நெடும் அரசியல் சதியின் கருவியான சினிமாவின் கதை

Posted by அகத்தீ Labels:

 




நெடும் அரசியல் சதியின் கருவியான சினிமாவின் கதை

 

.பா.சிந்தன் எழுதிய இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா: வெறுப்பின் கொற்றம் வீழ்க ! ” நூலின் தலைப்பே ஆழமான அரசியலை உணர்த்தி எச்சரிக்கிறது . இன்றைய  ஜென் சீ’ தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய மிக முக்கிய நூல் . “ வாசிப்போம் ;உரையாடுவோம்,” என்கிற வேண்டுகோளோடு நூல் குறித்துச் சொல்ல விழைகிறேன் .

 

சினிமா ஓர் வலிமையான கருத்துருவாக்கச் சாதனம் ; அதனை எப்படி  நுட்பமாகத் தனது சியோனிச யூதவெறி அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்தியது இஸ்ரேல் என்பதுதான் நூலின் மொத்தச்சாரமும் .  

 

இந்தியாவில் இந்துத்துவவாதிகள் எப்படி வெறுப்பை விதைக்கிறார்களோ , அப்படித்தான் இஸ்ரேலில் யூதர்களின் மனதை வெறுப்புகளால் நிறைக்கிறார்கள் . அந்த வகையில் இந்துத்துவமும் சியோனிசமும்  ஒன்றுக் கொன்று நெருக்க மானவையாக இருக்கின்றன.” என்கிறார் முன்னுரையில் சிந்தன் . நூல் வாசித்து முடிந்தபின் நீங்களும் அதனை வழிமொழிவீர்கள் .

 

எப்படி ஒவ்வொரு கட்டமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேலை நிலைநிறுத்த ஜியோனிச அரசியல் சதி பின்னப்பட்டதோ; அதே வகையில் சினிமாத் தயாரிப்பும் கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்டு , யூத சமூக உளவியல் அதற்கொப்ப வளைக்கப்பட்ட கதையை இந்நூல் சொல்கிறது . ஒன்பது கட்டமாக இஸ்ரேலிய சினிமா முயற்சியை வகுத்துப் பார்க்கிறார் சிந்தன் .

 

முதல் கட்டம் [ 1948 வரை ] : இஸ்ரேல் என்ற தேசம் உருவாவதற்கான சூழலில் எடுக்கப்பட்ட படங்கள் . ஹிட்லரால் கொடுமைப் படுத்தப்பட்டதால் யூதர்கள் மேல் பச்சாதாபம் இருந்த சூழலில் கிழக்கு ஐரோப்பிய மக்களை மெல்ல நகர்த்தி பாலஸ்தீனத்தில் குடியேற்ற ஆர்வத்தைக் கிளர்த்திவிட்ட  படங்கள் .பாலஸ்தீனத்தை மனிதர்களற்ற பிரதேசமாகச் சித்தரித்து  ;கடும் உழைப்பால் இஸ்ரேலியர் கூட்டு உழைப்பால் எழும் சோஷலிச தேசம் என்பதுபோல் காட்டிய படங்கள் ,” லேண்ட ஆஃப் பிராமிஸ்[ Land of promise ] போன்றவை ஆகும் .

 

அடுத்து 2 வது கட்டம் [ 1948 -54 ] :இஸ்ரேல் ராணுவமே நிதி ஒதுக்கித் தயாரித்த படங்கள் . இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கிறோம் என்கிறகுற்ற உணர்வுயூதர்களிடையே மேலேங்கிவிடாமல் , “ நாம் செய்தது சரிதான் .”நமக்குக் கிடைத்திருக்கும் நிலத்தைப் பாதுகாப்பது நம் கடமைஎன்கிற உளவியலை உருவாக்க சினிமாக்களைத் தயாரித்த காலகட்டம். ‘ ஹோத் ஹனைத்’ [ Hod hanit ] ,’ ஓவர் தி பார்டர்’ [ Over the border ] போன்ற படங்கள் .

 

அடுத்து 3 வது கட்டம் [ 1954 – 67 ] : பாதுகாப்பையும் தேசபக்தியையும் மையமாக்கிய காலகட்டம் . பாலஸ்தீனியர்களை சொந்த நாட்டிலேயேஊடுருவல்காரர்களாகச் சித்தரித்து , “ திஸ் லேண்ட் இஸ் மைன்இந்த நிலம் என்னுடையதுஎன்கிற எண்ணத்தைக் கொளுந்துவிட்டெரியச் செய்ய அரசே இஸ்ரேலிய திரைப்பட சேவைஎன்கிற அமைப்பைத் தொடங்கித் தயாரித்த  எக்சோடஸ் [ Exodus ] போன்ற பிரமாண்டப் படங்கள் . 

 

அடுத்து 4 வது கட்டம் [1967 -73 ] :  இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் ஆறுநாள் யுத்தம் நடந்த காலம் . தங்களை வெற்றியாளர்களாகவும் பாலஸ்தீனர்களையும் அரபு மக்களையும் எதிரிகளாவும் சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் . ஒரு புறம் ஹிட்லரின் கொடுமையால் பாதிக்கப்பட்ட யூதர்கள் என்கிற சித்திரமும் , போரில் வென்றதின் வீரதீரச் செயல்களுமாய்  இஸ்ரேலின் இரண்டாம் மறுபிறப்பு’ என்கிற மனோநிலையை விதைக்க உருவாக்கப்பட்ட படங்கள் . ‘ இஸ்ரேல் : ரைட் டூ லீவ் [ Isrel : A right to live ] , ‘ தி பேட்டில் ஆஃப் சினாய் [The battle of Sinai ], ’தி பில்லர் ஆஃப் ஃபையர்[ The piller of  fire ] போன்ற படங்கள் .படத்தயாரிப்பில் இஸ்ரேலிய அரசும் இஸ்ரேலிய ராணுவமும் இணைந்து ஈடுபட்டன .

 

அடுத்து 5 வது கட்டம் [ 1973 -1982 ]  : இஸ்ரேலை ஓர் ஜனநாயக தேசமாக முன்வைப்பதுடன் ; அதனை ஒழிக்க முற்படும் பயங்கரவாதக் கும்பலாகப் பாலஸ்தீனர்களைச் சித்தரிக்கும் வகையிலான படங்களின் காலகட்டம் . இஸ்ரேல் அரசு தொலை காட்சி நிறுவனத்தை உருவாக்கி அதனை முழுமையாக இத்திசையில் முடுக்கிவிட்ட காலம் . ‘விக்டரி அட் எண்டெப்பே [ Victory at Entebbe ] , ‘ ரெயிட் ஆன் எண்டெப்பே ‘ [Raid on endebbe ], தி விமன் கால்ட் கோல்டா [ The women called golda ] , போன்ற படங்களும் , இஸ்ரேலுக்குள் யூதர்களிடையே இருக்கும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை மையமாக வைத்தபுரோகஸ் [ Bourekas filims ] படங்களும் வந்த காலகட்டம்.

 

அடுத்து 6 வது கட்டம் ,[ 1982-90 ] :  நீண்ட காலத்துக்கு வெறுப்பைக் கக்கும் படங்களே எடுத்துக் கொண்டிருக்க முடியாது என்கிற சூழல் உருவான பின்னணியில் ,” பாலஸ்தீனர்களும் மனிதர்கள்தான் , “பரிதாபப்படுகிறோம்என்கிற ரீதியில் படங்கள் எடுக்கப்பட்டன . ’ஹேம்சின் [ Hamsin ] , ‘கப் ஃபைனல்  [ Cup final ] போன்ற படங்களின் காலம். “பாலஸ்தீனர்களுக்கான தீர்வு நோக்கி நடை போடலாம்என நம்பிக்கை ஊட்டிய காலகட்டம் என்கிறார் சிந்தன்.

 

அடுத்து 7 வது கட்டம் , [ 1990- 2010 ] : சோவியத் வீழ்ச்சியின் பிந்தைய காலகட்டம் . இஸ்ரேல் தம்மிடம் வரும் யூதர்களுக்கு இடம் தேடி வெஸ்ட் பேங்கில் ஆக்கிரமிப்பு நடத்தியது, பாலஸ்தீன அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டன . முந்தைய பரிதாபப் பார்வையுடன் அச்சமும் வன்மமும் மிக்க படங்களைத் தயாரித்த காலம் . ‘தி பப்புள் [ The bubble] , ’பேரடைஸ் நவ்  [Paradise now ] , ‘தி அட்டாக் [ The attack ] . ‘ தி பிரிசனரஸ் ஆஃப் வார் [The presoners of war] போன்ற படங்களின் காலம் .

 

அடுத்து 8 வது கட்டம்  [ 2010 -23 ] : இக்காலகட்டத்தில் மூன்றுவகை படங்கள் வந்தன . இஸ்ரேலிய பாதுகாப்பை முன்வைத்து வந்தவை , அடுத்து சியோனிச கோட்பாடுகளை எள்ளல் செய்து கடந்த படங்கள் , மூன்றாவது அரசியல் தவிர்த்த குடும்பப் படங்கள் . “பாலஸ்தீனப் பிரச்சனை என்பது தீர்க்க முடியாதது , யூத வாழ்க்கை மற்றும் பண்பாடு என்பது காலங்காலமாக இருப்பது ,பெரும்பகுதி மக்களை அரசியல் நீக்கம் செய்வது..” என்ற திசையில் நகர்ந்த காலகட்டம். ‘ஃபெளடா [Fauda ] , ’ஹிட் அண்ட் ரன் [The hit and run ] ’தி ஜூஸ் ஆர் கமிங் [The jews are coming] , ‘ தி லா ஆஃப் ஜங்கிள்[ The law of jungle ], ‘சகுரி இம்பீரியா [ Zaguri imperia] , ‘ரிகர்சல் [ Rehersals] போன்ற நிறையப் படங்கள் .

 

தற்போது 9 வது கட்டம் [ 2023 ] : மிகவும் வக்கிரமும் வன்மும் கலந்த காலம் . எல்லா வகை பாசிஸ்டுகளும் யூத பயங்கரவாதிகளும்அங்கம் பெறும் நெத்தன்யாஹூ அமைச்சரவை காலம் . காஸா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திய காலகட்டம் . தன் இஸ்ரேலிய வீரர்களையே  தானே கொன்று போட்டு நாடகம் ஆடஹனிபல் ஆணை [ Hannibal directive ] பிறபித்த காலகட்டம் . பாலஸ்தீனர்கள் மீது வெறுப்பைக் கக்கும் படங்கள் வந்து குவியும் காலம் . சூப்பர் நோவா : தி மியூசிக் ஃபெஸ்டிவல் [ Supernova : The music festivel ] , வீ வில் டேன்ஸ் அகைன்  [ We will dance again ] , ’தி சில்ட்ரன் ஆஃப் அக்டோபர் 7 ‘ [ The children of October 7 ],  ஆஃப் டாக்ஸ் & மென் [ Of dogs and men ] போன்ற படங்கள்.

 

இவற்றைத் தொடர்ந்து பத்தாவது அத்தியாயத்தில் இந்த கருத்துப் போரில் இஸ்ரேல் செலவிட்ட பெரும் தொகை பற்றி சொல்லி ,இந்துத்துவா சக்திகள் அதேவழியில் காஷ்மீர் பைல்ஸ் ,கேரள பைல்ஸ் உள்ளிட்ட சில முயற்சிகளைச் சுட்டிக்காட்டி  எச்சரிக்கிறார். வெறுப்புப் பிரச்சாரத்தில் இஸ்ரேல் பாதையில் இந்தியா பயணிப்பதை நினைவு கூர்கிறார் .

 

இந்த அத்தியாயத்தை இன்னும் கொஞ்சம் விரித்திருக்க வேண்டும் . ராமாயணத் தொடர் , மகாபாரதத் தொடர் , ஹனுமன் தொடர் , முஸ்லீம் எதிர்ப்பு திரைப்படங்கள் , ரோஜா போன்ற படங்களின் இருண்மைத்தன்மை , பாபர் மசூதி பிரச்சனையில் ஆரம்பத்தில் பேசியது என்ன ? படிப்படியாய் மாறி எங்கு வந்து நின்றனர் ? இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு .அவற்றை இணைத்து விரிவாக எழுதி அடுத்த பதிப்பில் சேர்க்க சிந்தன் முயலலாமே !  அதுபோல் குறிப்பிட்ட திரைப்பட போஸ்டர்கள் ,அல்லது ஸ்டில் போட்டோக்கள் ஆங்காங்கே இணைத் திருக்கலாம் .

 

நான் ஆங்கிலப் படங்கள் அதிகம் பார்க்கும் பழக்கம் இல்லாதவன் . இங்கு சுட்டிய பெரும்பாலான படங்களை நான் பார்க்கவில்லை . சிந்தன் பெரும் பாலும் பார்த்திருப்பான் .அந்த உணர்வோடும்  வலைதளத் தகவல்களைத் திரட்டியும் எழுதியுள்ள இந்நூல் நமக்கு சுருக்கமான சித்திரத்தை வரைந்து காட்டுகிறது எனில் மிகை அல்ல.

 

இந்நூல் திரைப்படங்களை அரசியல் பார்வையோடு அணுக நல்ல வழிகாட்டி. அனைவரும் வாசிக்க வேண்டுகிறேன் . இ.பா.சிந்தனின் “அரசியல் பேசும் அயல் சினிமா ”, “பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்” , “கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்”,பாலஸ்தீனம் நம்மால் என்ன செய்ய முடியும் ?” உள்ளிட்ட நூல்களையும் வாசித்தால் இப்பார்வைப் பரப்பு விரியும் .

 

சிந்தன் ஆழந்த வாசிப்போடு - சித்தாந்தப் புரிதலோடு - அரசியல் பார்வையோடு மொழி பெயர்ப்பிலும் படைப்பிலும் ஈடுப்பட்டிருக்கிறார் .பணி தொடர வாழ்த்துகள் . ’என் ஞானப் பிள்ளைஎன நான் உரிமையோடு சொல்லும் இ.பா.சிந்தன் இந்நூலை  எனக்குக் காணிக்கையாக்கி” நெகிழவைத்துவிட்டான் . மீண்டும் வாழ்த்துகள் !!

 

இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா: வெறுப்பின் கொற்றம் வீழ்க ! , ஆசிரியர் : .பா.சிந்தன் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு :  www.thamizhbooks.com  /  94445 67935 பக்கங்கள் : 72 , விலை : ரூ.80 / 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

23/12/25.

 


0 comments :

Post a Comment