வேட்டி.. சேலை... கைலி.. : சமூகச் சேதிகள் சில...

Posted by அகத்தீ Labels:






வேட்டி.. சேலை... கைலி.. :
சமூகச் சேதிகள் சில...



சு.பொ.அகத்தியலிங்கம்.


நாடு அடிமைப் பட்டிருந்த காலத்தில் வெள்ளைக்காரர்களும் பெருந்தனக்காரர்களும் மட்டுமே பங்கேற்கும் வகையில் கிளப்புகள் மன்றங்களில் வேட்டிதடை செய்யப்பட்டிருந்தது. விடுதலை பெற்ற பிறகும் அந்த அடிமை இழிவு தொடரக்கூடாது. எதிர்க்க வேண்டும். வேட்டி அணிவதை தடை செய்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதே வேளையில் அந்த வேட்டி நம் ஊரில் படும்பாடு கொஞ்சமா ?

வேட்டி, சேலை , கைலி எல்லாவற்றுக்கு பின்னாலும் பெரிய பெரிய சமூகச் சேதிகள் உள்ளன என்பதை மறக்கலாமா ? வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டோ - தெருவை பெருக்கும் அளவுக்கு இறக்கிக் கட்டிக் கொண்டோ ஊர் தெருவில் உலவ தலித் மற்றும் சில சமூகத்தினருக்கு உரிமையுண்டா ? கணுக்கால் தெரியும் படி வேட்டிகட்ட வேண்டிய நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் நிலை இன்னும் தொடர்கிறதே !

தோளில் துண்டு போட உரிமையுண்டா ? நாதஸ்வர வித்துவான் ராஜரத்தினம் பிள்ளையைக்கூட தோளில் துண்டு போட அனுமதிக்கவில்லை . பெரியார் தலையிட்டு அந்த உரிமையைப் பெற்றுத் தந்தது வரலாறல்லவா ? தஞ்சையில் தோளில் துண்டு போடவும் செருப்பணியவும் போராடி வென்றது செங்கொடி இயக்கமன்றோ ! இந்த வரலாறு பள்ளி பாட புத்தகத்தில் உண்டா ?

தஞ்சையில் இளைஞர்கள் கூட சிவப்புத் துண்டணிந்து கம்பீரமாய் நடை போட்டது சமூகசமத்துவப் போராட்டத்தின் குறியீடு அல்லவா ? திராவிட இயக்கத்தின் நிகழ்கால அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ; அவர்கள் தோளில் துண்டணிந்ததும் இதன் தொடர்ச்சியன்றோ ! ஆனால் சோவும் சில ஆதிக்க பத்திரிகையாளர்களும் இதனை கேலிப்பொருளாகச் சித்தரித்தது இந்த குறைந்தபட்ச சமத்துவத்தைக் கூட சகிக்க முடியாத ஆதிக்க வெறியினாலன்றோ !

அதேசமயம் பேண்ட் அணிந்தால் இந்தச் சிக்கல் இல்லை . ஆகவேதான் இப்போதும் தலித்துகளும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஜீன்ஸ் பேண்டும் சர்ட்டும் அணிவதை பொறுக்க இயலாத ராமதாஸ்கள் விஷம் கக்குகின்றனர் . இன்னும் இலவச வேட்டி சேலையை நம்பியே கணிசமான பகுதி மக்களை வாழும்படி தரித்திரத்தில் அமுக்கிவைத்திருப்பது எந்த வித பண்பாட்டு நியாயமா ?

சரி ! எது எப்படியோ வேட்டியும் சேலையும் நம் பண்பாட்டு குறியீடு எனக் கொண்டாலும் ; ஆயிரம் விவகாரங்கள் நெஞ்சில் எழுகிறதே ! “உண்பது நாழி உடுப்பது இரண்டே” என்று சொன்ன ஒளவை அது ஆணுக்கு மட்டுமா அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தக்கூடியதா எனச் சொல்லவில்லை . அந்த நாலு முழத்தை பெண்கள் எப்படி உடுத்தியிருப்பர் ? ஐயா கேலிக்காகக் கேட்கவில்லை மெய்யாகவே கேட்கிறேன் . கொஞ்சம் கோயில் சிற்பங்களையும் ஓவியங்களையும் உற்று நோக்கினால் நம் வரலாறு புலப்படும் .

ஏவல் மகளிர் மேலாடை அணியும் உரிமையற்றிருந்த காலம் ஒன்றிருந்தது . மேல்தட்டுப் பெண்களே கச்சணிந்தனர் .ஜாக்கெட் என்பது முஸ்லிம்கள் வருகை வரை இங்கு வழக்கத்தில் இல்லை. ஒளவைப் பாட்டியும் காரைக்கால் அம்மையாரும் ஜாக்கெட் அணிந்ததில்லை. நம் பெண் தெய்வங்களும் ஜாக்கெட் அணிந்ததில்லை . பண்டைய சிற்பங்களும் ஓவியங்களுமே சாட்சி . பெண்கள் மேலாடை அணிவதற்கும் ஜாக்கெட் அணிவதற்கும் பெரும் போராட்டங்கள் நடத்த வேண்டியிருந்தது என்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும் .

இப்போதும் முன் கொசுவம் வைத்து சேலை கட்டுவது குறிப்பிட்ட சமூகத்தின் உரிமை. அதிலும் கிராமப் புற விதவைகள் இவ்வாறு முன்கொசுவம் வைத்து சேலை அணிய அனுமதி கிடையாது. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் பாதம் மூழ்க தழையத் தழைய சேலை கட்ட தடை இருந்தது.கணுக்காலுக்கு மேலேதான் அணியவேண்டும் . பிராமணர்கள் மடிசார் கட்டு தனி; இதர சாதிகள் சேலைக்கட்டு தனித்தனி . மாராப்பு இடது புறமா வலது புறமா என்பதில் வேறுபாடு உண்டு .பிராமணர்களிலும் சவுண்டிப் பார்ப்பான் என அழைக்கப்படுவோர் வீட்டுப் பெண்கள் கணுக்கால் தெரியும்படித்தான் சேலைகட்ட வேண்டும் .

பட்டுக்குத் தீட்டுக் கிடையாது என்பதால் எல்லா சாதிகளும் புழங்கும் கல்யாணம் போன்ற பொது நிகழ்வுகளில் மேல்தட்டினர் பட்டு கட்டத் தொடங்கினர்; அதுவே அந்தஸ்தின் குறியீடுமாகிப் போயிற்று . இன்றைக்கு திருமண வரவேற்புகளில் குஜராத் பாணி சேலை கட்டே மணமகளுக்கு உரியதாகிப் போனது !

சுடிதார், பேண்ட், கவுண், லெக்கின்ஸ், மிடி, குர்தா பைஜாமா, ஜீன்ஸ், டி- சர்ட், பனியன், பெர்முடாஸ் இன்னும் பல ஆடைகள் புழக்கத்தில் வந்துவிட்டன .அதிலும் நவீன ஜவுளிக் கடைகளில் போய் பார்த்தால் பெண்களுக்கு விதவிதமான டிசைன்களில் குவிந்து கிடக்கும். ஆண்களுக்கு அவ்வளவு தேறாது . இந்த நவீன உடைகள் பல பெண்களின் சுதந்திர பயணத்துக்கும் பணியிட பாதுகாப்புக்கும் உகந்ததாக உள்ளன . சாதி ரீதியான ஒடுக்கு முறையை அனுபவிக்கும் பெண்கள் சுடிதாரோ பேண்டோ அணியும் போது நாம் மேலே சுட்டிய கட்டுப்பாடுகள் அண்டாது; ஆனால் சேலை கட்டும் போது மட்டும் தலைதூக்கி விடுகின்றன. இதை எங்கு சொல்லியழ !

வேட்டி சேலைக்கு கிடைக்கிற அந்தஸ்தைக் கூட கைலிக்கு தருவதில்லை. 80 களில் கைலி கட்டிக் கொண்டு மாலை வேளைகளில் தெருவில் நிற்கும் இளைஞர்களைப் பிடித்து அடிப்பார் சென்னை வியாசர்பாடி காவல்துறை துணை ஆய்வாளர் . அதிலும் அப்பகுதியில் பர்மாவிலிருந்து வந்த அகதிகள் அதிகம் . அவர்களிடம் கைலி அணியும் வழக்கம் மிகப் பரவலாக இருக்கும் .இந்நிலையில் இளைஞர்களைத் திரட்டி காவல் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராடியது என் நினைவில் பசுமையாக உள்ளது .

இப்போதுகூட கைலி என்பது ரவுடிகளின் உடை என்கிற தப்பான கண்ணோட்டம் இருப்பதும் பொது இடங்களில் கைலி கட்டுவதை அகவுரவமாகக் கருதும் போக்கும் நிலவுகிறது . முஸ்லிம் சமூகத்தின் கண்ணியமிக்க உடை கைலி; சில நாடுகளின் தேசிய உடை கைலி; இதனை சமூகம் சரியாக உள்வாங்காதிருப்பது சரியோ?இதில் வேடிக்கை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட பெரும்பாலோர் வீட்டுக்குள் புகுந்ததும் முதலில் கைலிக்கு மாறிவிடுவர். ஆம் அதுதான் சுதந்திரமானது; வசதியானது. மூட்டித் தைப்பதால் காற்றடிக்கும் போதும் வேட்டி மாதிரி விலகும் தொல்லை இல்லை. அதிலும் நெடுந்தொலைவு ரயில் பயணத்தில் கைலியின் தேவை மிகமிக அதிகம்.

ஆனால் இந்தக் கைலியை உரியபடி மதிக்க மறுப்பது ஏன் ?காவி, நீலம், பச்சை சாயம் தோய்த்த வேட்டிகளை அணிந்து இங்கு கோவிலுக்குள் செல்லத் தடையில்லை . ஆனால் கட்டம் போட்ட வேட்டியை மூட்டித்தைத்து பாதுகாப்பாக அணிந்தால் அது லுங்கியாகிவிடுகிறது, கோவிலுக்குள் அனுமதிகிடையாது.

கைலியை ஒரு உடையாக பாதுகாப்பான சுதந்திரமான உடையாகப் பார்க்காமல் அதனை முஸ்லிம் உடையாகவும் பொதுஇடத்தில் அணிந்து திரிவதை இழிவானதாகவும் பார்க்கும் பழுதுபட்ட பார்வையை எப்போது துடைத் தெறியப்போகிறது ஆதிக்க மனோபாவம் கொண்ட சமூகப்பகுதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ஏ.நல்லசிவன் கியூப நாட்டிற்கு சென்றிருந்த போது ஒரு சுவையான அனுபவம் , அவர் எப்போதும் சாரம் அணிபவர் .ஆம் கைலி , லுங்கி என்று பிறமாவட்டங்களில் அழைப்பதை நெல்லை , குமரி மக்கள் சாரம் என்றே அறிவார்கள். தோழர் ஏ.நல்லசிவன் சாரம் என்றே சொல்லுவார் . அவர் சாரம் அணிவதில் பெரு விருப்பங் கொண்டவர் .கியூபாவில் இருந்த போது பல சமயங்களில் தான் விரும்பும் சாரத்தில் இருந்ததாகவும் ; ஊரைச் சுற்றிப் பார்க்கும்போதும் பொது நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் போதும் சாரம் அணிந்ததையும் பெருமை பொங்கக் கூறினார் . அங்கே எல்லா உடைக்கும் சமமரியாதையே வழங்கப்பட்டதாகக் கூறினார் . இவ்வளவுக்கும் கியூப தேசிய உடை சாரம் அல்ல ; பொதுவாக வெளிநாட்டு விருந்தினர் அவரவர் நாட்டு தேசிய உடையிலோ அல்லது கோட்டு சூட்டிலோதான் இருப்பது மரபு . மரபை தோழர் நல்லசிவன் மீறினார் . கியூபா அதனை அங்கீகரித்தது . அது மட்டுமல்ல பல நேரங்களில் மாநிலக்குழு அலுவலகத்தில் - மாநிலக்குழு கூட்டங்களில் - மாநாடுகளில் தோழர் ஏ . நல்லசிவனை சாரத்தில் பார்க்கலாம் .அண்மையில் சென்னை புத்தகக் காட்சியின் போது பத்திரிகையாளர் ஞானி சில நாட்கள் கைலி அணிந்து வந்து சிறு பண்பாட்டு அசைவை முன்னெடுத்தார் ?

தொழிற்சாலை , பணியிடம் , ராணுவம் , காவல்துறை , பள்ளிகூடம் என சீருடைகள் கட்டாயம் அவசியப்படுகிற இடம் தவிர வேறெங்கும் அவரவர் விருப்பத் தேர்வாகவே ஆடை அமைய வேண்டும் . ஆடையையும் பாலியல் வக்கிரத்தையும் முடிச்சிப் போட்டு கலாச்சார ரவுடிகளாக சிலர் திரிவதை ஏற்க இயலாது . ஆறுவயது குழந்தையை வன்புணர்வு செய்ய எந்த ஆபாச உடை காரணம் ?

வேட்டி - சேலை - கைலி எல்லாமே நம் பண்பாட்டின் கூறு என்பதை ஏற்பதே சரி; தேவை, ஆனால் அதற்கு சாதி மத வேலி கட்டுவதையும் நிபந்தனைகள் விதிப்பதையும் ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது . அதை மட்டுமே அணிய கட்டாயப்படுத்தக்கூடாது.ஆணாயினும் பெண்ணாயினும் எந்தெந்த உடை யார்யாருக்கு தேவையோ யார்யாருக்கு எது வசதியோ அதை அணியத் தடை இருக்கவே கூடாது . பாதுகாப்பும் பணிச் சூழலுமே முக்கியம். ஆடைத் தேர்வு தனிப்பட்ட விருப்பம் . உரிமை . அதில் அத்துமீறி மூக்கை நுழைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது .

உடை விஷயத்தில் எளிமை வேண்டும் சரிதான். காந்தி காலத்தில் கதர் எளிமை . ஆனால் இன்று கதரோ ஆடம்பரம். விலையும் அதிகம் . பராமரிப்புச் செலவும் அதிகம். ஒரு முறை கேரளத்தின் மூத்த தலைவர் மாபெரும் மார்க்சிய சிந்தனையாளர் தோழர் இ எம் எஸ்ஸிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . நீங்கள் நாலுமுழ வேட்டியும் அரைக் கை சட்டையும் மட்டுமே அணிந்து ஏழ்மையைப் பிரகடனப்படுத்துகிறீர்கள். ஆனால் புதிய தலைமுறைத் தோழர்களிடம் அந்த எளிமை மெல்ல மெல்ல விடை பெற்று வருகிறதே ? இந்தக் கேள்விக்கு தோழர் இ எம் எஸ் அளித்த நேர்மையான பதில் புதிய வெளிச்சம் பாய்ச்சியது. நாங்கள் அதாவது முதல் தலைமுறை கம்யூனிஸ்டுகளிடம் காணப்படும் எளிமை சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தினுடையது.அது காந்திய எளிமை . மார்க்சியம் எல்லோரும் நல்ல உடை உடுக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டதே ! புதிய தலைமுறை இன்றைய சமூகச்சூழலிலிருந்து வளர்கிறார்கள் அவர்கள் எங்களைப் போல் உடை அணிய வேண்டும் என எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல . ஆகவே அவர்கள் நவீன உடை அணிவதில் தவறில்லை . மக்களிடமிருந்து அந்நியப்படாமல் இருக்கவேண்டும் என்பதே முக்கியம் . இதைவிட தெளிவாய் யார் சொல்லுவார் ?

நேற்றின் வேர் அறாமலும் இன்றின் தேவைகளை நிறைவு செய்வதாகவும் மனிதமாண்புகளை மேலும் முன்னெடுப்பதாகவும் அமையட்டும் நம் உடை பற்றிய விவாதம்.

நன்றி : தீக்கதிர் 13 ஆகஸ்ட் 2014 வண்ணப்பக்கம்

0 comments :

Post a Comment