எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே ….

Posted by அகத்தீ Labels:

 


எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே ….

 

ஒரு எழுத்தாளர் மனைவியின் வெள்ளந்தியான பேட்டியை காணொளியில் பார்த்தேன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி பளிச்சென புலப்பட்டது . இது விதி விலக்கல்ல . படைப்பாளியை ஓரம் தள்ளிவிட்டு படைப்பைப் பார்க்க வேண்டிய சூழலே மிகுந்துள்ளது .

 

’பெரிய மனிதர்கள் ‘ /எழுத்தாரோ / அரசியல் தலைவரோ /கல்வியாளரோ பிரபலமானவரோ யாராயினும் பேச்சுக்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கத்தான் செய்கிறது . அதனால் எல்லோருமே போலி என சொல்லிவிடமுடியுமா ? ஏன் உங்கள் வீட்டில் என் வீட்டில் நம் இதயத்தை எண்ணத்தை  ஸ்கேன் செய்ய முடியுமானால் ஒவ்வொரு கணவன் மனைவிக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகள் பூகம்பமாய் வெடிக்கக் கூடும் . ஆகவே அந்த ’பெரிய மனிதர்கள்’ அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா ?சிக்கலான கேள்விதான்.

 

முற்போக்காளராய் / சாதி ,மத மறுப்பாளராய் /பகுத்தறிவாளராய் / கம்யூனிஸ்டாய் /போராளியாய் /புரட்சிக்காரராய் / அறிவியலாளராய் வாழ ஆசைப்படுவதும் ; அதற்காக பேசுவதும் ; எழுதுவதும் ; செயல்படுவதும் ஒரு வகையில் எளிதானது . ஆயின் சொந்த வாழ்வில் தனிப்பட்ட முறையில் சறுக்கலோ / வழுக்கலோ இல்லாமல் வாழ்வது மிகப் பெரிய சவால் .

 

ஏனெனில் உன்னைச் சுற்றி உள்ள உலகின் அழுக்குகளும் கசடுகளும் கிருமிகளும் உனக்குள்ளும் நிறைய இருக்கும் . அதிலிருந்து மீள உனக்குள்ளும் ,உன்னோடு வாழ்பவரோடும் பிறரோடும் நீ நடத்த வேண்டிய போராட்டமும் ; அவர்கள் உன்னோடு மோதிக்கொண்டே இருப்பதும் தொடர்கதை . இந்தப் பயணத்தில் நீ எந்த அளவு உறுதியோடு நிற்க முயல்கிறாய் என்பதே முக்கியம் ; வெற்றி தோல்வி குறிப்பிட்ட அக புற சூழலோடும் சுய முயற்சியோடும் இணைந்தது .

 

நூறுசதம் புனிதமானவரோ புரட்சிகரமானவரோ யாருமில்லை . ஆனால் கால ஓட்டத்தில் முட்டி மோதி மேம்பட்டுக்கொண்டே இருப்பவரைத்தான் நாம் கொண்டாட முடியும் .வாழ்க்கையில் இழுப்பில் தன்னை இழந்து கொண்டே இருப்பவரை அடையாளம் காண வேண்டும் . அடையாளம் காட்டவும் வேண்டும் . இதுவும் தவிர்க்க முடியாததே !

 

நாத்திகர் என்பதாலேயே கோட்சேவை ,சாவர்க்கரை கொண்டாட முடியுமா ? புலால் மறுப்பாளர் என்பதால் ஹிட்லரை ,மோடியை ,அமித்ஷாவை கொண்டாட இயலுமா ? முடியுமா ?

 

’இறந்த தன் மனைவியின் ஆவியுடன் பேசுகிறேன்’ என்று சாகும்வரை சொல்லிக் கொண்டே இருந்த  மூடநம்பிக்கையைச் சுமந்து மறைந்த நீதிபதி கிருஷ்ணய்யரின் அரிய சமூகநீதித் தீர்ப்புகளை சமூக பங்களிப்பை நிராகரிக்க முடியுமா ? கவிஞர் கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்வை , அவர் அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருந்ததை , நாளைக்கு ஒன்று பேசியதை சுட்டி அவர் பாடல்களின் வலிமையை இனிமையை நிராகரிக்க முடியுமா ? இளைய ராஜாவின் அரசியல் தத்துவச் சறுக்கலை விமர்சிப்பதும் அவர் இசையை ரசிப்பதும் தவிர்க்க முடியாததுதானே !

 

மேற்கத்திய சமூகம் Open society அதாவது திறந்த சமூகம் அங்கே எதையும் மூடி மறைப்பதில்லை , ஒவ்வொருவரும் அவர் செய்கையை மூடிமறைப் பதில்லை .அங்கே எழுத்தாளரோ தலைவரோ வெளிப்படையாகவே வாழ்கின்றனர் . புரிவது எளிது .ஆகவே படைப்போ கருத்தோ மட்டுமே அளவு கோலாகும் .அங்கேயும் தலைவர்கள் சுய சறுக்கல் பொது விமர்சனத்தில் இருந்து தப்புவதில்லை .

 

இங்கு நாம் மூடுண்ட சமூகத்தில் வாழ்கிறோம் . ஹிப்போகிராட் சொசைட்டி Hypocrite Socity .இங்கே முதுக்கு பின்னால் ஒன்று முகத்துக்கு நேராக ஒன்று என்கிற தவறான பண்பாட்டுக்கூறு எங்கும் வியாபித்துள்ளது . ஆகவேதான் படைப்பைபோ படைப்பாளரையோ எடை போடுவது சவாலாக உள்ளது . மேலும் சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு காலநிரலோடு  எதையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் எதோ ஒரு துண்டு துக்காணிச் செய்தியையோ அல்லது கத்திரிக்கப்பட்ட துண்டு வார்த்தைகளையோ வைத்து மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்.

 

யாராயிருப்பினும் ஒருவரின் தனிப்பட்ட சமூக பங்களிப்பை , தனிப்பட்ட பலவீனங்களை , தவறுகளை எல்லாம் கூட்டிக் கழித்து கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி எடைபோடலே இயங்கியல் அணுகுமுறை . இதுவே சமூக விஞ்ஞான அளவுகோல் . இதை புரிந்து ஏற்பது சுலமமல்ல . மேலோட்டமாய் ஏற்பதும் நிராகரிப்பதுமே பொது புத்தியாய் உள்ள சூழலில் யாரொருவரையும் எடை போட புத்தியைத் தீட்ட வேண்டும் .வேறு வழியில்லை .

 

சுபொஅ.

 

 


0 comments :

Post a Comment