சும்மா கிடந்த சொல்லை எடுத்து –- 17
அவர் பாட்டு சொல்லும் ரகசியம்
சு.பொ.அகத்தியலிங்கம்
“சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!”
என அழகின் சிரிப்பை பாரதிதாசன் பட்டியலிடுவார் . கலப்பை சுமக்கும் உழவனையும் , நஞ்சை வயல்களையும் அதில் போற்றுவார் .
அதே கவிதையில்" நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! / நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை" என அழகினையும் நல்லழகு என்பார் .
அழகியல் கவிதையில் வசப்படுமா ? பாடலில் வசப்படுமா? நல்ல பட்டிமன்றத் தலைப்பு . இலக்கிய ஜாம்பவான்கள் கவி தையை வியந்து நயந்து உச்சி மோந்து கொண்டாடுவதுபோல் பாடல்களைக் கொண்டாடுவதில்லை . கவிதையில் கிடைக் கும் சுதந்திரமும் வெளியும் பாடல்களில் சாத்தியமில்லை என்று ஒரே போடாய் போட்டுவிடுவர் . ஆனால் மக்கள் நெஞ் சில் சிம்மாசனம் அமைத்து வீற்றிருப்பது பாடல்களே ! கவிதை கள் போய்ச் சேராத கடைக்கோடி குக்கிராமத்தையும் திரைப் படப்பாடல் எட்டிவிடுகிறது . அதன் வலிமையும் வீச்சும் அதுவே. பாடல்களே கலைகளின் மூத்தப் பிள்ளை. “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு / ஒரு கோலமயில் என் துணையிருப்பு / இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு / நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு” இப்பாடல் கண்ண தாசனைக் காட்டிடும் கண்ணாடி என்பர் ; முதல் இரு வரிகள் அவரின் ஒரு முகம் காட்டும் .
இசைப்பாடல்தான் அவர் உயிர்த் துடிப்பு . இன்றும் கண்ணதாசன் அவரது பாடல்களில்தான் வாழ் கிறார் என்பது என் கணிப்பு . அழகின் சிரிப்பு அவரது சிறப்பு . பட்டுக்கோட்டையோ புனைந்ததெல்லாம் பாடலே . அவனைப் “பாட்டுக்கோட்டை ” என்று அழைப்பது உயர்வு நவிற்சி அல்ல; உண்மை .ஆம்! பட்டுக்கோட்டை இயல்பில் ஒரு பாடகனே . நாட்டுப் புற மரபில் உதித்த பாடகன் . பாரதியையும் பாரதிதாசனையும் தன் குருவாய் கொண்டவன். ஒரு தத்துவத்தை வரித்துக் கொண்டவன் . அவன் பாடல்களில் கொஞ்சும் இசையமுதை - உவமை நயத்தை - உவமான அழகை - பூத்துக்குலுங்கும் அழகின் சிரிப்பை எழுத எழுத நீளும். விலங்குகள், பறவை கள் , இயற்கை இவற்றோடு பின்னிய அவனது கருத்தாழமும் கவித்துவமும் மிக்க பல பாடல்களைக் கடந்த பல வாரங்க ளாய்த் தொடர்ந்து பார்த்து வருகிறோம் .
மீண்டும் கூறியது கூறல் வேண்டாம் என்பதால் அவற்றை நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள் . வேறு சிலவற்றைப் பார்ப் போம் . “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” (1960) திரைப்படத்தில் ஒரு பாடல் .“ என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ / இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே ” நிலவோடு காதலியை ஒப்பிடுவது கவிஞர்கள் இயல்பே. ஆனால் நில வைக் காதலிக்கு உறவாக்கிய கற்பனையில் ரத்தபந்தம் பட்டுக்கோட்டையின் தனித்துவமோ ! “கன்னத்தில் காய மென்ன வெண்ணிலாவே - உன் / காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே” என்கிற போது நகக்குறி, பற்குறி என்கிற பழந்தமிழ் பாடல் மரபின் தொடர்ச்சியும்; மெல்லிய இதயத் துடிப்பையும் ஒருங்கே காணலாம் . “ மின்னும் இயற்கையெல்லாம் / உன்னழகைக் காட்டுதடி/ எண்ணமெனும் தேன்கூட்டில் / இன்பக் கனல் மூட்டுதடி ” இப்படி தேனெடுக்க நெருப்பு மூட்டுவர் . இங்கே காதல் நெருப்பு. அழகான கற்பனை .
இந்தத் தனிப்பாடலின் இறுதிவரிகளில் “ இல்லத்தில் நீ இருந்தால் / இருள்வர அஞ்சுதடி / மெல்லத் தமிழ் உனது / சொல்லில் வந்து கொஞ்சுதடி” என்பார். அடடா! அடடா !இன்னொரு தனிப்பாடல் . “ சின்னஇடை துவளச் செங்கை வளை குலுங்கத் / தென்றலொடு கூந்தல் சிலிர்த்து விளை யாட / மண்ணுக்கு மேனி வலியெடுக்கும் என்பது போல் / அன்னநடை போட்டு அழகு விழி அம்பு விட்டு” “தன்னைத் தாங்காத் தளிர்மேனி மீதிலொரு / சன்னஇழை மெல்லுடைதாங் கித் தனமிரண்டும் / முன்னே வழிகாட்ட முகத்தில் ஒளிமிதக்க / வண்ணக் கழுத்தில் மணிபுரள தோளசைய” - இளமை முறுக் கேறிய வர்ணிப்பைக் கொட்டித்தரும் இப்பா டல் திரைப்படத்தில் இடம் பெறாமல் போய் விட்டதே ! இப்பாடலின் கடைசி இருவரி பட்டுக்கோட்டை எங்கே சுற்றினாலும் தஞ்சாவூருக்கு வந்துவிடுவான் என்பதன் சாட்சியாகும், “தன்னந்தனியே தமிழ்நாட்டுச் சாலையிலே / செந்நெற் கதிர்போல் சிரம் வணங்கி வந்தாள் ” அழகான ஒரு பெண் தன்னந்தனியாய் பாதுகாப்புடன் தமிழ்நாட்டுச்சாலையில் வரும் நாளைக் காந்தி போல் கனவு கண்டது வியக்கவைக்கிறது .
இனிய கீதம் எப்போதும் பட்டுக்கோட்டையின் நாடிநரம்போடு பிணைந்திருந்தது போலும் , “கல்யாணப்பரிசு”(1959) படத்தில் பட்டுக்கோட்டையின் ஒவ்வொரு பாடலும் தேனமுது. ‘துள்ளாத மனமும் துள்ளும் / சொல்லாத கதைகள் சொல்லும் / இல்லாத ஆசையைக் கிள்ளும் / இன்பத் தேனையும் வெல்லும் – இசை / இன்பத் தேனையும் வெல்லும் ” இந்த பாட்டு வரிகள் இப்போது காற்றில் மிதந்து வந்தாலும் மனம் அதில் லயிக்கும் . அதில் தொடர்ந்து சொல்லுவார் , “ துன்பக்கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்” மெய்தானே உழைப்போடு பிறந்ததன்றோ பாட்டு . உழைப்பின் களைப்பை சிரமத்தைக் குறைக்க பாரம் சுமக்கையிலும் கடினமான உழைப்பில் ஈடுபடும்போதும் கூட்டாக பாடப் பிறந்ததே பாடல் .
ஜார்ஸ் தாம்சன் எழுதிய “ மனித சமூகத்தின் சாரம் ” எனும் நூலில் இதனைத் தெளிவாகக் காண லாம். உழைப்பின் வலியை உணர்ந்த பட்டுக்கோட்டை துன்பக் கடலைத் தாண்ட கீதத்தைத் தோணியாக்கியது வியப்பே அல்ல. கீதத்தின் பெருமைகளை அடுக்குவார் . “ அன்புக் குரலில் அமுதம் கலந்தே / அருந்தத் தருவது கீதம்”… “ எங்கும் சிதறும் எண்ணங்களை / இழுத்து வருவதும் கீதம் / இணைந்து மகிழ் வதும் கீதம் துயர் / இருளை மறைப்பதும் கீதம் ” பாட்டு நெஞ் சுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் வருடிவிடுவது போல் உசுப்பி விடுவது போல் உற்சாகம் தருவது போல் உத்வேகம் ஊட்டுவது போல் வேறொன்று உண்டாமோ ! இந்த கீதம் போல் காதலையும் இயற்கையான மனிதத் தேடலாக தேவையாக பட்டுக்கோட்டைப் பார்த்தார் . அதனால் தான் அந்தப் பாடலில் தொடர்ந்து எழுதும் போது சொல்வார் , “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் / தோகை விரித்தே வளர்ந்தி டும் / சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் / தாவி அணைத்தே மகிழ்ந்திடும்...” எவ்வளவு நயமான கற்பனை.
அதே திரைப்படத்தில் தீபாவளியை முன்வைத்து ‘உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி’ ‘கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி’ என இரு நிலைகளில் பாடிய இரு பாடல்களிலும் கற்பனை சிறகுவிரிக்கக் காணலாம் “சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பு / தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு” என ஒரு நிலையிலும் “ ஆசைக்கு அணைபோட்ட / அறிவான நங்கை ..பாசத்தின் சுமையோடு / பறந்து சென்றாளே” என மறு நிலையிலும் ..பட்டுக்கோட்டை வரிகளின் அற்புதம் இன்னும் பசுமையாய் இருக்கிறதே !சரி! சரி! பட்டுக்கோட்டை தன் பாடலை எங்கிருந்து எப்படிப் பெறுவார் ? இயற்கையோடு இயைந்து . ஆம்! .அதை அவரே சொல்லுகிறார் கேளுங்கள்! (ஆதாரம் : பா. வீரமணியின் நூல்)“உண்மையான அழகும் , மனங்கனிந்த அன்பும், செவி களுக்கு இனிமையான ஒலிகளும்தான் என் உள்ளத்தைக் கவர்ந்த காதற்துணைவிகளாகும் . நான் கவிதை எழுத ஆரம்பிக் கும் முன் பறவை இனங்களையும் , மிருக இனங்களையும், தாவர இனங்களையும் கண்டு ரசிப்பேன் .
விளைவற்ற தரிசு நிலங்களை எனக்குப் பிடிக்காது . அது போல் அன்பில்லாத முகங்களையும் அறிவில்லாத செயல்களையும் எனக்குப் பிடிக்காமற் போனதில் வியப்பில்லை என்று எண்ணுகிறேன்” “அழகியப் பூங்காவிலும் , பெருங்காடுகளிலும், வயல்வெளி களிலும் வாழும் பறவை இனங்களும் என் மனதைக் கவருவதுண்டு. அவை இரைதேடி வந்ததும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதைக் கண்டு மெய்மறந்து ரசிப்பேன் . அவைக் கொஞ்சிக் குலவிக் கத்தும் ஒலிகள் , நான் எந்த வாத்தியத்திலும் கேட்டறியாத இனிய கீதங்களாகும் . இவை தான் நான் அமைக்கும் கவிதைகளுக்கு மூலகாரணமாகும்.” கவிஞரின் இயற்கைமீதான காதலும் அளவற்ற அன்பும் அவரை எழுதத் தூண்டின . அவர் பாடலில் இரண்டறக் கலந்து நின்ற அன்புக்கும் ஓசை நயத்துக்கும் அழகிய கற்பனைக்கும் இந்தப் பார்வை ஊற்றுக்கண்ணாய் இருந்தன . நகரத்தில் இயந்திர வாழ்க்கையில் அரைபடும் கவிஞனுக்கு இந்தப் பேரனு பவம் கிட்டுமோ ? அவர் எழுதியதெல்லாம் பாடலே . ஆயினும் அவற்றையும் கவிதை என்றே கூறினார் . கவிதையின் பேரரசி தானே பாடல்.
கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் இயற்கையை ரசிப்பவர்கள் . போற்றுபவர்கள் . வியட்நாமின் மாபெரும் தலைவர் தோழர் ஹோ –சி-மின் எழுதிய கவிதைநெடுக இம்முத்திரையைக் காணலாம் . சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது அவர் எழுதிய கவிதை இதோ ! .
“ யன்னல் வழியாக
அழகு நிலா பொழிகிறது
யாத்திடுக ஓர் கவிதை
என்றெனக்குச் சொல்கிறது
மின்னல் மனப் போர் வீரன்
நிலைமையிலே யானுள்ளேன்
மீதமில்லை நேரமிங்கு
கவியேதும் பாடுதற்கு”
பட்டுக்கோட்டை தம் பாடல்களில் சமூக அக்கறையையும் பொதுவுடைமைச் சிந்தனையையும் வலிந்து திணித்தாரா ? அடுத்து பார்ப்போம்.
நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 25 ஆகஸ்ட் 2014
0 comments :
Post a Comment