அலையில்லா கடல் தேடி…

Posted by அகத்தீ Labels:

 



அலையில்லா கடல் தேடி…

 

ஒரு குவளைத் தண்ணீரிலும் அலை இருக்கும்.

ஆழக் கிணற்றிலும் அலை இருக்கும்

குளம் ,ஏரியிலும் அலை இருக்கும்

கடலில் நிச்சயம்  அலை இருக்கும்!

எல்லா அலையும் ஒன்றாமோ ?

 

காலை முத்தமிடும் அலையும்

ஊரைச் சுருட்டும் சுனாமி அலையும் ஒன்றாமோ?

அலையில்லா கடல் அழகென்று யார் சொல்லுவார் ?

கரையோரம் மட்டும் அலை முத்தமிடுமா ?

நடுக்கடலில் அலை நித்திரை கொள்ளுமா ?

ஆழ்கடலில்தான் சுனாமி தோன்றும் என்கிறார்களே !

 

நித்தம் அலையோடு போராடி வாழ்வோரும் உண்டு

அலையாமல் அசையாமல் ஜடமாக வாழ்வோரும் உண்டோ ?

அலையில்லா கடல் தேடி அலைவாயோ ?

அலையடிக்கும் மனசோடு நீ போராடலாம்

அலையில்லா பொழுதொன்று வாய்க்குமோ !

அலையின் அளவறிந்து ஒழுகு ! – தினம்

அலையோடு நீராடிப் பழகு ! அது அழகு !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

31/05/2024.

வட்டார வழக்குகள் : மறு பரிசீலனை தேவை.

Posted by அகத்தீ Labels:

 


வட்டார வழக்குகள் : மறு பரிசீலனை தேவை.

 

 

“ திருநெல்வேலி என்றாலேயே அல்வாவும் ‘ஏல’ என்ற சொல்லும்தான் என்பது போன்ற தோற்றம் உள்ளது.அதிலும் ‘ஏல’ என்ற சொல் பயன்பாடு மக்கள் தொடர்பு சாதனங்களில் மிகவும் செயற்கைத் தனமாக உள்ளது.”- இப்படி தோழர் வீ.பழனி “தாமிரபரணி தீரத்து சிறுகதைகள்” நூலில் குறிப்பிட் டிருப்பது மிகையல்ல . உண்மையே .நான் என்னுள் அசைபோட்டேன் ;

 

நான் 1967-68 களில் 11 வது வகுப்பு படிக்க குமரி மாவட்டத்திலிருந்து சென்னை வந்தேன் .வகுப்பறையில் சக மாணவர்கள் என் பேச்சை கேலி செய்தனர் . அதிலும் என் ஆங்கில உச்சரிப்பு உச்சபட்ச கேலிக்குரியதானது . அப்போது ஏற்பட்ட கூச்சத்தின் விளைவு இன்றுவரை ஆங்கிலத்துக்கும் எனக்கும் இடைவெளி .ஆனால் தமிழ் என் ஆர்வத்தை கிளர்த்திவிட்டது . என்னிடம் இருந்த நாஞ்சில் வாடை மெல்ல மெல்ல குறைந்தது . 1967 தொடங்கி 2013 வரை சென்னை திருவள்ளூர் என வாழ்ந்து விட்டதின் பலன் அது .

 

நாஞ்சில் நாட்டு மொழி வழக்கு மிகவும் வித்தியாசமானது . நாஞ்சில் நாடு முழுவதும் ஒரேப் போல் இருக்காது .குறிஞ்சி ,முல்லை ,மருதம், நெய்தல் என நானிலமும் உள்ள மாவட்டம் . அகத்தீஸ்வரம் ,தோவாளை தமிழ் ஒரு மாதிரி இருக்கும் , கலகுளம் ,விளவங்கோடு தமிழ் ஒரு மாதிரி இருக்கும் . குளச்சல் கடலோர மக்களின் தமிழ் முற்றிலும் வேறு வகையில் இருக்கும்.

 

பேச்சும் நடையும் உருவமும் இவர் குமரி மாவட்டத்துக்கு உரியவர் எனக் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் இன்று குமரி மாவட்டத் தமிழே பெரிதும் மாறி இருக்கிறது . எங்கும் பரவி இருக்கும் குமரி மாவட்டத்துக்காரர்கள் மூலமும் ,நவீன ஊடகங்கள் வழியும் நிறைய சொற்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன . பழைய சொற்கள் பல வழக்கொழிந்து போகின்றன .பழக்க வழக்கங்களிலும் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன .

 

எல்லா வட்டார வழக்குகளும் அப்படித்தான் . சென்னைத் தமிழ் என சினிமா கொச்சைப் படுத்தியது அல்ல சென்னைத் தமிழ் . மாநகரில் வியாபாரம் ,தொழில் ,அரசியல் வழி பலவேறு பண்பாடுகளுடனும் மொழிகளுடனும் ஊடாடியதால் அது சார்ந்த சொற்களும் உரையாடல்களுமாய் விரிந்து ஜனநாயகமானதுதான் சென்னைத் தமிழ் .

 

ஆரம்ப காலங்களில் எழுத்துத் துறையிலும் திரைப்படத்துறையிலும் தஞ்சை வட்டாரம் கோலோச்சியதால் அந்த வட்டாரத் தமிழே நல்ல தமிழ் என்றும் ஏனையவை எல்லாம் வட்டார வழக்கென்றும் சொல்லும் அளவுக்கு  மாறிவிட்டது .

 

ஒரு கட்டத்தில் அந்ததந்த வட்டார பெருமிதம் பேச திரைப்படங்களும் நாவல் சிறுகதைகளும் முயன்ற போது அது சாதிய வழக்காறுகளாகவும் திரிந்தன.  மிகைப் படுத்தப்பட்டன  . தஞ்சைத் தமிழும் அப்படியே !

 

உலகமயமமாக்கலும் ,தாராளமயமாக்கலும்,தனியார்மயமாக்கலும் நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆங்கிலம் கலந்த தமிழை பொதுப் பாணியாய் வியாபார நிமித்தம் திணித்து ; அதை நம் இயல்பாக்கி விட்டது . மறுபுறம் வட்டார பெருமிதத்தை சாதிய பெருமிதத்தைக் காட்ட    டி வியும்  , சினிமாவும் , தகல் தொடர்பு ஊடகங்களும் படைப்புகளும் மிகைப்படுத்தி செயற்கைத் தனமாய் வட்டார வழக்கைப் பேசுகின்றன.

 

 

ஆக ,வட்டார வழக்கில் சாதியமும் உண்டு . வட்டார வழக்கில் நல்ல தமிழ்ச் சொற்களும் உண்டு .சொலவடை பழமொழிகளில் பெண்ணடிமைத்தனம் ,சாதியம் , மூடத்தனம் சார்ந்தவையும் உண்டு அனுபவத் தழும்பேறி யவைகளும் உண்டு . எல்லாவற்றையும் பெருமிதத்தோடு கொண்டாடுவதும் பிழை .கண்ணை மூடிக்கொண்டு நிராகரிப்பதும் பிழை .காலத்திற்கு ஏற்றவை எவை எவை என கண்டு தெளிவதும் தொடர்வதும் நல்லது .ஆகாதனவற்றை ஆழக்குழி தோண்டி புதைப்பதும் தேவை .

 

கலப்படமில்லாத சுத்த சுயம்புவான மொழியோ ,பண்பாடோ ,பழக்க வழக்கங்களோ எங்கும் எப்போதும் இல்லை .கொள்வதும் கொடுப்பதும் நடந்து கொண்டேதான் இருக்கும் . சமூகத்தின் வளர்ச்சியோடும் வீழ்ச்சியோடும் மொழியும் ஏறி இறங்கும் .சமூகம் கைவிடும் மொழி காணாமல் போய்விடும் . எத்தனை ஆயிரம் கோடி கொட்டி அழுதாலும் பிழைக்காது .எடுத்துகாட்டு சமஸ்கிருதம் .

 

பேச்சு வழக்கிலும் அறிவியல் முன்னேற்றம் தொழில் வர்த்தக தொடர்பு சார்ந்தும் மொழி கலப்புக்குள்ளாகும் . மொழி கலப்பு நூறு சதம் பிழையுமல்ல ; நூறுசதம் சரியுமல்ல . எந்தச் சொல்லைக் கொள்வது எதை மறுப்பது என்பதில்தான் மொழியின் உயிர்ப்பு தொடரும்.

 

பெயர் சொற்களை மொழிபெயர்ப்பது வீண் . வினைச் சொற்களைப் புறக்கணித்து வாக் பண்ணி ,ஸ்மைல் பண்ணி ,குக் பண்ணி ,மியூசிக் பண்ணி , டைரக்ட் பண்ணி ,ரீட் பண்ணி  இப்படி பண்ணித் தமிழாக்குவது மொழியைக் கழுத்தை நெரித்துக் கொல்வதாகும் .தொலை காட்சியும் ஊடகங்களும் இந்தக் கொலையில் முக்கிய பங்காற்றுகிறது .

 

டிவி ,தொலைகாட்சி ,சினிமா ,தகவல் தொடர்பு சாதனங்கள் லாபத்தை மையமாகக் கொண்டே இயங்குவதால் அதில் நம் மொழியும் பண்பாடும் செழுமையுறும் என எதிர்பார்ப்பது பலன் தராது .

 

பேச்சு வழக்கில் இனிமை சேர்ப்போம் குமரி,நெல்லை ,கோவை,தஞ்சை ,விழுப்புரம் ,கடலூர் ,சென்னை ,மலைகள் ,கடலோரம் எங்கும் புழங்கும் இனிய பேசுமொழியை  ஒன்றாய் கலந்து வளமாக்குவோம் ,வலிமைகூட்டுவோம் !

 

பெளதீகம் ,இரசாயணம் , ஜியோமதி என்றால் இந்த காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியாது .அழகிய தமிழில் இயற்பியல் ,வேதியல் ,வரைகணிதம் என புழக்கத்திற்கு வந்துவிட்டது . அருமையாய்  வணக்கம்சொல்வதை விடுத்துநமஸ்காரம்என காராமாவது சங்கித்தனமே ! அவர்களே ! வாங்க போங்க என மரியாதை கலந்த நம் மொழி இருக்க ஜீ !ப்ரோ ! என்றெல்லாம் ஒட்டு சேர்ப்பது அருவருப்பாய் இருக்கிறது .

 

இலக்கண சுத்தமான மொழியை யாரும் பேசுவதில்லை . பழகு தமிழ் , இனிய தமிழ் , சொல்வளம் மிக்க தமிழ் , வலிமையான தமிழ் , வானமளந்த அனைத்தும் அறிந்த தமிழ்  நம்மிடம் இருக்க அதில் தேவையற்றவற்றைக் கலக்கலாமா ? யோசிப்பீர் !

 

வாழ்க எம் தமிழ் ! வல்லமை மிக்க வாழ்வியல் மொழி !

சுபொஅ.

 

 

 

 

 


மற்றபடி ஆரோக்கியமே !

Posted by அகத்தீ Labels:

 





மற்றபடி ஆரோக்கியமே !

 

 


அடுக்களையில்

ஓர் அஞ்சறைப் பெட்டி இருக்கும்!

அது நிறைந்து இருந்தால்தான்

அத்தை மகளும் அழகு கறி வைப்பாள் !

 

இப்போது முதியவர் பையிலும்

அய்ந்து  பெட்டிகள்  இருக்கின்றன.

அது இல்லாமல்

பொழுது விடியாது !

 

அதில் அப்படி

என்னதான் இருக்கும் ?

ஒன்றில் கண் கண்ணாடி

இன்னொன்றில் காதுகேட்கும் கருவி

இன்னொன்றில் பல்செட் / பல்லுறை

இன்னொன்றில் நிறைய மருந்துகள்

சர்க்கரை அளவு தீடிரென குறைந்தால் சரிக்கட்ட !

கடைசிப் பெட்டியில் சாக்கலேட் /பிஸ்கெட்

 

 

காலப்போக்கில் முதியோர் - கைப்

பெட்டிகள் எண்ணிக்கை கூடும்

அடுக்களை அஞ்சறைப் பெட்டியை

மசாலாப் பொடிகள் நிரப்பும் !

 

இப்போது என்னிடமும்

அய்ந்து பெட்டிகள்  இருக்கின்றன.

மற்றபடி ஆரோக்கியமே !

 

சுபொஅ.

27/05/2024.

 


பல்லுறை : பல் சிதைவு நிலையில் அதனை கொஞ்சம் தடுக்க சாப்பிடாத நேரங்களிலும் இரவு முழுவதும் பல்லுக்கு மேல் அணிய வேண்டிய ஓர் பிளாஸ்டிக் உறை போன்ற ஒன்று ,  ‘நைட் கார்டு’ என்று பெயர் .


இது பதில் அல்ல என் உணர்வு ….

Posted by அகத்தீ Labels:

 


இது பதில் அல்ல என் உணர்வு ….

 

 

நேற்று ஓர் இசைக் கச்சேரி வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன் . ஒரு பாடலை மேடையில் பாடும் போது வந்திருந்த ரசிகர் கூட்டத்தைக் காட்டினார்கள் . கிட்டத்தட்ட கணிசமான ரசிகர்கள் வாய் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன .

 

எனக்கு அப்போது ஓர் ஐயம் எழுந்தது . அந்த வாய்கள் முணுமுணுத்தது அந்த பாடல் வரிகளையா அல்லது பாடலின் இசையையா ? இசையமைக்கப் படாவிட்டால் அந்த பாடல் வரிகள் நினைவில் இருந்திருக்குமா ? பாடல் வரிகள் இல்லாமல் இசைமட்டும் மீட்டியிருந்தால் எத்தனை வாய் முணுமுணுத்திருக்கும் ?

 

எதுகை மோனை என சந்தம் கொஞ்சும் கவிதைகள் நினைவில் ரீங்கார மிடுவது போல் பிற கவிதைகள் மனனம் செய்தாலும் நினைவில் இருப்பது சிரமமா இருக்கிறதே ஏன் ?

 

செய்யுள் , கவிதை ,வசனம் இவற்றைவிட பாடல் உயிர் துடிப்பானது . இசையோடு மொழியும் இணையும் போதே அது பாடலாகும் . இரண்டையும் தனித்தனியாகக் கூறுபோட்டால் இரண்டுக்கும் ஜீவன் கிடையாது .

 

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை…. தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோஅன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ….

 

சுபொஅ.

26/05/2024.


பாலின சமத்துவம் குறித்து வாய்கிழிய ...

Posted by அகத்தீ Labels:

 




 “பாலின சமத்துவம் குறித்து வாய்கிழிய பேசும் முற்போக்காளர்களே ! உங்கள் மனைவியிடம் அம்மாவிடம் அக்கா தங்கைகளிடம் மகளிடம் நீங்கள் நியாயமாக  சமத்துவம் பேணி நடந்து கொண்டிருக்கிறீர்களா ?”

 

அண்மையில் நான் மணமுறிவு பற்றி போட்ட ஓர் பதிவில் சில சங்கிகள் வசைமாரி பொழிந்திருந்தனர் .நாகரீகம் கருதி அதனை நீக்கிவிட்டேன் . ஆயினும் அவர்கள் கெட்ட வார்த்தைகளோடு பிசைந்து எழுப்பிய போதிலும்   கேள்வி முக்கியமானது என்பதால் அதை என் தமிழில் மேலே தந்துள்ளேன்.

 

முதுபெரும்  கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த தோழர் பி.டி.ரணதிவே வாய்ப்பு கிடைக்கும் தொழிற்சங்க மேடையில் எல்லாம் சொல்வார் ,” நாம் இங்கு புரட்சிகரமான போராளியாக முழக்கமிடுகிறோம் .ஆனால் வீட்டில் மோசமான பிற்போக்கு ஆணாதிக்கக் கணவராகவே நடந்து கொள்கிறோம்.” அவர் ஒவ்வொரு மேடையிலும் அதிலும் ஆண் தொழிலாளர்களே மிகுந்திருந்த தொழிற்சங்க மேடையில் பாலின சமத்துவம் குறித்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார் .

 

என்னிடம் கேள்வி கேட்டவருக்கும் நேர்மையாகச் சொல்கிறேன் , “என் பேச்சுக்கும் செயலுக்கும் இன்னும் இடைவெளி இருக்கிறது என்பதே உண்மை . நான் எனக்குள் அதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் . ஆணாதிக்கம் என்பது மூளையில் உறைந்து போயுள்ள மரபணு .அதைச் சுரண்டி சுத்தம் செய்வது அவ்வளவு எளிதான வேலையில்லை . நான் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன் . வெற்றி பெறாமல் போகலாம் .ஆனால் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவதைவிட இது மேலானதுதானே !”

 

ஆணாதிக்க கருத்தோட்டம் என்பது ஆண்களிடம் மட்டுமே உள்ள குறை எனக் கருத்துவது தவறு . பெண்களிடமும் உண்டு . ஆண் ,பெண் மொத்த குடும்பத்திலும் இந்த கருத்தோட்டம் நிறைந்திருக்கும் .

 

நம் குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளில் ,சடங்குகளில் ,சம்பிரதாயங்களில் ,பழக்க வழக்கங்களில் ,குடுமபச் சண்டைகளில் , போதனைகளில் பாலின பேதமும் ஆதிக்கமும் மூடத்தனமும் அப்பிக் கிடக்கிறது . அவற்றைப் பேணிப் பாதுகாப்பதில் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பெரும் பங்கு  இருக்கிறது என்பது நடைமுறையில் நாம் அன்றாடம் அனுபவிக்கும் உண்மை .

 

ஆகவே பாலின சமத்துவதுக்கான போராட்டம் அனைவரும் சேர்ந்து விடாப்பிடியாக நடத்தியாக வேண்டிய கருத்துப் போர் . அதன் முழுப்பலனை அடுத்த தலைமுறை நுகரக்கூடும். அதற்காக இந்தத் தலைமுறை பேசாமல் ,முயலாமல் இருக்க முடியுமா ? நானும் முயற்சிக்கிறேன் .நீங்களும் முயற்சி செய்யுங்கள் .

 

மேலே கேள்வி கேட்டவர் நோக்கம் பாலின சமத்துவம் அல்ல. அந்த முழக்கம் போலியானது என நிறுவி , அதன் மூலம்  பெண் அடிமைத்தனத்தை புனிதப்படுத்துவதுதான்.

 

உன் மனைவி கோவிலுக்குப் போவதை தடுத்து நிறுத்த முடியாத நீ  பகுதறிவு பற்றி பேசலாமா என குதர்க்கக் கேள்வி எழுப்பும் வகைதான் இக்கேள்வியும் . மனைவியின் கருத்துரிமை பற்றி இங்கு அவர்களுக்கு கவலை இல்லை . அதுபோல் ஆணாதிக்கம் போல் மேலிருந்து பாலின சமத்துவத்தை திணித்துவிடலாம் என முட்டாள்தனமான எண்ணமும் இக்கேள்விக்கு பின்னால் உண்டு .

 

பாலின சமத்துவம் என்பது பரஸ்பர உரையாடல் மூலமும் சில கறாரான நடவடிக்கைகள் மூலமும் படிப்படியாய் சமூக உளவியலாக்க வேண்டிய கருத்தோட்டம் .இதை உணராதவர் எழுப்பும் கேள்வியே அது .

 

விடுதலைப் போராட்ட காலத்தில் பேசப்பட்ட பெண் உரிமையும் இன்று பேசப்படுகிற பாலின சமத்துவமும் ஒன்றல்ல . முதலில் அந்த முயற்சி தொடங்கப்படாவிடில் இன்றைய நிலையை எட்டிப் பிடித்திருப்போமா ?

 

1920 கள் ,நாற்பதுகள் ,எழுபதுகள் ,எண்பதுகள் ,இந்த நூற்றாண்டின் தொடக்கம் ,இன்று என வளர்ச்சி ஒவ்வொரு கட்டமாய் தவழ்ந்து ,ஊர்ந்து ,உருண்டு ,எழுந்து ,நடந்து ,முட்டி மோதி வந்திருக்கிறது இனி அடுத்த கட்டத்துக்கும் நகரும் . தட்டையாய் எதையும் பேச முடியாது .பேசவும் கூடாது .

 

நான் அவர்களுக்குச் சொல்வேன் ,என் தாத்தா பாட்டியைவிட என் அம்மா அப்பா காலம் முன்னேறியது .நானும் என் இணையரும் மேலும் ஒரு படி எடுத்துவைத்தோம் .என் மகனும் மகளும் அவர்கள் வாழ்க்கையில் மேலும் பலபடி முன்னேறி உள்ளனர் . என் பேரப்பிள்ளைகள் அடுத்து பாய்ந்து முன்னேறுவார்கள் .

 

பாலின சமத்துவத்தை உரக்கப் பேசுங்கள் . உள்ளும் புறமும் அதற்காகப் போராடுங்கள். அதுதான் காலத்தின் தேவை . காலத்தின் கட்டளை .

 

சுபொஅ.

26/05/2024.


விருதாப்போகலாமா விருது

Posted by அகத்தீ Labels:

 


தினசரி முகநூலைப் புரட்டினால் , ஏதோ ஓர் அமைப்பு அல்லது நிறுவனம் யாரோ சில இலக்கிய படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கியுள்ள செய்தியைக்  காணலாம் . விருது வழங்குவோரும் விருது பெறுவோரும் கணிசமாக அதிகரித்துள்ளனர் . மகிழ்ச்சி ! பாராட்டுகள்!

 

விருது பெறுவோருக்கு அது ஊக்கம் தரும் உற்சாகம் தரும் .அங்கீகாரத் துக்காக ஒவ்வொருவரும் காத்திருக்கின்றனர் . ஏதோ ஓர் வகையில் நிறைவேறுவது சரிதான் . ஆயின் எந்த விருதும் அரசியலில் சிக்காமல் இருப்பதில்லை . விருதின் அரசியல் விவாதம் காலந்தோறும் நடந்துகொண்டே இருக்கின்றன .

 

நோபல் பரிசு ,ஞானபீடம் ,சாகித்திய அகடாமி , மாநில ,ஒன்றிய அரசு வழங்கும் விருதுகள் கடும் அரசியல் விவாதத்தை எப்போது சந்திக்கும் .பொதுவாய் விருது வழங்குவோருக்கு ஓர் அரசியல் காய்நகர்த்தல் கணக்கு இருக்கும் .விருது பெறுவோருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கும் .எது சரி எது தவறு என்பது அந்தந்த காலத்தின் அரசியல் சூழலோடு இணைந்தது .பொதுவாய் தீர்ப்பெழுத முடியாது .

 

அரசு அல்ல பெருநிறுவனங்கள் சாராத விருதுகளும் நிறைய உள்ளன . இவை ஒவ்வொன்றுக்கும் ஓர் அரசியல் உண்டு .பெறுவோர் , வாங்குவோர் இரு சாராரையும்  இணைத்துப் பார்த்தால் விளங்கும் .

 

எழுபதுகளில் இலக்கியசிந்தனை விருது பெரிதாக கருதப்பட்டது .ஒவ்வொரு ஏப்ரல் 14 ஆம் தேதியும் சென்னை மயிலாப்பூர் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடக்கும் விருது விழா கிட்டத்தட்ட எழுத்தாளர்களின் மகா சங்கமமாய் இருக்கும் . அங்கு கணையாழி குரூப்பும் இருக்கும் , தாமரை  செம்மலர் குரூப்பும் இருக்கும் , எதிலும் சேராத உதிரிகளும் தீவிரவாதிகளும் வந்திருப்பர் . நான் தொடர்ந்து தோழர் ச.செந்தில்நாதனுடன் சென்றிருக்கிறேன்.

 

தமிழ்நாடு அரசு விருதும் , திருப்பூர் தமிழ் சங்க விருதும் நான் பெற்றிருக்கிறேன் . நான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பில் இருந்த போது கோவையில்   மாநில மாநாட்டில் சிறந்த எழுத்தாளர் ,சிறந்த திரைப்படம் இரண்டுக்கும் விருது வழங்கினோம் .

 

பின்னர் தமுஎகச விருது வழங்கத் துவங்கின . இப்போது பெரும் விருதுப் பட்டியலை ஆண்டு தோறும் தமுஎகச அறிவிக்ககின்றது . மகிழ்ச்சிதான்.

 

ஆனால் அண்மைக் காலமாக சின்ன சின்ன அமைப்புகள் ,இதழ்கள் , லாப நோக்கு நிறுவனங்கள் எல்லாம் விருது வழங்கத் துவங்கிவிட்டன .விருது பெறுவோரும் வழங்குவோரும் அசுர வேகத்தில் பல்கிப் பெருகுவதைக் கண்டு மகிழ்வதா ? கேள்வி கேட்பதா ? இரண்டுமே அரசியல்தான்.

 

விருதாப்போனது என்றால் நாஞ்சில் நாட்டில் வீணாய்ப் போனது என்றே பொருள் . விருதாப்போகலாமா விருது என கேட்கத் தோன்றுகிறது .விருது எதுவாயினும் அதன் பின் ஓர் அரசியல் நிச்சயம் உண்டு . நடுநிலை என்பது பம்மாத்து . அரசியலில் நீ எந்தப் பக்கம் என்பதைப் பொறுத்ததே நீ வாங்கும் விருதும் , வழங்கும் விருதும் தகுதி பெறும் .

 

இளைஞர்களுக்கு விருது என்பது அங்கீகாரமாய் ஊக்க டானிக்காய் உற்சாகப்படுத்தும் .இது கட்டாயம் தேவை . ஆயின் விருதுக்கும் அங்கீகாரத்துக்கும் பழம் தின்று கொட்டைபோட்ட முதியோர் எல்லாம் அலைவது ஆரோக்கியம் அல்ல. தானக வரின் அது வேறு .

 

விருதுகளைவிட உங்கள் படைப்பும் ஆற்றலும் சமூக அக்கறையும்தான் காலத்தை மீறி நிற்கும்  என்பதை உணர்வீர் ! விருது அரசியலில் சிக்காமல் எழுவீர் ! இதன் பொருள் விருதே வாங்காமல் இருப்பதல்ல ; விருதால் உனக்கும் உன்னால் விருதுக்கும் பெருமை சேர விருதுகள் பெறுக !

 

சுபொஅ.

24/05/2024.

 

 


திருவள்ளுவர் எந்த நிறம் ?

Posted by அகத்தீ Labels:

 




திருவள்ளுவர் எந்த நிறம் ?

மானுடம் எந்த நிறம் அந்த நிறம் .

 

திருவள்ளுவர் எந்த மதம் ?

எல்லையற்ற மானுடத்துக்கு மதம் ஏது ?

 

திருவள்ளுவர் யாருடைய குரல் ?

பொங்கும் அன்பின் அழுத்தமான குரல் ?

 

திருவள்ளுவர் யாருக்கு உரியவர் ?

பிறப்பொக்கும் யாவர்க்கும் உரியவர் .

 

திருவள்ளுவரை யார் உணர்வர் ?

மெய்ப்பொருள் காணும் அறிவுடையோர்.

 

திருவள்ளுவர் எந்த நிறம் ?

மானுடம் எந்த நிறம் அந்த நிறம் .

 

சுபொஅ.

24/05/2024.

 


நிர்வாணத்தின் குரல்கள் : ஆத்மாவின் துடிப்பு

Posted by அகத்தீ Labels:

 



 

நிர்வாணத்தின் குரல்கள்  :  ஆத்மாவின் துடிப்பு

 

சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சதக் ஹசன் மண்டோவின் ஒர் சிறுகதையை  சிற்றிதழ் ஒன்றில் வாசித்தேன் . பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைக் குறித்தது . வாசித்தபின் அதிர்ந்தேன். அவரைத் தேடத் தொடங்கினேன் . பின்னர் தோழர் ராமானுஜம் மொழியாக்கம் செய்த சதக் ஹசன் மண்டோவின் இரு சிறுகதைத் தொகுப்புகளை வாசித்தேன் . ராமனுஜத்தோடு நீண்ட நேரம் அதுகுறித்து பேசிக்கொண்டிருந்ததும் , நூல் அறிமுகம் எழுதியதும் நினைவில் உள்ளன . ஆபாச எழுத்தாளர் என மாண்ட்டோ  மீது ஓர் அவச்சொல் உண்டென்றும் ; வழக்குகள் உண்டென்றும் அறிந்தேன். அவர் பத்திரிகையாளர் , மானுட அன்பில் திழைத்தவர் என்பதே உண்மை.

 

எதிர் வெளியீட்டில் வந்த இஸ்மத் சுக்காய் “வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை” சுயசரிதை வாசிக்கிற போது  ஓர் செய்தி .

 

 “சதக் ஹசன் மண்ட்டோவுக்கு எதிராகவும் இஸ்மத் சுக்தாய்க்கு எதிராகவும் ஒரே நேரத்தில் ஓர் வழக்கு நடந்தது .ஆபாசமாக கதை எழுதிவிட்டதாகவே அவ்வழக்கு . இருவரும் நிர்பந்தங்களுப் பணிந்து  மன்னிப்பு கேட்காமல் , அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்றது சாதாரணமானது அல்ல . இன்றும் வழிகாட்டும் செய்தி அது.”

 

ஆக , மண்ட்டோ என்னை தொடர்ந்து தொந்திரவு செய்து கொண்டே இருந்தார் ,இந்நிலையில் உதயசங்கர் மொழியாக்கத்தில் வந்த இந்நூல் குறித்து அறிந்ததும் , உடனே தொடர்பு கொண்டு கேட்டுப்பெற்றேன்.

 

மானுட நேயம் ,மானுட அன்பு என்பது நன்கு அறிந்த இருவருக்கிடையே ஆன உணர்ச்சி ததும்பல் அல்ல. மாறாக முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிலும் வாழ்வில் கடையனுக்கும் கடையனாய் இருப்போரிடம் ,பிரதிபலன் எதிர்பாராது செலுத்துகிற பேரன்பே ஆகும் . சதக் ஹசன் மண்டோ எழுத்து நெடுக இந்த பேரன்பு பெருமழையாய் பொழிந்து கொண்டே இருக்கிறது. அவர் சந்தேகத்துக்கு இடமின்றி ஓர் முற்போக்கு எழுத்தாளரே!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது மதவெறி உச்சத்தில் பித்தேறி நடந்த கொடூர கலவரத்தின் , அழுகுரலின் நேர்முக சாட்சி மண்ட்டோ . தன் வாழ்நாள் முழுவதும் அந்த ரணத்தை சுமந்து திரிந்தவர் .ஆனால் ஒரு போதும் மதவெறியின் குரலுக்கு செவி சாய்க்காதவர் . அவர் எழுத்து நெடுகிலும் முகாரி ராகமே நிரம்பி வழிவதின் ரகசியம் இதுவே.

 

 “ அவரைச் சதாகாலமும் போலியான மனிதசமூகம் அணிந்திருக்கும் நாகரிகமான ஆடைகளுக்குப் பின்னாலிருக்கும் அழுகிய புண்களில் வடிந்து கொண்டிருக்கும் சீழ் தொந்திரவு செய்து கொண்டே யிருந்திருக்கிறது.” ஆம் அதுதான் கலகக்குரல் ஆனது .கலைப்படைப்பும் ஆனது.

 

இந்நூலில் இடம் பெற்றுள்ள கதைகளுக்கு போகும் முன்பு சதக் ஹசன் மண்டோ குறித்து உதயசங்கர் எழுதியுள்ள அறிமுக உரை,  “ மானுட மனசாட்சியின் உரத்த குரலை “ கண்டிப்பாக வாசியுங்கள் .

 

 “பிஸ்மில்லா” என்கிற முதல் கதை கலவரத்தின் போது கைவிடப்பட்ட ஒரு இந்துப் பெண் . ஜாகீர்  என்பவரால்  பிஸ்மில்லா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவள் பற்றிய கதை .இச்செய்தியே கடைசி பத்தியில்தான் தெரியும் . ஜாகீரின் மனைவி என்றே கருதி பழகத் தொடங்கி ,அவளின் சோகமான பெரிய கண்களால் ஈர்க்கப்பட்டு காதல் வயப்படும் சையத் ஓர் சினிமா தயாரிப்பாளன் . அறிந்த கதையைவிட அறியாத கதை ஒவ்வொருவரிடமும் இருக்கத்தானே செய்யும் .

 

அமங்கலி சாரதாவின்  சோகத்தைப் பிழியும்  “ஆறுதல் “கதை , குடி போதையில் நண்பர் அஸ்கர் என்ன செய்திருப்பான்  ? ஆறுதல் சொல்லப் போனவன் உளவியல் . மிக நுட்பமான உணர்ச்சிப் பிழியல் .

 

லாஜோவின் அம்மாவும் பாலியல் தொழிலாளியுமான சந்தோ சன்யாரியின் மனவோட்டத்தை ஓர் எழுத்தாளனால் இதைவிட துல்லியமாக படம்பிடிக்க முடியுமா எனக் கேட்கும் “ மெழுகுவர்த்தியின் கண்ணீர்”.

 

 “நிர்வாணக் குரல்கள்” இந்த கதையைப் படித்த போது என்னுள் ஒரு பழைய நிகழ்வுகள் நிழலாடின .கலைஞரை நள்ளிரவு அவர் படுக்கையறையில் புகுந்து கைது செய்த போது ;அதற்கு எதிராய் மனித உரிமைக் குரல்கள் உரக்க எழுந்தன . நானும் தீக்கதிரில் கண்டித்து எழுதினேன் . இது மனித உரிமை மீறல் வண்மையாகக்  கண்டிக்கிறோம் .மிகச்சரி .கண்டித்தாக வேண்டும் .

 

அதே வேளை  இடபிள்யூஎஸ்  [EWS]என்கிற வருவாய் மிகக் குறைந்த பிரிவினருக்காக வீட்டுவசதி வாரியம் ஒதுக்கும் வீடுகளை எண்ணிப் பாருங்கள் . ஒரு மூலையில் கழிப்பறை  ,ஒரு குட்டி சுவர் மறைப்பில் அடுக்களை , இரண்டு பேர் படுக்கவும் போதாத அறையில் கணவன் மனைவி ,அம்மா ,வயதுக்கு வந்த பெண் ,மகன் என ஐந்து பேர் . அவர்களுக்கு பிரைவேசி என்பது எங்கு ? யாது ? எந்த மனித உரிமை ஆர்வலரேனும் அதை எப்போதேனும் பேசியது உண்டா ?

 

இன்குலாப் எழுதிய பீட்டர் சாலை பெரிய சாலை எனும் கவிதையில் கோணிப்பை மறைப்பு குடியிருப்பு பற்றி   வரும் .  மனிதம் பொங்கும் கவிதை அது .

 

இக்கதையில் கோணிப்பை மறைப்பில் தாம்பத்தியம் நடத்தும் வாழ்க்கையின்  வலியும் , மரத்துப்போன வாழ்வும் ,இதனை சகிக்க முடியாமல்  மனப்பிறழ்வாகும் மனிதனும் ; வாசிக்கும் போதே நெஞ்சு வலிக்கிறது . இக்கதையை வாசித்தபின் மேலும் தொடர முடியாமல் ஒரு நாள் புத்தகத்தையே மூடிவைத்துவிட்டேன். கொஞ்சம் ஈரமனதுள்ளோர் இக்கதையை வாசித்து உணர்ச்சி வசப்படாமல் இருக்கவே முடியாது .

 

 “ உன்னால் எல்லா விளக்குகளையும் அணைக்க முடியுமா ?” பாலியல் தொழிலாளி கங்குபாயின் கேள்வியின் உக்கிரம் தகிக்கும் “ தோற்றுக் கொண்டேயிருப்பவன்” கதை .

 

வயதுக் கோளாறு , உடலின் பாலியல் உந்துதல்  இவற்றால் ஓர் பாலியல் தொழிலாளியைத் தேடிப்போகும் ஜாவீத் அவள் வீட்டுக்குள் நுழைய முடியாமல் மனப்போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறான் . இந்த வதையை “கோழை” என்கிற கதை மிகவும் நுட்பமாகப் பேசுகிறது .”ஜாவீத். நீ மிகப்பெரிய பாவத்திலிருந்து காப்பாற்றப் பட்டிருக்கிறாய்.நீ கடவுளுக்கு நன்றியோடு இருக்க வேண்டும்.”என முடியும்.

 

ஓர் மூடநம்பிக்கை சார்ந்த நையாண்டி கதை “ ஷாடோலின் எலி.”,  யாசித் என்பவன் முகமதிய வரலாற்றில் பழிவாங்கும் எதிர்மறை கதாபாத்திரம் . இந்த பெயரில் அமைந்த கதை இந்தியா பாகிஸ்தான் பகைமை நீறுபூத்த நெருப்பாய் தொடர்வதை காட்சிப் படுத்துகிறது .பழி வாங்கல் என்பது முடிவற்ற தொடர்கதை என உணர்த்தும் காத்திரமான கதை யாசித் .

 

“ கேள்விக்குறியான கெளரவம்” எனும் கதை மம்மது பாய் எனும் தாதாவின் மறுபக்கத்தின் ஈரத்தையும்  ,கெளரவமும் படும்பாட்டையும்  காட்சிப் படுத்துகிறது . திரைப்பட பிரபலம் மீது ஏற்படும் ஈர்ப்பும் பைத்தியம் பிடித்த மனோபாவதையும் பகடி செய்யும் “ நூர்ஜகன்”.என ஒவ்வொரு கதையும் நம் வாழ்வில் புதைந்து கிடக்கும் பக்கங்களைப் புரட்டுகிறது .

 

 “நிர்வாணத்தின் குரல்கள்” என்பது நூலின் பெயராக இருந்தாலும் இது ஆபாசத்தின் குரல் அல்ல ; ஆத்மாவின் துடிப்பு . இந்நூலில்  பத்து  தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நன்கு  உயிரோட்டத்தோடு மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார் உதயசங்கர் .அக்கதைகள் நம் இதயத்தோடு உரையாடுகின்றன .

 

மாண்டோ கதைகளை வாசிக்கும் போது நம் இதயம் அழும் .துடிக்கும் . அதே உணர்வை மண்ட்டோவைப் போல் நம்மால் அடுத்தவருக்கு கடத்திவிட முடியாது .நானும் அவற்றை இங்கே சொல்வதில் தோற்றுத்தான் போனேன். நாம் அந்தக் கதையைச் சொல்லலாம் .உணர்ச்சியை சொல்ல முடியாது .ஒரே தீர்வு ஒவ்வொருவரும் இக்கதைகளைப் படித்து உணர்வதுதான்.படியுங்கள் !

 

நிர்வாணக் குரல்கள், ஆசிரியர் : சதக் ஹசன் மண்டோ , தமிழில் : உதயசங்கர் , வெளியீடு : நூல்வனம் ,M22 ஆறாவது அவென்யூ ,அழகாபுரி நகர் , ராமாவரம் , சென்னை- 600 089. E mail : noolvanampublisher@gmail.com பக்கங்கள் : 144  விலை : ரூ.220/

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24.05/2024.

 

 

 

 


வீசுகிற குப்பை

Posted by அகத்தீ Labels:

 



வீசுகிற குப்பை 


என் மகள் வழிப் பேரனும் பேத்தியும் கனடாவிலிருந்து வந்தனர் .எம்மோடு சில நாட்கள் தங்கினர் . உரையாடல் நெடுக கனடாவுக்கும் இந்தியாவுக்குமான ஒப்பீடாகப் பெரும்பாலும் கழிந்தது .எல்லாவற்றையும் எழுதவும் இயலாது .தேவையும் இல்லை .

 

என் பேத்தி சொன்னாள் , “ தாத்தா ! இங்கு தெருவெல்லாம் குப்பை குவிஞ்சு கிடக்கு , அங்க யாரும் ரோட்டில குப்பையை வீசமாட்டாங்க …”

 

என் பேரன் சொன்னான் ,” தாத்தா , நம்ம நாட்டில டிராபிக் சென்ஸ்சே கிடையாது…” இதனை என் மருமனும் வழிமொழிந்தார் .

 

இதில் குப்பையைப் பற்றி மட்டும் இப்போது  இங்கு பேசுவோம் .

 

நான் அண்மையில் திருச்செந்தூர் போயிருந்தேன் . கோயிலை ஒட்டிய கடற்கரையைப் பகுதியை இவ்வளவு குப்பையாக வைத்திருக்க முடியும் என்பதில் சாதனை படைத்திருக்கிறது அவ்வூர் . நகராட்சி .அறநிலையத்துறை என்ன செய்கிறது என்கிற பெருங்கேள்வி ஒரு பக்கம் எழுகிறது .

 

நிர்வாகத்தின் தோல்வி ஒரு புறம் . மறுபுறம் நம் மக்களின் மனோபாவம் இன்னும் குப்பையாக இருக்கிறது என்பது வெளிப்படை .பக்தி ஆன்மீகம் என வேஷம் போட்டாலும் சாப்பிட்ட குப்பைகளை, நெகிழிக் குப்பைகளை ,தண்ணீர் போத்தல்களை , மதுபுட்டிகளை இன்னபிறவற்றை வீசி அடிப்பதில் நம்மவரை அடிச்சிக்க யாரும் இல்லை .

 

பக்தியும் ஆனமீகமும் புத்தியையும் சுத்தத்தையும் கொடுக்கவே இல்லை . பொது புத்தியில் இன்னும் குப்பை அள்ள ஒரு சாதி என்கிற சாதி மமதையும், வீட்டில் குப்பை பெருக்க பெண் என்கிற ஆணாதிக்க மமதையும் ஆட்டுவிக்கிறதே ? எப்படி போதிப்பது ?

 

அதே திருச்செந்தூர் அருகே மணப்பாடு மீனவர் கிராமம் பார்த்தோம் பெருமளவு தூய்மை பேணப்பட்டு இருந்தது . ஏன் அந்த ஞானம் திருச்செந்தூரில் இல்லை .கோயிலுக்குள்ளேயும் வெளியேயும்கூட தூயமை இல்லையே . உழவாரப் பணி எல்லாம் நடக்குதா என்ன ? பக்தி மூடத்தனமானதுதானே ! தூய்மைக்கு பகுத்தறிவுக்கும் பொதுபுத்திக்கும் அங்கு என்ன வேலை ?

 

அடுக்ககங்களின் வலி இன்னொரு வகை . நான்கு மாடி ஐந்து மாடி இப்போது சர்வசாதாரணம் . மேலே இருந்து குப்பையை வீசுவது .பக்கத்து காலிமனையை குப்பை மேடாக்குவது என அட்டூழியம் தொடர்கிறது .அங்கு குப்பை சேர்ந்தால் தன் வீடும் சேர்ந்துதானே நாறும் என்கிற பொது புத்தியில் உறைப்பதே இல்லை . பெங்களூரின் நடைபயிற்சியின் போது எனக்கு வரும் கோபம் இது .

 

குப்பை பையை அருகில் போய் குப்பைத் தொட்டியில் போடாமல் போகிற போக்கில் வீசுவது ; அதிலும் டூ வீலர் காரில் போனபடியே வீசுவது எவ்வளவு பொறுப்பற்றதனம்?  அவர்கள் வீசுகிற குப்பை பெரும்பாலும் குப்பைத் தொட்டிக்குள் விழாது ; சுற்றிலும் சிதறித்தான் கொட்டும்.

 

நானும் என் இணையரும் ஒரு முறை திண்டுகல்லுக்கு அதிகாலை போயிருந்தோம் .ரயிலை விட்டு இறங்கி ஆட்டோவில் பயணம் செய்யும் போது பார்த்தோம்  ; வீட்டினுள் நின்ற படியே கோவில் வாசலில் தேங்காயை உடைத்து சிதற விடுவது போல் தெருவில் குப்பையை சிதறு விடும் கொடுமையை கண்டு நொந்தோம்.

 

மக்கும் குப்பை எது மக்கா குப்பை எது என்கிற ஞானமும் இல்லை .ரயில் நிலையங்களில் எல்லாவற்றையும் எல்லாவற்றிலும் வீசும் புத்திசாலித்தனத்தை என்னென்பது ?

 

குப்பையை அகற்றும் தூயமைப் பணியாளர்கள் , நம் சுத்தத்தைப் பேணும் போர்வீரர்கள் அல்லவா ? அவர்களை மனிதர்களாக மதித்தால் இப்படி எல்லாம் செய்வோமா ?

 

ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் !

 

சுபொஅ.

21/05/24.

 

 


புதிய தலைமுறையினர் தேடித்தேடி கற்க…

Posted by அகத்தீ Labels:

 





 “நெடுநாள் களப்போராளியாய் இருந்து அனுபவத் தழும்பேறிய எம் அன்புத் தோழர் வீ.பழனி ” காரல் மார்க்ஸ் சொற்சித்திரம்” எனும் ஓர் எளிய நூலை ஆரம்பநிலை மாணவர்களுக்காய் எழுதித் தந்திருக்கிறார் . மார்க்சியம் எனும் மகாசமுத்திரத்தை  “இதோ பார்!” என விரல் நீட்டி குழந்தைக்கு காட்டுவது போல் காட்டி இருக்கிறார் . அந்தக் கடலுக்குள் குதித்து நீச்சலடிக்கும் ஆர்வத்தை ஊட்டி இருக்கிறார் …..”


 புதிய தலைமுறையினர் தேடித்தேடி கற்க…

 

[ நூலுக்கு வழங்கிய அணிந்துரை ]

 

 “மார்க்சியம் தோற்றுவிட்டது ,காலாவதி ஆகிவிட்டது” என முதலாளித்துவ உலகம் 24 x 7 மணி நேரமும் அரற்றிக்கொண்டே இருக்கிறது . கடுமையான விமர்சனங்களை பரப்பிக்கொண்டே இருக்கிறது . ஆயின் , நெருக்கடியில் இருந்து விடுதலைபெற உலகம் மார்க்ஸை நோக்கியே திரும்பிக் கொண்டிருக்கிறது . ஏனெனில் மார்க்சியம் வறட்டுச் சூத்திரம் அல்ல வாழ்வின் வழிகாட்டி ; சமூக அறிவியல் ; மானுட விடுதலையின் திறவுகோல் .

 

மார்க்ஸ் குறித்தும் மார்க்சியம் குறித்தும் தினசரி புதுப்புது நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன .ஏனெனில் மார்க்சியம் ஒரு போதும் திகட்டாத அமுதம் ; இன்னொரு வகையில் சொல்வதானால் வற்றா அறிவுச் சுனை ,இறைக்க இறைக்க புதிது புதிதாய் ஊறிக்கொண்டே இருக்கும். அப்படி வந்து குவியும் நூல்கள் பல திறத்தன ; ஆரம்ப நிலை மாணவர் தொடங்கி ஆராய்ச்சி நிலை வரை பலவகைப்பட்டன. தேவை முடியவில்லை . பெருகிக்கொண்டே இருக்கின்றது .

 

நெடுநாள் களப்போராளியாய் இருந்து அனுபவத் தழும்பேறிய எம் அன்புத் தோழர் வீ.பழனி ” காரல் மார்க்ஸ் சொற்சித்திரம்” எனும் ஓர் எளிய நூலை ஆரம்பநிலை மாணவர்களுக்காய் எழுதித் தந்திருக்கிறார் . மார்க்சியம் எனும் மகாசமுத்திரத்தை  “இதோ பார்!” என விரல் நீட்டி குழந்தைக்கு காட்டுவது போல் காட்டி இருக்கிறார் . அந்தக் கடலுக்குள் குதித்து நீச்சலடிக்கும் ஆர்வத்தை ஊட்டி இருக்கிறார் .

 

ஐந்து பகுதிகளாக 14 அத்தியாயங்கள் .80 பக்கங்கள் . சின்ன சின்ன பத்திகளில் செய்திகளைப் பொதிந்து தந்திருக்கிறார் .

 

‘புதுயுகத்தின் வழிகாட்டி’ எனும்  பகுதியில் மார்க்சின் அருமை பெருமைகளை சிறப்புகளை இன்றியமையாமைகளை எடுத்துரைக்கிறார் .வரலாற்று பின்புலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சுருங்க பட்டியலிடுகிறார் .

 

மார்கஸ் திடீரென ஞானம் பெற்ற ரிஷி அல்ல ; அவருக்கு பார்வதியோ யேகோவோ  வந்து ஞானப்பால் புகட்டவில்லை . எப்படி தன் முன் வாழ்ந்த தத்துவ அறிஞர்களை ,சமகால ஞானிகளை வாசித்து அவர்கள் சொன்னவற்றை விவாதித்து அதிலுள்ள பிழைகளை பட்டியலிட்டு சரியானவற்றை உட்கிரகித்து வளர்ந்தவர் மார்க்ஸ் .

 

ஏன் கம்யூனிஸம் என்ற சொல்கூட மார்க்சின் கண்டுபிடிப்பல்ல 1777ல் விக்டர் ஹுவே எழுதிய ‘ தத்துவரீதியான சமூகத்திற்கான திட்டம்” என்ற நூலில் பயன்படுத்தியதே . ஆனால் அச்சொல்லுக்கு ஆழந்த பொருளும் ஈர்ப்பும் உருவாக்கியவர் மார்கஸ் . இதை இந்நூலில் பழனி சுட்டுகிறார் . மார்க்சியம் என்ற சொல்லாடல் கூட மார்க்ஸாலோ எங்கெல்ஸாலோ முதலில் பயன் படுத்தவில்லை . பிறரே அதற்குச் சூட்டினர் .

 

இரண்டாம் மார்க்ஸ் எழுதிய நூல்கள் ஒவ்வொன்று குறித்தும் சிறு குறிப்பு தருகிறார் . ஒவ்வொரு நூலும் எச்சூழலில் ஏன் எழுதப்பட்டது என்பது வெறும் வரலாற்றுச் செய்தி அல்ல ; அதுவே ஓர் அரசியல் பாடம் . தோழர் பழனி அதற்கான பாடக்குறிப்பை இந்த பகுதியில் தந்துள்ளார் .

 

கூலி என்றால் என்ன ? லாபம் என்பது யாது ? என்பது சாதாரணக் கேள்வி அல்ல .அடிப்படைக் கேள்வி . அரசியல் பொருளாதாரத்தின் அச்சாணி . 1865 ல் மார்கஸ் எழுதிய ‘கூலி விலை லாபம் “ எனும் சிந்தனைப் பொறிதான் ’மூலதனம்’ எனும் பெரும் சித்திரத்தின் திறவுகோல். இவற்றை மூன்றாம் பகுதியில் சுட்டுகிறார் .

 

உயிரின் தோற்றம் ,மனித சமூக வரலாறு ,வர்க்கப் போராட்டம் , இயக்க இயல் பொருள் முதல் வாதம் , வரலாற்றியல் பொருள் முதல் வாதம் ,புவிப்பாதுகாப்பு ,திருத்தல்வாதம் ,சோஷலிசம் ,புரட்சி  போன்ற கருத்து பேழைகளை அறிமுகம் செய்கிறது நான்காவது பகுதி . மார்க்ஸை வாசித்து ஞானம் பெற வேண்டும் , சமூக மாற்றத்துக்கான போரில் ஆயுதம் ஆக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இப்பகுதி .

 

’ ஒவ்வொருவரும் எல்லோருக்காகவும் ,எல்லோரும் ஒவ்வொருவருக்காகவும் “ என தத்துவம் தந்த மார்க்சின் வாழ்க்கை குறிப்புகளும் ,எங்கெல்ஸ் ,லெனின் ,லிப்னெட் போன்றோரின் மதிப்பீடுகளையும் , சிறந்த மேற்கோள்களையும் உள்ளடக்கியது ‘வாழ்க்கைச் சரித்திரம்’ என்ற நிறைவுப் பகுதி .

 

அகராதிக் குறிப்புகள் போல் செய்திகளைத் தொகுத்து மார்க்ஸை புதிய தலைமுறையினர் தேடித்தேடி கற்க அறிமுகம் செய்துள்ளது இந்நூல் .

 

இந்நூலை எழுதிய எம் தோழர் வீ.பழனிக்கு வாழ்த்துகள் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

20/05/2024.