறது.இது பழைய கணக்கு. புதிய கணக்கு மேலும் அழவைக்கும்.

 

2021 கணக்குப்படி கிட்டத்தட்ட உலகெங்கும் 29,60,00,000 அதாவது 29 கோடியே அறுபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைக்கு அடிமையாகி உள்ளனர் இந்த எண்ணிக்கை மேலும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்திருத்துக் கொண்டே இருக்கிறது.

 

1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய [தீர்மானம் எண் 42/112 / 7th டிசம்பர் 1987 ] தீர்மானத்தின் படி, ஜூன் 26 ‘உலக போதை ஒழிப்பு தினம்சடங்காக உலகெங்கும் கடைப் பிடிக்கப்படுகிறது.

 

உண்மையில் அக்கறை உள்ளோர் விழிப்புணர்வில் ஈடுபடுவதும் நடக்கிறது. பல்வேறு நாடுகள் கடும் சட்டங்கள்,கடும் தண்டனைகள், சர்வதேச உடன்படிக்கைகள் அனைத்தையும் மீறி போதை பொருட்கள் நடமாட்டம் உலகெங்கும் பருத்து வீங்கிக்கொண்டே போகிறது.

 

அமெரிக்க உளவுத்துறை முதல் இந்திய உளவுத்துறை வரை நீட்டி முழக்கி பேசுவதும் கைகட்டி வாய்பொத்தி மவுனமாய் துணைபோவதுமாய் சொல்லும் செயலும் வெவ்வேறாகவே இருக்கிறது.

 

விளைவு,உலக அளவில் ஆண்டு தோறும் தோராயமாக 4,00.00,00,00,000 டாலர் அதாவது நாற்பதாயிரம் கோடி டாலர் [ இதனை இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.83.68 ஆல் பெருக்கிக் கொள்க ] இந்த போதைச் சந்தையில் புழங்குகிறது.உலக அளவில் 80 விழுக்காடு போதைப் பொருட்கள் சட்டவிரோதக் கடத்தல் மூலமே நடக்கிறது.

 

போதை என்றவுடன் நம்ம ஊர் டாஸ்மாக், கள்ளச்சாராயம்,விஷச்சாராயம் மட்டும் என எண்ணிவிடாதீர். இவற்றை எல்லாம் மிஞ்சும் கொக்கைன்,ஹிராயின்,கஞ்சா,அபின், போதை தரும் பான்பராக்,போதை தரும் ஒருவகை பீடா,போதை கலந்த ஐஸ்கிரீம் என பல உண்டு. [தமிழ் நாட்டிலும் மேல்தட்டு பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் நடக்கும் பல கொடுமைகளுக்கு பின்னே இந்த போதை ஐஸ்கிரீம் இருப்பதை ஊடகங்கள் பேசுவதே இல்லை.]

 

இவை மட்டுமல்ல இதனினும் கொடிய எல் எஸ் டி,ATS [amphetamine and others செயற்கை இரசாயணம் மூலம் அதி போதை ஊட்டும் பொருட்கள் இதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.] போன்றவையே உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.

 

இந்த போதையின் வரலாற்றை தேடித் துருவினால் சுமேரியன் நாகரீகத்தில் தொல் எச்சங்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மொசபொட்டோமியா நாகரீகத் தடத்தில் போதை உண்டு, ரிக் வேதத்திலேயே சோமபானம்,சுராபானம் உண்டு,கள்ளுண்ணாமை என வள்ளுவரும் வலியுறுத்த வேண்டி இருந்தது.

 

இயற்கையோடு மல்லுக்கட்டிய மனிதன் குளிரையும் நோக்காட்டையும் தாங்கிட இயற்கையாகக் கிடைத்த மூலிகை, பட்டை, பழங்கள் மூலம் அதிக ஆபத்தில்லாத போதையை உருவாக்கிக் கொண்டான். மிகவும் ஆபத்தான போதைகளை உற்பத்தி செய்ய வாசல் முதலாளித்துவ சுரண்டல்தான்.

 

இந்த போதை மருந்துகளை பயன்படுத்துவதைச் சுற்றியும், நெறிமுறை ஏதுமின்றி கையாள்வதைச் சுற்றியும் எண்ணற்ற சமூக மற்றும் ஒழுக்கச் சவால்கள் உருவாகியுள்ளன.” என்கிறார் அமெரிக்காவைச் சார்ந்த பிரட்லி பல்கலைக்கழக உளவியல் வல்லுநர் வில்லியம் கிளேன் ஸ்டெய்னர் பியொரியா [William Glenn Steiner Peoria] [ஆதாரம்: பிரிட்டானிகா]

 

மேலும் சொல்கிறார், “போதைப் பழக்கம் குறித்த மதிப்பீடுகள் நவீன உலகில் முரண்பட்டிருக்கின்றன. இதனால் இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலாகி விட்டது.சமூகம், மதம், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் அந்த மதிப்பீடுகள் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகின்றன. ஓர் ஒற்றை சமூகத்திற்குள்ளேயும்கூட போதை பழக்கம் குறித்த மதிப்பீடுகளும் கருத்துகளும் கணிசமான அளவு பல்வேறு முரண்களுடன்தான் உள்ளனஎன்கிறார்.

 

அவர் அமெரிக்க சமூகம் சார்ந்து சொன்ன போதிலும் இங்கும் அளவு கோலிலும், புரிதலும், போதைக்கு அடிமையானோரைக் கையாள்வதிலும் நிரம்ப மாறுபாடுகள் நிச்சயம் உள்ளன. இந்தியாவில் கஞ்சா,அபின் பயன்பாடு சாமியார் மடங்களில் மிக அதிகம்.அதிலும் அகோரி சாமியார்களின் வாழ்வும் கஞ்சா, அபினும் பிரிக்க முடியாதவை. .பா.சிந்தன் மொழியாக்கத்தில் திரேந்திர கே ஜா எழுதியஆன்மீக அரசியல்புத்தகம் வாசித்துப் பாருங்கள்.

 

பொதுவாகச் சொல்லப் போனால் 'யார் யார் போதைக்கு அடிமையாவார் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாதுஎன்கிறார் பிரிட்டன் உளவியல் வல்லுநர் பீட்டர் கிரின்ஸ்பூன் [Peter Grinspoon, MD] இதன் பொருள் இந்த பூமிப்பந்திலுள்ள யாரை வேண்டுமாயினும் யாருடைய வாழ்வை வேண்டுமாயினும் போதைப் பழக்கம் பாதிக்கக்கூடும். சுரங்க முதலாளியோ, லாரி டிரைவரை, வழக்கறிஞரோ, டாக்டரோ, துறவியோ, அதிகாரியோ யாராயினும் போதைப் படுகுழியில் விழலாம்.

 

மேலும் அவர் விவரிக்கும் போது சொல்கிறார், “தானும் 14 வயதில் வலிநிவாரண மருந்துகள் வழி போதைக்கு அடிமையானேன். அப்போது எனக்கு என் கல்வி,மருத்துவக் கனவு, குலப் பெருமை, மத பிடிமானம், சமூக மரியாதை, உடல் நலம் எதைப் பற்றியும் அக்கறை இல்லை. போதை மட்டுமே என்னை ஆட்டுவித்தது. ஆனால் என் குடும்பத்தினர்,நல்ல நண்பர்கள், வழிகாட்டிகள் உடன் இருந்து அக்கறை காட்டி அன்பைப் பொழிந்து உரிய சிகிட்சை அளித்து என்னை மீட்டனர். அதனால் இப்போது இத்துறையில் உளவியல் நிபுணராக நான் உங்கள் முன்பு நிற்கிறேன்.”

 

மேலும் ஒரு படி மேலே சென்று கேட்கிறார், ‘‘எல்லோருக்கும் என் போல் இப்படி வாய்ப்பு கிடைக்குமா?” அத்துடன் அழுத்திச் சொல்கிறார், “வறுமை, வீடின்றி நடைபாதையில் வாழும் அவலம், சமூக இழிவு போன்றவை போதைப் பழக்கத்தை மேலும் மரணக் கொடூரமாக்குகிறது [Poverty, homelessness, and social stigma make addiction more deadly] என்கிறார்.

 

கள்ளக்குறிச்சியில் 63 பேர் விஷசாராயம் குடித்து செத்ததும், குஜராத் உட்பட நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த கள்ள சாராய சாவுகளும் இந்த உண்மையை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

 

இந்த போதைப் பழக்கம் எந்த அளவில் சமுதாயத்தை சீரழிக்கிறது?

 

] மனித உடல் நலத்தை, உளவியலை மிகவும் கடுமையாகப் பாதிக்கிறது; ] அகால மரணங்களை அதிகரிக்கிறது; ] வன்முறையும் குற்றச் செயல்களும் அதிகரிக்க காரணியாகிறது; ] குடும்ப வாழ்வை நிம்மதியை சீர்குலைக்கின்றது; ] மாணவர்களின் கல்வியை எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது; ] போதைக்கு அடிமையானோர் உற்பத்தியில்/ உழைப்பில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கிறது இதனால் ஏற்படும் பாதிப்புகள் பல.

 

எடுத்துகாட்டாக 1] உடல் மற்றும் மூளை உழைப்புத் திறன் கணிசமாக வீழ்ச்சி அடைகிறது. 2] இதனால் உடல் நலம் பெரிதும் சீர்கெடுகிறது. 3] இதனால் உடல் நலம் சார்ந்த செலவுகள் அதிகரிக்கிறது. 4] இதனால் பணப்பற்றாக்குறையும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. 5] இதனால் வேலை இழப்பிலும் சட்டச் சிக்கலிலும் மாட்ட நேரிடுகிறது. 6] இதனால் கல்வி முடங்குகிறது 7] இதனால் போதைகடத்தல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடத்தூண்டுகிறது. 8] வாழ்க்கை மொத்தமாக திசை மாறி குடும்பத்துக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் பயனற்ற வீனானதாக்குகிறது.

 

இத்தகையப் போதையை கொடும் குற்றச் செயலாக அறிவித்துவிடுவதின் மூலம் மட்டுமோ, அல்லது அதிகபட்சத் தண்டனை அளித்துவிடுவதின் மூலம் மட்டுமோ ஒடுக்கிவிடலாம் என்பது பேசவும் கேட்கவும் எளிதாக இருக்கலாம்; நடை முறையில் அவ்வளவு சுலபமானதல்ல. ஏனெனில் மதங்களைப் போலவே இந்த போதைப் பழக்கத்தையும் தங்கள் சுரண்டலைப் பாதுகாக்கும் கேடயமாக சுரண்டும் கூட்டமும் ஏகாதிபத்தியமும் கருதுகிறது.

 

Sex, Drugs, Violence அதாவது காமக் களியாட்டம், போதை மயக்கம், வன்முறை இவற்றில் சமூகத்தின் ஒரு பகுதியைத் திருப்பிவிடுவதன் மூலமே வறுமை, வேலையின்மை,சமத்துவமின்மை இவற்றால் தோன்றும் சமூகக் கொந்தளிப்புகளையும் புரட்சிகளையும் முடிந்த வரை தள்ளிப் போடவும் தவிர்க்கவும் முடியும்.அதைத்தான் ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஆகவேதான் போதைக்கு எதிராக எப்போதும் நிழல் யுத்தம் மட்டுமே ஆளும் வர்க்கம் நடத்துகிறது.

 

அதன் ஒரு பகுதியாகத்தான், ஆப்கானிலிருந்து போதை கடத்தும் கும்பலுக்கும் தமிழ்நாட்டில் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஓர் அரசியல் வெடியைக் கொளுத்திப் போடுகிறார் ஆளுநர் நரி. இது ஓர் அரசியல் காய் நகர்த்தல் என்பதில் ஐயமில்லை.

 

ஆப்கான் மிக முக்கிய போதை மையம், கஞ்சா உற்பத்தியில் பெரும் பங்கை ஆப்கானிஸ்தான் வகிக்கிறது என்பதும் உண்மையே.ஆயின் ஒன்றிய அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு கிராம் போதைகூட இந்தியாவில் எங்கும் நுழைய முடியாது. மும்பை விமான வழி, குஜராத் துறைமுகம் வழிதான் கஞ்சா இந்தியாவில் நுழைகிறது.

 

கஞ்சா போதைப் பொருளல்ல மருந்துப் பொருள்தான்என சர்வதேச ஒப்பந்தத்தில் ஒன்றிய அரசும் கையெழுத்து இட்டுள்ளது. கஞ்சாவோடு சில வேதியல் பொருட்களைச் சேர்த்து செய்யும் போது மட்டுமே அது போதை பொருள்வகையில் அடங்குமாம்.

 

இதை எல்லாம் சொல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் போதை வானிருந்து வந்து குதிப்பது போல் தமிழ்நாடு மீதான வன்மம் காட்டுவதுதான் ஆளுநர் ரவியின் சங்கித்தன அரசியல்.

 

இதில் வேடிக்கை என்னவெனில் ஆப்கானிலிருந்து கடத்தப்படும் கஞ்சாவின் மதிப்பு சுமார் ஐம்பது கோடி எனில்,அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அதன் மூலம் 160 கோடி டாலருக்கு மேல் லாபம் ஈட்டி விடுகிறதாம்.அதாவது விளைவித்தவன் தவிட்டு விலைக்கு விற்க கடத்தல்காரர்களும் இடைத்தரகர்களுமே பணத்தில் புரள்கின்றனராம்.

 

ஆப்கான் 2017 ஆம் ஆண்டு மட்டிலும் 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9,900 டன் கஞ்சாவை உற்பத்தி செய்ததாகவும்; இதன் மூலம் 400 பில்லியன் டாலர் ஆப்கனில் தலிபான் ஈட்டி இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

 

ஆப்கனை அதிபராய் அமெரிக்க பொம்மையாய் இருந்த அமிர் ஹர்சாய் என்பவர் மிகப்பெரிய கஞ்சா விவசாயி,போதை வியாபாரி. ஆப்கனை காப்பாற்ற எனச் சொல்லி அங்கு படை எடுத்த அமெரிக்க ராணுவத் தளபதிகள் அதிகாரிகள் சட்ட விரோத போதை வர்த்தக கூட்டாளியாகிப் போயினர்.விபரம் வெளிச்சத்துக்கு வந்ததும் பேருக்கு சிலருக்கு தண்டனை வழங்கிவிட்டு அவசர அவசரமாய் ராணுவத்தை அமெரிக்கா திரும்பப் பெற்றது.ஆனால் போதை வர்த்தக உறவு நீடிக்கிறது.இதை எல்லாம் ரவி பேசுவாரா? குஜராத் அம்பானி துறைமுகத்துக்கும் இந்த சட்டவிரோத போதை வர்த்தகத்துக்குமான தொப்புள்கொடி உறவை ரவி சொல்வாரா?

 

இந்த நேரத்தில் நினைவில் வரும் ஒரு செய்தி, 1989-90 ல் பனமா எனும் மத்திய அமெரிக்க நாட்டில் 27,000 சிப்பாய்களோடு அமெரிக்கப் படை புகுந்து இரண்டாயிரத்தும் மேற்பட்ட பனாமியர்களைக் கொன்று ஆக்கிரமிப்பு செய்தது. அதன் அதிபர் கஞ்சாக் கடத்தலில் ஈடுப்பட்டதாக ஒரு சாக்கு மட்டுமே இந்த ஆக்கிரமிப்புக்கு காரணமானது.

 

உலகின் போதை தங்கப் பிறை என்று அழைக்கப்படுகிற ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுக்கும்; போதை தங்க நாற்கரம் என அழைக்கப்படும் மியான்மர், தாய்லந்து, லாவோஸ், வியட்நாம் நாடுகளுக்கும் இடையே இந்தியா நசுக்குண்டு கிடக்கிறது. இப்படிச் சில நாடுகளைமட்டும் வகைப்படுத்துவதில் அமெரிக்க உளவுத்துறையின் கைவரிசையும் உண்டு, தாலிபான் போன்ற மதவாத பயங்கரவாத அமைப்புகளும் உண்டு. இதுபோல் ஆப்பிரிக்க நாடுகள், தென், மத்திய அமெரிக்க நாடுகள் மீதும் அமெரிக்க உளவுத்துறை வசை பாடுவதும் உண்டு. போதையைக் காரணம் காட்டி அருகிலுள்ள தீவுகளை ஏகாதிபத்தியம் ஆட்டையப் போட்டதும் உண்டு. இந்த அரசியல் தனி.

 

உலக போதை மண்டலங்களுக்கு இடையே நசுக்குண்டு கிடக்கும் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. ஆங்காங்கு கொஞ்சம் கஞ்சா பயிரிட்டாலும் இந்தியா போதை மருந்துகளின் உற்பத்தி மையம் அல்ல; கைமாற்றும் கடத்தல் வழிப்பாதையே. கைமாற்றும் போது ஒழுகுகிற போதையின் பயன்பாடே இந்தியாவில் கவலையளிக்கும் விதத்தில் பெருத்துக்கொண்டே போகிறது.

 

இந்தியாவில் போதைப் பொருட்களின் நுழைவு வாயில் குஜராத் துறைமுகமும் மும்பை விமான நிலையமுமே ஆயினும் உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மூன்றும்தான் இந்தியாவில் போதைப் பொருட்கள் அதிகம் உலாவும் இடமென ஒன்றிய மாநிலங்களவையிலேயே அமைச்சர் தெரிவித்தார்.

 

இதில் வேடிக்கையான ஒரு செய்தி, உலகெங்கும் இந்த போதை மருந்துகள் தயாரிப்பு, கடத்தல், விற்பனை இவற்றுக்கு உலகு தழுவிய மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பு இருக்கிறது. இதில் பெரும் கோடீஸ்வரர்களும் தாலிபான் போன்ற பயங்கரவாதிகளும். அமெரிக்க சிஐஏவின் கரங்களும் அரசு நிர்வாக இயந்திரமும் தொடர்பு கொண்டுள்ளனர். அதே போதில் இதன் மூலம் சாதாரண அடித்தட்டு ஏழைகள் ஏதோ ஒரு வகையில் வேலையும் கூலியும் பெறுகின்றனர். இப்படி வாழ்வாதாரத்துக்கு போதையை நம்பி இருப்போர் பல கோடிப் பேர் ஆவர். கிட்டத்தட்ட ஒரு பெரியவேலைச் சந்தையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதுபோதை வர்த்தகம்.”

 

பாட்டி சொன்ன மந்திரவாதி கதையின் மர்ம முடிச்சைவிட நூறுமடங்கு பெரிய மர்ம முடிச்சைக் கொண்டது இந்த சட்டவிரோத போதைச் சந்தை.

 

இதற்கு மதம் இல்லை. நாடு இல்லை. மொழி இல்லை. எங்கும் பரவியிருக்கும் விஷச் செடி. எங்கும் நீக்கமற நிரம்பி இருக்கும் விஷச் செடி.

 

இதன் ஆழமும் அகலமும் தெரியாமல் இங்கே குண்டு சட்டிக்குள் உள்ளூர் அரசியலோடு போதையைக் கலந்து குறுக்கு சால் ஓட்ட முயல்கிறார்களே தவிர; போதைக்கு எதிரான விழிப்புணர்வும் அரசியல் உறுதியும் கிட்டத்தட்ட இந்தியாவில் எங்கும் இல்லை. இதுதான் சோகம். போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டம், ஒரு கோடி கை எழுத்து என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் [டி.ஒய்.எப்.] முன்னெடுக்கிறது. இடதுசாரி அமைப்புகள் ஆழ்ந்த அக்கறையோடு இதனைப் பேசுவதுபோல் இதரர்கள் பேசுவது இல்லையே?

 

பூரண மதுவிலக்கு”, “ஒரு துளி போதையில்லா மாநிலம்என்பதெல்லாம் வெறும் கற்பனைச் சரடுதானே தவிர சாத்திமான ஒன்றல்ல!

 

அரசியல் விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு, அறிவியல் பார்வை இவற்றை முன்னெடுப்பதே மாற்று பாதை கடினம்தாம் நெடியதுதான் வேறு மார்க்கம் இல்லை.

 

கடைசியாக ஒரு கேள்வி போதை குறித்து இணைய தளத்தில் ஆங்கிலத்தில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற ஆய்வு நூல்கள், கட்டுரைகள், தகவல் களஞ்சியங்கள் போல் தமிழில் எத்தனை வெளிவந்திருக்கின்றன? போதுமான தகவல் மற்றும் அறிவியல் வெளிச்சம் இல்லாமல் செய்யும் போதை எதிர்ப்பு பிரச்சாரம் நீர் மேல் எழுத்துதான்.

 

நன்றி : காக்கைச் சிறகினிலே , இலக்கிய மாத இதழ் ,ஆகஸ்ட் 2024.


0 comments :

Post a Comment