ஆன்மிகம் வேறு அறிவியல் வேறு
சு.பொ.அகத்தியலிங்கம்
30.7.2014 தீக்கதிர் வண்ணப் பக்கத்தில் “அறிவியல் அரிதாரத்துடன் ஒரு புராணப் புரட்டு” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை படித்திருப்பீர்கள். இதனை வாசித்த பொழுது என்னுள் எதிரொலித்த சில செய்திகளை பரிமாறிக் கொள்கிறேன்.
முதலாவதாக நெடுங்காலம் தீக்கதிர் ஆசிரியர் குழுவோடு இணைந்து பணியாற்றிய சியாமளம் என்கிற காஸ்யபன் நாகபுரியிலிருந்து முகநூலில் பதிந்த தகவல் வருமாறு:
டாக்டர் அப்துல் கலாம் மதுரை வந்திருந்தார்! அப்போது அவர் ஏவுகணை பற்றிய தீவிர ஆராய்ச்சியில் இருந்தார்! அவரை சந்திக்க தீக்கதிர் பத்திரிகை நிருபர் நாராயணன் சென்றிருந்தார்! அவரிடம் புஷ்பக விமானம் பற்றி கேட்டார்!“அன்றைய புராண காலத்தில் அறிவியல் அந்த அளவுக்கு வளர்ந்திருக்க வாய்ப்பு இல்லை! ஆனால் பறவைகள் போல தானும்பறக்க வேண்டுமென்று ஒரு மனிதன் சிந்தித்திருக்கிறான்! அதனைக் கற்பனையாக எழுதி பார்த்திருக்கிறான்!பல நூற்றாண்டுகள் மனிதன் கனவு கண்டிருக்கிறான்! அதன் முடிவில் ரைட் சகோதரர்கள் அதனைவென்றெடுத்துள்ளார்கள்”
அதுமட்டுமல்ல கலாமின் அரசியலோடு நமக்கு மாறுபாடு இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் பதவி ஏற்க உகந்தநாள் எதுவெனக் கேட்ட போது சூரியனைப் பூமி சுற்றுகிறது எனத் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் நல்ல நிமிடமே. தனக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் மூடநம்பிக்கை இல்லை. நல்ல நேரம், கெட்ட நேரம் என எதுவும் இல்லை என்றார். மேலும் வானவியல் அறிவியல் தேவை.சோதிட நம்பிக்கை தனக்கு இல்லை என்றார்.
ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிடங்கள், ஒரு நிமிடத்துக்கு 60 நொடிகள் என்று நிர்ணயித்தவர்கள் பாபிலோனியர்கள் என்பது அதிகத் தகவல். நாம் இன்று பயன்படுத்தும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண்கள் அரேபியர் கண்டுபிடிப்பு. இதில் நம்முடைய பங்களிப்பாக “0” சேர்ந்தபின் கணக்கு அறிவியலில் பெரும் புரட்சியே உருவானது என்பது வரலாறு. ஆக, வரலாற்றுரீதியாக இந்தியாவும் அரபும் பல அறிவியல் துறையில் முன்னின்றது உண்மை. ஆரியபட்டரும் வராகமித்திரரும் வானவியலில் வியத்தகு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியது உண்மையே! ஆயினும் சோதிடமாக அதனை மதவாதிகள் குறுக்கியதால் நாம் பின்னடைந்தோம். நம்மிடமிருந்து பெற்ற அறிவினை அறிவியல் ரீதியாக முன்னெடுத்துச் சென்றதால் மேலைநாட்டினர் முன்னேறினர்.
அன்றைக்கு கட்டிய குதுப்மினாரும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கோபுரமும், தஞ்சை கல்லணையும் இன்றுவரை நம் கட்டிடக் கலைக்கு சான்று பகரும். ஆயினும் இந்த தொழில்நுட்பங்கள் அடுத்த தலைமுறைக்கு கைமாற்றப்படாமல் சாதி சிமிழுக்குள்ளும் மதக் கூண்டுக்குள்ளும் அடைபட்டு ரகசியமாக்கப்பட்டதால் நாம் இழந்த அறிவுச் செல்வம் அநேகம்!
இத்துடன் ஒரு அனுபவம்: நான் இளைஞனாக இருந்த பொழுது என் நண்பர்கள் சிலர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றனர். அவர்கள் முற்போக்கான குறும்பு மாணவர்கள். வகுப்பில் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி பாடம் நடத்திய போது அவரிடம் இம்மாணவர்கள் ஒரு கேள்வி எழுப்பினர். “ மனம் மற்றும் ஆன்மா உடலில் எங்கே இருக்கிறது?” பொதுவாக யாரை நோக்கி இக்கேள்வி கேட்பினும் இதயத்தை நோக்கியே சுட்டுவிரல் நீளும். அவரோ மருத்துவ விஞ்ஞானி மறுபுறம் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் ஐதீக மரபில் வந்தவர். கேள்வி நுட்பமானது.
அவர் சொன்னார், “ மருத்துவ அறிவியலின்படி மூளையின் உணர்ச்சிப் பிரதேசமே அது. மனது என்பது இதயம் அருகே இல்லை. அது வெறும் எண்ணமே. ஆன்மாவுக்கு அறிவியல் நிரூபணம் கிடையாது. இதற்கு மேல் இங்கு நான் கூற விரும்பவில்லை. நேரில் கேளுங்கள் என்றார். அத்துடன் நில்லாமல் வகுப்பு முடிந்த பின்னர் மேலும் ஒன்று சொல்வேன் என முடித்துவிட்டார்.
வகுப்பு முடிந்தது. மாணவர்கள் சுற்றிச் சூழ்ந்தனர். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். “வகுப்பறையில் நான் மருத்துவ விஞ்ஞானி. அங்கே நான் மருத்துவ விஞ்ஞானத்துக்கு எதிராகப் பேசக்கூடாது. அதுதான் முறை. இப்போது நான் தனி மனிதன். நான் வைதீகக் குடும்பத்தில் வந்தவன். இந்து மத நம்பிக்கையுள்ளவன். ஆன்மா உள்ளது. இதயத்தைச் சுட்டிக் காட்டி இங்கே உள்ளது. இது என் தனிப்பட்ட நம்பிக்கை. இதற்கும் நான் பாடம் நடத்தும் மருத்துவ விஞ்ஞானத்துக்கும் சம்பந்தம் இல்லை.அது வேறு. இது வேறு” என்றார்.
அது வேறு இது வேறு என்கிறபோது பிரச்சனை இல்லை. மதநம்பிக்கை தனிமனித நம்பிக்கை சார்ந்தது. புராணத்தையும் அதன் புரட்டுகளிலும் மூழ்குவது தனிமனித விருப்பம். அதனை யாரும் கேட்கமுடியாது. ஆனால் அதற்கு அறிவியல் முலாம் பூசி விற்பதுதான் பெரும் தவறு. ஆபத்தான பாதை.இந்தியாவும் அரபும் கீழைதேசங்களும் மதக் கூண்டுக்குள் சிக்கியும் இந்தியா சாதிச் சிமிழுக்குள் முடங்கியும் தனது அளப்பரிய சிந்தனைச் செல்வத்தை இழந்தது போதும். இனியும் அது தொடரக் கூடாது. மத நம்பிக்கை, ஆன்மீகம் தனிமனித நம்பிக்கை சார்ந்ததாக மட்டும் இருக்கட்டும்! அறிவியலை அதன் போக்கில் விடுங்கள்! ஆன்மிகத்துக்கு அறிவியல் முலாம் பூசி மயக்குவது பேரபத்தாகும்.
நன்றி : தீக்கதிர்
0 comments :
Post a Comment