வெறும் வாக்கு மோசடி மட்டுமல்ல

Posted by அகத்தீ Labels:

 


தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்காதா ? நடக்கும் ? தேர்தல் ஆணையம் நாக்பூர் சாவிக்குத்தானே இயங்குகிறது . இதைத்தானே ’பிரமாண்டக் கூட்டணி’ என்றார் எடப்பாடி . ஆகவே இங்கேயும் இரட்டை விழிப்புணர்வு தேவையே ! கடும் போராட்டம் தேவை .அதற்கேற்ப வியூகமும் பக்குவமான அணுகுறையும் தேவை .

 

வெறும் வாக்கு மோசடி மட்டுமல்ல . ஒப்பீட்டளவில் சமூகநீதி சற்று நிலவும் தமிழ்நாட்டில் அதற்கும் வேட்டுவைக்கும் ’சோஷியல் என்ஜினியரிங்’ வேலை ஆர் எஸ் எஸ் மூலம் பல காலமாக நடந்து வருகிறது . ஆம் இங்கு சாதியமும் பாலின ஒடுக்குமுறையும் முற்றாக ஒழிந்துவிடவில்லைதான் ; ஆயிரம் ஆண்டு நோய் தொற்றை ஒரு நூற்றாண்டில் முற்றாக துடைத்திடல் சவால்தான் . நோய்க்கிரிமிகள் புதிய அவதாரம் எடுப்பதுபோல் சாதியமும் பாலின ஒடுக்குமுறையும் புதிய அவதாரம் எடுப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சவால்தான். அதில் ஆர் எஸ் எஸ் பங்கு திரைமறைவில் மிகப்பெரும் அளவு உள்ளது என்பது கண்கூடு .

 

சாதிய சங்கங்களில் ஆர் எஸ் எஸ் ஊடுருவி மிகவும் சாதிவெறி தலைகேறிய சிலரை உசுப்பிவிட்டு ஆங்காங்கு பல சாதிய மோதல்களைத் தூண்டிவிட்டு வருகிறது . இந்த சதியாளர்கள் வெளிஉலகின் கண்ணில் படாமல் காரியமாற்றிவதில் வல்லுவரான ’கார்யகர்த்தாக்கள்’.  

 

பார்ப்பணியத்தையும் சனாதனத்தையும்  மூளையில் சுமந்து திரியும் இடைநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒரு சிறு பிரிவினர் , படித்தவர்கள் உட்பட இதில் அங்கமாகி உள்ளனர் . இதில் அந்த கார்யகர்த்தாக்கள் வெற்றிபெறத் தொடங்கி இருப்பதே அதிக ஆபத்தானது .

 

“ ஆண்டவரே ! இவர்கள் அறியாமல் செய்த பிழையை மன்னியும்” என மன்றாட முடியாது ; இது சமூகச் சவாலாகிறது . தற்போது அந்த விஷக்கிருமியால் அந்த சிறுவட்டத்துக்கு வெளியே பரவமுடியவில்லை என்றாலும் சமூக உளவியலில் மெல்ல மெல்ல நஞ்நேறிக்கொண்டிருக்கிறது .ஆகவே நம் பார்வையும் பணியும் போதாது .போதாது .போதாது . ஆகவே மூளையில் படிந்துள்ள இந்த பிற்போக்குத் தனத்துக்கு எதிராக வீரியமான தத்துவப் போராட்டம் தேவை .

 

 

 

சாதியமும் சனாதனமும் தன்னை மறுகட்டமைப்பு செய்து புதுக்குரலில் நயவஞ்சகத்தை மூடி மூலம் பூசி பேசிவருபவற்றை உள்வாங்கிட வேண்டும் ; அவற்றை எதிர்த்த தத்துவப் போராட்டமும் தன்னை மறு கட்டமைப்பு செய்திட வேண்டும் .பழைய மொழியில் பழைய வாதங்களை அப்படியே கிளிப்பிள்ளை போல் ஒப்பிப்பது பயன்தராது . புதிய குரலில் அறிவியல் ரீதியாக சமுதாய மாற்றச் சிந்தனையோடு பேசப்பழக வேண்டும் . விஷவேரில் வெந்நீர் ஊற்ற கற்க வேண்டும் .கற்பிக்க வேண்டும் . பெரியாரிய ,அம்பேத்காரிய ,மார்க்சிய இயக்கங்கள் முன் உள்ள சவால் இது .

 

ஒரு பக்கம் தமிழ் நாட்டின் மீது இப்படி ஓர் வஞ்சக நரித்தன வேலையை ஏவிவிட்டுக் கொண்டே , மறுபக்கம் தமிழ்நாடு இப்போது கல்வியில் அடைந்த சிறு முன்னேற்றத்தையும் தரம்  தாழ்த்தி அவமானப்படுத்தும் வேலையை ஆளுநரி செய்கிறது . வேதகாலத்தில் நோயே கிடையாது என மூளையை கழற்றி வைத்துவிட்டு உளறித் திரியும் அந்த நரிதான் ,தமிழக கல்விமுறை தரமில்லை என சேறு வாரி இறைக்கிறது . கல்வித் தரம் மேம்பட வேண்டும் என்பதில் யாருக்கு இருவேறு கருத்து இருக்கவே முடியாது . ’அடுத்த படியில் ஏறு’ என ஊக்குவிப்பது வேறு ; கேலியும் கிண்டலும் அவமரியாதையும் செய்து முடக்க முனைவது வேறு .நரி செய்ய முனைவது இரண்டாவது வகையைத்தான் .

 

ஆக ,கல்வி ,சமூகநீதி ,பாலின சமத்துவம் ,  இவற்றில் சனாதனமும் சாதியமும் பின்னும் நுட்பமான சதிவலையை பிய்த்து எறிய கூர்த்த பார்வையும் பரந்த அணுகுமுறையும் தொடர்ச்சியான செயல்பாடும் தேவைப்படும் காலத்தில் வாழ்கிறோம் . ஒவ்வொரு நிகழ்வையும் இக்கோணத்தில் பார்த்து எதிர் கொள்ள வேண்டும் . வேறு வழியில்லை.

 

இவை என் தனிப்பட்ட கருத்துகளே .இதனை நான் சார்ந்த கட்சி மீது ஏற்றி குழப்ப வேண்டாம் .

 

சுபொஅ.

17/08/25.


0 comments :

Post a Comment