திருநர் சமூகத்தின் வாழ்வுரிமையின் குரலாய் …..

Posted by அகத்தீ Labels:

 





திருநர் சமூகத்தின் வாழ்வுரிமையின் குரலாய் …..

 

 

என் இனிய நண்பரும் எழுத்தாளருமான தோழர் சு.சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” நாவலைப் படித்த பிறகே திருநங்கை ,திருநர் இவர்கள் பற்றி புரிந்து கொள்ளத் தொடங்கினேன் .என்னுள் இருந்த பழுதான பார்வை விலகத் தொடங்கியது .அந்த நூலை சு.சமுத்திரம் எழுதுகிற காலகட்டத்திலும் அதன் பின்னரும் அவருடனான உரையாடல்களில் அந்த உலகம் தனித்துவமானது என்பதும் ,அதனை முழுவதுமாக உள் வாங்க விசாலப் பார்வையோடு இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெளிந்தேன்.

 

லிவிங் ஸ்மைல் வித்யா (Living Smile Vidhya) எழுதிய தன் வரலாற்று நூல் நான், வித்யாஎன்னுள் மேலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது . அதைப்போல மு.ஆனந்தனின் “கைரதி 377” என்னை உலுக்கியது . இதன் முன்னும் பின்னுமாய் வெளிவந்துள்ள வேறு பல சிறுகதைகளும் நூல்களும் அந்த உலகின் ஆழ அகலத்தை அறிய ஆர்வத்தை மேலும் கிளர்த்தின .

 

1970 களில் நான் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய போது திருநங்கை ,திருநர் ,ஓரினச் சேர்க்கையாளர் பற்றிய தவறான பார்வையே என்னுள் இருந்தது . நான் நெருங்கிப் பழகிய வழிகாட்டியாக வாய்த்த தலைவர்கள் பலரும் இவர்கள் குறித்த அருவருப்பான பார்வையையே கொண்டிருந்தனர். அன்றைய புரிதல் மட்டம் அவ்வளவே .சு.சமுத்திரம் நாவல் என்னுள் உடைப்பை ஏற்படுத்தியது .

 

கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் ஒரு கிறுத்துவப் பாதிரியார் நடத்திய உரையாடல் [ தோழர் அ.குமரேசன் மொழிபெயர்ப்பில் ] நூலாக வெளிவந்த போது அதில் LGBTQIA குறித்த கேள்விக்கு காஸ்ட்ரோ நேர்மையாகப் பதில் சொல்லி இருந்தது ஈர்த்தது . அதாவது கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பகுதியினர் LGBTQIA உரிமையை மனித உரிமையாக ஏற்க மறுப்பதைச் சுட்டிக்காட்டி  தாம் அவ்வாறு கருதவில்லை என்றும் ஆனால் கட்சிக்குள் அதை திணிக்க முடியாது பரவலான உரையாடல் மூலம் ஏற்கச் செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் முயன்றுவருவதாகவும் சொன்னார் . அதைப் படித்த பின்னர் திருநங்கைகள் ,திருநர்கள் வாழ்வு சார்ந்து பல நூல்கள் வெளிவர வேண்டியதின் தேவை புரிந்தது . அத்தகைய நூல்களை தேடி வாசிக்கத் துவங்கினேன்.

 

தன் வரலாற்று நூலான ”அவளுக்குள்ள தூரம்”  எனும் இந்தப் புத்தகம் கேரளாவில் மலையாளிகள் மத்தியில் LGBTQIA பற்றிய பார்வை எப்படி மிகவும் பழுதுபட்டதாக இருந்தது , எப்படி படிப்படியாக மாறிவருகிறது , இடதுசாரிகளின் பங்களிப்பு என்ன  என்பதை எல்லாம் அலசுகிறது . திருநர் சமூகத்தின் வாழ்வுரிமையின் குரலாய் ஒலிக்கிறது .ஆக இந்நூல் மிக முக்கியமானது எனக் கருதுகிறேன்.

 

விஜயகுமார் நாயர் - உஷா விஜயன் தம்பதியரின் இளைய மகன் விநோத் தன்னுள் இருக்கும் பெண்மையை எப்படி உணர்ந்தான் ,சமூகம் எப்படிச் சீண்டியது , ஊரும் உறவும் எப்படி அவமானப்படுத்தியது , எங்கெல்லாம் ஓடினானான் ,என்னென்ன நெருக்கடிகளை ,இழிவுகளை ,சோதனைகளை,  வலிகளை எதிர்கொண்டான் என்பதை இந்நூல் பேசுகிறது .தன் அப்பா ,தம்பி எல்லோரும் புறக்கணித்த போதும் அம்மா எப்படி அரவணைத்தார் என்பதும் நம்மையும் ஆறுதல் கொள்ளச் செய்கிறது..

 

வழக்கமாகத் திருநர் இலக்கியத்தில் சொல்லப்படும் வாழ்வின் வலி ,ஏமாற்றம் ,அவமானம் ,சமூகத்தின் அறியாமை எல்லாம் இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது .அத்துடன்,” எப்படி வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் எழுந்து வாழவேண்டும்,” என்கிற வேட்கை இந்நாவலில் ஓங்கி நிற்கிறது .சூரியாவாக மாறிய விநோத் சந்தர்ப்பச் சூழ்நிலையால் பாலியியல் தொழில் செய்து வயிற்றை நிரப்ப நேரினும் ,பிச்சை எடுக்க நேரினும் , குப்பைத் தொட்டியிலிருந்து உணவை எடுத்து உண்ண நேரினும் மனம் குலையாமல் எப்படியாவது ஏதாவது வேலை செய்துதான் சாப்பிட வேண்டும் என்கிற வெறியோடு முட்டி மோதுகிறார் .

 

இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் தன் கலைத் திறமையைக் காட்டி முன்னேறுகிறாள்.அதில் வெற்றி பெறுகிறார் . அது அவரின் முகவரியையே தலைகீழாக மாற்றுகிறது . தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் முகம் காட்டுகிறார் .. தமிழ் பாடல் தொகுப்பொன்று வெளியிடுகிறார் .தெரு நாடகங்களில் ஜொலிக்கிறார். ஒரு நடிகையாக முத்திரை பதிக்கிறார். ஊரறிந்த முகமாகிறார் .

 

திருநங்கைகள் ,திருநர்கள் கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கிளையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையிலும் அவர் செயல்பட்டுள்ளார் . மதவாதத்தை சாதியத்தை எதிர்த்துள்ளார் . பாஜகவும் காங்கிரசும் சூரியாவை தங்கள் மேடைகளில் ஏற்ற முயன்ற போது அரசியல் உறுதியுடன் மறுத்திருக்கிறார்.. தன் சக இனத்தவருக்கு தொண்டு செய்துள்ளார் . கொரானா காலத்திலும் தொய்வின்றி செயலாற்றி உள்ளார்.

 

பாலுறுப்பு மாற்று சிகிட்சை செய்து பெண்ணாக மாறிய சூரியாவும் ; பாலுறுப்பு மாற்று சிகிட்சை செய்து ஆணாக மாறிய இஷானும் காதலித்து  திருமணம் செய்து கொண்டது கேரளாவில் பெரும் பரபரப்புச் செய்தியானது . சமூக நலத்துறை டீச்சர் சைலஜா இந்த திருநங்கை திருநர் தம்பதியரை அழைத்து விருந்து கொடுத்தது ; பினராய் விஜயன் முதல்வராக உள்ள இடதுசாரி அரசின் திருநர் கொள்கைக்கு சாட்சியானது .

 

மு.ஆனந்தன் சொல்வதுபோல் ,” உயிரும் உணர்வும் இரத்தமும் சதையுமாகப் பேசுகிறது இந்நூல் .அதே சமயம் இந்த கேடுகெட்ட சமூகம் என்னதான் வஞ்சித்தாலும் வசைபாடினாலும் புறந்தள்ளினாலும் வாழவேண்டும் என்கிற அவளுடைய துடிப்பும் துள்ளலும் துணிவும் ஒவ்வொரு பத்தியிலும் ஊடாடிக்கிடக்கிறது .வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் வருமானத்திலும் நிகழ்ந்த வீழ்ச்சிகளை .மேலெழுந்த தருணங்களை ,காதல் ஊஞ்சலாடிய வசந்தங்களின் வாஞ்சையை ,ஆதரவு அளித்து ,அரவணைத்த மனிதங்களை உயிரோட்டமாகப் பேசுகிறது .”

 

அதே உணர்வுடன்மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்துள்ள மு.ந. புகழேந்திக்கு வாழ்த்துகள் .

 

தமிழ் இலக்கியச் சூழலைவிட மலையாள இலக்கிய வெளியில் திருநர் இலக்கியம் வெகு தாமதமாகவே துளிர்த்துள்ளது என முன்னுரையில் மு.ஆனந்தன் சொல்கிறார் .நூலிலும் அதற்கான சாட்சியம் உள்ளது .

 

 

LGBTQIA இந்த ஏழு எழுத்து சொல்லுக்கு பின்னால் உள்ள பாலின /பாலியல் வேறுபாடுகளுக்கும் அதன் வலி மிகுந்த வாழ்க்கைக்கும் முழுப் பொருளை அறிவோமா ? ஆண் தன்பாலின ஈர்ப்பாளர் , பெண் தன் பாலின ஈர்ப்பாளர் , இரு பாலின ஈர்ப்பாளர் ,மாற்று பாலினத்தவர் ,இடையினத்தவர், திருநர்கள் ,திருநங்கைகள் இப்படி எழு வகையினரும் இது போன்றோருமே LGBTQIA என அழைக்கப்படுகின்றனர் .இவர்களின் மனித உரிமை இன்று பேசுபொருளாகி உள்ளது . “வானவில்” என அழைக்கப்படுகிற இவர்களை இவர்களின் ஆசாபாசங்களை உணர ஈரமும் விசாலமும் மிக்க இதயமும் அறிவியல் பார்வையும் தேவை .இப்போது இடதுசாரிகளிடம் வலுப்பெற்று வருகிறது. மதவாதிகளிடம் இதை எதிர் பார்க்கவே முடியாது .

 

இது போன்ற நூல்களை வாசிப்பது புரிதல் மட்டத்தை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

 

அவளுக்குள்ள தூரம் , சூரியாவினுடைய வாழ்க்கைக் கதை

ஆசிரியர் : டாக்டர் ரெஸ்மி.ஜி ,அனில் குமார் .கே.எஸ்,தமிழில் : மு.ந.புகழேந்தி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,
E mail : 
bharathiputhakalayam@gmail.com  www.thamizhbooks.com
பக்கங்கள் : 416 , விலை : ரூ.460 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

18/09/24.


0 comments :

Post a Comment