எது புத்தாண்டு ? வாழ்வோடு இணைந்து அறிக !

Posted by அகத்தீ Labels:

 




எது புத்தாண்டு ? வாழ்வோடு இணைந்து அறிக !

365.242190 நாட்களே ஓர் ஆண்டு ….

 

 

  “எதியோப்பியாவுல கிறிஸ்மஸ் டிசம்பர் 25 கிடையாது. ஜனவரி 7 அன்று தான் கிறிஸ்மஸ் .

 

அதே மாதிரி இங்க 2025 வருசம் இல்ல 2018 .

 

12 மாசம் கிடையாது 13.

 

டையம் கூட வேற மாதிரி தான்”

 

இது எழுத்தாளர் முஹம்மது யூசுப் அன்மையில் முகநூலில் பகிர்ந்தது . அவர் தற்போது எத்தியோப்பியாவிற்கு பணி நிமித்தம் சென்றுள்ளார் .

 

 

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் டோகான் ஆதிப் பழங்குடிகள் வான் வெளியைப் பார்த்து பாறைகளில் செதுக்கி வைத்திருக்கும் வானியல் அறிவு நம்மை வியக்க வைக்கிறது . தீபா ஜெயபாலன் எழுதிய “சவானாவின் வேர்கள் : ஆப்பிரிக்க பழங்குடிகளின் வாழ்வும் போராட்டமும்” என்கிற 96 பக்க நூலில் இதனைப் பதிவு செய்திருக்கிறார் . இது போல் சில செய்திகளை அண்மையில் விஞ்ஞானி தோழர். த.வி .வெங்கடேஸ்வரன் தன் உரை ஒன்றில் சுட்டிக் காட்டினார் . ஆக வானியல் அறிவு என்பது நெடிய வரலாறு கொண்டது .

 

 

இன்று நாம் பயன்படுத்தும் காலண்டரை வந்தடையப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆனது என்பது வரலாறு . தொடர்ந்து இடைவிடாது நடந்த மனிதத் தேடல் முயற்சியின் விளைவு . தவறுகளைத் திருத்தித் திருத்தி வந்தடைந்த இடம் இது . இன்னும் தேடல் தொடர்கிறது . திருத்தமும் தொடரும் .

 

 

வான் வெளி அறிவியலைச் சோதிடமாய்ச் சுருக்கியதால் ஜோதிடர்களைத் தவிர வேறு எதற்கும் யாருக்கும் கால் காசுக்கு பயனில்லை . ஆனாலும் தவறாது ஊடகங்கள் புத்தாண்டுப் பலனை ரீல் விட்டுக்கொண்டுதான் இருக்கிறது .என்ன செய்ய ?

 

 

சென்ற ஆண்டு நான் பகிர்ந்த சில செய்திகளைக் கொஞ்சம் சேர்த்து  திருத்திப் பகிர்வது பிழை இல்லைதானே !

 

 

365.242190 நாட்களே ஓர் ஆண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ? நாலு வருடத்திற்கு ஒரு முறை 366 நாட்கள் என கணக்கிட்டும் , இன்னும் கணக்கு நேராகவில்லை என்கிறார்கள் வானவியலாளர்கள்  . சரி ! காலண்டர் கதையைக் கொஞ்சம் புரட்டுவோம்.

 

ஆனாலும் பாருங்கள் . நமக்கு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள் ,பிப்ரவரியில் 28 அல்லது 29 நாட்கள் . ஏர்டெல் உள்ளிட்ட அலைபேசிகளுக்கு மாதம் என்பது 28 நாட்களே ! இது கார்ப்பரேட் லாபக் காலண்டர் .அதை எதிர்த்துப் பேசாத வாய்கள் எதற்கு நீளும் தெரியுமா ?

 

 

 

 ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடாதீர்கள்!” எனக் கிணற்றுத் தவளைகள் ஆண்டு தோறும் கத்துகின்றன .இந்த ஆண்டும் உண்டு . கார்கேரியன் காலண்டர் என்பதுதான் நாம் இப்போது அன்றாடம் பயன்படுத்தும் காலண்டர் .அதைத்தான் ஆங்கிலக் காலண்டர் என இந்த கிணற்றுத் தவளைகள் கூச்சலிடுகின்றன .

 

 

வேடிக்கை தெரியுமா ? இந்த காலண்டர் அடிப்படையில்தான் ஊதியம் பெறுகின்றனர் . பிறந்த நாள் ,திருமணநாள் , இறந்த நாள் , அரசு ஆவணங்கள் ஏற்கும் நாள் எல்லாம் இதுதான் . இதன் அடிப்படையில் வாழ்வை நடத்திக் கொண்டுதான் ’இந்தப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டாம் என்கிற கூச்சல் ! என்னத்தச் சொல்ல…

 

 

 

சரி ! விஷயத்துக்கு வருவோம் !

 

 

 

இப்போது காலண்டர் என்பது 12 மாதங்கள் . 365/366 நாட்கள் . நாள் என்பது 24 மணி நேரம் . சரி இது என்ன புதுத் தகவலா ? இதை ஏன் எழுதி கழுத்தறுக்கிறீங்க எனக் கேட்போரே ! இதைக் கண்டடைவதற்கே வரலாற்றில் எவ்வளவு காலம் பிடித்திருக்கிறது தெரியுமா ?

 

 

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் யாரோ ஒருவரின் கண்டு பிடிப்பல்லவெங்கலயுகம்தொடங்கி [ அதற்கு முன்னரும் முயற்சிகள் உண்டு ]வான் பார்த்து , நிழல் , மணல் ,நீர்க் கடிகாரங்கள் எனத் தொடங்கி இன்றைய நிலையை அடைய பெரும் பயணம் நடந்ததே வரலாறு . இப்போது காலண்டரைப் பார்ப்போம்.

 

 

நமக்கு வரலாறு என்பது புராணப் புளுகுக் கதைதானே !அதையும் கொஞ்சம் பார்ப்போம் !

 

 

 

ஒரு முறை நாரதர் கிருஷ்ணனிடம்நீ மட்டும் அறுபதினாயிரம் கன்னியருடன் இருக்கிறீர்கள் .எனக்கு ஒன்று தரக்கூடாதா ?” என்று கேட்டார் .

 

 

என்னை நினைக்காத ஒரு பெண்ணை நீ அனுபவிக்க கடவாய்என கிருஷ்ணரும் கொடுத்தார் .

 

 

உலகெங்கும் தேடித்தேடி அலைந்தும் அப்படி ஒரு பெண் எங்குமே கிடைகாததால் நாரதர் தன் முடிவை மாற்றி தானேப் பெண்ணாக மாறி கிருஷ்ணரைப் புணர்ந்துபிரபவமுதல்அட்சயவரை 60 குழந்தைகளைப் பெற்றார் .

 

 

இதுவே ஆரிய ஆண்டுக் கணக்கு அறுபதாகி சித்திரை வருடப் பிறப்பானது . நாரதருக்கே கிருஷ்ணனை நினைக்காத பெண் கிடைக்கவில்லை எனில் உன் நிலைமை என்ன ? கொஞ்சம் யோசி சனாதனக் காதலா ! பெண்களை இழிவு படுத்தாத சனாதனக் கதைகள் உண்டா ? ஆனால் காலண்டரைக் கண்டு பிடித்ததும் பெண்தான் தெரியுமா ? பொறு ! சொல்கிறேன்.

 

 

உலகெங்கும் இதுபோல் எண்ணற்ற புராணப் புளுகுகள் எல்லா நாட்டிலும் உண்டு .மேலே குறிப்பிட்ட ’சவானாவின் வேர்கள்’ புத்தகத்தில் ஆப்பிரிக்கர்களிடமும் இந்த அறுபதாண்டு சுழற்சிக் கணக்கு இருப்பதை ஒரு நடசத்திரத்தை முன்வைத்துச்  சொல்லி இருப்பார் . உலகின் பல நாடுகளில் இது தொடர்பான கதைகளைத் தொகுத்தால் வேடிக்கையாக இருக்கும் .நிறையத் தகவல்களும் கிடைக்கும் .

 

 

 

 

ரோஸலிண்ட் மைல்ஸ் எழுதியஉலக வரலாற்றில் பெண்கள்என்ற நூலில் பெண்கள் தங்கள் மாதவிடாய் , மகப்பேறு காலம் இவற்றை பழங்குடிப் பெண்கள் குறித்து வைக்கத் தொடங்கியதே ஆதிக் காலண்டர் என்பார் . வான் நோக்கி பெளர்ணமி ,அம்மாவாசையைக் கணக்கிட்டு அதைத் தொடர்ந்து வரும்  நட்சத்திரத்தை வானில் உற்று நோக்கி   பானை ஓட்டில் செதுக்கிக்  குறித்து வைத்ததே காலண்டரின் தொடக்கம் என்பார் .

 

 

 

விவசாய வேலைக்கு மழைப் பொழிவை அறியும் தேவை இருந்தது . எனவே வான் நோக்கி நடசத்திரம் , சந்திரனின் தேய்வு - வளர்ச்சி இவற்றை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடத் தொடங்கினர் .  பின்னர் இதுவே காலண்டர் ஆனது ;வானவியலுக்கும் அடிப்படை ஆனது என்பதும் உண்மை .

 

 

 

2013 ஆண்டு ஸ்காட்லாந்தில் தொல்லியல் ஆய்வாளர்கள்  ஒரு காலண்டரை கண்டடைந்தனர் . இது அபெர்டீன்ஷையரின் வாரன் ஃபீல்டில்  [ Warren Field, Aberdeenshire ] 10,000 ஆண்டுகள் பழமையானக் காலண்டர் அமைப்பின் பண்டைய ஆதாரங்களாகும் என்கிறது வரலாற்றுத் தகவல் ஒன்று .

 

 

இந்த நாட்காட்டி "முதல் ஸ்காட்டிஷ் நாட்காட்டி " ஆகும். சுமேரிய நாட்காட்டியைத் தொடர்ந்து எகிப்திய, அசிரிய மற்றும் ஏலமைட் [Egyptian, Assyrian and Elamite calendars. ] நாட்காட்டிகள் வந்தன. இந்தியாவில் பஞ்சாங்கம் இவ்வகையில் உருவானதே . இந்தியர்கள் தம் பஞ்சாங்கத்தில் பின்னர் சில கற்பனைகளைக் கலந்து சோதிடமாக்கினர் . விளைவு நம் வானவியல் ஞானம் பின்னுக்குப் போனது .

 

 

 

காலண்டர் என்றாலே  ரோம் நாட்டில் லத்தின் மொழியில்  கூப்பிடு” [to call out] என்றுதான் பொருள் . பிரெஞ்சு மொழியில்  இதே சொல்லை அப்படியே நாட்காட்டிக்கு பயன்படுத்தத் தொடங்கினர் .உலகம் இதை அப்படியே சுவீகரித்துக் கொண்டது .

 

 

வர்ஷா என்னும் வடசொல்லிலிருந்து மருவியது வருடம் என்றும் கூறலாம். வர்ஷா என்றால்பொழிதல்என்பது பொருள். விவசாயத் தோடும் பெண்களின் வாழ்வியலோடும் பிணைந்தே காலண்டர் உருவானது என்பர் அறிஞர் பெருமக்கள்  . ஆகவே பொழிதல் எனும் பொருள்பட வருடம் என்ற சொல்லைப் பழக்கத்தில் ஏற்கலாம்தானே .ஆண்டு என்பது தூய தமிழ்ச் சொல்.

 

 

 

 ஆதியில் 12 மாதங்கள் இல்லை .பத்து மாதங்களே இருந்தன . ஏப்ரல் ,ஜூன் ,ஜூலை ,ஆகஸ்ட்  இப்படி மாறி மாறி ஆண்டின் தொடக்கமாக இருந்தது உண்டு .ஒவ்வொரு நாட்டிலும் கோமாளி மன்னர்கள் போட்ட கூத்து இதன் பின் கதையாகும் .

 

 

 

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சந்திரக் காலண்டர் ,சூரியனை அடிப்படையாகக் கொண்ட சூரியக் காலண்டர் என இரண்டும் புழக்கத்தில் வந்தன.இப்போதும் இரண்டும் இருக்கிறது .பிறையை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமியர் இன்னும் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர் .

 

 

 

ஜனவரியை முதல் மாதமாகக் கொண்ட கார்கேரியன் காலண்டர் [Garoorian calender ] 1592 ல் புழக்கத்தில் வந்தது . சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமான வட அயணக் காலம் [ உத்திராயண காலம் ] ஜனவரியிலேயே தொடங்குவதால் ஜனவரியே ஏற்புடையதாயிற்று .

 

 

அப்போதும் ஏப்ரல்தான்வருடபிறப்புஎன அடம்பிடித்தோரை மட்டம்தட்ட உருவானதேஏபரல் ஃபூல்என்ற சொற்றொடரும் நிகழ்வுகளும். தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்போர் இருக்க ; இன்னும் சித்திரைதான் என அடம்பிடிப்போரையும் இப்படிச் சொல்லலாமே .

 

 

365.242190 நாட்களே ஓர் ஆண்டு . ஆகவேதான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி 29 நாட்களாகி 366 நாட்கள் கணக்கு வருகிறது . உலகம் வர்த்தக மற்றும் நடைமுறைக்கு கார்கேரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டாயிற்று .நம் சம்பளநாள் ,பிறந்த நாள் ,திருமணநாள் எல்லாம் இக்கணக்கில்தான் .இது நம் வாழ்வின் பகுதியாகிவிட்டதே ! இதை இன்னும் ஆங்கில ஆண்டென்று பிழையாகச் சொல்லி வருகிறோம் .என்ன செய்ய ?

 

 

 

கார்க்கேரியன் காலண்டர் வழக்கில் வந்தாலும் அவரவர் மதம் ,பண்பாடு ,நாடு ,பிரதேசம் ,மொழி சார்ந்து பல்வேறு காலண்டர்களும் புழக்கத்தில் உள்ளன .அவை வெறுமே சடங்கு ,சம்பிரதாய ,பண்பாட்டு ஆண்டுகளே!

 

 

கன்னடர்களும் தெலுங்களும் ’உகாதி’ கொண்டாடுவதும் , மலையாளத்தில் கொல்லம் ஆண்டென சித்திரை விசுவைக் கொண்டாடுவதும் , பஞ்சாபில் தை 14 இல் மகி என்றும் ஏப்ரல் 14 இல்  பைசாகி என்றும் கொண்டாடுகின்றனர் .வங்க மொழியினர் பொகலே பைசாகி எனக் கொண்டாடுகின்றனர் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி வருடப் பிறப்பு இருப்பதும் யதார்த்தம் . சித்திரைப் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் ஒரே கதையோ ஒரே பெயரோ ஒரே மாதிரி ஒரே நாளோ கிடையாது .ஆகவே அவை அனைத்தும் ஆங்காங்கு உருவானவையே ! பன்முகப் பண்பாட்டின் ஒரு  பகுதியே !

 

சீனப் புத்தாண்டு தனி , முஸ்லீம்களின் ஹிஜ்ரி ஆண்டுக் கணக்குத் தனி . இப்படி பல்வேறு மதம் சார்ந்தும் ,நாடுகள் சார்ந்தும்  பலவித பண்பாட்டுக் காலண்டர்கள் உண்டு .

 

 

 

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே .திருவள்ளுவர் ஆண்டுக் கணக்குப் படி இப்போது 2056 . ஜனவரி 14 அன்று 2057 பிறக்கும் .  

 

 

நன் அன்றாட வாழ்வியலோடு இணைந்த ஜனவரி 1 புத்தாண்டுக்கும் ; நம் பண்பாட்டு வழி தை முதல் நாள் தமிழர் புத்தாண்டுக்கும் இனிய வாழ்ந்துகள் .

 

 

‘ எந்தச் சிப்பியிலும்  முத்து கிடைக்கலாம்’ என்கிற நம்பிக்கையோடு தேடுவோம் ; அதே நேரம் ‘எந்தப் புற்றிலும் எந்தப் பாம்பும் இருக்கலாம்’ என்கிற எச்சரிக்

கையோடும் பயணிப்போம் . ஆக்க பூர்வமாக யோசிப்பதும் எச்சரிக்கையோடு அடி எடுத்து வைப்பதும்தான் வாழ்க்கை !

 

 

 

இப்போதும் காலண்டரை இன்னும் திருத்தி சில நாட்கள் பின்னுக்கு கொண்டு போக வேண்டும் என்கிற குரல் வானவியலாளர்கள் மத்தியிலே எழுகிறது . டிசம்பர் 28 தான் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் வட அயணம் ஆரம்பமாகிறது . அதனையே  ஆண்டின் தொடக்க மாக்கும் விதத்தில் காலண்டரைத் திருத்த கோரிக்கை எழுகிறது .நாளை உலகு ஏற்கக் கூடும் .

 

மாறாதது எதுவும் இல்லை .சனாதனமாய் பழமைக் கட்டி அழுவதுதான். பேதமை !

 

 

வாழ்வோடு இணைந்த காகேரியன் புத்தாண்டுக்கும்

பண்பாட்டு வேரில் பூக்கும் தமிழர் புத்தாண்டுத் தைத் திருநாளுக்கும்

அவரவர் நம்பிக்கைக்குரிய அவரவர் பண்பாட்டுப் புத்தாண்டுகளுக்கும்

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

30 /12 /25 .

 


0 comments :

Post a Comment