டிஜிட்டல் உலகில் காசு
போறது தெரியுமா ?
“கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே..”
1960 ஆம் ஆண்டு “ இரும்புத்திரை”
படத்தில் திருச்சி லோகநாதன் பாடியது .பாடலை எழுதியது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் . இசை எஸ்.வி.வெங்கட்ராமன் . இப்பாடல் வரிகளை இன்றைக்கு கேட்டாலும்
நம்மை தலையாட்ட வைக்கும் .
ஆனால் , ‘காசு போற
இடம் தெரியாத’ அளவு டிஜிட்டல் உலகம் நம் கையிருப்பை களவாடுகிறது . பட்டுகோட்டை
பாடல் வரியின் பொருளே சமூக உளவியலில் மாறி மரத்துப்போனதோ. அது குறித்து பேசுவோமா ?
முன்பு நூறு ரூபாய்
எடுத்துக்கிட்டு கடைக்குப் போனால் விலையைக் கேட்டு , இருக்கிற காசுக்கு ஏற்ப பொருட்களை வாங்குவோம் . இப்போது பொருட்களை
வாங்கிவிட்டு “போண் பே” பண்ணுகிறோம்
.பெரும்பாலும் அது பட்ஜெட்டைத் தாண்டிப் போகும் ; ஆயின் உறைக்காது . நம்மை மீறி
காசு கரைகிறது ; ஆனாலும் தெரியாது …
அதுமட்டுமா கிலோ
எவ்வளவுன்னு கேட்டு அரைக்கிலோ கால்கிலோன்னு கேட்டு வாங்குவோம் .இப்போதெல்லாம்
நீங்க எடுக்கிற எடை கால் கிலோவா
முன்னூற்றி பத்து கிராமா பிரச்சனை இல்லை .பில் அதுக்கு தானாகப் போட்டுவிடும் .
கணக்கு பார்ப்பதும் கிடையாது .
சாப்பாடு , மளிகைச்
சாமன் , காய்கறி ,லொட்டு ,லொசுக்கு எல்லாம் ஆன் லைனில் வாங்கிக் குவிக்கிறோம் .
வாங்குவதும் பணம் கொடுப்பதும் நொடியில் நடந்துவிடுகிறது . செலவு கைமீறிப் போய்க்
கொண்டிருக்கிறது .
ஒரு லிட்டர் fortune
எண்ணை என்ன விலை என அறிந்து வாங்குவோம் . இப்போது விலை ஏற்றுவதில்லையாம்
,ஆனால் அதே விலை ஆனால் 870 மில்லி
பாக்கெட்டில் அடைத்து விற்கிறான் .நாமும் வாங்குகிறோம் .கிட்டத்தட்ட இது ஒரு
வியாபரத் தந்திரமாகிவிட்டது .இதனை ’மோடி தந்திரம்’ என்கின்றனர் .
பெட்ரோல் விலை
ஏறுவது நறுக்கென முன்பு உறைக்கும் .இப்போது விலை ஏறியது தெரியாது . ’நூறு
ரூபாய்க்கு போடு ! ஐநூறு ரூயாய்க்கு போடு !’ன்னு பழகிட்டோம். பெட்ரோல்
பங்கிலிருந்து வரும் நூறு பேரை வழிமறைத்து பெட்ரோல் இன்று என்ன விலைன்னு கேளுங்கோ
, 99 பேர் திருதிருன்னு முழிப்பார்கள். இதில் இருந்துதான் ‘மோடி தந்திரம்’
உருவானது .
வருங்காலத்தில்
மின்சாரம் ,தண்ணீர் எல்லாம் இப்படி கொடுக்கிற காசுக்கு தருவதை வாங்குவதாக
மாறிப்போகும் .கட்டண ஏற்றம் தெரியாது .
காசை எண்ணிக்
கொடுப்பதில்லை ; போண் பே அல்லது கார்டை உரசுகிறோம் , அதிலும் கிரடிட் கார்டு உரசி
உரசி தீராத கடன் வலையில் சிக்குகிறோம் . உணர்ச்சியே இல்லை . டெபிட் கார்டு இருப்பை
அறியாமல் அதிகபட்சம் உரசி விட்டு ; மினிமம் பேலன்ஸ் இல்லாமல் பைன் வேறு கட்டி
அழுகிறோம். இருக்கிற காசுக்கு வாங்கிற காலம் போய் , ” கடையில இருக்கிறேன்
அக்கவுண்டல காசு இல்லை உடனே ஆயிரம் போட்டுவிடுன்னு …” கணவனோ மனைவியோ கேட்கிற காலம்
வந்தாச்சு … திட்டமிட்ட வாழ்க்கை இல்லை ; நாம் பொருட்களின் இழுப்பில்
அல்லாடுகிறோம்.
காசு வருவதும்
தெரியவில்லை ; போவதும் தெரியவில்லை டிஜிட்டல் பரிவர்த்தனை நம்மை எளிதாகச் சுரண்ட ;
பிக்பாக்கெட் அடிக்க நல்ல வாய்ப்பாகிவிட்டது . எளிதாக இருக்கிறது ,சில்லறைப்
பிரச்சனை இல்லை , பணத்தை சுமந்து திரிய வேண்டாம் எல்லாம் சரி . இனி இந்த டிஜிட்டல்
உலகிலிருந்து தப்பிக்க ஒருபோதும் முடியாது ; எல்லோர் வாழ்விலும் அது ஒரு
அங்கமாகிவிட்டது . சமூக உளவியலே பழகிப்போனது என்று சொல்வதா, மரத்துப் போனது
சொல்வதா?
எப்படி ”நிரந்தர
வேலை” என்கிற கருத்தே இன்றைய தலைமுறையிடம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறதோ ;
அப்படியே “விலையேற்றமும்” உறைக்காத அளவு
டிஜிட்டல் மரத்துப் போகச் செய்கிறது என்பதும் உண்மை . உலக மயமும் நவீன மயமும் தன்
சுரண்டலுக்கும் கொள்ளை லாவவெறிக்கும் ஏற்ற
மனிதர்களை வெறும் நுகர்வோர்களாய் பொம்மைகளாய் செதுக்குவதில் வெற்றி பெற்றுக்
கொண்டிருக்கிறது . AI இன்னும் என்னென்ன செய்யப் போகிறதோ ? எதிர்காலச் சவால்
நுட்பமானது தந்திரமானது ஆபத்தானது தவிர்க்கவே முடியாதது. அதனை எதிர்கொள்ளும்
மனிதரை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம் ? கோடி டாலர் கேள்வி .
[ ரூபாய் தேய்ந்து கொண்டே போகிறது .ஒரு நாள்
காணாமலே போகுமோ ! ஒரு கட்டத்தில் மோடி போகிற போக்கில் டிரம்ப் சொன்னாருன்னு ரூபாய்
செல்லாது ,இனிஅமெரிக்க டாலர்தான் புழங்கணும்னு டிவியில வந்து சொல்லிவிடுவார்ன்னு
நினைக்கிறேன். இல்லை .இல்லை .இதையும் அமெரிக்காவிலிருந்து டிரம்பே சொல்லிவிடுவாரோ!]
சுபொஅ.
20/07/25.
0 comments :
Post a Comment