``ராஜ குலோத்துங்க-வை விட்டு விட்டானய்யா’’ - பட்டப்பெயரை வலியுறுத்தும் தி.மு.க...
கி.ச.திலீபன்
இது இன்றைய ஜூவி கட்டுரை . தலைவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா என்பது நல்ல விவாதம் . பட்டப் பெயர் , அல்லது மரியாதை நிமித்தமான புனைவு பெயர்களால் அழைக்க வேண்டுமா ? இயற்பெயரிலேயே அழைக்க வேண்டுமா ? இதுவே விவாதத்தின் மைய இழை .
அவரவர் இயற்பெயரிலேயே அழைக்கலாம் . அதுதான் சரி . இக்கட்டுரை சொல்லும் செய்தி இதுவே . நாம் இதில் மாறுபடவில்லை . உடன்படுகிறோம்.
வெளிநாடுகளில் மாணவர்கள் ஆசிரியர்களையே மிஸ் ,மிஸ்டர் என முன்னொட்டோடு பெயர் சொல்லி விழிக்கக் கற்றுக் கொடுத்து விடுகின்றனர்.பன்னாட்டு நிறுவனங்களில் உயர் அதிகாரிகளையே பெயர் சொல்லித்தான் அழைக்கின்றனர் . ஆக பெயர் சொல்லி அழைப்பது பிழையில்லை .பண்பாட்டு இழிவல்ல .உயர் பண்பாடே . ஆயின் இங்கு எங்கு பிரச்சனை வருகிறது ? சமூக உளவியலை கொஞ்சம் ஊன்றி கவனிக்க வேண்டும் .
கிரிமினலாக இருப்பினும் மேல் சாதியினரைக் குறிக்க ‘ர்’ விகுதி சேர்ப்பதும் ; பிறரை குறிக்க ‘ன்’ விகுதி சேர்ப்பதும் ஊடக தர்மமாக கடைப் பிடிக்கப்படுகிறதே , அதை சுட்டிக் காட்டிட வேண்டாமா ? இங்கு எந்த அளவுகோலும் எல்லா சாதிக்கும் ஒரேப்போல் இருப்பதில்லையே . ஏன் ?
ஈ,வே.ரா என்றோ ஈ எம் எஸ் என்றோ பெயர் சொல்லி அழைத்தால் அந்தத் தலைவர்கள் ஒரு போதும் கோவித்துக் கொள்ள மாட்டார்கள் .ஏனெனில் அதுதான் தங்கள் பெயர். அது இழிவல்ல என்பதறிவார்கள் . கம்யூனிஸ்ட் கட்சியில் எல்லா தலைவர்களையும் தோழர் என்ற பாசமிகு முன்னொட்டோடு பெயர் சொல்லி அழைப்பதே மரபு . தோழர் லெனின்தான்.தோழர் மார்க்ஸ்தான் .தோழர் யெச்சூரிதான் .
ஆயின் தன் சாதி பெயரை தூக்கி எறிந்த பின்னும் ’ராமசாமி நாய்க்கர்’ என இன்றும் விழிக்கும்/எழுதும் சங்கித்தனம் குறித்து ஏன் இந்த கட்டுரையில் ஜூவி பேசவில்லை ?
தமிழ்நாட்டுக்கும் தமிழ்ர் பண்பாட்டுக்கும் சம்மந்தமே இல்லாத ’ஜீ ’என பின்னொட்டு போட்டு ஏன் அழைக்க வேண்டும் . ’ச்சீ’என இதனை ஜுவி தூக்கி எறியச் சொல்லவில்லை ? ஏன் ?
கலைஞர் என்கிற சொல் மட்டும் கசக்கும் எனில் அது பிரச்சனையே . அண்மையில் ஒரு தொலை காட்சியில் கேப்டன் விஜயகாந்த் மகன் பேட்டியை குறிப்பிடும் போது ‘கேப்டன்’ திருமணம் ’கருணாநிதி’ தலைமையில் நடந்ததெனக் குறிப்பிட்டது . ’கருணாநிதி’ தலைமையில் ’விஜயகாந்த்’ திருமணம் நடந்தது என்றோ ’கலைஞர்’ தலைமையில் ’கேப்டன்’ திருமணம் நடந்தது என்றோ குறிப்பிடாமல் ஒருவரை ’’கேப்டன் என்றும் இன்னொருவரை ’கருணாநிதி’ என்று குறிப்பிட்டதும்தான் பிரச்சனை .
சி.பா.ஆதித்தன் தன் பெயரை சி.பா.ஆதித்தனார் என்று மாற்றிய போது துக்ளக் சோ பொறுக்காமல் சத்தியவாணி முத்தனார் , மதியழகனார் என கேலி செய்தாரே ! அது ஏன் ? தோளில் துண்டணிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட போது வாய்மூடி மவுனியாய் இருந்தோர் ; ஒடுக்கப்பட்டோர் தோளில் துண்டு போட்ட போது கேலி செய்தது ஏன் ? துக்ளக் சோ கடைசி வரை கால்வரை நீண்டு தெரு பெருக்கும் துண்டோடு கார்ட்டூன் போட்டு மகிழ்ந்தது ஏன் ? மேடையில் மேல்சாதியினர் மட்டுமே அமரவைக்கப்பட்ட சூழலில் எல்லா சாதியைச் சார்ந்தோர் பெயரையும் துண்டறிக்கையில் போட்டு மேடையில் உடகாரவைத்து அவர்களே இவர்களே என அண்ணா அழைத்த போது மேல்சாதி மனோப்பாண்மையில் வயிறு எரிந்து கேலி செய்த துக்ளக்குகளை என்னென்பது ? [ ஒரு கட்டத்தில் இந்தப் பட்டியல் எல்லை மீறி சுமையானது தனி ] இவை எல்லாம் மநுஅதர்ம அயோக்கிய சிந்தனை அல்லவா ?
நீதிபதிகளை ‘ யுவர் ஹானர்’ என இன்னும் ஏன் அழைக்க வேண்டும் ? ’சார் ’ என அழைத்தால் போதாதா ? போதும் .அதுதான் சரி ! ” அதே சமயம் உயர் சாதியினர் நீதிபதியாய் இருக்கும் வரை ’யுவர் ஹானர்’ என அழைத்துவிட்டு ,ஒடுக்கப்பட்டவன் நீதிபதி ஆனதும் ‘சார்’ என அழைக்கச் சொல்வது ஏன் ? கொஞ்சகாலம் இவர்களையும் ‘யுவர் ஹானர்’ என அழைக்கலாமே !, “ சகோதரி அருள்மொழி கேட்பதும் நியாயம் தானே !
பெரியார் குன்றக்குடி அடிகளாரை ‘மகா சந்நிதான்ம் என அழைத்தார் . அது ஏன் என உடன் இருந்தோர் கேட்டபோது , “சங்கர மடத்திம் ’மகா பெரியவா’ன்னு அழைக்கும் போது நம்ம அடிகளாரை மகாசந்நிதானம்’ என ஏன் அழைக்கக்கூடாது . நம் தோழர்கள் எல்லோரும் அப்படியே அழையுங்கள் என்றார் .
பெரியார் ,அண்ணா , கலைஞர் ,புரட்சித் தலைவர் என மக்கள் அன்போடு அழைத்துப் பழகிவிட்ட பெயரால் ஒருவரை அழைப்பது நாகரீகமான நடைமுறைதான் . ஒரு முறை தோழர் சங்கரய்யா பேசிய பொதுக்கூட்டத்தில் நான் கருணாநிதி என பலமுறை சொல்லிவிட்டேன் . என்னை தோழர் என்.சங்கரய்யா கண்டித்தார் . கலைஞர் என்று சொன்னால் நம் மதிப்பு குறைந்துவிடாது ; நாம் அரசியல் பழுதாகிவிடாது .கலைஞர் என்று குறிப்பிட்டே அவரை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யலாம் .பிழையில்லை என்றார். அதன் பின் நான் என்னை திருத்திக் கொண்டேன்.
மேற்வங்கத்தில் ஜோதிபாசுவை எல்லோரும் ‘பாபு பாபு’ என வங்கமொழியில் மரியாதையாய் அழைப்பார்கள் .ஏன் அரசியல் எதிரி மம்தாகூட ’ஜோதிபாபு’ என்றுதான் சொல்லுவார் . இதில் என்ன பிழை ?
சாதிய ஆதிக்க மனோபாவம்தான் ஆளுக்கொரு முழக்கோலைத் தூக்குகிறது .ஒரு பக்க உண்மையை மட்டும் சொல்லி சூ.வி மென்மையாய் தங்கள் எரிச்சலை விளக்கெண்ணை தடவி மறைக்கிறது .
இறுதியாய் ,மநுஅதர்மம் பெயர்சூட்டவும் வழிகாட்டி இருக்கிறதே , அதை சூ.வி சுட்டி இருக்கலாமே ! நான் இங்கு சுட்டுவதோடு நிறைவு செய்கிறேன் .மீதி உங்கள் சிந்தனைக்கு.
“ பிராமணனுக்கு மங்களம் , சத்திரியனுக்கு பலம் ,வைசியனுக்குச் செல்வம் ,சூத்திரனுக்கு அவன் அடிமை நிலைமை தோன்றுமாறு பெயர் சூட்ட வேண்டும்” என்று மட்டுமா மநுஅதர்மம் சொல்லுகிறது ; “சூத்திரனை முழுப்பெயரால் அழைக்கலாகாது” என்றும் சொல்கிறது . குப்பு சாமியை குப்பு என்றோ குப்பா என்றோ ,சுப்பு ராஜை சுப்பு என்றோ சுப்பா என்றோ , முனீஸ்வரன் என்பதை முனியா என்றோ முனியன் என்றோ அழைப்பது இதனாலன்றோ ! இன்றும் அப்பழக்கம் உள்ளதே ! சூ.வி இதையெல்லாம் பேசுமா ?
சு.பொ.அகத்தியலிங்கம்.
07/07/25.
0 comments :
Post a Comment