கேள்வியை எழுப்பினால் தலைகுனிவோம் .மனம் மலரும் !

Posted by அகத்தீ Labels:

 

கேள்வியை எழுப்பினால் தலைகுனிவோம் .மனம் மலரும் !


எவ்வளவு படித்தவராக இருந்தாலும் , எவ்வளவு மேதையாக இருந்தாலும் , எவ்வளவு வயது முதிர்ந்தவராக இருந்தாலும் ; சக மனிதர்களோடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் தோற்றுப்போனால் அந்த இடத்தில் அவர் பூஜ்யமே !

மனிதர்களோடு உரையாடுவதும் உறவாடுவதும் எளிய கலையல்ல .வெறும் அறிவு நுட்பம் மட்டுமே பயன்படாது . விசாலப் பார்வை வேண்டும் . விரிந்த உள்ளம் வேண்டும் . யாரையும் கிள்ளுக்கீரையாய் நினைக்காத மனம் வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் இதில் நூறுமுறை ஆயிரம் முறை தோற்றிருக்கிறோம். ஆனாலும் பாடம் கற்றுக்கொள்ள முடியவில்லை .அனுபவமே சிறந்த ஆசான் என்பது கூட பல நேரங்களில் இதில் பயனளிக்க வில்லை . காரணம் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயல்பாய் இருக்கிறார்கள் .

அவரால் நமக்கும் நம்மால் அவருக்கும் சில தேவைகள் பூர்த்தியாகும் எனில் சகித்துக் கொள்கிறோம் . தேவை முடிந்ததும் தூக்கி எறிகிறோம் .எறியப்படுகிறோம். தேவை ஓங்கும் போது குறை சிறிதாகத் தெரிகிறது .தேவை முடிந்ததும் குறை பெரிதாய் விஸ்வரூபமெடுக்கிறது .

காரணமே இல்லாமல் ஒருவரை வெறுக்கவும் முடிகிறது , தலையில் வைத்து கூத்தாடவும் முடிகிறது . நமக்கென்று வரும் போது வலிக்கிறது ; அடுத்தவர்க்கு எனில் ரசிக்க முடிகிறது .விசித்திரமான மனித மனம் . ஒருவேளை சுயநலமும் சுயபச்சாதாபமும் தான் பொது இயல்போ ? மீளப் போராட வேண்டாமா ?

வாழ்க்கை நெடுகிலும் சொந்தகளுக்குள் , அலுவலகத்துக்குள் ,பொதுவாழ்வுக்குள் எங்கேயும் இந்த முரண் இருக்கத்தான் செய்யும் .விதிவிலக்காய் சில நட்புகளும் தோழமையும் அமைந்து விடுவதும் உண்டு .

குறை நிறைகளோடு நேசிக்கப் பழகுவது என்பது ஒரு கழைக் கூத்தாடியின் சாமர்த்தியத்தை ஒத்தது . ஆனால் கழைக்கூத்து பயிற்சியில் கைகூடும் . இங்கு அன்பால் அரவணைக்கும் போது மட்டுமே சாத்தியம் .

வெறுப்பின் இடத்தில் அன்பை வையுங்கள் . நெருப்பு அணைந்து ஆறிய பிறகு தூர நின்று அசை போடுங்கள் . நெஞ்சில் ஒளி தோன்றலாம். நாமென்ன தவறே செய்யாதவரா ? அவரென்ன தவறு மட்டுமே செய்யப் பிறந்தவரா ? பரஸ்பரம் இக்கேள்வியை எழுப்பினால் தலைகுனிவோம் .மனம் மலரும் !

எளிதாகச் சொல்லிவிட்டேன் . வயது எழுபதைத் தாண்டியும் இன்னும் நான் இதில் ஆரம்பப் பள்ளி மாணவனே .சொல்வது எளிது . முதலில் சொல்வோம் . பிறகு சொல்லுக்கு நியாயம் வழங்க நமக்குள் போராடுவோம்.!சரிதானே !

சுபொஅ.
8/05/24.

0 comments :

Post a Comment