மலையாளத்தில் சங்கம்புழா எழுதிய “ வாழக்குலா” காவியம் பெரிதும் வியந்து பாராட்டப்படும் . அறிஞர் அண்ணா எழுதிய “ செவ்வாழை” பெரும் வீச்சில் சென்ற்டைந்த ஓர் சிறுகதை . சோ. தர்மன் தானும் “ வாழையடி” என சிறுகதை எழுதி இருப்பதால் களத்தில் வந்து குதித்திருக்கிறார் .நம் பார்வையில் படாத இன்னும் பல இலக்கிய பதிவுகள் இருக்கக்கூடும் . வாழை விவசாயத்தை சுற்றி இன்னும் நிறைய நிறைய பல கோணங்களில் பேசும் இலக்கியப் படைப்புகள் வரவேண்டும். ஆரோக்கியமான போட்டி நல்லதே !
திரை உலகில் ” வாழை” முத்திரை பதித்துவிட்டது . மாரி செல்வராஜுவின் சொந்த அனுபவமும் ஓர் உண்மைச் செய்தியும் பின்னிப் பிணைந்த ஓர் திரைக்காவியம் வாழை. வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் வலி , கனவு ,ஆசை ,திறமை எல்லாம் நுட்பமாக அனுபவ முத்திரையோடு பதிவாகி இருக்கிறது .
படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சின்னம் காட்டப்படுகிறது . அதை பச்சை குத்திய பெண் எல்லாம் வந்துள்ளதால் கம்யூனிஸ்டுகள் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாய் சிலர் விமர்சனம் செய்கிறார்கள் . எனக்கு அந்த மயக்கம் எல்லாம் இல்லை . பட்டுக்கோட்டையின் பாடலொன்றில் செங்கொடி வந்தபோது மாற்றி எழுதச் சொன்ன , ஏவிஎம் தான் செங்கொடியாய் காட்டிய சிவப்பு மல்லி எடுத்தது ; ஏன் ? லாபம் வருமெனில் எதையும் விற்பார்கள் முதலாளிகள் . ஆக வாழையை நான் வரவேற்க சிவப்பைக் காட்டுவது காரணமல்ல.
சிவனணைந்தானும் அவன் நண்பன் இருவரும் படத்தில் உயிர் சரடாய் உள்ளனர் . இருவரையும் சூப்பர் மேனாகக் காட்டாமல் சிறுவர்களின் குறும்பும் , சுட்டித்தனமும் , சண்டையும் நட்புமாய் உலவவிட்டிருப்பதும் பாராட்டுக்குரியது . இருவரும் படத்தில் தங்கள் நடிப்பாற்றலை பிரகாசிக்கச் செய்துள்ளனர் .
அழுகாச்சி காவியமாகிவிட்டது என்பது சிலரின் விமர்சனம் . துன்பவியல் படைப்புகளுக்கு உயிர்துடிப்பு அதிகம் ; ஆயினும் வலிந்து ‘சுபம் மங்களம்’ என முடிக்கும் திரையுலக சூத்திரச் சிமிழை மீறி நிற்பது திரைப்படத்தில் பலவீனமல்ல ;பலம்.
நானும் என் இணையரும் வாழை பார்த்தோம் . இருவருக்கும் பிடித்துவிட்டது .என் இணையர் எப்போது நெட்டில் வரும் மீண்டும் பார்க்கணும் என்கிறார்.
இன்று நகர் புறங்களில் வாழும் குழந்தைகள் அமேசனில் , இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் போட்டா எல்லாம் வந்துரும் என்று நினைக்கிறார்கள் . புழுங்கலரிசி தனிச் செடி என்பார்கள் . ஆனால் நாம் உண்ணும் ஒவ்வொன்றின் பின்னாலும் எவ்வளவு உழைப்பு எவ்வளவு வலி எவ்வளவு வியர்வை எவ்வளவு கண்ணீர் எவ்வளவு கொடுமை எவ்வளவு சுரண்டல் இருக்கிறது என்பதை அறிய மாட்டார்கள் . அவர்களுக்கு பாடம் சொல்ல வேண்டி இருக்கிறது .இன்னும் பல வாழைகள் தழைக்க வேண்டும் .உழைப்பின் வலி சொல்லப்பட வேண்டும் .
வாழைப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் ! சிறுவர் தொழிலாளியாக நடித்த பொன்வேல் ,ராகுல் இருவரையும் தனித்து பாராட்டுகிறேன். இருவரும் படிப்பிலும் முத்திரை பத்தித்து முன்னேற வாழ்த்துகள் !
சுபொஅ.
0 comments :
Post a Comment