“பழகு தமிழ்” செய்வோம்
இலக்கணத்தை புதிதாக்குவோம்.
“ என்னடா ! தமிழுக்கு வந்த சோதனை?” என நீங்கள் கேட்கக்கூடும்
. அண்மையில் வெளிவந்த இரண்டு சமூக வலைதளப் பதிவுகளை படித்தபின் என்னுள் எழுந்த எண்ணங்களை
இங்கு பதிவதில் பிழையில்லைதானே ! ஒன்று கவிஞர் வைரமுத்து எழுதியது .இன்னொன்று கவிஞர்
மகுடேஸ்வரன் எழுதியது . முதலில் அவற்றைப் பார்ப்போம்.
வைரமுத்து[
@Vairamuthu·Jul 28] எழுதியிருப்பது ;
“சமூக ஊடகங்களில்
நல்ல நகைச்சுவைகளைப்
பார்க்கிறேன்
தப்பும் தவறுமாய்த்
தமிழ் எழுதுகிறவர்கள்
சரியான எழுத்தைத்
தவறென்கிறார்கள்
‘ட’ண்ணகரம்
‘ற’ன்னகரம்
பொது ‘ள’கரம் வகர ‘ல’கரம்
எங்கே ஆளப்பட
வேண்டும்
என்று அறியாதவர்கள்
தேவையில்லாத
திருத்தம்
சொல்கிறார்கள்
வினைத்தொகையில்
வல்லெழுத்து
மிகாது என்று
அறியாதவர்கள்
’ஊறுக்காய்’ என்று
எழுதித்
தமிழைப் புளிக்கவைக்கிறார்கள்
’நினைவுகூறுதல்’ என்றே
எழுதிப் பழக்கப்பட்டவர்கள்
’நினைவுகூர்தல்’ என்ற
சரியான சொல்லாட்சியைத்
தவறென்று
சொல்லித்
தமிழின் கற்பைச்
சந்தேகப்படுகிறார்கள்
’எலும்புவில் தேய்மானம்’
என்று எழுதுவது
தவறென்று
அறிந்தவர்கள்
கூடக்
’கொழும்புவில் குண்டுவெடிப்பு’
என்று எழுதுகிறார்கள்
வருமொழி வடமொழியாகவோ
மெல்லொலியாகவோ
இருப்பின்
வல்லெழுத்து
மிகத்தேவையில்லை
என்ற பொதுவிதி
அறியாதவர்கள்
எனது தண்ணீர்
தேசம் நாவலில்
‘த்’ எங்கே
என்று குத்துகிறார்கள்
திருநிறைசெல்வியே
சரி
என்று தெரியாதவர்கள்
திருநிறைச்செல்வி
என்று எழுதிப்
பிழையே சரியென்கிறார்கள்
இவர்களோடு
மல்லுக்கட்டுவதை
நான் அழகான
சண்டை என்றே
கருதுகிறேன்
எமக்குத்
தமிழ் சொல்லித்தரும்
பணியில்
ஈடுபடுகிறவர்களைப்
பார்த்து
நான் கோபம்
கொள்வதில்லை;
கும்பிட்டுச்
சிரிக்கிறேன்
நல்ல தமிழ்
அறியாவிடில்
கேட்டுக்
கற்றுத்
தெரிந்து
தெளியுங்கள்
சரியானதைப்
பழிப்பதன்
மூலம்
தப்புக்குத்
தங்க முலாம்
பூசாதீர்கள்
தமிழ் வளர்ச்சித்துறை,
செம்மொழித்
தமிழாய்வு
மத்திய நிறுவனம்,
உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம்,
தமிழ் வளர்ச்சிக்
கழகம்,
உலகத் தமிழ்ச்
சங்கம்
முதலிய அமைப்புகள்
தமிழர்களின்
அன்றாடத்
தமிழோடு இயங்க
வேண்டும் .”
கவிஞர் மகுடேஸ்வரன்
Magudeswaran Govindarajan 29 july ] முகநூலில் எழுதுகிறார் ;
“தமிழில் பிழையாக எழுதுகின்றோரைப் பற்றி வைரமுத்து
தம் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அந்தப் பதிவிலேயே அன்னார் சில
பிழைகளைச் செய்திருக்கிறார் என்பது அவர்க்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். இன்னும்
சொல்லப் போனால் வைரமுத்து எழுதும் உரையிலும் கவிதையிலும் பிழைகள் பல உண்டு. அவை தமிழாய்ந்த
பெருமக்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும்.
அ). ‘ஊறுகாய்
என்பதனை ஊறுக்காய் என்றெழுதுகிறார்கள்’ என்கிறார். வினைத்தொகையில் வல்லெழுத்து
தோன்றல் இல்லை என்பதனை அனைவரும் அறிவர். ஆனால், வினைத்தொகையில் பிழைபட எழுதுமிடங்கள்
அவர்க்குத் தெரியவில்லை. ஊறுகாயை யாரும் ஊறுக்காய் என்று எழுதுவதில்லை. இவ்வெடுத்துக்காட்டே
தவறு. புனைபெயர் என்பதனைப் புனைப்பெயர் என்று எழுதுகிறார்கள். புனைபெயர் என்பதுதான்
வினைத்தொகை. புனைப்பெயர் என்று பிழையாக எழுதப்படுகிறது.
ஆ). நினைவுகூறுதல்,
நினைவுகூர்தல் ஆகிய இரண்டும் சரியே. இவ்விரண்டு தொடர்களில் ஒன்றினை ’ஊறுக்காய் தவறு’ என்றது போலக் கருத இயலாது. இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு
மட்டுமே உண்டு. நினைவினைக் கூறுதல் என்ற பொருளில் வருவது நினைவு கூறுதல். அவன் தன்னுடைய
நினைவினைக் கூறுகிறான். அது நினைவு கூறுதல். நினைவிலிருந்து ஆழ்ந்து மீட்டுச் சொல்லுதல்
நினைவுகூர்தல். அவன் நினைவுகூர்கிறான்.
இ). ‘கொழும்புவில்’ என்று எழுதக்கூடாதுதான். கொழும்பில் என்றே எழுதவேண்டும்.
ஆமாம், சரிதான். ஆனால், இவ்வகைப் பிழையை ’முத்து’ என்னும்
தம் பெயர்க்கும் பொருத்திப் பார்த்தே ஆண்டுள்ளாரா என்று அவர் உறுதிப்படுத்தலாம். வைரமுத்து
என்கின்ற தம் பெயரோடு வேற்றுமை உருபுகளைச் சேர்க்கும்போது வைரமுத்தை, வைரமுத்தால்,
வைரமுத்துக்கு, வைரமுத்தின், வைரமுத்தினது, வைரமுத்துக்கண் என்று எழுதி வந்தாரா ? அவ்வாறே
எழுதியிருப்பின் சரி. ஆனால், வைரமுத்துவை, வைரமுத்துவுக்கு என்று அவரும் எழுதியிருந்தாலும்
பிழை.
ஈ). தண்ணீர்
தேசம்’ என்ற தொடரில் த் தோன்றினால்தான் தமிழ்மொழித்
தொடர். நீர், தேசம் ஆகிய இருசொற்களும் வடமொழியிலும் உள்ளன. நீர் தேசம் என்று வல்லொற்று
மிகாமல் பயன்படுத்தினால் அங்கே வடமொழித் தொடரைத்தான் ஆள்வதாகப் பொருள். நீர்த்தேயம்/நீர்த்தேசம்
என்று ஆண்டால்தான் தமிழ்த்தொடரை ஆள்வதாகப் பொருள். தண்ணீர்த் தேசம் என்று வல்லொற்று
மிகுந்து வருவதே சரி. ‘தண்ணீர் தேசம்’ என்று ஆண்டமையால் அது வடமொழித் தொடரோடு
இணக்கமுற்றுவிட்டது. இரண்டும் வடமொழிச் சொற்களேயாயினும் இயன்றவரைக்கும் தமிழ்மொழிப்
பண்புகளைப் புகுத்தி எழுதுவதுதான் கொள்கையாக இருக்கவேண்டும்.
உ). எமக்குத்
தமிழ் சொல்லித்தரும் பணியில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து நான் கோபம் கொள்வதில்லை; கும்பிட்டுச்
சிரிக்கிறேன் - என்கிறார். எமக்கு என்று தன்மைப் பன்மையில் இத்தொடர் தொடங்குவதால்
‘யாம் கோபம் கொள்வதில்லை, கும்பிட்டுச் சிரிக்கிறோம்’ என்று
எழுதவேண்டும். இல்லையேல் தொடக்கமே ‘எனக்கு’ என்றிருக்கவேண்டும்.
ஒப்பீட்டளவில்
வைரமுத்தின் எழுத்துகளில் பிழைகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அவர் எழுதுவதிலும்
உறுதியாகப் பிழைகள் உள்ளன. எழுபது, எண்பதுகளின் பிழையாட்சிகள் பல இன்னும் அவரிடம் உதிராமல்
ஒட்டியிருக்கின்றன. அவற்றைக் களையவேண்டும். தம் உரையிலும் கவிதையிலும் எண்ணற்ற வடசொற்களைக்
கூச்சமில்லாமல் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர். அவற்றைத் தவிர்க்க முயன்றதில்லை.
வடசொற்கள் தவிர்த்து எழுதுக என்றால் இவர்கள் தவித்துப்போய்விடுவார்கள். கடைசியாகக்
கூறியதற்கு வைரமுத்து மட்டுமே இலக்காக முடியாது, அக்குறைபாடு இன்றெழுதுகின்ற தொண்ணூற்றொன்பது
விழுக்காட்டினர்க்கும் பொருந்தும்.
வைரமுத்து
முகநூலைக் கையாண்டு பழகிவிட்டார். அதற்காக வாழ்த்துவோம் !
- கவிஞர்
மகுடேசுவரன்.”
இதில் எது
சரி எது தவறு என நான் எழுதவரவில்லை . மாறாக இரண்டையும் முன்வைத்து என் எண்ணங்களையும்
வேண்டுகோளையும் முன்வைக்கவே இதனை எழுதுகிறேன்.
கலைஞர்
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியபோது , வைகோ எதிரணியில் இருந்தார் .சங்கொலியில் ஓர் தமிழறிஞரைக் கொண்டு அந்த உரை பிழை மலிந்தது என தொடர் கட்டுரை
எழுதினார் . நான் இரண்டையும் வாசித்தேன் .புலமைக் காய்ச்சல் அது . திருவிளையாடலில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வந்தது .’புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ; பொறாமை இருக்கக்கூடாது.”
“தமிழில் பிழையில்லாமல் எழுதுவது எப்படி ?” பல நூல்கள்
வந்துள்ளன . சமூக வலைதளங்களில் பலர் எழுதுகின்றனர் .காணொளியில் பாடம் சொல்லுகின்றனர்
. ஒன்றுக்கொன்று மாறுபாடாக உள்ளது .
கவிஞர் வைரமுத்து ஓர் கவிதையாகவே இதுகுறித்து விவரித்துள்ளதையும்
மேலே பார்த்தோம் . வைரமுத்து சொல்வதில் பல பிழையென மகுடேஸ்வரன் பதில் எழுதுவதையும்
பார்த்தோம் .
தமிழறிஞர்கள்
இடையே புரிதல் வேறுபாடும் ; குழப்பமும் தொடரவே செய்கின்றன . நமக்கு எது சரி எது தவறு என்று முடிவு சொல்ல முடிவதில்லை
. நானும் தமிழாய்ந்த அறிஞனில்லை . வெறும் தமிழ் ஆர்வலன் மட்டுமே . எனக்கும் குழப்பம்
உண்டு .
அண்மையில்
ஓர் பதிப்பகப் பொறுப்பாளரைச் சந்தித்தேன் . “ பாரதியார் கவிதைகள் உரையுடன் கிடைக்குமா
? பாரதிதாசன் கவிதைகள் உரையுடன் கிடைக்குமா ? இப்படி சில மாணவர்கள் கேட்கிறார்கள்
….” என்று சொல்லி வருத்தப்பட்டார் .
அகநானூறு
புறநானூறை இன்று உரையின்றி புரிந்து கொள்ள எத்தனை பேரால் இயலும் ? சிலப்பதிகாரம் ,மணிமேகலைக்குள்
உரையின்றி உள்நுழைந்து புரிதல் எல்லோருக்கும் சாத்தியமா ?
சங்க இலக்கியத்
தமிழ் அப்படியே தொடரவில்லை ; ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வந்துள்ளன
. காப்பியத் தமிழ் , பக்தி இலக்கியத் தமிழ்
, திரு வி க காலத் தமிழ் ,பாரதி காலத் தமிழ் மறுமலர்ச்சி காலத் தமிழ் , திராவிடத் தமிழ்
,தேசியத் தமிழ் , பொதுவுடைமைத் தமிழ் , தினத்தந்தி தமிழ் , பத்திரிகைத் தமிழ் ,காட்சி
ஊடகத் தமிழ் , கணினி யுகத் தமிழ் என மாறிக்கொண்டேதான் இருக்கின்றன .
தினத்தந்தி
வாசித்து தமிழைக் கற்றுக்கொண்ட வெளிமாநிலத்தவர் என்ற ஒரு காலகட்டமே இருந்தது . சொற்களின்
பொருட்களும் மாறி இருக்கின்றன . புதிய சொற்களும் வந்து சேர்ந்துள்ளன . காலம் அதன் தேவைக்கு
அனைத்தையும் வளைக்கும் ; ஆயினும் அடித்தளம் வலுவாயுள்ள மொழிகள் ’கொள்வன கொண்டு தள்ளுவன
தள்ளி’ பிழைக்கும் . தமிழ் காலத்தை மீறி நிற்கும் தழைக்கும் மொழிதான் . ஆனால் என்ன
பிரச்சனை ?
ஒரு
பக்கம் நம்மிடம் வினைச் சொற்கள் குவிந்து கிடக்க ; ‘ குக் பண்ணி’
‘எடிட் பண்ணி ,மியூசிக் பண்ணி’
‘வாக் பண்ணி’ இப்படி எத்தனையோ பண்ணி அன்றாடம் செம்மொழி தமிழை ‘பண்ணித் தமிழ்’ ஆக்கிக் கொண்டிருக்கும் அவலம் .தமிழ் திரைப்படத் தலைப்புகள் மட்டுமல்ல
; பாடல்களே தமிழாய் இல்லை . ஆங்கிலம் ஓங்கி நிற்கின்றன.
மறுபுறம்
பெயர் சொற்களை - நவீன அறிவியல் தேவையின் பொருட்டு எழும் சொற்களை புழங்க முடியாதபடி வலுக்கட்டாயமாக தமிழாக்கி வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கிறோம் . ‘கடுப்புத் தமிழ்’ ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.
பிறமொழிச்
சொற்கள் கலந்தாலே புனிதம் கெட்டுவிடும் கற்பு போய்விடும் என்கிற பயமோ பதட்டமோ தேவையில்லை . எல்லா மொழிகளிலும் கலப்பு உண்டு . அது பலம்தான். பலவீனம் இல்லை .ஆனால் தம்மிடம் இல்லாத சொற்களைக் கடன் வாங்குவார்களே தவிர புழக்கத்தில் இருக்கும் நல்ல சொற்களைத் தூக்கி எறிந்துவிட்டு தாவிச் செல்ல மாட்டார்கள் . நாம் என்ன செய்கிறோம் ? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
ஒலைச்சுவடிகள்
காலத்தில் புள்ளி வைக்காத எழுத்துகளே . எழுத்து வடிவங்கள் மாறிமாறித்தான் இன்றைய நிலையை
எட்டியுள்ளன . இனியும் மாறும் .சில சொற்களின் பொருள் உட்பட மாறியுள்ளன . நிறுத்தல்
குறிகளே பின் வந்தவைதான் . மொழி மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் . அச்சு இயந்திரம் மொழியை
அதன் இயல்புக்கு ஏற்ப மாற்றவில்லையா ? கணினி மொழியை தன் போக்கில் மாற்ற வில்லையா ?
.
நவீன கணினி
யுகத்துக்கு பொருத்தமான காலத்தின் சவாலுக்கு ஈடுகொடுக்கக்கூடிய இலக்கண விதிகளை நீக்கு
போக்குடன் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது . இதனை பலமுறை வலியுறுத்தி பதிவிட்டுள்ளேன்.
வைரமுத்து மகுடேஸ்வரன் விவாதம் மீண்டும் அதை வழிமொழியச் சொல்கிறது . இலக்கண விதிகளில்
ஓர் நெகிழ்வுத் தன்மை இன்றையக்கு அவசியம் என்கிறேன்.
1] ஒருமை
,பண்மை வாக்கிய அமைப்பில் பிரச்சனை
2] உயர்திணை
,அஃகறிணை குழப்பம்
3] ல,ள,ழ,ண,ன,ந போன்ற எழுத்துகளை பயன் படுத்துவதில் தடுமாற்றம்
4] ஒற்றுமிகும்
இடம் ,ஒற்றுமிகா இடங்கள் பற்றி மாறி மாறி குழப்பம்
இப்படி எல்லோருக்கும்
எழும் குழப்பம் முதல் நிறைய இலக்கண புரிதல் குறைபாடுகள் எங்கும் உண்டு .
எந்த சொல்லை
எங்கு பயன்படுத்த வேண்டும் என்கிற புரிதல் குழப்பம் வலுவாக உள்ளதே . ‘ அவர்கள் பாபர் மசூதியை இடிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்’
என்று எழுதுவதற்கும் ,‘ பாபர் மசூதியை இடிப்பதில் பிடிவாதமாக இருந்தார்கள் ‘ என்று
எழுதுவதற்கும் பொருள் வேறுபாடு உண்டே ! இங்கு
சொற்கள்கூட வர்க்க சார்பு ,வர்ண சார்பு ,சாதி சார்பு எல்லாம் கொண்டதாக இருக்கிறதே.
ஆக , சொற்களைத் தேர்வு செய்வதில் ஓர் ஜனநாயக
அணுகுமுறைத் தேவைப்படுகிறது . சமூகநீதி ,பாலின சமத்துவம் , ஜனநாயகப் பார்வை சார்ந்து
பல பழைய சொற்கள் வழக்கொழிந்து போக வேண்டியுள்ளதே !
ஆக , மொழி
இன்றைய நவீன தேவைக்கும் வாழ்க்கைக்கும் ஈடுகொடுக்கத் தக்க மாற்றங்களை செய்து கொண்டே
இருக்கும் . செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மொழி உயிர்துடிபோடு இருக்கும்
. அதற்குத் தேவை காலத்திற்கு ஒப்ப புதிய இலக்கண விதிகள் வேண்டும் . பழமைக் கெடுபிடிகள்
தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு இலக்கணத்தை புதிதாக்கி ‘பழகு தமிழை’ வலுப்படுத்த வேண்டும்.
அதற்கான இலக்கண விதிகள் நெய்யப்பட வேண்டும்.
இதனை ஒரு
தனிநபர் செய்ய முடியாது . தமிழ் ஞானமும் நடைமுறைத் தேவையும் உணர்ந்த ஓர் வல்லுநர் குழுவை
அரசே அமைத்து ; அவர்கள் முன்மொழிகிற புதிய இலக்கண விதிகளை பொது விவாதமாக்கி ; இறுதி
செய்து அடுத்து ஓர் நூற்றாண்டுக்கு இவையே என முன் மொழியலாம் . அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில்
அதனை அடியொற்றி மாற்றம் வரட்டும் ! இது என் ஆசை . மீண்டும் சொல்கிறேன் நான் தமிழாய்ந்த
அறிஞனல்ல ; ஆர்வலன் . ஆகவே இது என் வேண்டுகோள் .
சு.பொ.அகத்தியலிங்கம்.
30/07/25
0 comments :
Post a Comment