ஆல்பம் …
ஆல்பம்….
பீரோவில்
கட்டுக்கட்டாய் தூங்கிடும்
போட்டோ ஆல்பங்களை
திரும்பிப்
பார்க்க நேர்கையில்
மனத்திரையில்
பழைய காட்சிகள்..
அத்தனைக்கும்
சாட்சியாய் ஆல்பங்கள்
நம் முன்னோர்க்கு வாய்க்காத பெரும் பேறு !
பள்ளிப் பருவ
நினைவுகள்
பால்ய சிநேகங்களின்
பசுமை ஞாபங்கள்
உறவுகளின்
அன்றைய அந்நியோன்னியம்
திருமணத்தின்
இனிய பொழுதுகள்
குழந்தைகளின்
புன்னகைகள்
குடும்ப சங்கமங்களின்
தடயங்கள்
பொதுநிகழ்வுகளின்
சாட்சிகள்
இப்படி எத்தனையோ
வரிசை கட்டின
ஆல்பங்களைப்
புரட்டும் போது
சந்தோஷங்கள்
மட்டுமல்ல கசப்புகளும்
மேலெழுந்து
வரத்தான் செய்கின்றன
தொலைத்த போட்டோக்கள்
மட்டுமல்ல
எடுக்கதவறிய
போட்டோக்களும்
நினைவில்
வந்து மோதத்தான் செய்கின்றன..
நேற்றுபோல்
இன்று எதுவுமே இல்லை
எல்லாம் மாறித்தான்
போய்விட்டன
உடை ,ஒப்பனை
, பாசம் , உறவு
கனவு , கற்பனை
, சூழல் , வாழ்க்கை
எல்லாம் மாறித்தான்
போய்விட்டன …
பீரோவை அடைக்கும்
ஆல்பங்களின் காலம்
மெல்ல மலையேறிக்கொண்டிருக்கிறதோ
கம்ப்யூட்டரில்
சேகரிக்கப்பட்ட போட்டோக்கள்
தேதி நேரத்தோடு
செய்தி சொல்லுகிறதே
‘ஏஐ’ செய்யும்
மாயஜாலத்தில்
நாளை இதுவும்
மாறிப்போகுமோ ?
நேற்றை அசைபோடும்
சுகம்
காலவெள்ளதில்
கரையாமல் நீளுமோ
அதையும் சேகரிக்க
அதிநவீன ஏஐ வருமோ
நாளையப் பற்றிய
கவலையும் கனவும்
இன்றையப்
பொழுதில் தலைநீட்டுவதேன் ?
ஆல்பத்தைப்
புரட்டியதால் வந்த வினையோ ?
ஹைரோஷிமா
நாகசாகி அண்குண்டு வீச்சில்
தப்பிப்பிழைத்த
’ஹிபாகுஷா’க்களின் போட்டோக்கள்..
தேசப்பிதா
காந்தியை கொடியவன் கோட்சே
சுட்டு வீழ்த்திய
வரலாற்றுப் படம்
வியட்நாம்
குண்டுவீச்சில் நிர்வாணமாய்
தப்பியோடிய
சிறுமியின் போட்டோ !
பாபர் மசூதியை
காவி கடப்பாரைகள்
இடித்து தரைமட்டமாக்கிய
காட்சிகள்
ஆஸ்திரேலிய
பாதிரியார் ஸ்டெயின் கிரஹாமும்
இரண்டு குழந்தைகளும்
உயிரோடு எரிக்கப்பட்ட போட்டோ !
நவம்பர்
7 மாபெரும் ரஷ்யப் புரட்சியின்
மகத்தான வெற்றி
பெருமிதத்தின் பதிவுகள்
பாசிசத்தை
வெற்றிகண்டு ஜெர்மனியில்
செம்படை ஏற்றிய
வெற்றிக்கொடி புகைப்படம் !
இன்னும் எத்தனையோ
போட்டோக்களின் ஆல்பங்கள்
வரலாற்றுப்
பக்கத்தில் அழியாதிருக்கட்டும்
மானுடத்துக்கு
பாடம் சொல்லிக் கொண்டிருக்கட்டும் !
ஹிபாகுஷா
: ஹிரோஷிமா ,நாகசாஹியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் தப்பிப் பிழைத்து வாழ்நாள் முழுவதும்
கொடும் நோய்களோடு கண்ணீரில் வாழ்ந்தவர்கள் .
சுபொஅ.
29/07/25.
0 comments :
Post a Comment