விருதாப்போகலாமா விருது

Posted by அகத்தீ Labels:

 


தினசரி முகநூலைப் புரட்டினால் , ஏதோ ஓர் அமைப்பு அல்லது நிறுவனம் யாரோ சில இலக்கிய படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கியுள்ள செய்தியைக்  காணலாம் . விருது வழங்குவோரும் விருது பெறுவோரும் கணிசமாக அதிகரித்துள்ளனர் . மகிழ்ச்சி ! பாராட்டுகள்!

 

விருது பெறுவோருக்கு அது ஊக்கம் தரும் உற்சாகம் தரும் .அங்கீகாரத் துக்காக ஒவ்வொருவரும் காத்திருக்கின்றனர் . ஏதோ ஓர் வகையில் நிறைவேறுவது சரிதான் . ஆயின் எந்த விருதும் அரசியலில் சிக்காமல் இருப்பதில்லை . விருதின் அரசியல் விவாதம் காலந்தோறும் நடந்துகொண்டே இருக்கின்றன .

 

நோபல் பரிசு ,ஞானபீடம் ,சாகித்திய அகடாமி , மாநில ,ஒன்றிய அரசு வழங்கும் விருதுகள் கடும் அரசியல் விவாதத்தை எப்போது சந்திக்கும் .பொதுவாய் விருது வழங்குவோருக்கு ஓர் அரசியல் காய்நகர்த்தல் கணக்கு இருக்கும் .விருது பெறுவோருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கும் .எது சரி எது தவறு என்பது அந்தந்த காலத்தின் அரசியல் சூழலோடு இணைந்தது .பொதுவாய் தீர்ப்பெழுத முடியாது .

 

அரசு அல்ல பெருநிறுவனங்கள் சாராத விருதுகளும் நிறைய உள்ளன . இவை ஒவ்வொன்றுக்கும் ஓர் அரசியல் உண்டு .பெறுவோர் , வாங்குவோர் இரு சாராரையும்  இணைத்துப் பார்த்தால் விளங்கும் .

 

எழுபதுகளில் இலக்கியசிந்தனை விருது பெரிதாக கருதப்பட்டது .ஒவ்வொரு ஏப்ரல் 14 ஆம் தேதியும் சென்னை மயிலாப்பூர் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடக்கும் விருது விழா கிட்டத்தட்ட எழுத்தாளர்களின் மகா சங்கமமாய் இருக்கும் . அங்கு கணையாழி குரூப்பும் இருக்கும் , தாமரை  செம்மலர் குரூப்பும் இருக்கும் , எதிலும் சேராத உதிரிகளும் தீவிரவாதிகளும் வந்திருப்பர் . நான் தொடர்ந்து தோழர் ச.செந்தில்நாதனுடன் சென்றிருக்கிறேன்.

 

தமிழ்நாடு அரசு விருதும் , திருப்பூர் தமிழ் சங்க விருதும் நான் பெற்றிருக்கிறேன் . நான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பில் இருந்த போது கோவையில்   மாநில மாநாட்டில் சிறந்த எழுத்தாளர் ,சிறந்த திரைப்படம் இரண்டுக்கும் விருது வழங்கினோம் .

 

பின்னர் தமுஎகச விருது வழங்கத் துவங்கின . இப்போது பெரும் விருதுப் பட்டியலை ஆண்டு தோறும் தமுஎகச அறிவிக்ககின்றது . மகிழ்ச்சிதான்.

 

ஆனால் அண்மைக் காலமாக சின்ன சின்ன அமைப்புகள் ,இதழ்கள் , லாப நோக்கு நிறுவனங்கள் எல்லாம் விருது வழங்கத் துவங்கிவிட்டன .விருது பெறுவோரும் வழங்குவோரும் அசுர வேகத்தில் பல்கிப் பெருகுவதைக் கண்டு மகிழ்வதா ? கேள்வி கேட்பதா ? இரண்டுமே அரசியல்தான்.

 

விருதாப்போனது என்றால் நாஞ்சில் நாட்டில் வீணாய்ப் போனது என்றே பொருள் . விருதாப்போகலாமா விருது என கேட்கத் தோன்றுகிறது .விருது எதுவாயினும் அதன் பின் ஓர் அரசியல் நிச்சயம் உண்டு . நடுநிலை என்பது பம்மாத்து . அரசியலில் நீ எந்தப் பக்கம் என்பதைப் பொறுத்ததே நீ வாங்கும் விருதும் , வழங்கும் விருதும் தகுதி பெறும் .

 

இளைஞர்களுக்கு விருது என்பது அங்கீகாரமாய் ஊக்க டானிக்காய் உற்சாகப்படுத்தும் .இது கட்டாயம் தேவை . ஆயின் விருதுக்கும் அங்கீகாரத்துக்கும் பழம் தின்று கொட்டைபோட்ட முதியோர் எல்லாம் அலைவது ஆரோக்கியம் அல்ல. தானக வரின் அது வேறு .

 

விருதுகளைவிட உங்கள் படைப்பும் ஆற்றலும் சமூக அக்கறையும்தான் காலத்தை மீறி நிற்கும்  என்பதை உணர்வீர் ! விருது அரசியலில் சிக்காமல் எழுவீர் ! இதன் பொருள் விருதே வாங்காமல் இருப்பதல்ல ; விருதால் உனக்கும் உன்னால் விருதுக்கும் பெருமை சேர விருதுகள் பெறுக !

 

சுபொஅ.

24/05/2024.

 

 


0 comments :

Post a Comment