சாவு செய்திகளைக் கேட்கும் போதும்…..

Posted by அகத்தீ Labels:

 

சாவு செய்திகளைக் கேட்கும் போதும்…..

 

சாவு செய்திகளைக் கேட்கும் போதும் ; துக்கம் விசாரிக்கச் செல்லும் போதும் என்னுள் ஓர் தத்துவ விசாரணை தொடங்கிவிடுகிறது.

 

என்ன சொல்லி ஆறுதல் சொல்வது ? நெஞ்சோடு அணைத்து முதுகைத் தடவிக் கொடுப்பதா ? இதமான சொற்களால் இதயத்தை வருடிவிடுவதா ?

 

குக்கரில் விசில் வந்ததும் வெளியேறும் நீராவி போன்றதா துக்கம் ?

 

வீட்டை விட்டு உடல் வெளியேறியதும் வந்த கூட்டமும் சட்டென கரைந்து விடுக்கிறதே !

 

நிர்பந்தத்தால் கொஞ்சம் மிஞ்சியிருக்கும் கூட்டமும் மெல்ல மெல்ல விடை பெற்று விடுகிறதே !

 

இதுவரை துக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தவர்கள் அவற்றை எங்கே வீசிவிட்டுச் சென்றிருப்பார்கள் ? பூத ஊடலில் போர்த்திய மாலைகளை வீசிய அதே குப்பையிலா ?

 

உறவை இழ்ந்தவர் மீண்டெழ வழி யாது ? தோள் கொடுப்பவர் யார் ? துணை இருப்பவர் யார் ? உதவிக்கரம் நீட்டுபவர் யார் ?

 

பொருளாதாரமே  மைய  அச்சாகிப் போகிறது .பந்தம் ,பாசம் ,உறவு  எல்லாம் இருந்தாலும் நெருக்கம் ஒருப்போல் இல்லையே !

 

தோள் கொடுக்கும் தோழமையும் , உடன் நிற்கும் நட்பும் மட்டுமே ஊன்றுகோலாய் பெரும்பாலும்  இருக்கிறது .

 

சாதி ,மதம்  எல்லாம் சடங்குகளை ,சம்பிரதாயங்களைத்  திணித்து  மேலும் கடனாளியாக்குவதைத் தவிர வேறு என்ன இதுவரை சாதித்திருக்கிறது ? வேலிக்குள் முடக்குவதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறது ?

 

ஒவ்வொருவரும் தம் சாவுக்குப் பின் என்னென்ன நடக்க வேண்டும் ? என்னென்ன கூடாது ? தன்னால் முடிந்த சேமிப்பு இவ்வளவுதான் ,கடன் இவ்வளவுதான் ,இதற்குத்தான் அது என எழுதி வைப்பதில் என்ன பிழை ?

 

அறுபதைக் கடந்தவர்கள் மரணத்தை எதிர்பார்த்து சிலவற்றை யோசித்து எழுதி வைக்கலாம் / சொல்லி வைக்கலாம் .அகால மரணங்களின் போது என்ன செய்வது ?

 

மரணம் கதவைத் தட்ட வயது ஒரு பொருட்டல்ல. மரணத்தைப் பற்றி பேச மட்டும் வயது எப்படித் தடையாகும் ?  மரணம் எப்போதும் வரலாம். பயந்து சாக வேண்டாம் .

 

கொஞ்சம் திட்டமிட்டு வாழலாமே ! ஆயினும் சமூகச் சூழலும் வாழ்க்கைச் சூழலும் அதற்கு உகந்ததாக இல்லையே !

 

கணவன் ,மனைவி , பிள்ளைகள் உடன் வசிக்கும் இதர உறவுகள் போராடி வாழப் பழகின் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாமோ ! இல்லாவிடிலும் கையறு நிலை கற்றுக்கொடுத்துவிடும் .

 

மரணமும் ஓர் பாடசாலைதானே ! கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது . வாழ்க்கையே ஒரு பட்டறைதானே !வாழப் பழகுவதும் வாழப் போராடுவதும் ஒன்றுதானே !

 

சுபொஅ.

02/04/2024.

 

 

 

 

 


0 comments :

Post a Comment