மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் கற்றுத் தரும் இரண்டு நூல்கள்.

Posted by அகத்தீ Labels:





மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் கற்றுத் தரும் இரண்டு நூல்கள்.

 

பாலஸ்தீனம் குறித்த இரண்டு நூல்கள் அண்மையில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன .

 

1] “பாலஸ்தீனம் ”  - தோழர் வெ.சாமிநாத சர்மா எழுதியது .1939 ல் வெளிவந்தது .2024 ல் மறுபதிப்பு கண்டுள்ளது .

2] “ பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும் ?” -  இ.பா.சிந்தன் எழுதியது . தற்போது [2024 ல்] வெளியிடப்பட்டது .

 

85 ஆண்டு கால இடை வெளியில் வந்துள்ளன இரண்டு நூல்கள் .

 

முதல் நூலில் 1938  வரையிலான வரலாற்றில் எப்படி எல்லாம் பாலஸ்தீன மக்கள்  வஞ்சிக்கப் பட்டுள்ளனர் என்பதையும் ; இஸ்ரேல் எனும் யூத நாட்டை பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணில் ஏகாதிபத்தியம் எப்படித் திணித்தது என்பதையும் ; ஜியோனிசத்தின் தோற்று வாயையும் நுட்பமாக வரைந்து காட்டி இருக்கிறார் வெ.சாமிநாத சர்மா .

 

85 ஆண்டுகளில் நிலமை சீரடையவில்லை .மாறாக மேலும் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் பாலஸ்தீனம் ஆளாகி உள்ளது  என்பதையும் ; ஏகாதிபத்தியங்களின் இதயமற்ற காய் நகர்த்தகளையும் இஸ்ரேலின் வஞ்சகமும் குரூரம் கொண்ட ஜியோனிச போக்கு எப்படி உச்சத்தை எட்டி இருக்கிறது என்பதையும் இ.பா.சிந்தனின் நூல் எடுத்துக் காட்டுகிறது .

 

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா முதலில் காட்டிய அரசியல் உறுதி எப்படி மெல்ல மெல்ல தளர்ந்து இப்போது இஸ்ரேலின் கூட்டுக் களவாணியாய் கூட்டுக் கொடூரனாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்நூல் சொல்கிறது .

 

இரண்டு நூல்களின் உயிர் சரடும் ஒன்றுதான் . சாதாரண வாசகரை நோக்கி எளிமையாக சுருக்கமாகப் பேசுவதுதான் இரண்டு நூல்களுக்கும் கூடுதல் சிறப்பு .மொழி நடையில் இரண்டுக்குமான கால இடைவெளி வெளிப்படும் . 85 ஆண்டுகாலத்தில் ஜீயோனிசம் ஆழக்கால் பதித்து மூர்க்கமாயிருப்பதையும்; ஏகாதிபத்தியம் கூட்டாளி ஆயிருப்பதையும் நூல் சொல்கிறது .

 

 

[ வழக்கமாக நூல் அறிமுகம் செய்யும் போது நூலில் இருந்து சில செய்திகளை நான் எடுத்துச் சொல்வேன் .இம்முறை அப்படிச் செய்யவில்லை . ஏனெனில் நீங்களே முழுதாய் வாசித்து உள்வாங்க வேண்டும் என்பதால் ]

 

இந்த இரண்டு நூல்களையும் வாசிப்பது என்பது பாலஸ்தீனப் பிரச்சனையைப் புரிந்து கொள்ள உதவும் என்பது மட்டுமல்ல ; இங்கே இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர் பேசும் குரலும் இஸ்ரேல் ஜியோனிசத்தின் குரலும் ஒருப்போல் இருப்பதை உணரவும் இந்நூல் உதவுகிறது .

 

ஏகாதிபத்திய எதிர்ப்பும் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பும் இன்றைய காலகட்டத்தின் தேவை என்பதும் ; அது சீழ்பிடித்த முதலாளித்துவ [Crony capitalism] எதிர்ப்பின் இன்னொரு முகம்தான் என்பதும் இந்நூல் சொல்லும் பாடம் .

 

நாம் எந்த ஒரு பிரச்சனையையும் ஆழமாகப் புரிந்து கொண்டால்தான் ; நம்முடைய எதிர்ப்பு கூர்மையும் வலுவும் கொண்டதாகும் . அதற்கு இந்நூலை அவசியம் படியுங்கள் ! பரப்புங்கள் !

 

மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் இளைய தலைமுறைக்கு அரசியல் உறுதி வேண்டும். அதற்கு இந்நூல் வாசிப்பு முதல் அடிவைப்பாக ஆகட்டும் ! நம் குரல் வலுக்கட்டும்.

 

1]பாலஸ்தீனம்  ,  ஆசிரியர் : தோழர் வெ.சாமிநாத சர்மா,

பக்கங்கள் : 80 , விலை : ரூ.80 /

2] பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும் ? , ஆசிரியர் : இ.பா.சிந்தன் ,

பக்கங்கள் : 144 , விலை : ரூ.140 /

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949
E mail : bharathiputhakalayam@gmail.com / 
www.thamizhbooks.com

சுபொஅ.

05/09/24.




0 comments :

Post a Comment