நியாயமா ? நாயமா?

Posted by அகத்தீ Labels:

 


நியாயமா ? நாயமா?
[ தலைப்பு தோழர் விஜய்சங்கரிடமிருந்து சுட்டது ]

தெருநாய்கள் குறித்து “நீயா நானா”வில் சூடான விவாதம் நடைபெற்றது. விலங்கபிமானிகளின் மனிதாபிமானம் ,கருணை ,அன்பு எல்லாம் எப்படிப்பட்டவை என பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது . நீங்கள் கட்டாயம் பாருங்கள் !

அந்த விவாதத்தில் வந்த இன்னொரு முக்கிய விவகாரம் என்ன தெரியுமா ? நாய்களை தத்து எடுத்து அதற்கு கருத்தடை செய்ய , தடுப்பூசி போட என இந்த ஜீவகாருண்ய என் ஜி ஓக்கள் அரசிடமும் சில நிறுவனங்களிடமும் சில ஆயிரம் கோடிகள் மானியமாகப் பெறுகின்றனர் . ஆனால் அவர்கள் அப்படி நிதி பெற்று செய்ததாக கணக்குக் காட்டுவதற்கும் உண்மைக்கும் இடையே மிகப்பெரிய இடை வெளி உண்டு . ஆக இங்கு பெருமளவு நிதிசுருட்டல் நடக்கிறது . ஆக பணபாசம்தான் நாய்பாசமாகிறது . இதை விவாதத்தில் சிலர் சுட்டிய போதும் என் ஜி ஒ நபர்கள் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றனர் . அது விவாதத்தின் மையமாகிவிடக்கூடாது என கவனமாகத் தவிர்த்தனர் .இதை ஊடகங்கள் பேசுவதே இல்லையே . ஊழலைப் பற்றி அன்னா ஹாசாரே மாதிரி செலக்டிவாக பேசும் புனிதப் போலிகளல்லவா இவர்கள் ! சரி ! நாய்க்கு வருவோம் !

பெங்களூரி அஜ்மிரா போன்ற அபார்ட்மெண்டுகளில் நாய் வளர்ப்போர் நாயை வெளியே [ காம்பவுண்டுக்கு உள்ளே ] அழைத்துவரும் போது நாய் பீயை அளாவும் பாதுகாப்பாய் குப்பை தொட்டியில் போடவும் கடமைப்பட்டவர்கள் . மீறினால் அபராதம் உண்டு .

பல அபார்ட்மெண்டுகளில் நாய் பூனை வளர்க்க அனுமதியில்லை .

நான் அமெரிக்கா போயிருந்தேன் .அங்கே தெருநாய்களே இல்லை .ஆனால் காலையிலும் மாலையிலும் நாயை பிடித்துக் கொண்டு நடை பயிற்சி செல்வோர்தான் மிகமிக அதிகம். இன்னும் சொல்லப்போனால் பலர் கையில் இரண்டு நாய்கள் கூட இருக்கும் . நாய்கள் மீது மோதாமல் நடை பயிற்சி செல்வது ஒரு சர்க்கஸ் . மதியம்கூட நாய் நடை இருக்கும் .அதற்கு நேரம் காலம் கிடையாது .நள்ளிரவில் எட்டிப் பார்த்தாலும் நாலுபேர் நாயோடு திரிவார்கள் !

நாய் வளர்ப்பவர்களே நாய் கழிவுகளை அப்புறப்படுத்தி அதற்குரிய தொட்டியில் பாதுகாப்பாக பொதிந்து போடவேண்டும் .சாலையில் நாய் கழிவைவிட்டுச் செல்ல முடியாது . மீறினால் அபராதம் உண்டு .

வயதானவர் வீட்டு நாய்களை காலை மாலை வெளியே அழைத்துச் செல்ல டாக்மென் உண்டு . அது அங்கு ஒரு பிழைப்பாக சிலருக்கு உள்ளது .

நாய் யாரையாவது கடித்தால் நாய் வளர்ப்போரே மருத்துவச் செலவை ஏற்க வேண்டும் . அபராதம் தண்டனை எல்லாம் உண்டு .

வழிநெடுக விலங்கு மருத்துவ மனைகள் உண்டு . வெளிஊர் செல்வோர் சில நாட்கள் பாதுகாப்பாக விட்டுச் செல்ல நாய் காப்பகங்கள் உண்டு . நாய்களுக்கு பியூட்டி பார்லரெல்லாம் உண்டு .சூப்பர் மால்களில் நாய் உணவுகள் ,உடைகள் ,இதர நாய் அயிட்டங்களுக்கு பெரிய செக்ஷன் தனியாக இருக்கிறது .

அங்கு நாயை நாய் என்று சொன்னால் கோவித்துக் கொள்வார்கள் . ஹி ,ஷி , என்று தான் சொல்ல வேண்டும் .

அமெரிக்காவில் நாயாகப் பிறக்க வேண்டும் என்பார்கள் .அந்த அளவு அது செல்லப் பிராணி .

மீண்டும் சொல்கிறேன் அங்கு தெருநாய்கள் ஒன்றைக்கூட பார்க்கவே முடியாது .

இங்கு தெருநாய்கள் பிரச்சனைதான் சவாலனது . அதிலும் ராபிஸ் நாய் பிரச்சனை மிகவும் ஆபத்தானது . இதனை சும்மா மேம்போக்கப் பார்க்க முடியாது .

இங்கே வீட்டில் வளர்ப்போரின் செல்லநாய்கூட தெருவைத்தான் அசுத்தப்படுத்தும் ; அதைக்கூட இந்த விலங்கபிமானிகள் அள்ளி அப்புறப்படுத்த மாட்டார்கள் ! அவ்வளவுதான் அவர்களின் சமூக அக்கறை .

தெருக்கள் எங்கள் குழந்தைகள் ,முதியோர் , மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பாக நடக்கத்தான் ; வெறிநாய்களின் வேட்டைத்திடல் அல்ல .

12/08/25 அன்று நான் பதிவிட்ட கவிதையை காலப் பொருத்தம் கருதி மீண்டும் …

நரகமா சொர்க்கமா ?



வெறிநாய்களைக் கொல்லாதீர்கள் !
ஜீவகாருண்யம் பேணுங்கள் !
தெருவெல்லாம் வெறிநாய்கள்
பைரவனின் ஆசிர்வாதங்கள்
பச்சைக் குழந்தைக்குத்தான்
பகவானின் ஆசிர்வாதமில்லை
நாய்கடியில் சாதிமத பேதமில்லை
நாள்பார்த்து கோள்பார்த்து நாய்கடிப்பதில்லை
சொல்லுங்கள் ஜீவகருண்யரே !
நாய்கடித்து ரேபிஸில் செத்தால்
போவது சொர்க்கம்மா நரகமா ?

சுபொஅ.
01/09/25.

0 comments :

Post a Comment