சும்மா கிடந்த சொல்லை எடுத்து [ 13 ]

Posted by அகத்தீ Labels:








சும்மா கிடந்த சொல்லை எடுத்து [ 13 ]


அன்புப் பாலம் பழுதாய்க் கிடக்குது..


சு.பொ.அகத்தியலிங்கம்.



 " ஊரை எழுதுகிறாய் / பேரை எழுதுகிறாய் / எப்போது / உண்மையில் நீ யாரென்று எழுதப்போகிறாய் ? ” .. “ மதத்தைச் சொல்லுகிறாய் / சாதியைச் சொல்லுகிறாய் / எப்போது / மனிதன் என்று நீ / சொல்லப் போகிறாய் ? ” இவ்வாறு கேள்வி எழுப்புவார் ‘ மனிதனைத் தேடி ’ என்ற கவிதையில் மு.மேத்தா .



சாதி , மத , பிரிவினை பகைமையால் மனிதம் எங்கும் பொசுங்கி நாறுகிறது .  மனிதம் நேசிப்போர் , விடியலை யோசிப்போர் அனைவரும் ஒற்றுமை கீதத்தை மீண்டும் மீண்டும் பாடுகின்றனர் . விடுதலைப் போராட்டத்திலும் இதன் குரல் வலுவாகத் தேவைப் பட்டது . விடியலுக்கானப் போராட்டத்திலும் இதன் தேவை மிக அதிகம் . குறைந்த பட்ச மனிதாபிமானமுள்ள எந்தக் கவிஞனும் ஒற்றுமைப் பாடலை இசைக்காது இருக்கமாட்டான் . இயல்பிலேயே மானுடவிடுதலைக்காக பாடும் மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை பாடாதிருப்பானோ !



“ கத்தும் பறவை கனிமரத்தில் வந்து / ஒற்றுமை காட்டிடுதே - தலைப் / பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனி / பேதம் வளர்த்திடுதே ” [ ஜனசக்தி 15 - 8 - 1958 ] என மனம் நொந்து புலம்பியவர் . இதற்கு முந்தைய ஆண்டில் ஜனசக்தி சுதந்திர மலரிம் எழுதிய  48 வரி நெடுங்கவிதையில் அழுத்தமாகக் கேட்பார் ;

“...................................................... /

சுதந்திரத்தைப் பெற்ற முதல் ஓர் நாளேனும் / துளியும் மகிழ்ந்ததுண்டா ? - உந்தன் மக்கள் / உகந்துமன ஒற்றுமையாய் வாழ்ந்ததுண்டா ? / உன்னைத்தான் மதித்ததுண்டா ? உயர்ந்ததுண்டா ? / எங்கோர் பகுதியில் ஒன்றுபட்டார் / எனிலதனை ஆதரிக்கும் முறைதானுண்டா ? / பெருவெயிலிலால் வண்டல் நிலம் வெடிப்பதைப் போல் / பிளவுபட்டு பிளவுபட்டுச் சுயநலத்தால் / வருமான வேட்டையிலே புகுவதின்றி / மனதிலேதும் விசாலமுண்டா ? பொது நோக்குண்டா ? ” என கொந்தளித்துப் பாடிவிட்டு  இதுவரை நீ மகிழ்திருப்பாய் என்ற எண்ணம் என்போன்றோர்க்கில்லை இனியேனும் அந்நாள் வரட்டும் எனக் கூறுவார் ; அவர் பாடிச்சென்று 65 ஆண்டுகளாகியும் அதே ஏக்கம் தொலையவில்லை என்பது மட்டுமல்ல அதிகரிக்கவும் செய்திருக்கிறதே !



இயற்கையோடு இயைந்து ஒறுமையை வலியுறுத்தியவர் பட்டுக்கோட்டை . “ ஓங்கி வளரும் மூங்கில் மரம் / ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு / ஒழுங்கா குருத்துவிட்டு / கெளை கெளையா வெடிசிருக்கு , / ஒட்டாம ஒதுங்கி நின்னா ஒயர முடியுமா ? – எதிலும் / ஒற்றுமை கலஞ்சுதுன்னா வளர முடியுமா ? / ஒ..ஓ..ஓ.. ” விவசாயியின் கூர்த்த பார்வையும் ஒற்றுமை பெருவிருப்பமும் இதில் ஒன்றாய் கலந்துள்ளது .





கன்னியின் சபதம்  [ 1958 ] திரைப்படத்தில்  பள்ளம் மேடுள்ள பாதையிலே பார்த்து நடக்கணும் என மாடுகளை விழித்துப் பாடுவார்  . அதில் விவசாயியின் அவலம் இருக்கும் அதோடு ஒற்றுமையின் அவசியத்தை இயற்கையிலிருந்து சாறெடுத்து நெஞ்சில் பிழிவார் , “ உச்சி மலையில் ஊறும் அருவிகள் / ஒரே வழியில் கலக்குது ; / ஒற்றுமையில்லா மனித குலம் /  உயர்வும் தாழ்வும் வளர்க்குது .../ பச்சைக் கொடிகள் வேலியிலே / பாகுபாடின்றித் தழைக்குது - அதைப் / பார்த்திருந்தும் சில பத்தாம் பசலிகள் / பக்கம் ஒண்ணாய் பறக்குது - அன்புப் / பாலம் பழுதாய்க் கிடக்குது. ” இன்றோ பத்தாம் பசலிகள் கை ஓங்கி இருக்கும் நேரம் இப்பாடலை இன்னும் அழுத்தமாய் எல்லோர் இதயத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் .



 “ உள்ளத்தில் கள்ளமில்லாமல் / ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் ” ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ’[1960] என முழங்கினார் ; மிகத் தெளிவான நோக்கு அவரின் தனிச் சிறப்பு . திராவிட நாடு பிரிவினை கோஷம் உச்சத்திலிருந்த காலத்தில் , “ மனுசனைப் பார்த்திட்டு உன்னையும் பாத்தா – மாற்ற மில்லேடா ராஜா - எம் / மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன் / வந்ததுவரட்டும் போடா ” ன்னு  “ கண் திறந்தது ” [ 1959 ] திரைப்படத்தில் நெஞ்சுநிமிர்த்தி சொல்லுவார் ; “ எழுதிப் படிச்சு அறியாதவன் / உழுது ஒளச்சு சோறு போடுறான்../ எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி / நல்லா நாட்டைக் கூறுபோடுறான் – இவன் / சோறு போடுறான் – அவன் / கூறு போடுறான் ” நிகழ்கால அரசியலையும் சமூக அக்கறையையும் குழைத்து பாடுகிற சாதுரியமும் துணிச்சலும் நம் பட்டுக்கோட்டைக்கு கைவந்த கலையன்றோ ?



திண்ணைப்பேச்சு வீரரிடம் கண்ணாயிருக்கணும் ஒண்ணாயிருக்கணும் என  ‘பதிபத்தி’ [ 1958]யில் குரல் கொடுத்தவர் அதில் தொடர்ந்து ஒரு செய்தி சொல்லுவார் ; அதுவும் திராவிட இயக்கம் கடவுள் மறுப்பை முன்னுறித்திய காலத்தில் சொல்லுவார், “ கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் / கவைக்குதவாத வெறும் பேச்சு / கஞ்சிக் கில்லாதவர் கவலை நீங்கவே / கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங் / கதைகளைப் பேசி காலம் வீணாச்சு ..” . இது காலத்தின் குரலாய் இன்றும் சேதி சொல்லி நிற்கிறது . இறுதிவரியில் நெற்றியடியாய் , “ உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் ”என்பார் .



மக்கள் ஒற்றுமையை , தேசிய ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிப்பதில் தமிழ்திரையுலகம் என்றைக்கும் சளைத்ததில்லை .  “ ஒன்றே குலம் என்று ஓதுவோம் ஒருவனே தெய்வம் என்று போற்றுவோம் ” என மக்களிடம் ஒற்றுமையை பேசியது தமிழ் திரைப்படப்பாடல்கள் .  “ ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே , / உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே !/ வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும் / உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே !” என கண்ணதாசன் பாடல்  “ பணக்காரக் குடும்பம் ” பட்த்தில் வலுவாகப் பேசும் . இப்படி ஒற்றுமை விதையை ஆழமாக விதைத்தது தமிழ் திரப்படப்பாடல்கள் எனில் மிகை அல்ல . இவ்வாறு தொடரும் சங்கிலியின் ஒரு கண்ணியே பட்டுக்கோட்டை ! ஆயின் அவருக்கு இருந்த அரசியல் தெளிவும் ; வர்க்க சமூகத்தில் உழைக்கும் வர்க்க ஒற்றுமையே அதிமுக்கியம் என்கிற புரிதலும் இவர் பாடல் நெடுக நீக்கமற நிறைந்திருந்தது

. “ கிளைவெடிக்கும் பயிர்களுக்கு / உயர்வளிக்கும் கூட்டம்” ஒண்ணாவந்து சேரணும்னு  “அரசிளங்குமரியில்”  [ 1957 ] கோடு போடுவார் ; “ நன்றி கெட்ட மனிதருக்கு / அஞ்சி நிற்க மாட்டோம் / நாவினிக்க பொய்யுரைக்கும் / பேரை நம்ப மாட்டோம் – என்று  / கூறுவோமடா – ஒன்று / சேருவோமடா / வீறுகொண்டு சிங்கம்போல் / முன்னேறுவோமடா “ என வர்க்க ஒற்றுமைக்கு கட்டியம் கூறியவர் . இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் .





இன்று நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது “ கண்ணீரில் கதறி அழுகிறாள் ; / தள்ளாடும் அன்னை பாரதம் / பொல்லாத சாதி மதங்களால் / உண்டான மேனி ரணங்களால் ..” என இந்திய தேசம் காயம் பட்டிருப்தாய் மறைந்த பாடலாசிரியர் இ.மு.வெற்றிவளவன் கூறியது நிஜமல்லவா ? “ ஈசன் , யேசு , நபிகளால் – நம் / பாசவலைக ளறுவதா ? / ஓது மந்திர மொழிகளால் – நம் / ஒருமைப்பாடு சிதைவதா ?..” என அவர் தொடர்ந்து கேட்டது  காலத்தின் குரலாய் இன்றும் எம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறதே !

 “ ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
ஒவ்வொரு புல்லையும்...

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
ஒவ்வொரு புல்லையும்...

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
ஒவ்வொரு புல்லையும்...

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
ஒவ்வொரு புல்லையும்...

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
ஒவ்வொரு புல்லையும்...”



என இன்குலாப் கவிதையில் மானுடம் புன்னகைக்கிறது . ஒற்றுமையின் இலக்கு அதுவல்லவோ !



சாதி பேதம் தூண்டிவிடப்படுகிற காலம் இது . . சாதி பேதம் கண்டு பட்டுக்கோட்டை நொந்ததும் அதற்கெதிராய் ஒன்றுபடத்தூண்டியதும் பேசவேண்டிய செய்திகள் . அதையும் பேசுவோம் .

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 28 ஜூலை 2014.



 

0 comments :

Post a Comment