தோழர் டி.ராமன் நூல்

Posted by அகத்தீ Labels:

 




ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் எப்படிப் போராட்ட நெருப்பில் புடம் போடப்படுகிறார் என்பதன் உயிர் சாட்சி தோழர் டி.ராமன் . எம் ஜி ஆர் ரசிகராய் இருந்து ஓர் கிராமப்புற விவசாயக் குடும்பத்து இளைஞன் வேலைதேடி சென்னைக்கு வந்து தொழிலாளிவர்க்க அரசியலைப் படிப்படியாக உள்வாங்கிய அனுபவம் எளிமையாய் ஆனால் வலுவாய் சொல்லப்பட்டிருக்கிறது .

 

தோழர் டி.ராமன் எழுதிய “ ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம்” எனும் நூல் ஒரு தொழிலாளியின் ஐம்பதாண்டு கால பிசிறற்ற அரசியல் பயணத்தை நமக்குச் சொல்லுகிறது . அதில் உழைக்கும் வர்க்க நலன் மட்டுமே மைய இழை . போராட்டம் ,அடி ,உதை ,சிறை எதுவும் அவர் உறுதியைக் குலைக்கவில்லை . புடம் போட்டது என்பதுதான் செய்தி . திருவான்மியூர் பகுதியின் உழைக்கும் வர்க்கப் போராட்ட வரலாற்றில் பிரிக்க முடியாத ஓர் அங்கம் தோழர் .டி .ராமன் . உழைக்கும் வர்க்கத் தலைவர்கள் தோழர்கள் வி.பி.சிந்தன் ,பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றோர் வார்த்தெடுத்த அன்புத் தோழர் டி .ராமன் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சிய உறுதி மிக்கப் போராளித் தோழன் .

 

சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்கிய காலத்தில் எம்மோடு தோள் இணைந்தவர் டி.ராமன் . அன்று தொட்டு எனக்கும் அவருக்குமான தோழமை உறவு தொடர்கிறது . ஆட்டோ சங்கர் வழக்கு , தோழர் பிரதீப் குமார் கொலை வழக்கு , கல்லுக்குட்டை குடியிருப்பு மக்கள் போராட்டம் , பெத்தேல் நகர் வழக்கு , காலவாய் கரையோர மக்கள் போராட்டம் ,பர்மா காலனி போராட்டம் இப்படி ஒடுக்கப்பட்ட மக்களோடு இவர் நின்ற உரிமைப் போராட்டங்கள்தாம் இவர் வாழ்க்கை .

 

கம்யூனிஸ்டுகளை கீழ்த்தரமாய் விமர்சிக்கும் ’குபீர் அறிவாளிகளுக்கு’ தோழர் ராமன் போன்ற உழைப்பாளி மக்களின் நேர்மையும் அர்ப்பணிப்பும் மிக்க வாழ்க்கைதான் பதிலடி .

 

 “வகித்த பதவிகள் அல்ல போரட்டத் தழும்புகள் மட்டுமே கம்யூனிஸ்டுகள் அடையாளம்” என்பதன் சாட்சியே தோழர் டி.ராமன் . பேரன் தூண்டிவிட்ட தாத்தாவின் எழுத்து இந்நூல் .

 

ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம் , டி.ராமன் , தூவல் கிரியேஷன்ஸ் , 90945 74500 , vedhaperumal@gmail.com , பக்கங்கள் : 112.


0 comments :

Post a Comment