உருவத்திலும் உள்ளடக்கத்திலும் கனமான மலர்

Posted by அகத்தீ Labels:

 





 

உருவத்திலும் உள்ளடக்கத்திலும் கனமான மலர்

தீக்கதிர் . டிசம்பர் 21, 2025

உருவத்திலும் உள்ளடக்கத்திலும் கனமான மலர்

ஏ4 அளவில் 440 பக்கங்கள் கொண்ட உருவத்திலும் உள்ளடக்கத்திலும்  மிகவும் கனமான, மிகவும் சுவையான “தமுஎகச 16ஆவது மாநில மாநாட்டுச் சிறப்பு மலரை மூன்று நாட்களாக வாசிக்கிறேன். முக்கால் கிணறுதான் தாண்டி இருக்கிறேன். 

 

மாநாட்டு மலர் என்றாலே சரிபாதிக்கு மேல் விளம்பரங்களே நிறைந்திருக்கும் என எதிர்பார்த்துப் புரட்டினால் ஏமாற்றம். 61. 5 பக்கங்கள் + இரண்டு உள் அட்டைகள் மட்டுமே விளம்பரங்கள். மீதி 378.5 பக்கங்கள் உள்ளடக்கம். அதில் 11 நேர்காணல்கள், 16 சிறுகதைகள், 35 கவிதைகள், 53 கட்டுரைகள். மொத்தம் 115 படைப்புகள். அப்பப்பா

 

கேரவன் இதழுக்காக ஆனந்த் டெல்டும்டேவுடன் அஜீத்மஹாலே நடத்திய நேர்காணலை கமலாலயன் தமிழாக்கம் செய்திருக்கிறார். மக்கள் தொகை கணக்கெடுப்பு சார்ந்தும் இன்றைய சூழல் சார்ந்தும் ஆழமான உரையாடல். தமுஎகச ஆளுமைகள் ஆறுபேர் உள்ளிட்டு பதினோரு நேர்காணல்களும் கவனத்துக்குரியன. விரிந்த ஜனநாயகத்தோடு பாதையையும் இலக்கையும் சுட்டுவன. 

 

அ.கரீம் எழுதிய “ அம்பத்தாறாமங்குல பெரும் வழுதி மன்னன் அரசாண்ட கதை நல்ல அரசியல் பகடி. சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டிய ’56 இஞ்ச் கதை இது. அறிவு மதியின் ‘ உயிர்விடும் மூச்சு ‘ இரண்டே பக்கங்களில் கருக்கொலையை உணர்ச்சியும் கவித்துவமும் பொங்க முன்வைக்கிறது. ஷோபா சக்தியின் “ பொன்ஜூர் ரூஸோ கதை ஈழத்தின் சாதிய பாகுபாட்டின் நெற்றிப்பொட்டில் அடிக்கிறது. பதினாறுமே முத்திரைச் சிறுகதைகள்தாம்.தனி நூலாக்கலாம். 

 

“ எண்ணிய நாளின் பொழிவைக் / காட்டிலும் / எதிர்பாரா தினத்தின் / மழைக்குத்தான் / ஈர்ப்பும் ஈரமும் அதிகம்.” என்கிறார் ஷக்தி ஜோதி. 35 கவிதைகளுக்கும் இது பொருந்தும். ஒவ்வொன்றும் எதிர்பாரா ஈர்ப்பு. ” ஒரு போதும் / உங்களுக்கு / கீழ்படிதலுள்ள மாணக்கன் அல்ல.” என உபதேசிகளை ஓங்கிக் குட்டுகிறார் தனிக்கொடி. பானை சோற்றுக்கு இரு சோறு பதம். 

 

“ நீதிமன்றமும் பெரியாரும் “ என நீதிபதி கி.சந்துரு சொல்லும் செய்தி புதிது. சர். ஜான்மார்ஷல் எழுதிய ”சிந்துவெளியின் நிலமும் அகாழய்வுத் திட்டப்பணிகளும் “ கட்டுரைதான் இம்மலரிலேயே பெரிய கட்டுரை. முக்கியமானது. இரா.விஜயகுமார் மொழியாக்கம் செய்திருக்கிறார். இதை ஒட்டி வந்திருக்கிற இன்னொரு கட்டுரை பக்தவத்சல பாரதி எழுதியது. திருக்குறள் சார்ந்து ஆர்.பாலகிருஷ்ணனும், பொ.வேல்சாமியும் எழுதிய கட்டுரைகள் கவனத்துக்கு உரியன.

 

யுகபாரதி எழுதிய “ புலித்தோல் போர்த்திய பசு “ சங்க இலக்கியம் திருக்குறள் வழி நுண் வாசிப்பின் வாசலைத் திறக்கிறார்;  பசுத்தோல் போர்த்திய புலியா புலித்தோல் போர்த்திய பசுவா என்பதில் சூக்குமம் இருக்கிறது.  எருமையின் முக்கியத்துவமும் உணர்த்துகிறது.  

 

“ தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இந்துத்துவ அபாயத்தை கோடிட்டுக் காட்டுகிறார் அருண் குமார். “ ஊன் சோறு உண்டால் அம்ம இவ்வுலகு என களப்பிரன் உணவு அரசியலைப் பேசுகிறார். மீனவர், மாற்றுப்பாலினம், கல்வி, இலக்கியம், நாவல், சிறுகதைகள், சிறார் இலக்கியம், சினிமா, இசை, கலை, தமுஎகச செயல்பாடு, உழவு, தமிழில் வழிபாடு என பல தளங்களில் விரியும் 53 கட்டுரைகளுமே வாசிக்க வேண்டியவை. தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளையும் சில நேர்காணல்களையும் சேர்த்துத் தனி நூலாக்கலாம். 

 

தமிழ்பித்தனின் ஓவியங்கள் ஆங்காங்கே தலை நீட்டுகிறது. நன்று. இரண்டு கட்டுரைகளில் ஓவியம் பற்றி கொஞ்சம் பேசப்பட்டாலும் ஓவியத்துக்கு இன்னும் கொஞ்சம் இடம் அளித்திருக்கலாமோ?  இன்னும் சிலர் ஓவியங்களை இணைத்திருக்கலாமோ?  நாட்டுப்புற கலை இலக்கியம் குறித்தும் கொஞ்சம் கவனம் குவித்திருக்கலாம். ஜென் சி தலைமுறையை மனதில் நிறுத்தி சில படைப்புகள் பேசியிருக்க வேண்டும்;  மோ.சிவகுமார் கட்டுரை உள்ளிட்டு இரண்டு கட்டுரைகளில் போகிற போக்கில் சொன்னது போதாது.

 

பல்சுவை மிக்க வாசிக்க இலகுவாக அதேநேரம் அடர்த்தியும் குறையாமல் மலர் தயாரித்த குழுவுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள். வாங்கி வாசிக்க பாதுகாக்க வேண்டிய மலர். 

 

தமுஎகச 16வது மாநாடு : சிறப்பு மலர். தொடர்புக்கு: 0452–2341669, thamueakasa2014@gmail.com,  பக்கங்கள் : 440, விலை : ரூ.600.

 

சுபொஅ.

22/12/25.

 

 

 


0 comments :

Post a Comment