நிர்வாணத்தின் குரல்கள் : ஆத்மாவின் துடிப்பு

Posted by அகத்தீ Labels:

 



 

நிர்வாணத்தின் குரல்கள்  :  ஆத்மாவின் துடிப்பு

 

சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சதக் ஹசன் மண்டோவின் ஒர் சிறுகதையை  சிற்றிதழ் ஒன்றில் வாசித்தேன் . பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைக் குறித்தது . வாசித்தபின் அதிர்ந்தேன். அவரைத் தேடத் தொடங்கினேன் . பின்னர் தோழர் ராமானுஜம் மொழியாக்கம் செய்த சதக் ஹசன் மண்டோவின் இரு சிறுகதைத் தொகுப்புகளை வாசித்தேன் . ராமனுஜத்தோடு நீண்ட நேரம் அதுகுறித்து பேசிக்கொண்டிருந்ததும் , நூல் அறிமுகம் எழுதியதும் நினைவில் உள்ளன . ஆபாச எழுத்தாளர் என மாண்ட்டோ  மீது ஓர் அவச்சொல் உண்டென்றும் ; வழக்குகள் உண்டென்றும் அறிந்தேன். அவர் பத்திரிகையாளர் , மானுட அன்பில் திழைத்தவர் என்பதே உண்மை.

 

எதிர் வெளியீட்டில் வந்த இஸ்மத் சுக்காய் “வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை” சுயசரிதை வாசிக்கிற போது  ஓர் செய்தி .

 

 “சதக் ஹசன் மண்ட்டோவுக்கு எதிராகவும் இஸ்மத் சுக்தாய்க்கு எதிராகவும் ஒரே நேரத்தில் ஓர் வழக்கு நடந்தது .ஆபாசமாக கதை எழுதிவிட்டதாகவே அவ்வழக்கு . இருவரும் நிர்பந்தங்களுப் பணிந்து  மன்னிப்பு கேட்காமல் , அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்றது சாதாரணமானது அல்ல . இன்றும் வழிகாட்டும் செய்தி அது.”

 

ஆக , மண்ட்டோ என்னை தொடர்ந்து தொந்திரவு செய்து கொண்டே இருந்தார் ,இந்நிலையில் உதயசங்கர் மொழியாக்கத்தில் வந்த இந்நூல் குறித்து அறிந்ததும் , உடனே தொடர்பு கொண்டு கேட்டுப்பெற்றேன்.

 

மானுட நேயம் ,மானுட அன்பு என்பது நன்கு அறிந்த இருவருக்கிடையே ஆன உணர்ச்சி ததும்பல் அல்ல. மாறாக முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிலும் வாழ்வில் கடையனுக்கும் கடையனாய் இருப்போரிடம் ,பிரதிபலன் எதிர்பாராது செலுத்துகிற பேரன்பே ஆகும் . சதக் ஹசன் மண்டோ எழுத்து நெடுக இந்த பேரன்பு பெருமழையாய் பொழிந்து கொண்டே இருக்கிறது. அவர் சந்தேகத்துக்கு இடமின்றி ஓர் முற்போக்கு எழுத்தாளரே!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது மதவெறி உச்சத்தில் பித்தேறி நடந்த கொடூர கலவரத்தின் , அழுகுரலின் நேர்முக சாட்சி மண்ட்டோ . தன் வாழ்நாள் முழுவதும் அந்த ரணத்தை சுமந்து திரிந்தவர் .ஆனால் ஒரு போதும் மதவெறியின் குரலுக்கு செவி சாய்க்காதவர் . அவர் எழுத்து நெடுகிலும் முகாரி ராகமே நிரம்பி வழிவதின் ரகசியம் இதுவே.

 

 “ அவரைச் சதாகாலமும் போலியான மனிதசமூகம் அணிந்திருக்கும் நாகரிகமான ஆடைகளுக்குப் பின்னாலிருக்கும் அழுகிய புண்களில் வடிந்து கொண்டிருக்கும் சீழ் தொந்திரவு செய்து கொண்டே யிருந்திருக்கிறது.” ஆம் அதுதான் கலகக்குரல் ஆனது .கலைப்படைப்பும் ஆனது.

 

இந்நூலில் இடம் பெற்றுள்ள கதைகளுக்கு போகும் முன்பு சதக் ஹசன் மண்டோ குறித்து உதயசங்கர் எழுதியுள்ள அறிமுக உரை,  “ மானுட மனசாட்சியின் உரத்த குரலை “ கண்டிப்பாக வாசியுங்கள் .

 

 “பிஸ்மில்லா” என்கிற முதல் கதை கலவரத்தின் போது கைவிடப்பட்ட ஒரு இந்துப் பெண் . ஜாகீர்  என்பவரால்  பிஸ்மில்லா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவள் பற்றிய கதை .இச்செய்தியே கடைசி பத்தியில்தான் தெரியும் . ஜாகீரின் மனைவி என்றே கருதி பழகத் தொடங்கி ,அவளின் சோகமான பெரிய கண்களால் ஈர்க்கப்பட்டு காதல் வயப்படும் சையத் ஓர் சினிமா தயாரிப்பாளன் . அறிந்த கதையைவிட அறியாத கதை ஒவ்வொருவரிடமும் இருக்கத்தானே செய்யும் .

 

அமங்கலி சாரதாவின்  சோகத்தைப் பிழியும்  “ஆறுதல் “கதை , குடி போதையில் நண்பர் அஸ்கர் என்ன செய்திருப்பான்  ? ஆறுதல் சொல்லப் போனவன் உளவியல் . மிக நுட்பமான உணர்ச்சிப் பிழியல் .

 

லாஜோவின் அம்மாவும் பாலியல் தொழிலாளியுமான சந்தோ சன்யாரியின் மனவோட்டத்தை ஓர் எழுத்தாளனால் இதைவிட துல்லியமாக படம்பிடிக்க முடியுமா எனக் கேட்கும் “ மெழுகுவர்த்தியின் கண்ணீர்”.

 

 “நிர்வாணக் குரல்கள்” இந்த கதையைப் படித்த போது என்னுள் ஒரு பழைய நிகழ்வுகள் நிழலாடின .கலைஞரை நள்ளிரவு அவர் படுக்கையறையில் புகுந்து கைது செய்த போது ;அதற்கு எதிராய் மனித உரிமைக் குரல்கள் உரக்க எழுந்தன . நானும் தீக்கதிரில் கண்டித்து எழுதினேன் . இது மனித உரிமை மீறல் வண்மையாகக்  கண்டிக்கிறோம் .மிகச்சரி .கண்டித்தாக வேண்டும் .

 

அதே வேளை  இடபிள்யூஎஸ்  [EWS]என்கிற வருவாய் மிகக் குறைந்த பிரிவினருக்காக வீட்டுவசதி வாரியம் ஒதுக்கும் வீடுகளை எண்ணிப் பாருங்கள் . ஒரு மூலையில் கழிப்பறை  ,ஒரு குட்டி சுவர் மறைப்பில் அடுக்களை , இரண்டு பேர் படுக்கவும் போதாத அறையில் கணவன் மனைவி ,அம்மா ,வயதுக்கு வந்த பெண் ,மகன் என ஐந்து பேர் . அவர்களுக்கு பிரைவேசி என்பது எங்கு ? யாது ? எந்த மனித உரிமை ஆர்வலரேனும் அதை எப்போதேனும் பேசியது உண்டா ?

 

இன்குலாப் எழுதிய பீட்டர் சாலை பெரிய சாலை எனும் கவிதையில் கோணிப்பை மறைப்பு குடியிருப்பு பற்றி   வரும் .  மனிதம் பொங்கும் கவிதை அது .

 

இக்கதையில் கோணிப்பை மறைப்பில் தாம்பத்தியம் நடத்தும் வாழ்க்கையின்  வலியும் , மரத்துப்போன வாழ்வும் ,இதனை சகிக்க முடியாமல்  மனப்பிறழ்வாகும் மனிதனும் ; வாசிக்கும் போதே நெஞ்சு வலிக்கிறது . இக்கதையை வாசித்தபின் மேலும் தொடர முடியாமல் ஒரு நாள் புத்தகத்தையே மூடிவைத்துவிட்டேன். கொஞ்சம் ஈரமனதுள்ளோர் இக்கதையை வாசித்து உணர்ச்சி வசப்படாமல் இருக்கவே முடியாது .

 

 “ உன்னால் எல்லா விளக்குகளையும் அணைக்க முடியுமா ?” பாலியல் தொழிலாளி கங்குபாயின் கேள்வியின் உக்கிரம் தகிக்கும் “ தோற்றுக் கொண்டேயிருப்பவன்” கதை .

 

வயதுக் கோளாறு , உடலின் பாலியல் உந்துதல்  இவற்றால் ஓர் பாலியல் தொழிலாளியைத் தேடிப்போகும் ஜாவீத் அவள் வீட்டுக்குள் நுழைய முடியாமல் மனப்போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறான் . இந்த வதையை “கோழை” என்கிற கதை மிகவும் நுட்பமாகப் பேசுகிறது .”ஜாவீத். நீ மிகப்பெரிய பாவத்திலிருந்து காப்பாற்றப் பட்டிருக்கிறாய்.நீ கடவுளுக்கு நன்றியோடு இருக்க வேண்டும்.”என முடியும்.

 

ஓர் மூடநம்பிக்கை சார்ந்த நையாண்டி கதை “ ஷாடோலின் எலி.”,  யாசித் என்பவன் முகமதிய வரலாற்றில் பழிவாங்கும் எதிர்மறை கதாபாத்திரம் . இந்த பெயரில் அமைந்த கதை இந்தியா பாகிஸ்தான் பகைமை நீறுபூத்த நெருப்பாய் தொடர்வதை காட்சிப் படுத்துகிறது .பழி வாங்கல் என்பது முடிவற்ற தொடர்கதை என உணர்த்தும் காத்திரமான கதை யாசித் .

 

“ கேள்விக்குறியான கெளரவம்” எனும் கதை மம்மது பாய் எனும் தாதாவின் மறுபக்கத்தின் ஈரத்தையும்  ,கெளரவமும் படும்பாட்டையும்  காட்சிப் படுத்துகிறது . திரைப்பட பிரபலம் மீது ஏற்படும் ஈர்ப்பும் பைத்தியம் பிடித்த மனோபாவதையும் பகடி செய்யும் “ நூர்ஜகன்”.என ஒவ்வொரு கதையும் நம் வாழ்வில் புதைந்து கிடக்கும் பக்கங்களைப் புரட்டுகிறது .

 

 “நிர்வாணத்தின் குரல்கள்” என்பது நூலின் பெயராக இருந்தாலும் இது ஆபாசத்தின் குரல் அல்ல ; ஆத்மாவின் துடிப்பு . இந்நூலில்  பத்து  தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நன்கு  உயிரோட்டத்தோடு மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார் உதயசங்கர் .அக்கதைகள் நம் இதயத்தோடு உரையாடுகின்றன .

 

மாண்டோ கதைகளை வாசிக்கும் போது நம் இதயம் அழும் .துடிக்கும் . அதே உணர்வை மண்ட்டோவைப் போல் நம்மால் அடுத்தவருக்கு கடத்திவிட முடியாது .நானும் அவற்றை இங்கே சொல்வதில் தோற்றுத்தான் போனேன். நாம் அந்தக் கதையைச் சொல்லலாம் .உணர்ச்சியை சொல்ல முடியாது .ஒரே தீர்வு ஒவ்வொருவரும் இக்கதைகளைப் படித்து உணர்வதுதான்.படியுங்கள் !

 

நிர்வாணக் குரல்கள், ஆசிரியர் : சதக் ஹசன் மண்டோ , தமிழில் : உதயசங்கர் , வெளியீடு : நூல்வனம் ,M22 ஆறாவது அவென்யூ ,அழகாபுரி நகர் , ராமாவரம் , சென்னை- 600 089. E mail : noolvanampublisher@gmail.com பக்கங்கள் : 144  விலை : ரூ.220/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24.05/2024.

 

 

 

 


0 comments :

Post a Comment