சும்மா கிடந்த சொல்லை எடுத்து ( 15)

Posted by அகத்தீ Labels:









சும்மா கிடந்த சொல்லை எடுத்து ( 15)


நரியும் கழுகும் உலவும் போது...



சு.பொ.அகத்தியலிங்கம்

“ கடந்த வருடம் மட்டும் / நாம் / இருபத்தி மூன்று / கருத்தரங்கங்க ளும் / பதினொரு /பட்டறைகளும் / நடத்தினோம். / நாற்பத்தி ஏழு /புள்ளி இரண்டு / சுற்றாய்வுகள் / மேற்கொண் டோம் / அறுபத்தி எட்டு / புள்ளி ஐந்து / ஆராய்ச்சியாளர்களை / நியமித்தோம் . / பதின்மூன்று /அந்நிய வல்லுநர்களை / வரவழைத்தோம் . / பதினெட்டு / சிறப்பு கமிஷன்களை / நியமித்தோம் / பதினாறு / ஆய்வறிக் கைகளை / சமர்ப்பித்தோம் . / முந் நூற்றி / நாற்பத்தினாலு / செய்தி அறிக் கைகளை / வெளியிட்டோம்.... / இப் போது / சமுதாய மறுசீரமைப்பில் / நாங்கள் / தீவிரமாக இல்லையென்று / சொல்வது யார் ? / உள்ளோருக்கும் இல்லோருக்கும் / இடையே உள்ள / இ.. டை.. வெ.. ளி.. யை / ஒழிக்க / நாங்கள் துணியவில்லை / என்று கூறுவது எவன் ? ”

1992ம் ஆண்டு வெளியான “தலைப்புச் செய்திகள் : மூன்றாம் உலகக் குரல் ”என்ற கவிதைத் தொகுப் பில் இடம் பெற்ற - மலேசியக் கவிஞன் சிசில் ராஜேந்திரன் எழுதிய கவிதையையே மேலே படித்தோம் . “ இப்பொழுது தீவிரமாக..” என்பது கவிதைக்கு தலைப்பு .இப்போது இதற்கு மேல் என்னத்தைச் சொல்ல.

“கல்லைத்தான் மண்ணைத்தான் / காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா? / இல்லைத்தான் பொன்னைத் தான் / எனக்குத்தான் கொடுத்துத் தான் இரட்சித்தானா? / அல்லைத் தான் சொல்லித்தான் /ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும் / பல் லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்/.புவியில்தான் பண்ணினானே!” இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய தனிப்பாடல் பிரம்மா! ( பதுமத்தான்) வறுமையோடு ஏன் என்னைப் படைத்தாய் எனக் கேட்கிற இத்தனிப் பாடல் காலம் கடந்தும் வழக்கொழியவில்லை. காரணம் வறுமை ஒழியவில்லை. நேற்றைய திரைப்படங்களும் சரி இன்றைய திரைப்படங்களும் சரி வறுமையைப் பேசியிருக்கின்றன . பாடி இருக்கின்றன . இனியும் பேசும். பாடும் .வறுமை ஒழியும் வரை கலை இலக்கியம் வறுமையை எழுதாமல் இருக்க இயலாது .

“வறுமையின் தத்துவம் / சமய வாதிகளுக்குப் / பிரசங்கத் தலைப்பு / குருவி ஜோசியக்காரனுக்கு / வயிற் றுப் பிழைப்பு / கலாசிருஷ்டியோடு / எழுதுபவனுக்கு /நிலாச்சோறு / கல்லூரி மாணவனுக்கு – வெறும் /பரீட்சைக் கேள்வி !” என்பார் தமி ழன்பன் .

நமது பட்டுக்கோட்டையின் காலம் பசியும் பஞ்சமும் தலைவிரித் தாடிய காலம் . கவிஞன் அதனைக் கண்டு சுருண்டு படுக்கவா முடியும் ? மக்கள் கவிஞனிடம் சமூகக் கோப மும் ஏழைகள்பால் பெரும் அக்கறை யும் பொங்கிவழிந்தது திரைப்படத் துக்கானது மட்டுமல்ல ; இதயத்தின் துடிப்பும் கூட.


“ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ” (1960) திரைப்படத்தில் ஒரு பாடல் .“ உலகத்திலே இந்த மரணத்தில் மட்டுமே / உயர்வும் தாழ்வும் இல்லை - இது / உருவமில்லா எவனோ ஒரு வன் / உண்டாக்கி வைத்த எல்லை” என தொகையறாவில் தொடங்கிய போது இது ஏதோ தத்துவ தரிசனம் போல் இருக்கிறதே என எண்ணத் தோன்றும். “ கலங்காதே கவலைப் படாதே / கவனித்துக் கேளடி தங்கமே / உறங்காதே பயந்துவிடாதே / உலகத்தைப் பாரடி தங்கமே !” என பல்லவியில் தொடர்ந்த போதும் அதே எண்ணம் தான் ; எனினும் கவனித்துக் கேள் , உலகத்தைப் பார் என ஏதோ பொடிவைத்துப் பாடுகி றானே என பாட்டைத் தொடர்ந்து கேட்டால் ஒவ்வொரு சரணமும் சவுக்கடியாக சுளீர் சுளீரென விழுகி றது .

“இன்பத்தைத் தேடித்தேடி / ஏழை நெஞ்சம் ஏங்குது / அன்பில் லார் வீட்டில் அது / ரொம்ப நாளாத் தூங்குது /எந்த சாமிக்கும் காது கேக்கலே / இல்லாதவனை எட்டிப் பார்க்கலே / வந்தாலும் போனாலும் / வாழ்ந்தாலும் கெட்டாலும் / ஏனென்று கேட்க ஆளேது ? ” சாதாரண மக்கள் அன்றாடம் அழுது புலம்பும் வரி களை அப்படியே திரைப்படத்தில் இலக்கியநயம் சொட்ட எழுதும் வல்லமை நம் பட்டுக்கோட்டைக்கு அன்றி வேறுயாருக்கு வரும் ?


இதனைத் தொடர்ந்து மேலும் சொல்லுவார் ,“ மலை பிளந்தோம் கல்லை உடைத்தோம் / மரம் பிளந்து வழிகள் அமைத்தோம் / வாடிக்கை யாய் உள்ளம் உடைந்தோம் / வாழ்க்கையெல்லாம் துன்பம் அடைந்தோம் / எல்லோரும் சேர்ந்து ஏமாத்தும்போது / முன்னேறும் பாதை ஏது ? ”. சரியான கேள்வி . விடாமல் கேட்பார் , “ வியர்வையிலே மேனிகரைந்து / வெயிலாலே அழகு கரைந்து / பசியாலே பலமும் குறைந்து/ பாடுபடும் முதுகு வளைந்து / தாங்காத துயரில் போராடும்போது / சந்தோஷ நாளும் ஏது ? ”. திரைப் படத்தின் தன்மைக்கு ஏற்ப வேதனை பொங்க இப்பாடலில் வெகுண்டு கேட்டவர் ; அதே ஆண்டு வெளிவந்த “ எல்லோரும் இந்நாட்டு மன்னர் ” படத்தில் நம்பிக்கையூட்டுவார் . அதைப் பார்ப்போம் .


“ஆ..விஷயம் ஒன்று சொல்லப் போறேன் / கேளடி கேளு – உண்மை / வெளியாகும் நேரம் வந்தது / கேளடி கேளு ” என உற்சாகமாய் அழைத்து ; “ ஓ.. நடந்தது எல்லாம் தேவையில்லை / தள்ளடி தள்ளு / நடக்கப் போற சங்க தியைத்தான் / சொல்லடி சொல்லு ” என்பார் .நம்பிக்கையோடு பீடிகை போட்டவர் தொடர்வார் , “ ஒ.. வறு மையில்லே வாட்டமில்லே / வயிற்றி லடிக்கும் கூட்டமில்லே / ”எவ்வளவு சுகமான கற்பனை . கற்பனை மேலும் விரியும். “ கொடுமையெல்லாம் மாறி வருது / கேளடி கேளு / குடிசையைத் தான் – இன்பம் / குடிசையைத்தான் நாடிவருது / கேளடி கேளு”


முந்தைய பாடலில் இன்பத்தைத் தேடித்தேடி ஏங்குவதையும் அது அன்பில்லாதவர் வீட்டில் தூங்கு வதையும் படம் பிடித்தவர் இங்கு குடிசையை இன்பம் தேடி வருவ தாகச் சொல்கிறாரே எப்படி ? அவருக்கும் வந்தது அந்த சந்தேகம் அதனால் தான் அடுத்தவரியில் பாடுவார் ; “ ஆ… நல்லவர் போல உலகம் மீது / நரியும் கழுகும் உலவும் போது / நம்மை இன்பம் நாடி வருமா? / சொல்லடி சொல்லு ” “ நிம்மதியா – உலகம் / நிம்மதியா வாழவிடுமா? / சொல்லடி சொல்லு” அடே அப்பா ! எவ்வளவு அழுத்தமாய் கேள்வியோடு சமூக யதார்த்தத்தைப் பதித்துச் செல்கிறார்.


அடுத்து அப்படியே விரக்தியில் தள்ளிவிட பட்டுக்கோட்டை சாதா ரண ஆளா , போராளி ஆயிற்றே! தொடர்கிறார் .. “ நடந்தது எல்லாந் தேவையில்லை / தள்ளடி தள்ளு – இனி / நடக்கப் போற சங்கதியைத் தான் / சொல்லடி சொல்லு ” என கைப்பிடித்து விடியல்பாதை காட்ட அழைக்கிறார் .

“ ஏமாத்தும் போர்வையிலே / ஏழைகளின் வேர்வையிலே / எக்கா ளம் போடுற கூட்டம் – நாட்டில் / எக்காளம் போடுற கூட்டம் /– மக்கள் / எதிர்த்துகிட்டா எடுக்க வேணும் ஓட்டம்” . மக்கள் எதிர்த்துப் போராடி இன்பத்தைக் குடிசைக்குக் கொண்டுவரவேண்டும் எனத் திரைபடத்துக்குள் நின்றுகொண்டு சொல்லுகிற துணிச்சலும் சாதுரி யமும் பட்டுக்கோட்டைக்கே உரி யது.

கவிஞர் தமிழ் ஒளி ஒரு கவிதையில் முத்தாய்ப்பாய் பாடுவான் :-

“ மாளிகையில் வாழ்ந்தவரை கீழே தள்ளு
மண்குடிசை தனில் வாழ்ந்த மனிதா ! உன்னை
ஏளனமாய் இதுவரையில் நடத்திவந்த
எதிரிகளைப் பணக்கார நரிக்கூட்டத்தை
தேளனைய முதலாளி திருடர் தம்மைச்
சிரங்கொய்து கர்ஜித்து முரசு கொட்டி
‘ ஆளவந்தோம் உலகத்தை ஏழை மக்கள்
அடிபணியோம்’ எனச்
சொல்லிக் கொடிஉ யர்த்து ! ”

கொடுமைதீர என்ன செய்ய வேண்டும் எனப் பட்டுக்கோட்டை சொன்னவற்றை மேலும் தொடர்ந்து பார்ப்போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 11 ஆகஸ்ட் 2014

0 comments :

Post a Comment