சொல்லி முடியாத சாதி ஆணவ நிஜங்கள் .
“ இக்கதைகள் நடந்த இடம் ,அதற்கானத் தரவுகள் எல்லாம் உயிரோடு
இன்னும் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது . அது மாறும் போதுதான் சமூகம் பூக்காடாக
மலரும் …” என்று ‘ ’செவ்வருக்கை ‘ நூலின் ‘என்னுரையில்’ எம். எம். தீன் முன்மொழிந்திருப்பதை
இங்கு நான் வழிமொழிகிறேன்.
சாதி ஆணவம் தலை நீட்டாத தனி மனித வாழ்வோ சமூக வாழ்வோ இங்கு
பல நூற்றாண்டுகளாய் இல்லை . ஆளுக்கு ஆள் அளவு மாறுபடலாம் . ஆனால் இது அநீதி என்கிற
உணர்வுமற்று கடந்து போகப் பழக்கப்படுத்தி கொண்டோம் .அதன் உயிர் சாட்சிதான் இந்த ’ஆணவச்
சிறுகதைகள்’ நூல் .
சாதி மற்றும் நிலவுடைமை சமூகத்தின் கோரப் பற்களால் கடித்துக்
குதறப்பட்ட அப்பாவிப் பெண்கள் பின்னர் தெய்வமாக்கப்பட்டு வழிபடப்பட்டனர் என்பது வரலாறு
. இவ்வழியில் ‘செவ்வருக்கை’ , ‘சுதாரி’ ,’கன்னிக்குழி’ மூன்று கதைகளும் நூற்றாண்டின்
ரணங்கள் .
இஸ்லாமிலும் , கிறுத்துவத்திலும் கூட இந்த புற்று நோய்க்கிரிமித்
தொற்றை குணப்படுத்தாமல் தூக்கிச் சுமப்பதைச் சொல்லும் ‘நாசுவம்’ ,’ ஊரு ஒப்பாது’ என
இரண்டு கதைகள் .
“ இந்திய சமூகத்தில் மென்மையான மக்களிடமும் ,வன்மையான மக்களிடமும்
சாதியத்தின் வீரியம் ஒரே அளவில்தான் இருக்கிறது” என்பதைச் சொல்லும் ‘ பொண அடக்கம்
‘.
சாதி ஆணவக் கொலை மட்டுமல்ல , சாதி ஆணவக் கொலை குறித்த பயமும்
எப்படி சமூக .தனிமனித உளவியலை ஆட்டுவிக்கிறது என்பதைப் படம் பிடிக்கும் ,’பாடும் துண்டு
நிலா’.
” அதிகாரத்தின் மனதில் இருக்கும் சாதிக் கயிற்றை “ அம்பலப்படுத்தும்
‘கைக்கயிறு’.
சாதி ஆதிக்கக் கரங்களில் உருட்டி விளையாடும் பொம்மையாகிவிட்டதா
ஊராட்சிகளில்
ஒதுக்கப்படும் தலைவர் பதவி என கேள்வி கேட்கும் ’சாதி நாற்காலி’.
ஒடுக்கப்பட்ட சாதிக்குள்ளும் உயர்வு தாழ்வும் வன்மும் தொடர்கதையாகிறது
என்பதைச் சொல்லும் ’வன்மப் பழி’.
சுயமரியாதை பேசிய இயக்கத்துக்குள்ளும் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறதா சாதி ஆதிக்கம்
என கேட்கும் ‘ கழகக் காவலர் விருது’.
சாதி ஆணவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு
வடிவத்தில் வெடித்துக் கொண்டே இருக்கிறது .இந்த நூலில் உள்ள 12 கதைகள் ; 12 வகையைக்
கொடுமையைப் போட்டுடைக்கிறது . இவை மாதிரிக்கு
சில . அவ்வளவுதான் . புதுப்புது வடிவங்களில் சாதி ஆணவம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது
. என்ன செய்ய ? அதற்கு எதிராய் உரக்க முழக்கமிடுக ! போராடுக ! அதற்கான கனலை விசிறிவிட
சாம்பல் பூத்த கங்குகளாய் இந்நூல் . நூலாசிரியருக்கு வாழ்த்துகள் .
வழக்கமாக நூலறிமுகத்தின் போது ஓரளவு கதையையும் கதாபாத்திரங்களையும்
சுருக்கமாகச் சொல்லிவிடுவேன் . இங்கு சொல்லவில்லை . ஏனெனில் இக்கதை ஒவ்வொன்றையும் நீங்கள்
வாசித்து ஒரு சொட்டுக் கண்ணீராவது விட வேண்டும் . சாதி ஆணவத்தின் மீது கட்டுக்கடங்கா
கோபம் எழவேண்டும். ஆகவே வாசியுங்கள் !
செவ்வருக்கை : ஆணவச் சிறுகதைகள் , ஆசிரியர் : எம் .எம் .தீன் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம்
,தொடர்புக்கு : www.thamizhbooks.com /
94445 67935 பக்கங்கள் : 156 , விலை : ரூ.160 /
சுபொஅ.
26 /12 /25 .

0 comments :
Post a Comment