சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 12

Posted by அகத்தீ Labels:


சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 12

எங்கும் தொழிலாளர் கூட்டம்
பங்காளி போன்றோரைக் காப்பார்


சு.பொ.அகத்தியலிங்கம்.


“உழவன் கழனியில் விதையாவேன் / உழுகின்ற ஏருக்குக் கொழுவாவேன் / அவனது சோற்றில் ஒரு பருக்கையாய் / ஆவதற்கே நான் ஆளாவேன்”. இவ்வாறு ஆசைப்பட்டார் கவிஞர் நவகவி. ஒவ் வொரு கவிஞரும் இப்படி ஆசைப்படுவ தெந்நாள்? “உலகம் பிறந்த கதை தெரிந் தவரே / உழவன் பிறந்த கதை தெரியுமா? கதையில் உயர்ந்த கதை என்பதனால் / கவிதையில் பாடவந்தேன் விவரமா?” என்றும் அவர் கூறுவார்.

விவசாயியின் வாழ்வைப் பாடாத கவிஞனின் வாழ்நாள் பாழென்பேன்.மக்கள்தொகையில் விவசாயியே பெரும்பான்மை. ஆயினும் கலை இலக்கியத்தில் அவர்களுக்கு உரிய பங்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதா? அண்மை யில் வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலையும் மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘உயிர் நிலம்’ நாவலையும் ஒப்பிட்டு விமர்சனம் எழுதிய போது விவசாய நாவல்களை தேடித்தேடி பட்டியலிட்டேன்.ஒரு டஜனைத் தாண்டு வதே பெரும்பாடாகிவிட்டது. விவசாயி குறித்த திரைப்படங்கள் எத்தனை பட்டியலிடுங்கள்.

“கடவுளென் னும் முதலாளி! கண்டெடுத்த தொழி லாளி! விவசாயி”பாடலில் விவசாயியின் வாழ்க்கை உள்ளபடி இருந்ததா? இது போல் சில பாடல்கள் நினைவிற்கு வரும்.

“மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி / வயக்காட்ட உழுதுபோடு சின்னக்கண்ணு” இந்தப் பாடலை இன்றைக்கும் விரும்பிக் கேட்காதவர் யார்? சொல் வீர்!இதனை பட்டுக்கோட்டை எழுதிய தாய் கருதுவோர் இன்றும் உண்டு; ஆனால் எழுதியவர் மருதகாசி.

பட்டுக்கோட்டை குறைந்த காலமே வாழ்ந்தாலும் ; மிகக்குறைவாகவே பாடல்கள் கவிதைகள் எழுதிய போதும் அதிலும் விவசாயிக்கு உரிய இடம் தந்தவர் .விவசாயியின் குரலை மிகச்ச ரியாக ஒலித்தவர். இவரெழுதிய “நண்டு செய்த தொண்டு” கவிதையை முன் அத்தியாயமொன்றில் பார்த்தோம்.

அரசிளங் குமரி ( 1957) படத்தில் “ஏற்ற முன்னா ஏற்றம் / இதிலேயிருக்கு முன்னேற்றம்” என் கிறபாடலில் விவசாயியின் பெருமையை; “ஓதுவார் தொழுவரெல்லாம் / உழுவார் தலைக்கடை யிலே.. உலகம் செழிப்ப தெல்லாம் / ஏர் நடக்கும் நடையிலே ..” என வள்ளுவன் குறளை இவர் மொழியில் சொல்வார்.

“ஏரோட்டும் ஏழை இதயம் குமுறி னால் / போராட்டமே எழுமே! புவியிலே/ போராட்டமே எழுமே” என்கிற பட்டுக் கோட்டைக் கவிதையை தன் கட்டுரை யில் மேற்கோள்காட்டுவார் தோழர் ஜீவா. “கதிராடும் கழனியிலே / சதிராடும் பெண்மணி” எனத் தொடங்கும் பாடலை “கண்ணின் மணிகள்” நாடகத்திற்காக எழுதினார்.அது காதல் பாடல் எனிலும் அதிலும் உழவர் வாழ்வைப் பேசுவார். அதில் இருவரும் சேர்ந்து பாடும் இறுதிவரிகளில், “உழவனும் ஓயாத / உழைப்பும் போல் நாமே / ஒன்றுபட்ட வாழ்க்கையினில் / என்றுமிருப்போம்” என்பார் .கல்யாணிக்கு கல்யாணம் (1959) திரைப்பட்த்தில் “தை பொறந்தா வழி பொறக்கும் / தரணியில் எல்லோருக்கும்” என்ற பாடலில் “பண்ணையிலே வேலை பார்க்கும் /பாட்டாளி குடியிருக் கும் / சின்னஞ்சிறு சேரியிலும் / அம்மா வீரம்மா இனி / தென்பாங்கு பாட்டு கேக் கும் / ஆமா மருதம்மா” என்பதுடன் நில்லாமல் இறுதியில் சொல்வார், “கஞ்சிப் பானை கவலை தீரக் / கலப்பைத் தொழிலை நம்பிடணும்”. எவ்வளவு பொருள் பொதிந்த வாக்கு! “பயிரை வளர்த்தால் பலனாகும் அது / உயிரைக்காக்கும் உணவாகும் / வெயிலே நமக் குத் துணையாகும் இந்த, வேர்வைகள் எல்லாம் விதையாகும்..” என்பார் ஆளுக்கொரு வீடு ( 1960) படத்தில். இதுபோல் இன்னும் சிலவற்றைச் சொல்ல இயலும்.

1958ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் விவசாயிகள் தங்கள் தேசியகீதம் போல் இன்றும் கொண்டாடுவர்.

“சும்மாகிடந்த நிலத்தைக் கொத்தி / சோம்பலில்லாம ஏர் நடத்தி / கம்மாக்கரையை ஒசத்திக்கட்டிக் / கரும்புக் கொல்லை யில் வாய்க்கால் வெட்டிச் / சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத் / தகுந்த முறையில்தண்ணீர் விட்டு / நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும் -உள்ள மறைஞ்சிருக்கு-அட / காடு வெளைஞ் சென்ன /மச்சான் - நமக்கு / கையும் காலுந்தானே / மிச்சம்?” - இக்கேள்வியில் ஆயிரம் காலத்து சோகம் இருக்கு. விவசாயத்தையும் விவசாயியையும் முழுமையாய் அறிந்த கவிஞரின் பார்வை பளிச் செனப் பாய்கிறது.

“இப்போ /காடு வெளையட்டும் பொண்ணே - நமக்கு / காலமிருக்குது பின்னே ..” எனக் கவிஞர் சொல்லும் போது அதில் விவசாயியின் பொறுமையும் நேர்மையும் தெறிக்கும். அந்தப் பாடலில் ஓரிடத்தில் பெண் கேட்பாள், “மாடா ஒழைச்சவன் வாழ்க் கையிலே - பசி / வந்திடக் காரணம் என்ன மச்சான்?” ; அதற்கு அவன் சொல்லும் பதில் “அவன் தேடிய செல்வங்கள் வேறே இடத்தில் சேர்வதினால் வரும் தொல்லையடி “அவன் சொல்லுகிற பதில் நமக்கு நாட்டு நடப்பை நச்சுன்னு புரியவைக்கும்.

சினிமாவுக்காக இதில் “வேறே இடம்” எனக் குறிப்பிட்டாலும் முதலில் “சீமான் வீட்டில்” என்றுதான் குறிப்பிட்டாராம். கவிதையில் அப்ப டித்தான் உள்ளது. தணிக்கைச் சிக்க லுக்காக மாற்றினாராம். மேலும் இப்பாடலின் இறுதியில் “நானே போடப் போறேன் சட்டம் - பொதுவில் நன்மைபுரிந்திடும் சட்டம்...” எனக் கதைக்காக வும் நாயகன் எம். ஜி. ஆர் அரசியலுக் காகவும் எழுதப்பட்டது. இவ்வளவு சம ரசத்துக்கு இடையிலும் திரைப்படத்தில் ஒலித்த விவசாயியின் குரலில் இதுவே உச்சம் .இதில் ஒரு உண்மை தெரியுமா?

இப் படம் வெளிவருவதற்கு இரண்டாண்டுக ளுக்கு முன்னால் 18-8-1956ல் கம்யூ னிஸ்ட் கட்சி ஏடான ஜனசக்தியில் “புது நாளினை எண்ணி உழைப்போம்” என வெளியான தமது 54 வரிக் கவிதையிலி ருந்தே இந்தத் திரைப்படப் பாடல் உரு வாக்கினார் பட்டுக்கோட்டை. கம்யூ னிஸ்ட் கட்சி ஏட்டில் அக்கவிதை இன் னும் உரக்கப் பேசியது. அதில் ஓங்கி நின்ற வீரியத்தை சற்று மென்மையாக்கி ஆயினும் உள்ளடக்கம் கெட்டுவிடாமல் திராவிட இயக்க நடிகருக்கு தருகிறார். அவரும் ஏற்கிறார். திரையுலகில் அன்று அப்படியொரு ஐக்கிய முன்னணி யாரும் திட்டமிடாமலேயே உருவாகியிருந்தது போலும்.

ஏட்டில் வந்த கவிதையைவிட திரைப்படத்தில் வந்த பாடல் முழுவீச் சோடு மக்களைச் சென்றடைந்ததை மறுக்க இயலாது.அந்தக் கவிதை முழுவதையும் கூற இங்கு இடமில்லை. எனவே சில நறுக்கு வரிகளை மட்டும் இங்கே பார்ப்போம் .“வாழை நிலைக்குது சோலை தழைக்குது / ஏழைக்கு அதில் என்ன கிடைக்குது?” “கூழைக்குடிக்குது ; நாளைக் கழிக்குது /ஒலைக் குடிசையில் ஒட்டிக்கிடக்குது..” “சீறும் புயலால் மெலிந்த வருக்குச் - சர்க்கார் செஞ்ச உதவிகள் என்ன மச்சான்” “அங்கு நாளும் பிணத் தைப் புதைப்பதற்கு - நம்ம / நாணய சர்க் கார் உதவுமடி” இப்படித் தொடரும் கவி தையில், “தங்கவும் வீடின்றித் திங்கவும் சோறின்றித் / தத்தளிப்போர் கெதி என்ன மச்சான்” “நாட்டில் - /எங்கும் தொழிலா ளர் கூட்டமடி - அவர் பங்காளி போன் றோரைக் காப்பாரடி” என வர்க்கப் பார் வையை முன்வைப்பார்.முழுக்கவிதை யையும் மெட்டுப்போட்டு இசைத்தட்டில் கொணர்வது இடதுசாரிகளின் இன்றை யக் கடமை. தேவை .

அதுபோல் “எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் / அங்கம் வகித்திடு வோம்..”என ஜனசக்தியில் வெளிவந்த கவிதை விவசாயிகள் கையாயுதமாகும். இப்படி இவர் பாடல் நெடுக விவசாய மனோநிலை எதிரொலிப்பதை அவ தானிக்கலாம் .

வைரமுத்து எழுதிய “விதைச் சோளம் “எனும் நெடுங்கவிதையி லிருந்து சில வரிகள் ; வெதச் சோளம் நனஞ்சிருச்சே /வெட்டியா பூத்திருச்சே / மொளைக்காத படிக்கு /மொளைகட்டிப் போயிடிச்சே / ஏர் புடிக்கும் சாதிக்கு / இதேதான் தலையெழுத்தா?விதிமுடிஞ்ச ஆளுக்கே /வெவசாயம் எழுதிருக்கா /காஞ்சு கெடக்குதேன்னு / கடவுளுக்கு மனு செஞ்சா /பேஞ்சுக் கெடுத்திருச்சே /பெருமாளே என்ன பண்ண?”

தமிழன்பன், இன்குலாப், தணிகைச் செல்வன் போன்றோர் கவி தைகளில் விவசாயியின் வாழ்க்கை சிறப்பாக இடம் பெற்றதுண்டு இடம் கருதி தர இயலவில்லை . சோறுபோடுவோர் வாழ்க்கையை உரக்க ஆழமாக பரவலாக விரிவாகப் பாடாதவரை இலக்கியம் அரைக்கிணறு தாண்டுவதாகவே பொருள் .

உழவன் பிறந்த கதை சொன்ன நவகவி முத்தாய்ப்பாய் முடிப்பார் ; “அவனே எனது கதாநாயகன் /அழுக்குடன் வேர்வை நாறும் தூயவன் /ஓதும் பொருளைத் தேடி அலைகையில் /‘உழைப் ’பெனும் சொல்லெடுத்துத் தந்தவன் /எளிமை கொலுவிருக்கும் மேனியன் /ஏரின் கூரைப்போல நேர்மையன் ..” மெய்தானே! அந்த உழவனைப் பாடுங்கள் கவிஞர்களே! பட்டுக்கோட்டையின் கிராமத்து இதயம் கசிவதை தொடர்ந்து படிப்போம்! பாடுவோம்!

நன்றி : தீக்கதிர் 21 ஜூலை 2014

0 comments :

Post a Comment