நேற்று பயணத்தில்
ஓர் காட்சி .
சிறு துரும்பும்
பல்குத்த உதவுமாம் ….
நான் ஜன்னலோர
இருக்கையில் அமர்ந்திருக்கிறேன் . என் அருகில் நடுத்தர வயதை எல்லாம் கடந்துவிட்ட ஊழியர்
ஒருவர் அமர்ந்திருக்கிறார் . அநேகமாக பணிஓய்வை
நெருங்கிக் கொண்டிருக்கலாம் .நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை . நடுவில் சந்தனம் .
கையில் இருக்கும் பை அவர் ஓர் அரசு ஊழியர் எனச் சொல்லாமல் சொன்னது . ஒன்றரை மணி நேரம் அவரோடு பயணம் .
ஒவ்வொரு நூறடிக்கும் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்பி
கன்னத்தில் போட்டுக் கும்பிடுகிறார் . ‘ வெளியூரா ?’ என என்னிடம் கேட்டுவிட்டு , என்
பக்கம் திரும்பி கும்பிட்ட சாமியின் பெயரைச் சொல்கிறார் . நாலய்ந்து கும்பிடு முடிந்த
பின் அடுத்து வருகிற சாமி குறித்து முன் தகவல் தரத் தொடங்கிவிட்டார் .
அவர் நம்பிக்கை
.அவர் உரிமை . நான் சொல்ல என்ன இருக்கிறது . ஆனாலும் நான் எங்கேயும் கும்பிடாமல் இருப்பது
அவருக்கு உறுத்தலாகிறது .
“ சார் !
கிறிஷ்டியனா ? ”
இல்லை என
தலையாட்டினேன் . இதுவரை நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை .
“ நீங்க முஸ்லீமா
இருக்க முடியாது , தொப்பியோ தாடியோ இல்லை.”
“ தலையாட்டி
.புன்னகைத்தேன்…” ; வேறென்ன செய்வது ?
“ எல்லாமே
பகவான்தான் சார் ! அவங்க அவங்க நம்பிக்கை அவங்கஅவங்களுக்கு…” இப்படி அவர் சொன்னதும்
லேசாக சிரித்து வைத்தேன் . அப்போதும் பேசவில்லை .
“ சார் !
அடுத்து அந்த எடத்தில இரண்டு நிமிஷம் நிக்கும் சார்… அங்க உயரமான சாமி சிலை இருக்கு சார் ! பஸ்லில் இருந்து பார்த்தாலே
சாமி தெரியும் … எல்லோரும் கும்பிடுவாங்க … ரொம்ப சக்தி உள்ள சாமி …. ரொம்ப பவர் ஃபுள்…
வேண்டிக்கிட்டா நிச்சயம் நிறைவேறும்…”
இதுவரை பேசாமல்
இருந்த நான் மெல்ல வாய் திறந்தேன் , “ அப்போ நீங்க இதுவரை கும்பிட்டது எல்லாமே சக்தி
குறைவாக உள்ள சாமிகளோ….”
நான் கேட்டதும்
, “ அப்படி இல்லை சார் ! ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கு, ஆனால் இவருக்கு
’ஃபுள் பவர்’ [அழுத்திச் சொன்னார்] இருக்கு… அதத்தான் சொன்னேன் … நான் ஒரு சாமிய விடமாட்டேன்
… சிறுதுரும்பும் பல்குத்த உதவும் … சார் … ஒண்ணையும் விடக்கூடாது..”
அவரின் அப்பிராணித்தனத்தைப்
பார்த்து சிரித்துவிட்டேன் .
அவர் , “ சார் ! சிரிக்காதீங்க … ஆபத்துக்கு ஒரு சாமி
இல்லாட்டா ஒரு சாமி உதவுவாரு சார் !”
தொடர்ந்து
வழிநெடுக பல ’சிறுதுரும்புகளை’ கும்பிட்டுக் கொண்டே சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தார் … நான் பேசாமல் மனதுக்குள்
சிரித்தபடி பயணித்தேன் .
வழியில் ஒரு
தர்க்காவையும் மேரிமாதாவையும்கூட கும்பிட்டார் . அதுவும் அந்த ’சிறு துரும்பு’ கணக்காக
இருக்கும் போலும் …
ஓய்வு காலக்
கணக்கும் வாழ்க்கைக் கணக்கும் ஒத்துப் போகாமல் ; பிரச்சனைகளின் கனம் தாங்காமல் தத்தளிக்கும்
அவர் ஏதேனும் துரும்பைப் பிடித்தாவது கரையேறிவிடலாம் என எண்ணுகிறாரோ என்னவோ ! பலர்
அப்படித்தான் .
இவர்களைப்
போன்றோரோடு உரையாட அறிவு மட்டும் போதாது கொஞ்சம் பாச உணர்ச்சியும் தேவை அல்லவா ?
[ சேலம் ஆத்தூர்
பயண அனுபவம் ]
சுபொஅ.
11 /12
/25 .
0 comments :
Post a Comment