வீசுகிற குப்பை

Posted by அகத்தீ Labels:

 



வீசுகிற குப்பை 


என் மகள் வழிப் பேரனும் பேத்தியும் கனடாவிலிருந்து வந்தனர் .எம்மோடு சில நாட்கள் தங்கினர் . உரையாடல் நெடுக கனடாவுக்கும் இந்தியாவுக்குமான ஒப்பீடாகப் பெரும்பாலும் கழிந்தது .எல்லாவற்றையும் எழுதவும் இயலாது .தேவையும் இல்லை .

 

என் பேத்தி சொன்னாள் , “ தாத்தா ! இங்கு தெருவெல்லாம் குப்பை குவிஞ்சு கிடக்கு , அங்க யாரும் ரோட்டில குப்பையை வீசமாட்டாங்க …”

 

என் பேரன் சொன்னான் ,” தாத்தா , நம்ம நாட்டில டிராபிக் சென்ஸ்சே கிடையாது…” இதனை என் மருமனும் வழிமொழிந்தார் .

 

இதில் குப்பையைப் பற்றி மட்டும் இப்போது  இங்கு பேசுவோம் .

 

நான் அண்மையில் திருச்செந்தூர் போயிருந்தேன் . கோயிலை ஒட்டிய கடற்கரையைப் பகுதியை இவ்வளவு குப்பையாக வைத்திருக்க முடியும் என்பதில் சாதனை படைத்திருக்கிறது அவ்வூர் . நகராட்சி .அறநிலையத்துறை என்ன செய்கிறது என்கிற பெருங்கேள்வி ஒரு பக்கம் எழுகிறது .

 

நிர்வாகத்தின் தோல்வி ஒரு புறம் . மறுபுறம் நம் மக்களின் மனோபாவம் இன்னும் குப்பையாக இருக்கிறது என்பது வெளிப்படை .பக்தி ஆன்மீகம் என வேஷம் போட்டாலும் சாப்பிட்ட குப்பைகளை, நெகிழிக் குப்பைகளை ,தண்ணீர் போத்தல்களை , மதுபுட்டிகளை இன்னபிறவற்றை வீசி அடிப்பதில் நம்மவரை அடிச்சிக்க யாரும் இல்லை .

 

பக்தியும் ஆனமீகமும் புத்தியையும் சுத்தத்தையும் கொடுக்கவே இல்லை . பொது புத்தியில் இன்னும் குப்பை அள்ள ஒரு சாதி என்கிற சாதி மமதையும், வீட்டில் குப்பை பெருக்க பெண் என்கிற ஆணாதிக்க மமதையும் ஆட்டுவிக்கிறதே ? எப்படி போதிப்பது ?

 

அதே திருச்செந்தூர் அருகே மணப்பாடு மீனவர் கிராமம் பார்த்தோம் பெருமளவு தூய்மை பேணப்பட்டு இருந்தது . ஏன் அந்த ஞானம் திருச்செந்தூரில் இல்லை .கோயிலுக்குள்ளேயும் வெளியேயும்கூட தூயமை இல்லையே . உழவாரப் பணி எல்லாம் நடக்குதா என்ன ? பக்தி மூடத்தனமானதுதானே ! தூய்மைக்கு பகுத்தறிவுக்கும் பொதுபுத்திக்கும் அங்கு என்ன வேலை ?

 

அடுக்ககங்களின் வலி இன்னொரு வகை . நான்கு மாடி ஐந்து மாடி இப்போது சர்வசாதாரணம் . மேலே இருந்து குப்பையை வீசுவது .பக்கத்து காலிமனையை குப்பை மேடாக்குவது என அட்டூழியம் தொடர்கிறது .அங்கு குப்பை சேர்ந்தால் தன் வீடும் சேர்ந்துதானே நாறும் என்கிற பொது புத்தியில் உறைப்பதே இல்லை . பெங்களூரின் நடைபயிற்சியின் போது எனக்கு வரும் கோபம் இது .

 

குப்பை பையை அருகில் போய் குப்பைத் தொட்டியில் போடாமல் போகிற போக்கில் வீசுவது ; அதிலும் டூ வீலர் காரில் போனபடியே வீசுவது எவ்வளவு பொறுப்பற்றதனம்?  அவர்கள் வீசுகிற குப்பை பெரும்பாலும் குப்பைத் தொட்டிக்குள் விழாது ; சுற்றிலும் சிதறித்தான் கொட்டும்.

 

நானும் என் இணையரும் ஒரு முறை திண்டுகல்லுக்கு அதிகாலை போயிருந்தோம் .ரயிலை விட்டு இறங்கி ஆட்டோவில் பயணம் செய்யும் போது பார்த்தோம்  ; வீட்டினுள் நின்ற படியே கோவில் வாசலில் தேங்காயை உடைத்து சிதற விடுவது போல் தெருவில் குப்பையை சிதறு விடும் கொடுமையை கண்டு நொந்தோம்.

 

மக்கும் குப்பை எது மக்கா குப்பை எது என்கிற ஞானமும் இல்லை .ரயில் நிலையங்களில் எல்லாவற்றையும் எல்லாவற்றிலும் வீசும் புத்திசாலித்தனத்தை என்னென்பது ?

 

குப்பையை அகற்றும் தூயமைப் பணியாளர்கள் , நம் சுத்தத்தைப் பேணும் போர்வீரர்கள் அல்லவா ? அவர்களை மனிதர்களாக மதித்தால் இப்படி எல்லாம் செய்வோமா ?

 

ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் !

 

சுபொஅ.

21/05/24.

 

 


0 comments :

Post a Comment