ஆன்மீகம் என்ற சொல்லுக்கு பின்னே…….

Posted by அகத்தீ Labels:

 


[ஆகஸ்ட் மாத   “காக்கைச் சிறகினிலே..” இதழில் வெளிவந்துள்ள கட்டுரை இது .]

 

ஆன்மீகம் என்ற சொல்லுக்கு பின்னே…….

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

ஆன்மீகம் என்ற சொல் போல் மிகவும் மலினப்படுத்தப்பட்ட ; மிகவும் கொச்சைப் படுத்தப்பட்ட வெறொரு சொல் இருக்குமா என்பது சந்தேகமே . இதனை நீருபிக்க நாத்திகவாதிகளின் எழுத்துகளோ பேச்சுகளோ தேவை இல்லை . தங்களை ஆன்மீகவாதிகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்வோர் வாக்கு மூலங்களே போதும் . இதில் எல்லா மதத்தவரும் ஒருப்போல்தான் இருக்கின்றனர் .

 

குறிப்பாக இரண்டு கோணங்களில் இதனை அலசலாம் . ஒன்று , ஆன்மீகவாதிகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் சந்நியாசிகள் ,உபந்யாசிகள் , பிரச்சாரர்கள் பேச்சையும் எழுத்தையும் தொகுக்க ஆரம்பித்தால் அது முரண்பாடுகளின் மூட்டையாக பல்லிளிக்கும் . அவை தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ளும் . மீண்டும் சொல்கிறோம் மதம் எதுவாயினும் நிலைமை இப்படித்தான் . ஆயினும் , “ எங்கள் மனம் காயப்பட்டுவிட்டது” என அவர்களின் சிஷ்யகோடிகள் கூப்பாடு போடக்கூடும் என்பதால்  அவை குறித்து இங்கு பேசப்போவதில்லை .அவை உங்கள் தனிப்பட்ட நம்பிக்கை என விட்டுவிடுகிறோம்.

 

இரண்டாவது , ஆன்மீக இதழ்களாக மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் வெளிவரும் ஏடுகள் மற்றும் காட்சி ஊடகங்களை ஆய்வு செய்தாலே ஆன்மீகத்தை மிகவும் கேலிக்குரியதாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் இவர்களே என்பது வெட்டவெளிச்சமாகும் . பெரும்பாலான ஆன்மீக இதழ்கள்  ”இந்து இதழ்”களாகவே முழுதாய்த் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறது . தங்களை பொதுவானவர்கள் எனக் காட்ட ஓரிரு பக்கங்களில் பிற மதம் குறித்துப் போகிற போக்கில் சில துணுக்குகளை வீசுவதோடு சரி ! ஆக , இவ்வேடுகள் தோற்றத்திலேயே ஆன்மீகம் என்ற முகமூடியைக் கழற்றிவிட்டு மத பிரச்சார ஏடாகவே வெளிப்பட்டுவிடுகிறது . கிறுத்துவ ,இஸ்லாமிய,இதர மத பிரச்சார ஏடுகளிலும் ஆன்ம பலம் மிக்க மானுடரை உருவாக்கும் நோக்கம் இருப்பதில்லை ;  ‘மதம் பிடித்த மனிதனை’ உருவாக்கவே மெனக்கிடுகிறது .

 

ஆன்மீக ஏடுகளை ,காட்சி ஊடகங்களை முன்வைத்து இங்கு நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன் .அவற்றை முன்வைத்து நீங்களே உங்களுக்கு விருப்பமான மேற்படி ஏடுகளில் அல்லது காட்சி ஊடகங்களில் பதிலைத் தேடுங்கள் ! ஆய்வுக்கு உட்படுத்துங்கள்! நான் கூறுவது சரியா பிழையா என்பது தெளிவாகிவிடும்.

 

1] கஷ்ட நிவர்த்திக்கு பரிகார ஸ்தலங்கள் ,பரிகார பூஜைகள் ,பரிகாரச் சடங்குகள், தொழுகைகள் ,பிரார்த்தனைகள் ,ஜெபங்கள் என வாராவாரம் பல்வேறு யோசனைகளை முன்வைக்காத ஊடகம் ஏதேனும் உண்டா ? இவற்றை பட்டியல் போட்டால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பலநூறு யோசனைகள் - தப்பு தப்பு பல ஆயிரம் யோசனைகள் முன் மொழியப்பட்டிருக்கும் அல்லவா ; அவற்றில் எது சரி , எது தவறு , என்பதை ஏதேனும் வழியில் ஆய்வு செய்து பட்டியிலிட முடியுமா ?

 

2] அவற்றைக் கடைபிடித்தும் இன்னும் பக்தர்கள் முழுவதும் ஏதேனும் பிரச்சனைகளில் சிக்கி தடுமாறுவது ஏன் ? குறிப்பாக உடனே வேலைகிடைக்க , கல்யாணம் ஆக , பணக்கஷ்டம் தீர ,கடனில் இருந்து விடுதலை பெற , நோயிலிருந்து விடுபட என அன்றாடம் உலுக்கும் ஆயிரம் பிரச்சனைகளுக்கு இவ்வளவு எளிய பரிகாரங்களும்  நிவாரணங்களும் முன்மொழியப்பட்டும் ;   பக்தியும் இவற்றில் நம்பிக்கையும் கொண்டு பின்பற்றும் கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பிரச்சனைகளில் உழல்வது ஏன் ? ஒற்றைக் கலாச்சாரம் ஒற்றைப் பண்பாடு ஒற்றை மொழி என உளறுவோர் ”ஒற்றைப் பரிகாரத்தை” முன்மொழியலாமே ! அதைச் செய்யாமல் வாராவாரம் புதுசு புதுசாக குழப்புவது யார் ? ஏன் ?

 

3] ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் விஷேச சக்தி இருப்பதாகவும் , அந்த குறிப்பிட்ட சாமியை குறிப்பிட்ட முறையில் வழிபடுவோர் அந்த குறிப்பிட்ட பிரச்சனையிலிருந்து விடுபடுவதாகவும் வாராவாரம் எழுதுகின்றன அவ்வேடுகள் . அவற்றைத் தொகுத்துப் பார்த்தால்  ஒரே பிரச்சனைக்கு நூறு சாமிகளை ஒரே ஏடு எழுதியிருக்கும் ; புரட்டிப்பார்த்தால் பட்டியல் நீளும் . அதில் எது உண்மை,, எது பொய் ,எது சக்தி மிக்கது ,எது டுப்பாக்கூர் என கூற முடியுமா ? அல்லது வெறும் விளம்பரச் செய்திகள்தாமா அவை ? அந்தந்த சாமிக்காவது தனக்கு இப்படிப்பட்ட ’விஷேச பவர்’ இருக்கிறது என்பது தெரியுமா ? ஏன் இந்த கேலிக்கூத்து ?

 

4] புராண கதைகளாக வாராவாரம் வெளியிடுகிற அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒவ்வொன்றைக் குறித்தும் நூறு பொய் இருக்கும் . அவற்றிற்கும் இன்றைய நவீன வாழ்க்கைக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா ? அவற்றில் எத்தனை ஆபாசக் கதைகள் இருக்கும் ? அதை எல்லாம் கூச்சநாச்சமின்றி எப்படி எழுதவும் பேசவும் முடிகிறது ?

 

5] மகான்கள் வாழ்வில் நடந்ததாக இவ்வேடுகள் எழுதிக் குவித்த செய்திகள் எதற்காவது தக்க ஆதாரம் உண்டா ? ஒரே கதையை வெவ்வேறு மகான்கள் வாழ்வில் நடந்தாக வெவ்வேறு இடங்களில் எழுதி வைத்துள்ளவற்றை மறுக்க முடியுமா ? சரி ! இப்படி எழுதி வைக்கிற செய்திகளில் எத்தனை ஆன்மீக மேம்பாட்டுக்கு உகந்தவை சொல்ல முடியுமா ; அவை பொய்மையையும் போலிபிம்பத்தையும் கட்டமைப்பதைத் தவிர உருப்படியாய்ச் செய்தது என்ன ?

 

6] ஆன்மீகம் என்பது மதம் சார்ந்தததா ? மனித விடுதலை சார்ந்ததா ? இந்த ஏடுகள் எழுத்தும் பார்வையும் மதம் சார்ந்து இருக்கிறதா , மனித விடுதலை சார்ந்ததாக இருக்கிறதா ? ஆன்மீக குருக்களிலும் மனித குலம் முழுவதையும் அன்பால் குளிப்பாட்டிய  மனிதகுல விடுதலைக்காக அர்ப்பணித்த சிலர் உண்டு .அவர்கள் சார்ந்து எழுதும் போதாவது மனிதகுலத்தை வாரி அணைக்கும் வெள்ள அன்பு இவ்வேடுகளில் வெளிப்பட்டது உண்டா ? அவர்களை  வெறும் கருவேப்பிலையாகப் பயன்படுத்தல் அன்றி வேறு நோக்கில் எப்போதேனும் சொன்னது உண்டா ?

 

7] ”இதை இதைச் செய்யலாம் இதை இதைச் செய்யக்கூடாது” என இவ்வேடுகளில் பட்டியல் போட்டு பக்தர்களை குறிப்பாக பெண்களை மிரட்டி எழுதுவதில் ஏதேனும் வரைமுறை உண்டா ? இப்படி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போட்ட பட்டியலைத் தொகுத்தால் ஒன்றுக்கொன்று முரணாக அல்லவா இருக்கும் ? இன்றைய அறிவியல் வளர்ச்சி காலத்தில் ,ஆணும் பெண்ணும் உழைத்து வாழும் யுகத்தில் , கல்வி அறிவு மேம்பட்டிருக்கும் காலத்தில் , அறிவியல் அன்றாடம் புதிய சாளரங்களைத் திறந்திருக்கும் சூழலில் , இவ்வேடுகள் போடும் பட்டியலுக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா ?

 

8] இவ்வேடுகள் சுட்டும் ஆன்மீகம் இதுதான் என ஒரு இலக்கணத்தை வரைந்து காட்ட முடியுமா ? மூடநம்பிக்கைகளை மட்டுமே அவ்வேடுகள் விதைத்தன எனக் கூறுவதில் பிழை இருக்க முடியுமா ? மதம் ,சாதி இவற்றின் பெயரால் மனிதகுலம் அடித்துக் கொண்டு சாவதை தடுத்து நிறுத்த , “எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் ; எல்லோரும் அன்பு செய்து வாழ்வீர் !” என வலியுறுத்த  இவ்வேடுகள் ஒரு துரும்பையேனும் எப்போதேனும் கிள்ளிப் போட்டது உண்டா ?

 

இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே போகும் . நீங்களே நூறு இதழ்களை சேகரித்து இவற்றுக்கும் இதுபோல் நீங்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் விடை காண முயல்வீர் ! ஆய்வு செய்வீர் !

 

அப்போது , ஆன்மீகம் என்ற சொல் போல் மிகவும் மலினப்படுத்தப்பட்ட ; மிகவும் கொச்சைப் படுத்தப்பட்ட வெறொரு சொல் இல்லை என்பதை இந்த ஆன்மீக வியாபாரிகள் வழியே நீங்கள் கண்டடைவீர்கள் ! ஆன்மீக வியாபாரத்தின் வீச்சும் ,செழிப்பும் ,கொள்ளை லாபமும், மோசடியும் , திருட்டும் உங்களைத் திடுக்கிடவைக்கும் . இவை வெறும் வார்த்தை அன்று. .உண்மை .உண்மை . உண்மை .

 

நன்றி : காக்கைச் சிறகினிலே , 2025  ,ஆகஸ்ட் இதழ்

 

 

 


0 comments :

Post a Comment