உள்ளூர் அரசியல் குட்டி ராஜ்யம்

Posted by அகத்தீ Labels:

 


மல்லை சத்யா மதிமுகவின் விசுவாசமிக்க ஊழியர் . எல்லா கட்சிகளிலும் விசுவாசமிக்க ஊழியர்கள் பலர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எதிர்கொள்ளும் சவாலை அவரும் எதிர்கொள்கிறார் . இது குறித்து இங்கு எதுவும் பேசப்போவதில்லை . அவர் மீது எப்போதும் எனக்கு மதிப்புண்டு .

 

ஆயின் அவர் அண்மையில் அளித்த ஓர் நேர்காணலில் சொல்லிய செய்தியை எல்லோரும் கவலையோடு பரிசீலிக்க வேண்டியுள்ளது . அதில் மல்லை சத்தியா என்கிற தனிநபரை மறந்து பொதுவாக யாரோ சொல்லியதாகக் கொண்டு வாசிப்பைத் தொடரவும்.

 

யாரோ ஒருவர்  சொல்கிறார் , ஒவ்வொரு நாளும் கல்யாணம் , சாவு ,காதுகுத்து ,உதவி என்று நிற்கும் தொண்டர்கள் ,பொது மக்கள் இவர்களை எதிர்கொள்ள குறைந்தது மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கிறது . மேலும் கார் ,பெட்ரோல் ,வாகனச் செலவு என ஒவ்வொரு மாதமும் பெருந்தொகை செலவிட்டுத்தான் பொதுவாழ்வில் இருக்க முடிகிறது என்கிறார் .

 

கவுன்சிலராக இருக்கும் அஇஅதிமுகவைச் சார்ந்த ஒருவர் என்னிடம்  தனிப்பட்ட முறையில் பேசும்போது ,இதுபோல் தான் சந்திக்கும் செலவுகள் குறித்து கவலை தெரிவித்ததோடு , கட்சி மேலிடத்தை திருப்தி படுத்த ஆள்திரட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய  கேட்டபோது காசுகொடுக்க என நீளும் செலவுப் பட்டியலைச் சொன்னார் .

 

 

இப்படி முதலீடு செய்பவர்கள் சும்மா எதிர்பார்ப்பு இல்லாமல் காசை அள்ளிக் கொட்டுவார்களா ? [ தனிப்பட்ட யாரையும் சொல்லவில்லை ]இதுதான் கள அரசியல் சூழல் . கிழிருந்து மேலே பாய்வது போல் மேலிருந்து கீழேயும் பாயும் . தேர்தல் , காண்டிரக்ட் போல் இன்னும் பல வழிகளில் மேலிருந்து கீழும் வெள்ளமாக நிதிபாயும். கண்ணை உறுத்தும் ஊழலின் ஊற்றுக்கண் இதுவே .

 

 

திமுக ,அதிமுக ,காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகளில்  உள்ளூர் பிரமுகர் தொடங்கி முக்கிய பிரமுகர்களை பின்னிருந்து பணம் கொட்டி இயக்கும் பணமுதலைகள் உண்டு . அவர்களின் நோக்கம் சுயநலம் மட்டுமே . அண்ணாமலை ,சீமான் எல்லாம் தாம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் செலவிட நண்பர்கள் உதவுவதாய் சொல்வதின் பின்னால் உள்ள ரகசியம் யாது ? இந்த வலுத்த கைகள்தாமே !

 

ஆர் எஸ் எஸ்சால் இயக்கப்படும் பாஜக சித்தாந்தப் பிடிப்போடு [ தவறான மதவெறி சித்தாந்தம் என்பது தனி ] செயல்பட்டாலும் , அங்கும் பணம் வெள்ளமெனப் பாய்வது கண்கூடு .ஆட்டுவிக்கும் கரங்கள் மையப்படுத்தப்பட்டிருக்கிறது . ஆதலால் நாசகர இராட்சச இயந்திரமாக அச்சுறுத்துகிறது . முதலில் அப்புறப்படுத்த வேண்டிய களையாகும்.

 

 

இது போக உள்ளூரில் முதலாளித்துவக் கட்சித் தலைவர்களைச் சுற்றி நாலய்ந்து அல்லக்கைகள் எப்போதும் இருப்பார்கள்.அவர்களின் உணவு ,குடி ,போக்குவரத்து , வீட்டுச் செலவு இவற்றையும் அந்த பிரமுகரே கவனிக்க வேண்டும் . இதன் செலவு எங்கிருந்து வரும் ?

 

கட்டப்பஞ்சாயத்து ,ரியல் எஸ்டேட் ,கமிஷன் , கந்துவட்டி , அடிதடி ,லஞ்சம் ,ஊழல் எல்லாம் சமூகத்தில் இயல்பாகப் போவதின் பின்னால்  ஆங்காங்கு இருக்கிற இந்த குட்டி சாம்ராஜ்ய சக்கரவர்த்திகள் பங்கு முக்கியமானது .  இவர்களுக்கும் உள்ளூர் காவல்நிலையம் அதிகார வர்க்கம் இவர்களுக்கு இடையே ஆன பிணைப்பு பண உறவே , லஞ்ச ஊழலே ! ஏதாவது ஒரு கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பது இவர்களின் சாம்ராஜ்யத்துக்கு மிக முக்கியம் . ஏற்கெனவே வேர்விட்டுள்ள கட்சிகளில் புதியவர் நுழைந்து பதவி பெறுவது சிரமம் .ஆகவே புதுபுது கட்சிகள் தோன்றும் போது அங்கு போய் துண்டு போட்டு இடம் பிடித்து விடுவார்கள் .

 

இவற்றுக்கு மத்தியிலும் எல்லா கட்சிகளிலும் உண்மையிலேயே கொள்கைப் பிடிப்பும் கட்சிப் பற்றும் கொண்ட சுயநலமற்ற தொண்டர்களும் உண்டு அதையும் நாம் பார்க்கத் தவறகூடாது . ஆயின் அதிகாரம் அவர்கள் கையில் இருப்பது அபூர்வமே .

 

இந்த சவாலான சூதாட்ட அரசியல் களத்தில், வர்க்க அரசியலை அறிவியல் பூர்வமாய்ப் பேசி , அதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் கம்யூனிஸ்டுகளை புரிந்து கொள்ளவே பலருக்கு முடிவதில்லை .

 

கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர அனைத்து முதலாளித்துவ கட்சிகளிலும் பின்னிருந்து இயக்கும் வலுத்த கரங்கள் உண்டு . அவர்களின் உத்தரவுப்படி கட்சி மாறுவதும் நடக்கும் . கம்யூனிஸ்ட் கட்சிகளில் உறுப்பினர்கள் தங்கள் சொந்தக் காசை செலவு செய்து கட்சி நிகழச்சிகளுக்கு செல்வதால் தனிப்பட்ட முறையில் பணத்தை இழக்கிறார்கள் .இது போக மாதாமாதம் கட்சிக்கு லெவியும் கொடுக்கின்றனர் . இந்த தியாகத்தை மகிழ்ச்சியோடு செய்வது லட்சிய பற்றால் மட்டுமே !

 

கட்சி முழுநேர ஊழியர்கள் கட்சி கொடுக்கும் சொற்ப ஊதியத்தில் வாழ்க்கை நடத்தப் போராடுகின்றனர் . வாழ்க்கை இணை சம்பாதிப்பவராகவோ வீட்டில் கொஞ்சம் சாப்பாட்டுக்கு வசதி இருப்பவராகவோ இருப்பின் ஓரளவு சமாளிப்பர் . இப்படிப்பட்ட சூழலில் பொது சமூகம் முதலாளித்துவ கட்சிகளில் கிடைக்கும் பண போக்குவரத்தை இங்கு எதிர்பார்க்க முடியாது . அதனால் ஏற்படும் சமூக இடைவெளி இடறலை உருவாக்கத்தான் செய்கிறது .

 

அத்தனையும் மீறி அன்றாடம் களத்தில் நின்று போராடும் கம்யூனிஸ்டுகளை இந்த உல்லாசபுரி வேந்தர்களால் புரிந்து கொள்ளவே முடியாது . அதேநேரம் ஒவ்வொரு கட்சியிலும் உள்ள அடிமட்ட அர்ப்பணிப்பு மிக்க தொண்டர்கள் கம்யூனிஸ்டுகளை மரியாதையாகவே பார்க்கிறார்கள்.

 

போற்றுவோர் போற்றட்டும் ! தூற்றுவோர் தூற்றட்டும் ! களத்தில் போராடுவோர் கம்யூனிஸ்டுகளே ! காலத்தை மீறி நிற்போர் கம்யூனிஸ்டுகளே !

 

சுபொஅ.

19/07/25.

 

 

 


0 comments :

Post a Comment