சும்மா கிடந்த சொல்லை எடுத்து .. 16

Posted by அகத்தீ Labels:
சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 16

அறிவுக்கதவைச் சரியாய் திறந்தால்...

சு.பொ.அகத்தியலிங்கம்

“எரிமலை எப்படிப் பொறுக்கும்? / நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” - எனத் தொடங்கும் சிவப்புமல்லி திரைப்படப் பாடல் இன்னும் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது .இப்பாடலில் இந்த வரிகளுக்கு அடுத்து வந்த வரியை தணிக்கைத் துறையின் கத்திரி காவு வாங்கியிருக்கிறது. அடுத்து ‘ரத்தச் சாட்டை எடுத்தால் /கையை நெரிக்கும் விலங்கு தெறிக்கும்‘ என்று எழுதியிருந்தார் வைரமுத்து . ‘ரத்தச் சாட்டை’ என்ற சொல் லில் வன்முறை இருப்பதாக தணிக்கைத்துறை கருதியது.பாடல் பதிவாகி படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில்.. இந்தப் பாடலின் வரிகளை தணிக்கைக்காக பின்வரு மாறு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறார் வைரமுத்து . “சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் /துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்.” இந்த வரிகளே திரைப்படத்தில் இடம் பெற்றது .“நாம் கண்ணீர் விற்கும் ஜாதி / இனி அழுதால் வராது நீதி” போன்ற வரிகள் நரம்பை முறுக்கேற்றும் .

“ஓடி ஓடி உழைக்கணும்... / ஊருக்கெல்லாம் கொடுக்கணும்... ” என்கிற பாடல் நல்லநேரம் திரைப்படத்தில் இடம் பெற்றது . புலமைப் பித்தன் எழுதியது . “வயித்துக்காக மனுஷன் இங்கே / கயித்தில் ஆடுறான் பாரு / ஆடி முடிச்சி இறங்கி வந்தா / அப்புறம் தாண்டா சோறு” என்ற வரிகள் நெஞ்சைப் பிசையும் . பாடலில் ஒவ்வொரு வரியும் கருத்துச் செறிவோடு இருக்கும் . அதே பாடலில் ஒரு சரணத்தில் பாடுவார் , “ வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் / சட்டம் ஆகாது தம்பி/ பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் / சட்டம் ஆகணும் தம்பி” இப்படி சமூகச் சிந்தனையும் சமத்துவத் தேடலும் தமிழ் திரைப்பட பாடல்களில் தொடர்ந்து எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது .

இங்கே திராவிட இயக்கமும் , பொது வுடைமை இயக்கமும் வீரியமாகச் செயல்பட்ட அரசியல் - சமூகச் சூழல் தொடர்ந்து திரைப்பட உலகிலும் தாக்கத்தை உருவாக்கியது . முன்னத்தி ஏர் எனச் சொல்லத் தக்கவர் நம் பட்டுக்கோட்டையே ! அவர் பார்வை நெருப்பு வார்த்தைகளால் அல்ல நெருப்புச் சிந்தனைகளால் வார்க்கப் பட்டிருந்தது .கூர்மையாக இருந்தது .

“ வாழவைத்த தெய்வம் ” ( 1959) திரைப்படப் பாடல் ஏழைகளின் புது உலகம் எதுவென முகவரி காட்டும் . “ வெங்கிமலை உச்சியிலே ! - புது / வெற்றி நின்று அழைக்குதடா ! - புகழ் / மங்கிக் கிடந்தவர்க்கே ! - அங்கே / வாழ்க்கை இருக்குதடா” என ஒருவன் அழைப்பு விடுகிறபோது மேலும் சொல்வான் , “ பொங்கி ஓடும் வெள்ள மெல்லாம் / பள்ளத்தில் வீழந்து வீணாய்ப் / போகுதடா ! உள்ளம் வேகுதடா ! / புறப்படடா ! உடனே புறப்படடா ! பொறுப்புடன் உழைத்துழைத்து / வெறுப்படைந் திருப்பவனே / வரப்பெடுத்து வயலமைத்து / வானம் பார்த்து நிற்பவனே ! / புறப்படடா ! புறப்படடா ! “ என இவன் அழைக்க கூட்டமே “ புறப்படுவோம் ! உடனே புறப்படுவோம்” என வழிமொழிய பாடல் விறுவிறுப்பாகும் .

ஓட்டுவீட்டு முருகப்பா , ஓலைக்குடிசை மருதப்பா , மேட்டுக்கொல்லை வேலப்பா,வேப்பந்தோப்பு மாரப்பா , கருப்பாயி , செவப்பாயி , காடக்குப்பம் வெள்ளை யம்மா .. என பெயர் சொல்லி அழைக்கும் போது இப்பாடல் ஒவ்வொருவரோடும் நேரா கப் பேசி விடுகிறது . மண்ணின் வாசமும் மனதின் உறவும் பளிச்சிடும் . “ ஈரமில்லா பாறைகளை / நொறுக்கிடுவோம் ! - அணையை / எழுப்பிடுவோம் / மரங்கள் போட்டுத் / தடுத்திடுவோம் ! / ஏழைகளின் திசையிலதைத் / திருப்பிடுவோம் தண்ணியை / ஏரி குளம் வயல் நிறையப் / பெருக்கிடுவோம் ” அடடா ! தண்ணியை குறியீடாக்கி சமூகத் தில் யாருக்காக சட்டங்களும் திட்டங்களும் வேண்டும் என விவசாயியின் நெஞ்சில் கருத்தை பதியம் இடுகிறார் பட்டுக்கோட்டை .

அதே பாடலில் ஆணும் பெண்ணுமாய் மாறிமாறி தொடரும் வரிகள் நறுக்கெனப் பாயும். “ கொடுமையையும் வறுமையையும் / கூடையிலே வெட்டிவை ! ” “ கொஞ்ச நஞ்ச பயமிருந்தால் / மூலையிலே கட்டிவை !” “ நெடுங்கவலை தீர்ந்ததென்று / நெஞ் சில் எழுதி ஒட்டிவை !” “ நெரிஞ்சிக் காட்டை அழித்து - அதில் / நெல்லுவிதையைக் கொட்டிவை !” “ ஏழைகளின் புது உலகம் தெரியுதடா !- நாம் / ஏமாந்து வந்த நிலை ஒழியுதடா !” அதை நோக்கி அனைவரையும் புறப்படச் சொன்ன பட்டுக்கோட்டை நெருப்பு, எரிமலை என வார்த்தைகள் போடாமலே நெஞ்சில் எரிமலையை கொதிக்கச்செய்தார் .

“ உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில் / உள்ளங்களெல்லாம் தெளிவாகும்/ பொறுமை ஒரு நாள் புலியாகும் - அதற்குப் பொய்யும் புரட்டும் பலியாகும் ” என ‘ பாதை தெரியுது பார் ’ ( 1960) படத்தில் நம்பிக்கை ஊட்டுவார் . “ காலம் அறிந்து கூவும் சேவலைக் / கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது ; / கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும் / கணக்காய் கூவும் தவறாது ” என உறுதியாய் உரைப்பார் . “ தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும் / வாசம் மறைவது கிடையாது / சத்தியத்தை உலகில் எவனும் / சதியால் மறைக்க முடியாது ” இப்படி அவர் சொல்வது ஆழமானது . ஏனெ னில் நமது நாடு மகாபாரதத்தை கேட்டு வளர்ந்த நாடு. அதில் சதிகள் அதிகம் . அதி லும் வஞ்சகன் கிருஷ்ணன் செய்யும் சதிகள் மூலமே அர்ச்சுணன் கர்ணனைக் கொல் லுவான் . போர் நெடுக கிருஷ்ணனின் சதிகளே வெற்றிக்கு வழிசமைக்கும் .ஆனால் இங்கே சதியால் முடியாதென்று அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார் . தீர்வும் சொன்னார் ,

“ அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் / ஆண்டவன்கூட அஞ்சிடு வான் ; / அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தால் பிறவிக் குருடனும் கண் பெறுவான் ” அறிவுக்கண்ணைச் சரியாகத் திறக்கும் போது வம்பும் கலகமும் சிக்கலும் தீரும் ; மனிதனை மனிதன் நம்பிடுவான் ; அப்போது மடையனும் அதிலே திருந்திடு வான் . இந்தத் தெளிவும் தீர்க்கமான பார்வையும்தான் பட்டுக்கோட்டையின் சிறப்பு என தோழர் என்.நன்மாறன் அடிக்கடிச் சொல்லுவார் ; நீ ஆத்திரப்பட்டுப் பயனில்லை; உன் பேச்சைக் கேட்பவன் உணரவேண்டும் . பட்டுக்கோட்டை பாடலைக் கேட்பவர் எழுச்சி கொள்வர் . அவன் ஒரு பாட்டுப் போராளி. அறிவுக்கதவைச் சரியாகத் திறக்க நாம் பயில வேண்டும் ; பட்டுக்கோட்டை அதற்கு உதவுவார் .

பழம் பெரும் நடிகர் டி.கே.பாலசந்திரன் தனது நினைவுகூரலில் பட்டுக்கோட்டை வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சொல்லுகிறார் (ஆதாரம் தாமரை 1959 / 3 ) “ ஒரு நாள் கவிஞரும் நானும் மைலாப்பூர் லஸ் கார்னரிலிருந்து 3- ஆம் நம்பர் பஸ் ஏறி னோம் . ஆழ்வார்பேட்டைத் திருப்பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது . வேக மாக வந்து கொண்டிருந்த பஸ் மெதுவாகப் போக ஆரம்பித்தது .ரோட்டை எட்டிப் பார்த்த கவிஞர் ‘ என்ன செங்கொடி தெரிகிறது ?’ என்றார் என்னிடம் . நான் ரோட்டைப் பார்த்துவிட்டு ‘ தண்ணீர்க் குழாய் பழுது பார்ப்பதற்காகப் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள் . அதற்காக எச்சரிக்கை செய்யும் முறையில் அபாயக் கொடி போட்டிருக்கிறார்கள் ’ என்றேன் .அதற்கு நம் கவிஞர் , ‘ ஓ ஹோ.. ஏற்றத்தாழ்வு எங்குண்டோ அங்கெல்லாம் இந்தக்கொடி உயர்ந்துவிடும் போலிருக்கிறது ’ என்றார் . சிரித்தார் . நானும் சிரித்தேன். ஆனால் என்னை வெகுநேரம் சிந்திக்க வைத்தது . எவ்வளவு கருத்தாழம் ?

“ உன் நாள் காட்டியை / நீதான் கிழிக்க வேண்டும்../ நாளுக்கென்ன ” .. “ பையைத் துழாவுகிறேன் / புரண்டு படுக்கிறேன் / நகம் உராய்கிறது அரிசிப்பானையில்” என்பார் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் . குறுகத்தறித்த சமூக வெடிப்பல்லவா இது !

சிவசாகர் எனும் தெலுங்கு கவிஞர் எழுதினார் , “ ஒரு புன்னகை ../ அது / இதயத்தை நெருடும் / கண்ணீர் ஓடையைப் / பெருக்கெடுத்து ஓடச் செய்யும் , / ஒரு போராளியின் / முகத்தில் பூவாக மலரும் / என்றெல்லாம் நான் / எண்ணியதே இல்லை.. / அந்தப் புன்னகை - / கத்தியைவிட கூர்மையானது../ரத்தத்தைவிட பிரகாச மானது ../ அந்தப் புன்னகை ஒளிவீசிக் கொண்டிருக்கிறது / அந்த ரத்தசாட்சிகளின் முகத்தில்....” ஆம் மெய்யே. … தொடர்ந்து பார்ப்போம்...
நன்றி : தீக்கதிர் 18 ஆகஸ்ட் 2014

0 comments :

Post a Comment