இன்றளவும் நீடிக்கின்ற யுத்தம்…..
ரிதன்யா [தற்]கொலையைத் தொடர்ந்து திருமணவாழ்வு குறித்து சமூகவலைதளம் எங்கும் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது . இங்கு அந்த குறிப்பிட்ட நிகழ்வு குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை . ஆயின் திருமணம் குறித்த சமூக உளவியல் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சில செய்திகளை சொல்ல முயல்கிறேன்.
“ நீ எப்போது கல்யாண சாப்பாடு போடப்போகிறாய் ? “ என்று ஒரு ஆணிடமோ பெண்ணிடமோ கேட்பதையும் ;
“ ஏதாவது விசேஷம் உண்டா ? “ என குழந்தை பேற்றை குறித்து மறைமுகமாகக் கேட்பதையும் ;
எப்போது நிறுத்தப் போகிறோம் .அவை நாகரீகமற்ற கேள்விகள் .அடுத்தவர் தனிப்பட்ட உரிமையில் அத்துமீறி மூக்கை நுழைப்பது என்பதை எப்போது உணரப்போகிறோம் .
இப்படி இப்போது சொல்கிற நானும் நெடுநாளாய் இக்கேள்விகளை பிரஞ்ஞையின்றி கேட்டிருக்கிறேன் .அதற்காக இப்போது வருந்துகிறேன்.
திருமணம் என்பதும் குழந்தைப் பேறு என்பதும் சம்மந்தப்பட்டவரின் தனிப்பட்ட உரிமை . விருப்பம் . அவர்கள் முடிவெடுக்க வேண்டிய அம்சம்.அதில் சம்மன் இல்லாமல் ஆஜராகி , வாதாடுவது அநாகரீகம் என்பதை எப்போது உணரப் போகிறோம் ?
பெற்றவர்களுக்கும் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஓர் கட்டாயக் கடமையாகவோ சுமையாகவோ இருக்கக்கூடாது .இருக்கவும் முடியாது .அப்போதுதான் இதனை நாகரீக சமூகம் எனச் சொல்ல முடியும் .
உரிய பருவம் எய்திய பின் , உடலின் வேட்கை வாழ்வின் தேவை இவை சார்ந்து தக்க துணையை தேர்வு செய்வது ஆண் / பெண் இருபாலரின் உரிமை . சேர்ந்து வாழ்வதா [ லிவிங் டுகதரா ] தனித்து வாழ்வதா , காதல் திருமணமா ,ஏற்பாட்டுத் திருமணமா , காதல் தோற்றதால் இன்னொரு காதலா , திருமண வாழ்வா , திருமணம் தோற்றதால் மணமுறிவா , இன்னொரு திருமணமா , தனித்து வாழ்வதா ,குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா , எதுவாயினும் அதை சம்மந்தப்பட்ட ஆணோ பெண்ணோ முடிவு செய்ய வேண்டுமே தவிர வேறு யாரும் அதில் தலையிடக்கூடாது . கேட்டால் உதவலாம் அதுவும் ஆலோசனை என்ற அளவில் மட்டுமே . இறுதி முடிவை சம்மந்தப்பட்டவரே எடுக்க வேண்டும் .
சாதி ,மதம் ,குடும்ப கவுரவம் ,அந்தஸ்து ,குடும்ப சம்பிரதாயம் ,பழக்க வழக்கம் , வழிவழி வந்தது இப்படி எந்தக் குறுக்கீடும் கூடாது .இவற்றின் பெயாரால் பண்பாட்டு உடையணிந்து போடும் ஆட்டங்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் . தடுக்க வேண்டும் .
திருமணம் என்பது பருவம் எய்திய ஆணுக்கும் பெண்ணுக்கும் சுயவிருப்பத் தேர்வாக இருக்க வேண்டுமே தவிர, யார் நிர்ப்பந்தத்திற்காகவோ எதன் கட்டாயத்தின் பேரிலோ அமைவதாக இருக்கக்கூடாது .
எல்லாம் சரி ! நம் வாழ்வின் சமூக உளவியலில் இப்பார்வை இருக்கிறதா ? இல்லவே இல்லை . திருமணம் தாமதமாவதோ , தள்ளிப் போவதோ , மணமுறிவோ ,மறுமணமோ , காதல் திருமணமோ , சாதி மத மறுப்புத் திருமணமோ ,சம்பிரதாய மறுப்புத் திருமணமோ பெரும் விவாதப் பொருளாகிவிடுகிறது . குடும்பத்தார் தலைகுனிவாக இழுக்காக அல்லது இயல்புக்கு மாறானதாக , அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவே சமூக உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது .ஆண் / பெண் இரு பாலினரின் உளவியலும் இப்படித்தான் உள்ளது . இதில் மாற்று பாலின உறவு குறித்த சமூக உளவியல் கேட்கவே வேண்டாம். அவ்வளவு மோசம் .
இதன் அடிப்படை என்ன ? இதுவே கேள்வி .இன்றைய ’ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற திருமண முறைக்கு அடிப்படை “தனிநபர் சொத்துரிமைதான்” என்பார் மாமேதை ஏங்கெல்ஸ் . “குடும்பம் – தனிச்சொத்து – அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற மாமேதை எங்கெல்ஸ் எழுதிய புகழ்மிக்க நூலை வாசிக்காமல் உள்வாங்காமல் , இன்றைய குடும்பச் சிக்கல்களை,காதல் பிரச்சனைகளை சரியாக உள்வாங்கவே முடியாது . அதிலும் இந்தியச் சூழலில் மநுதர்மம் , வர்ணாஸ்ரம் போன்ற அநீதிகள் கூடுதல் கைவிலங்கு . இதனை உடைக்காமல் சமத்துவச் சிந்தனைச் சாளரங்களைத் திறக்கவே முடியாது .
“ இதுநாள் வரையில் , மரியாதைக்குரியதாக இருந்த ,பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த ,வாழ்க்கை தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது .அது மருத்துவரையும் ,மதகுருவையும் , கவிஞரையும் ,விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி உழைப்பாளர்களாய் ஆக்கிவிட்டது .
முதலாளித்துவ வர்க்கம் ,குடும்பதினரிடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டது .குடும்ப உறவை வெறும் பண உறவாகச் சுருக்கிவிட்டது .”
ஆம் . காதல் அன்பு எல்லாம் வெறும் பகட்டுப் பேச்சாகப் போய்விட பணம் சொத்து அந்தஸ்து இந்தியச் சூழலில் இணைந்த சாதி ,மதம்,குடும்ப கவுரவம் ,மநுநீதி ,வர்ணஸ்ரமம் எல்லாம் ஒவ்வொரு உள்ளத்திலும் பேயாட்சி செய்கிறது . இதனை உயர்ந்த பண்பாடெனக் கொண்டாடும் கேவலம் வேறு .
இந்த ஆணாதிக்கமும் பண ஆதிக்கமும் சமத்துவமற்ற பண்பாட்டுப் பார்வையும் ஏதோ ஆண்களில் மூளையில் உறைந்து போயிருக்கிற கரடுதட்டிய சிந்தனை மட்டுமல்ல ; பெண்களின் மூளையிலும் இதுவே உறைந்து போயுள்ளது . அம்மா ,மாமியார் ,மருமகள் ,மகள் எந்த பாத்திரமாயினும் அப்பா மாமனார் மகன் மருமகன் எந்தப் பாத்திரம் ஆயினும் இது விதி விலக்கு அல்ல .காதல் ,திருமணம் என்றெல்லாம் வரும் போது ஆணோ பெண்ணோ தெரிந்தோ தெரியாமலோ இந்த பஞ்சாங்கக் கண்ணாடியை கடன் வாங்கியாவது அணிந்து பார்க்கத் துவங்கி விடுகின்றனர் . தற்காலிக ஈர்ப்பு அதனை மீறிய போதிலும் உள்ளத்தின் அடித்தளத்தில் இருக்கும் அந்த விஷப் பாம்புக் குட்டிகள் சந்தர்ப்பம் பார்த்து தலையைத் தூக்கிவிடுகின்றன . எல்லா குடும்ப உறவுகளிலும் மூர்க்கமாகவோ உள்ளோட்டமாகவோ இது தொடர்கிறது . மூர்க்கமானது கொலையாகவோ தற்கொலையாகவோ வெளிப்பட உள்ளோட்டம் மவுன சித்திரவதையாய் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது .
எங்கெல்ஸின் கீழ்க்கண்ட வரிகளோடு நான் இப்போது நிறுத்திக் கொள்கிறேன் . [ எங்கெல்ஸின் ’குடும்பம் – தனிச்சொத்து – அரசு ஆகிவற்றின் தோற்றம்’ படியுங்கள் ! ]
“ ஆக ,ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசமாக ஒரு தார மணமுறை வரலாற்றில் தோன்றவில்லை . அத்தகைய சமரசத்தின் உச்ச வடிவமாக அது தோன்றவில்லை என்பது நிச்சயம் . அதற்கு மாறாக ,ஒரு பால் மற்றொரு பாலை அடிமைப்படுத்தலாக அது தோன்றுகிறது . ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலங்களில் அறவே அறிந்திராத இரு பால் சர்ச்சை பற்றிய பிரகடனமாகவே அது தோன்றுகிறது . மார்க்சும் நானும் [எங்கெல்ஸ்] எழுதிய பிரசுரிக்கபடாத பழைய கையெழுத்துப் பிரதியில் பின் வருமாறு எழுதினோம் . ‘ குழந்தை பெறுவதற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேலைப் பிரிவினைதான் முதல் வேலைப் பிரிவினை ஆகும் .” இன்று இத்துடன் சேர்த்துக் கூறுவேன் ; வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை பெண்பாலை ஆண்பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது . ஒரு தார மண முறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றம் ஆகும் . ஆனால் அது அடிமைமுறையுடனும் தனிச் சொத்துடனும் சேர்ந்தார்போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுத்தத்தைத் துவக்கியது …”
அந்த யுத்தம் தொடர்கிறது … போராடுவோம்….
சுபொஅ.
04/07/25.
0 comments :
Post a Comment