சும்மா கிடந்த சொல்லை எடுத்து [10 ]

Posted by அகத்தீ Labels:







 




சும்மா கிடந்த சொல்லை எடுத்து  [10  ]

வெம்பி விடாதே தம்பி ...

சு.பொ. அகத்தியலிங்கம்

“ கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா.. அந்தக் / கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா.. வா.ராஜா வா../ஒட்டுக்கல்லை சேர்க்காம../ ஒரே கல்லை குடைஞ்செடுத்து / கட்டி வச்சான் மண்டபத்தை பல்லவராஜா / அதைக் கச்சிதமா சொல்ல வந்தேன் சின்ன ராஜா.. / சொல்லு ராஜா சொல்லு..”பல்லவ மன்னவனின் படைப்பில் உருவான மாமல்லபுரத்தின் சிறப்பு களை குழந்தையும் அறியும் வகை யில் சொல்லும் இப்பாடல் “ வா ராஜா வா ” திரைப்படத்தில் இடம் பெற்றது. குழந்தைக் கவிஞராக நாமெல்லாம் கொண்டாடும் அழ. வள்ளியப்பா எழுதிய பாடல் இது.

இப்பாடலில் மேலும் சொல்லுவார்;“கடலோரம் கோபுரம் மலை மேலே மண்டபம் / எப்படித்தான் செஞ்சானோ பல்லவராஜா.. / அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா / ஆமா ராஜா ஆமா.. / சிற்பிய ரைக் கூட்டிவந்து சிற்பங்களை செய்யச்சொல்லி / கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா / அந்த அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா..வா. ராஜா வா.. ” பெரிய வரலாற்றை இந்த வரி களில் சுண்டக்காய்ச்சி குழந்தைக்குச் சொன்னதன் மூலம் முத்திரை பதித்தார் அவர் .

அவருக்கெல்லாம் முன்பே திரைத்துறையில் குழந்தைகளை முன்வைத்து சொல்லும் பாடலிலும் காலத்தை வென்று நிற்கும் கருத்துகளை நரம்போடு ஊட்டி வளர்த்தவர் பட்டுக்கோட்டை. இவரின் குரு பாரதிதாசன்.பெண்குழந்தைத் தாலாட்டு , ஆண்குழந்தைத் தாலாட்டு என எழுதி ; வேண்டாத சாதி இருட்டு வெளுக்கவும் - மூடத்தனத்தின் முடை நாற்றம் போகவும் - மானிடத் தோளின் மகத்துவத்தை போற்றவும் முயன்றார் .

பட்டுக்கோட்டை அந்த வழித் தடத்தில் அடுத்த அடியெ டுத்து வைத்தார் . குங்குமச் சிமிழே என ஆராரோ பாடும் போதும் , “ ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ? / எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ? ” (பதிபத்தி - 1958எனத் தாலாட்டுப் பாடியவர் பட்டுக்கோட்டை . “அழாதே பாப்பா அழாதே ” என குழந்தையை தூங்கவைக்கப் பாடும் போதும் “ பேசாத நீதி நமக்காகப் பேசும் ” (பெற்ற மகனை விற்ற அன்னை - 1958) என ஆறுதல் சொன்னவர்.

“கல்யாணப் பரிசு ” ( 1959 ) படத் தில் “ உன்னைக் கண்டு நானாட..” எனவும் , “ உன்னைக் கண்டு நான் வாட” எனவும் பாடிய இரு பாடல் களும் ஒலிக்காத தீபாவளி இன்று வரை இல்லை . இனியும் அப்படித் தானோ ! கவிஞன் காலத்தை வென்று நிற்பதன் சாட்சி இவை .

“சின்னப் பயலே சின்னப் பயலே / சேதி கேளடா / நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா / எண்ணிப் பாரடா - நீ / எண்ணிப் பாரடா” (அரசிளங்குமரி - 1957) இப்பாடலைப் போல் பிறிதொன்று சொல்ல இயலுமோ! எம்ஜிஆர் படம் . திராவிட இயக்கமும் பொதுவுடமையும் கைக்கோர்க்க பட்டுக் கோட்டை பிள்ளைகளுக்குக் கூறிய போதனை பெரியவர்களுக்கும் பொருந்துமே!“ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என வளர்ச்சிக்கு இலக் கணம் சொன்னார்;

நரம்போடு பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி என்றார் ; மனிதனாக வாழ்ந்திடச் சொன்னார்; தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யச் சொன் னார் ; தானாக எல்லாம் மாறும் என்பதை பொய்யிலும் பொய் பழைய பொய்யென உமிழ்ந்தார்; கடைசியாகச் சொன்னார் ,

“ வேப்பமர உச்சியில் நின்னு / பேயொன்னு ஆடுதுன்னு /விளை யாடப் போகும்போது / சொல்லி வைப்பாங்க - உன் / வீரத்தைக் கொழுந்திலேயே / கிள்ளிவைப் பாங்க / வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை / வேடிக்கையாகக் கூட / நம்பி விடாதே / வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து / வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே!”

வெம்புகிறவர்களும் வெம்பச் செய்கிறவர்களும் இன்னும் இருக் கிறார்களே !இப்பாடலின் தேவை இன்னுமிங்கு முடியவில்லையே ! மூடத்தனத்தின் முடை நாற்றம் இன்னும் எப்படியுள்ளது ?

நகைச் சுவை நடிப்பில் பல்கலையாகத் திகழும் ஆச்சி மனோரமாவின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் . அண்மையில் மீண்டும் படித்தேன் . அதனைப் பகிர்கிறேன்.“மனைவிக்காக இல்லேன்னா லும், பிள்ளைக்காக சரியாகிடுவா ருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு. எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாயும் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச்சாங்களா...னு கூடஎட்டிப் பார்க்கலை என் காதல் கணவர். பொண்ணை தூக்கி வளர்த்தோம். இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச் சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா. ஆண் பிள்ளை பிறந்திருக் குன்னு அவருக்குச் சொல்லி அனுப் பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன பார்க்கப் போயிருக்கார்.அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது.ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனான்னு எது வும் தெரியாது. ஆனா, அவன் விளையாடின விளையாட்டு தான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிருக் கான் ஜோசியக்காரன். நல்ல புரு ஷனா இல்லன்னாகூட ஒரு நல்ல தகப்பனா இருக்கிற வாய்ப்புல பெரிய குழிதோண்டி தன் வார்த்தை களால மண்ணை அள்ளி கொட்டிட் டான் அந்த புண்ணியவான். ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட் கார்ந்தேன்.குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை. உள்ள போனா, குழந்தையோட தொடை சிவந்திருக்கு. பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான்.வன்மத் தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன். “ நடிகை மனோரமா (குங்குமம், 14 .2. 2008 )

ஆச்சியோடு இந்நிலை முடிய வில்லையே ! அதனால் தானோ என்னவோ , “ பெண்ணடிமை பேசுகிற நாடு - பணப் / பேய்கள் உலவும் சுடு காடு / முன்னடி வை கம்பீர மொடு - உன் / மூச்சையே புயலாய் / விடணும் கோபக்குறியோடு ! / உன்னடிமை தீர / ஓங்கி வளர்ந்து வா / பாரதிக் கவிஞன் பாட்டு பலத்தோடு” ன்னு கவிதை எழுதிய கவிஞர் நவகவியும் இன்னும் பல பட்டுக் கோட்டைகள் வரணும் பாட்டுகள் கட்டித் தரணும்னு ஆசைப் பட்டார். நியாயந்தானே ! தொடர்ந்து பார்ப்போம்...

நன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை 7 ஜூலை 2014

0 comments :

Post a Comment