சொல்ல வேண்டிய கதைகள்.. சொல்ல வேண்டிய மொழியில்….

Posted by அகத்தீ Labels:

 



சொல்ல வேண்டிய கதைகள்.. சொல்ல வேண்டிய மொழியில்….

 

தமிழில் சிறார் இலக்கியம் ,குழந்தை இலக்கியம் ஆக்குவதில்  இப்போது ஏற்பட்டுவரும் வளர்ச்சியும் மாற்றமும் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது . ராமாயணம் ,மகாபாரதம்  என அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து அறிவை முளையிலேயே கிள்ளி எறியும் போக்கு மெல்ல சாகட்டும் !

 

அறிவைத் தூண்டிவிடும் நம்பிக்கையை போராட்ட குணத்தை சமத்துவ உணர்வை முளையிலேயே  உசுப்பிவிடும் முயற்சிகள் மெல்ல முகிழ்த்தாலும் வலுவாய் எழுகிறது . இ.பா.சிந்தனின் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…. “ நூல் காத்திரமான வரவு . ஏற்கெனவே விழியன் ,உதயசங்கர் போன்ற சிலர் இப்பாதையில் தடம் அமைக்கின்றனர் .

 

இந்நூலில் உள்ள இருபது கதைகளும் வெறும் கதைகளல்ல ; கதை வடிவிலான சாதனையாளர் வாழ்க்கை .

 

” ஹேப்பி பர்த் டே “ நாமும் சொல்லி இருக்கிறோம் .கேட்டிருக்கிறோம் .அதன் பின்னால் ஹில் சகோதரிகளின் இதயமும் உழைப்பும் இருப்பதை இப்போதுதானே அறிந்தோம்.

 

போர் மேகம் சூழ்ந்த ஈராக்கில் நூலகத்தைக் காப்பாற்றிய ஆலியாவின் கதை சொல்லும் செய்திகள் வலுவானவை .

 

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலே , புதை படிவ ஆய்வாளர் மேரி ஆனிங் , உலகின் முதல் பெண் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் அடா லவ்வேஸ் ,உலகை சைக்கிளில் சுற்றி வந்த ஆனி லண்டண்டெரி ,மரங்களின் தாய் வங்காரி மாத்தாய் , கிரிகெட்டில் சாதனைப் பெண் மித்தாலி ராஜ் ,அனிமேசன் நாயகி மேரி ப்ளேரின் ,முதலில் காரை ஓட்டிய பெண் பெர்த்தா பென்ஸ் உட்பட பல சாதனைப் பெண்களையும் ,சில ஆண்களையும் பிஞ்சுகளுக்கு அறிமுகம் செய்திருப்பது பாராட்டத் தக்க முயற்சி .

 

உரையாடல் வடிவம் , எளிய சொற்கள்,  குழந்தைக்கு சொல்ல வேண்டிய அளவில் செய்தி இவற்றை  சரியான விகிதத்தில் கலந்து தந்திருப்பதுதான் இ.பா.சிந்தனின் வெற்றி .

 

அவர் ஓர் குழ்ந்தைகளுக்கான யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். உங்கள் குழந்தைகளுக்கு அந்த சேனலை அறிமுகம் செய்து வையுங்கள் .

 

 [ Kutti Story Kids@KuttiStoryKids1.52K subscribers759 videosகுழந்தைகளுக்கு கதைசொல்வது மிகமிக அவசியம். இவ்வுலகைப் புரிந்து…]

 

 நான் என் பேரனுக்கும் பேத்திக்கும் கதை போல் ஒரு அறிவியலையோ வரலாற்றையோ சொன்னால் போதும் மறுநாள் சக நண்பர்களோடு விளையாடும் போது இந்த புதிய செய்தியை அவன் /அவள் பாணியில் கைகால் முளைக்க வைத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள் . அவர்களே இதுபோல் தகவல்களை கூகுளில் தேடி நமக்கு பரிட்சை வைக்கும் போது பெரும்பாலும் தோற்றுப் போவேன் . அதில் எவ்வளவு இன்பம் தெரியுமா ?

 

இந்நூல் அது போன்ற ஆவலை நிச்சயம் கிளர்த்தி விடும் என்பதில் ஐயமில்லை . வாசலை திறந்து விடுங்கள் அவர்கள் வானத்தை ,கடலை அளந்து சொல்வார்கள் .

 

அப்பா மகளுக்கு சொல்வது நல்ல உத்தி . என் ஞானப் பிள்ளை இ.பா.சிந்தன் எப்போதும் லட்சியத் தெளிவுள்ள தன் படைப்புகளால் என்னை வியக்கவைத்துக் கொண்டே இருக்கிறான் .வாழ்த்துகள் !

 

அப்பா ஒரு கதை சொல்றீங்களா…. பெரிய சாதனைகள்… குட்டிக் கதைகள் .

ஆசிரியர் : இ.பா.சிந்தன் , வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் , பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :044 – 24332924 /8778073949

 Email :  bharathiputhakalayam@gmail.com  / www.thamizhbooks.com 

பக்கங்கள் : 144 , விலை :ரூ.140/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10/05/2024.

10/05/2024.

 


0 comments :

Post a Comment