தாமிரபரணி தீரத்து வாசம் மிகுந்த….

Posted by அகத்தீ Labels:

 



 


தாமிரபரணி தீரத்து வாசம் மிகுந்த….

 

“ பாத்திரங்கள் இந்த சமூகத்தில் நாம் அன்றாடம் காணும் மனிதர்களே . நடந்த அல்லது நடக்கக்கூடிய நிகழ்வுகளை பதிவு செய்வதே சிறுகதை…….. …” என முன்னுரையில் தான் ஒரு இலக்கணத்தை வகுத்துக் காட்டியிருக்கிறார் தோழர் .வீ.பழனி .

 

அது மட்டுமல்ல ,”பாத்திரங்களைத் தேர்வுசெய்வதுதான் ஒரு படைப்பாளனின் வேலை.மற்றபடி அனைத்து நிகழ்வுகளையும் ,முடிவு உட்பட பாத்திரங்களே முடிவு செய்து கொள்கிறார்கள்…” என்றும் தோழர். வீ.பழனி வரையறுத்திருக்கிறார் .

 

இது சரியா தவறா என்பதை இலக்கிய ஜாம்பவான்கள் விவாதிக்கட்டும் .ஆயின் நூலாசிரியரின் , “தாமிரபரணி தீரத்து சிறுகதைகள்” நூலில் உள்ள எழுபது சிறுகதைகளும் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளன.

 

நூலாசிரியருக்கு தாமரபரணி தீரத்து பூகோளம் ,நீர் வளம் ,நிலவளம் ,சாதி அடர்த்தி , புழங்கு மொழி , பயிர்தன்மை,சமூகப் பிரச்சனைகள் எல்லாம் நன்றாகத் தெரியும் .ஒவ்வொரு கதையும் அதற்குச் சாட்சி . ஏனெனில் இவற்றை வரைந்து காட்டாத கதை ஒன்றுகூட இல்லை.

 

முதல் கதை  “கணக்கு பாடம்”ஜோதிடத்துக்கு எதிரான மெலிதான பகடியாக அமைந்ததால் .அடுத்தடுத்து அதைபோல் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள் . ஆயினும் “ ஒத்த தும்மல்” “ நன்று ,கடவுள் இல்லை”,” தொக்கம்” போல் சிலகதைகள் முதல் கதை தடத்தில் பயணித்துள்ளன. “பொதுவாழ்க்கை” எனும் கடைசி கதை தன்னலம் பாராது ஊருக்கு உழைக்கும் கருப்பையாவைப் பற்றியது .பொதுநலம் சார்ந்தது . ஆனால் எல்லா கதைகளையும் இப்படிச் சொல்ல முடியாது .

 

“ அவர் ஓர் கம்யூனிஸ்ட்” ,”அரசியல் வேண்டும்”,” காஸ்ட்டிரோ முடிதிருத்தகம்”  “ தலைவர் வாழ்க “ ,” கொடியேற்றுவோம்” போன்ற சில கதைகள் அரசியலை  நேரடியாகவே பேசுகிறது .

 

சாதிய ஒடுக்குமுறை சிலகதைகளில் பேசப்பட்டுள்ளது .” குடிமகன் சுப்பையா “ என்ற கதையில், மகனுக்கு வேலைகிடைக்க சாவு சடங்கு செய்யும் சுப்பையா  ஊரைவிட்டு  வெளியேறுகிறான் . அந்தக் கதையின் கடைசி வரியில் “ நாம் ஆளுக்கொரு வேலையைச் செய்ய வேண்டியதுதான் .” என முடிகிறது . அவ்வளவு சுலபமாகவா இன்றைய கிராமங்கள் இருக்கின்றன .

 

 “ சித்தி” கதையில் சாதி மாறி இரண்டாம் மணம் முடித்த கணவன் இறந்து போக ,  “,சித்தி உள்ளே வாங்க…”/ ஜெயந்தி முக்காடு போட்டுக்கொண்டு உள்ளே போகிறார் ./ காசி ,கணபதி,சேகர்.மணி தவிர மற்ற ஆண்கள் வீட்டிலிருந்து வெளியேறினார்கள். இப்படி சாதிய முகத்தை தோலுரித்து முடிகிறது . இப்படி சில கதைகள் உண்டு .

 

காதல் ,மணமுறிவு ,மறுமணம் ,சாதிமறுப்பு திருமணம் எல்லாம் இயல்பு போக்கில் இந்நூலில் சிறுகதைகளில் நடந்தேறி விடுகின்றன . அவ்வளவு எளிதாகவா சமூகம் இருக்கிறது ?

 

நூலாசிரியர் முதுகலை தமிழ் பட்டதாரி என்பதும் ,ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கம்யூனிஸ்ட் கடசி அரசியல் களப்பணியாளர் என்பதும் கூடுதல் பலம் .அவர் கண்டும் ,கேட்டும் ,அனுபவித்தும் அறிந்த பல மனிதர்களை கதாபாத்திரங்கள் ஆக்கி தாமிரபரணி தீரத்தில் நெல்லைத் தமிழில் சுவைபட தந்துள்ளார் .

 

கதைக்களம் பற்றிய நுட்பமான பல தகவல்களை வாழ்வனுபவத்தோடு அள்ளித் தெளிக்கிற நூலாசிரியர் ; கிராமங்களில் இயல்புப் போக்கில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுகிற ஆசிரியர் ; உள்ளுக்குள் கனந்து கொண்டிருக்கும் நெருப்பை காணவில்லையா ? தவற விட்டுவிட்டாரா ?

 

தாமிரபரணி தீரத்து சிறுகதைகள் ,

ஆசிரியர் : வீ.பழனி ,

வெளியீடு : அ ஆ இ பதிப்பகம் , 27,அழகர் நகர் , பெருமாள்புரம் அஞ்சல் ,பாளையங்கோட்டை ,திருநெல்வேலி – 627 007 .

தொடர்புக்கு : 94433 91196 / 63816 48023 /  

palanicpm55@gmail.com

பக்கங்கள் : 416  , விலை : ரூ.300/

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

1/06/2024.

 

 

 

 


0 comments :

Post a Comment