அந்த மந்திரக்கோல்

Posted by அகத்தீ Labels:

 




அந்த மந்திரக்கோல்

ஒன்று

உங்களிடம் இருந்தால் போதும்

தகுதி ,தரம் ,திறமை ,பதவி எல்லாம்

தானாய் உங்கள் வீடு தேடி வரும் …

 

மந்திரக்கோல் சும்மா கிடைக்காது

  “சடங்கு” “சாஸ்திர” ஞானம் வேண்டும்

சாஷ்டாங்க நமஸ்காரம்

செய்யத் தெரிய வேண்டும்.

 

மூலவர் மனம் குளிர

உற்சவ மூத்திகளுக்கு

சொர்ண தானம் பொக்கிஷ தானம்

வாரி வாரி வழங்க வேண்டும் …

தரித்திரனுக்கு கூடாது மாம்பழ ஆசை !

 

காலிலே விழுந்து கிடந்தாலும்

 “கணபதிக்கு” மட்டுமே

அருளப்படும் மாம்பழம் எனும்

 “சாஸ்திர ரகசியம்” தெரிய வேண்டும் !

 

 ”நீட்”டும் தட்சணைக்கு ஏற்ப

அருளாசி உண்டு !

 

அம்புடுத்தான்….

 

சுபொஅ.

01/07/2024.

 

 

ஜெகந்நாத் ஆசீர்வாதம் !

Posted by அகத்தீ Labels:

 

நந்தவனத்தில்

பட்டாம் பூச்சிகளும்

வண்டுகளும்

தேனிக்களும்

வட்டமிடுவதா ?

வலையால் மூடு !

ஈ எறும்பு புழு பூச்சி

எதையும்

உள்ளே அனுமதிக்காதே !

நந்தவனத்தை பார்வையிட

மகாராஜா வருகிறார் !

 

அய்யையோ !மகாராஜாவுக்கு

பச்சை வண்ணம் பிடிக்காதே !

இலைகளுக்கு காவி வண்ணம் பூசு

எல்லா மலர்களும்

ஒரே வண்ணத்தில் இருந்தால்தான்

மகாராஜா மனங்குளிர்வார்

காவி வண்ணத்தை

கலக்கி எங்கும் ஊற்று !

 

குரங்குகள்

மகாராஜாவின் செல்லப்பிராணி

குடியானவனின் வாழைத்தோப்பில்

குரங்குகளை ஆட்டம் போடவிடு !

பியத்து எறிந்தால் என்ன ?

அது ராமனின் ஆசீர்வாதம் !

தப்பு தப்பு

ஜெகந்நாத் ஆசீர்வாதம் !

 

சு.பொ.அ.

 


அவன்....????

Posted by அகத்தீ Labels:

 

அவன்....????


அவன்

வேதத்தைக் கரைத்துக் குடித்தவன்.

 

அவன்

பைபிளைக் கரைத்துக் குடித்தவன்

 

அவன்

குரானைக் கரைத்துக் குடித்தவன்

 

ஆன்மீக வெள்ளத்தில்

நீந்தித் திளைத்தனர்

ஆனால் என்ன

மனிதத்தைத்தான்

மறந்தே போனார்கள் !

 

சுபொஅ.


எங்கெங்கும் போதை ராஜ்யம் ….

Posted by அகத்தீ Labels:

 


எங்கெங்கும் போதை ராஜ்யம் ….




நேற்று ஜூன் 26 ‘உலக போதை ஒழிப்பு தினம்’ உலகெங்கும் கடைப் பிடிக்கப்பட்டது .
1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய [தீர்மானம் எண் 42/112 / 7th டிசம்பர் 1987 ] தீர்மானத்தின் படி ” உலக போதை எதிர்ப்பு தினம் “ உலகெங்கும் கடைப் பிடிக்கப்படுகிறது .
பல்வேறு நாடுகள் கடும் சட்டங்கள் ,கடும் தண்டனைகள் , சர்வதேச உடன்படிக்கைகள் அனைத்தையும் மீறி போதை பொருட்கள் நடமாட்டம் உலகெங்கும் பருத்து வீங்கிக்கொண்டே போகிறது .
அமெரிக்க உளவுத் துறை முதல் இந்திய உளவுத்துறை வரை பேச்சும் செயலும் வெவ்வேறாகவே இருக்கிறது .
போதை மருந்து குறித்த புள்ளிவிவரங்கள் சில
உலக அளவில் ஆண்டு தோறும் 4,00.00,00,00,000 டாலர் அதாவது நாற்பதாயிரம் கோடி டாலர் [ இதனை இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.83.68 ஆல் பெருக்கிக் கொள்க ] இந்த போதைச் சந்தையில் புழங்குகிறது .
உலக அளவில் 80 விழுக்காடு போதைப் பொருட்கள் சட்டவிரோத கடத்தல் மூலமே நடக்கிறது.
கொக்கைன் ,ஹிராயின் ,கஞ்சா ,அபின் , போதை தரும் பான்பராக் ,போதை தரும் ஒருவகை பீடா ,போதை கலந்த ஐஸ்கிரீம் என பல உண்டு .
இவை மட்டுமல்ல எல் எஸ் டி ,ATS [ amphetamine and others செயற்கை இரசாயணம் மூலம் அதி போதை ஊட்டும் பொருட்கள் இதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.] போன்றவையே உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது .
உலகெங்கிலும் இருக்கும் 15- 64 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு ஆறுபேரிலும் ஒருத்தர் இந்த சட்டவிரோத போதைக்கு அடிமையாகி உள்ளனர் .
உலகெங்கும் 2017 ல் போதையால் செத்தோர் கணக்கு மட்டும் சுமார் இரண்டு லட்சம் [193,000 ] இன்று இது மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது .
உலகெங்கும் 2021 கணக்குப் படி கிட்டத்தட்ட 29,60,00,000 அதாவது 29 கோடிப்பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர் . 2023-24 ல் இந்த எண்ணிக்கை மேலும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்திருக்கிறது .
உலகின் போதை தங்கப் பிறை என்று அழைக்கப்படுகிற ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ,ஈரான் போன்ற நாடுகளுக்கும் ; போதை தங்க நாற்கரம் என அழைக்கப்படும் மியான்மர் ,தாய்லந்து ,லாவோஸ் ,வியட்நாம் நாடுகளுக்கும் இடையே இந்தியா நசுக்குண்டு கிடக்கிறது .
இப்படி சில நாடுகளை மட்டும் வகைப்படுத்துவதில் அமெரிக்க உளவுத்துறையின் கைவரிசையும் உண்டு , தாலிபான் போன்ற மதவாத பயங்கரவாத அமைப்புகளும் உண்டு . இதுபோல் ஆப்பிரிக்க நாடுகள் ,தென் அமெரிக்க நாடுகள் மீதும் அமெரிக்க உளவுத்துறை வசை பாடுவதும் உண்டு . போதையைக் காரணம் காட்டி அருகிலுள்ள தீவுகளை ஏகாதிபத்தியம் ஆட்டையப் போட்டதும் உண்டு . இந்த அரசியல் தனி.
உலக போதை மண்டலங்களுக்கு இடையே நசுக்குண்டு கிடக்கும் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது . ஆங்காங்கு கொஞ்சம் கஞ்சா பயிரிட்டாலும் இந்தியா போதை மருந்துகளின் உற்பத்தி மையம் அல்ல ; கைமாற்றும் கடத்தல் வழிப்பாதையே . கைமாற்றும் போது ஒழுகுகிற போதையின் பயன்பாடே இந்தியாவில் கவலையளிக்கும் விதத்தில் பெருத்துக்கொண்டே போகிறது .
இந்தியாவில் போதைப் பொருட்களின் நுழைவு வாயில் குஜராத் துறைமுகமும் மும்பை விமான நிலையமுமே . உத்திரபிரதேசம் , மகாராஷ்டிரா , பஞ்சாப் மூன்றும்தான் இந்தியாவில் போதைப் பொருட்கள் அதிகம் உலாவும் இடமென ஒன்றிய மாநிலங்களவையிலேயே அமைச்சர் தெரிவித்தார்.
இதில் வேடிக்கையான ஒரு செய்தி , உலகெங்கும் இந்த போதை மருந்துகள் தயாரிப்பு ,கடத்தல் ,விற்பனை இவற்றுக்கு உலகு தழுவிய மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பு இருக்கிறது . இதில் பெரும் கோடீஸ்வரர்களும் தாலிபான் போன்ற பயங்கரவாதிகளும் தொடர்பு கொண்டுள்ளனர் .அதே போதில் இதன் மூலம் சாதாரண அடித்தட்டு ஏழைகள் ஏதோ ஒரு வகையில் வேலையும் கூலியும் பெறுகின்றனர் .இப்படி வாழ்வாதாரத்துக்கு போதையை நம்பி இருப்போர் பல கோடியாகும்.
பாட்டி சொன்ன மந்திரவாதி கதையின் மர்ம முடிச்சைவிட நூறுமடங்கு பெரிய மர்ம முடிச்சைக் கொண்டது இந்த சட்டவிரோத போதைச் சந்தை .
இதற்கு மதம் இல்லை .நாடு இல்லை .மொழி இல்லை .எங்கும் பரவியிருக்கும் விஷச் செடி . ஆங்கும் எங்கும் நீக்கமற நிரம்பி இருக்கும் விஷச் செடி இது .
இதன் ஆழமும் அகலமும் தெரியாமல் இங்கே குண்டு சட்டிக்குள் உள்ளூர் அரசியலோடு போதையைக் கலந்து குறுக்கு சால் ஓட்ட முயல்கிறார்களே தவிர ; போதைக்கு எதிரான விழிப்புணர்வும் அரசியல் உறுதியும் கிட்டத்தட்ட இந்தியாவில் எங்கும் இல்லை. இதுதான் சோகம் . [இடதுசாரிகள் மட்டும் விதிவிலக்கு ]
[ இது குறித்து ஒரு ஏட்டுக்கு கட்டுரை எழுத முனைந்த போது உருவான முதற் கட்ட தகவலறிக்கை எப் ஐ ஆர் [ FIR ]இது.]
சுபொஅ.
27/6/24.



வான் முட்டத் தேடினாலும்.....

Posted by அகத்தீ Labels:

 




அவமானங்களை ,துரோகங்களைச் சந்திக்காத

ஒருவரைத் தேடுகிறேன் நெடுநாளாய்

 

பார்க்கின்ற ஒவ்வொருவரும்

பதறவைக்கும் கதையன்றோ சொல்கின்றார்

 

வென்றவரும் சொல்கின்றார் சந்தித்தவற்றை

ஒருபோதும் சொல்லவில்லை தான் செய்தவற்றை

 

தோற்றவரும் சொல்கின்றார் பட்டவற்றை

ஒருபோதும் சொல்வதில்லை தன்பக்கத் தவறுகளை

 

நான் மட்டும் விதிவிலக்கா ? சுத்தசுயம்பா ?

வான் முட்டத் தேடினாலும் குறையில்லா மனிதரில்லை.

 

எடை போட்டு கொள்வன கொள்க! – ஊர் உலகம்

தழைக்க ஓர் அடியேனும் முன்னோட்டு செல்க !

 

சுபொஅ.

18/06/24.


’பஞ்சமா’ கோபால் ஸ்வாமி ஐயர்.

Posted by அகத்தீ Labels:

 



’பஞ்சமா’ கோபால் ஸ்வாமி ஐயர். 

 

இன்றைக்கு படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லை ; படிக்காமலே பெரும் செல்வந்தராகலாம் , பெரும் தொழிலதிபராகலாம் என பாண்டேக்களும் சங்கிகளும் EWS அரியவகை ஏழைகளும் உபதேசிக்கின்றனர் . அமைச்சர் பதவி கிடைத்ததும் பார்ப்பனர்களுக்கு உதவியாக ஒடோடி வருவேன் எனப் பேசும் சங்கி முருகன்களைப் பார்க்கிறோம் .ஆனால் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் படிப்பை உயர்த்திப் பிடித்த ஒரு ஐயரின் வாழ்க்கையும் வாக்குமூலமும் அறிவீரோ!

 

“ ‘ஈனர் குலத்திற்கு உழைத்தது அந்தணர் குலத்துக்கு அவமானம்’ என ஜாதியிலிருந்து ஒதுக்கப்பட்டார் .தன் சொந்த வீட்டிலேயே தீண்டப் படாதவனாகத் தூர இருக்கச் செய்து குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.தனியறையில் பிரித்து வைக்கப்பட்டார்.பஞ்சமர்களோடு ஒன்றிவிட்ட இவர் ‘ பஞ்சமா கோபால் ஸ்வாமி’  என்ற கேலிப் பெயரில் அறியப்பட்டார் .”

 

கோபால ஸ்வாமி ஐயர் குடும்பம் மிகவும் கெட்டியான வைதீக பார்ப்பனக் குடும்பம் .குடும்பத்தில்  நீதிபதிகள் ,உயரதிகாரிகள் அதிகம் . கோபால் ஸ்வாமி ஐயரும் நன்கு படித்தவர் . மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரின் நன்மதிப்பைப் பெற்று அவரின் பிரநிதிகள் சபையில் அங்கம் வகித்தவர் .

 

கோலார் தங்க வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெற தன் செல்வாக்கையும் தன் தன் பங்கான குடும்ப செல்வத்தை வாரி இறைத்தார்.காலம் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் பொதுத் தொண்டில் கழித்தார் .பெங்களூரில் பயிலும் தங்க வயல் [ KGF ] தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பிற விடுதிகளில் சாதிய ஆதிக்கம் காரணமாக இடம் மறுக்கப்பட்டபோது , கோபால் ஸ்வாமி ஐயர் மைசூர் ராஜாவிடம் வாதாடி ராஜா பெயரில் நரசிம்ம ஹாஸ்டல் துவங்கி தங்க வயல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயன் பெறச் செய்தார் . தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்கல்வி பெற ஆக்கமும் ஊக்கமும் அளித்து வழிகாட்டினார்.பல நிறுவனங்கள் ,கல்லூரிகள் எங்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்றும் , பல சான்றோர்களோடு உரையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தும் கல்வி பெறும் ஆர்வத்தை கொழுந்துவிட்டெரியச் செய்தார்.

 

ஆபத்தான சுரங்கத் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் உழைப்பாளர் வீட்டுப் பிள்ளைகள் படிப்பால் முன்னேற வீடுவீடாகச் சென்று ஊக்கம் அளித்தார்.ஆங்கிலத்தில் திணறும் மாணவர்களுக்கு உடன் இருந்து பயிற்சி அளித்தார் .பட்டப் படிப்பு படித்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாமல் போனாலும் உயர் பதவிகள் கிடைக்க தன் செல்வாக்கைப் பயன்படுத்தி உறுதுணையாய் இருந்தார் .நாத்திகரான தொழிற்சங்கத் தலைவர் முத்துகுமார் இவரை  “கற்றுக் கரையேற உதவிய கண்கண்ட தெய்வம்” என்கிறார் .

 

1941 ஆம் ஆண்டு சாகும் தருவாயில் தன்னைச் சுற்றி இருக்கும் மாணவர்களிடம் கடைசியாகச் சொன்னது என்னவெனில் ,

 

“ தாழ்த்தப்பட்டவர்கள் மனிதர்களாக வாழவேண்டுமானால் கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும் .உங்கள் இன மக்களைக் கைவிட்டு விடாமல் எல்லோரும் கல்விபெற தொண்டு செய்யுங்கள்!”

 

இன்றைக்கு மேலே வந்துவிட்ட ஒடுக்கப்பட்டோர் பலர் தான் வந்த வழியை மறந்து தன்னை மநுதர்ம பார்ப்பனர் போல் கருதி மேல்நிலையாக்கிக் கொள்கிறார்களே என் செய்ய ?

 

[ கோபால் ஸ்வாமி குறித்த தகவல் ஆதாராம் :கோலார் தங்க வயல் வரலாறு , K.S.சீதாராமன்,M.A. ]

 

சுபொஅ.

14/6/24.

 


“நந்தனார்” படத்தை திரையிடுவதைத் தடுத்த மக்கள் : ஏன் ?

Posted by அகத்தீ Labels:

 



 “நந்தனார்” படத்தை திரையிடுவதைத் தடுத்த மக்கள் : ஏன் ?

 

கே.பி.சுந்தராம்பாள் 1936 லும் , M.M. தண்டபாணி தேசிகர் 1942 லும் நடித்த புகழ் பெற்ற  ‘நந்தனார்’ திரைப்படங்களில் ‘ஆண்டான் அடிமை’ வேற்றுமை ,சேரிவாழ்க்கை மிகைப்படுத்தப்பட்டுப் புலையனும் தீக்குளித்துப் பரிசுத்தனாகிப் பூணூல் அணிந்த பின்னரே மோட்சமடைவதாகக் காட்டப்பட்டதால் அந்தப் படங்களை தங்கவயலில் [KGFல்] திரையிடக்கூடாது எனத் தோன்றிய போராட்டத்தினால் நந்தனார் படங்கள் தங்கவயல் எல்லைக்குள் இன்றுவரை [ இந்நூல் வெளிவந்த 1989 ஆக இருக்கக்கூடும்] வரவில்லை .கலையம்சம் ,  இசைச் சிறப்பின் பொருட்டு பார்க்க விரும்பியவர்கள் அன்றைய பெளரிங் பேட்டைக்கும் [பங்காருப் பேட்டை] பெங்களூருக்கும் சென்று பார்க்க நேர்ந்தது .ஆதிதிராவிட சமூகப் பிரமுகர்கள்  இசையரசு தண்டபாணி தேசிகரை நேரில் சந்தித்து கண்டனம் செய்து நந்தனார் படத் தயாரிப்பாளர்கள் வருணாச்ரமப் பிரிவினையைப் புகுத்திய சூழ்ச்சியினை புரிந்து கொள்ளாமல் அவர் நடித்தது தவறு என மன்னிப்பு கோரவைத்தனர்.”

 

[ பக்கம் : 190 , கோலார் தங்கவயல் வரலாறு . K.S.சீதாராமன்,M.A. 1989 ல் வெளியான நூல் ]

 

 “படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மறியல்கள் செய்து ,திரையரங்குகளை வெடி வைத்து தகர்க்கும் நிலை உருவாகி…” என நூலில் 290 ம் பக்கமும் குறிப்பிடுகிறார் .

 

இச்செய்தியை இந்நூலில் வாசித்த போது  1936 /42 களிலேயே வெளிப்பட்ட அன்றைய பார்வைக் கூர்மை வியக்க வைத்தது . நூல் குறித்து பின்னர் எழுதுகிறேன்.

 

சுபொஅ.

13/06/24.



‘ஞானத்தின் திறவுகோல்’.

Posted by அகத்தீ Labels:

 


வாட்ஸ் அப் பல்கலைக் கழகம்

ஒவ்வொருவரையும்

  ‘எல்லாம் தெரிந்த ஏகாமபரம்’ ஆக

மாற்றிக் கொண்டே இருக்கிறது…

ஆனாலும் கடைசிவரை

 ‘ஞான சூன்யம்’ ஆகவே

இருந்து தொலைக்கிறார்கள்…

கோளாறு நீங்கள் தேர்ந்தெடுத்த

பல்கலைக் கழகம்தான்….

எல்லாவற்றையும் வாசி

சொந்த மூளையை தொலைத்துவிடாதே !

அவ்வளவுதான்

‘ஞானத்தின் திறவுகோல்’.

 

சுபொஅ.

13/06/24.

 


ஏன் புலம்பிக்கொண்டிருக்கிறீர் !

Posted by அகத்தீ Labels:

 



நேற்றைய கிராமங்கள்

இன்றைக்கு இல்லை

எவ்வளவோ மாறிவிட்டன

ஆயினும் , சாதியம் சாகாமலிருக்கிறது…

 

நேற்றைய நகரங்கள்

இன்றைக்கு இல்லை

எவ்வளவோ மாறிவிட்டன

ஆயினும் , மனிதம் மங்கிக்கொண்டிருக்கிறது..

 

நேற்றைய மனிதர்கள்

இன்றைக்கு இல்லை

எவ்வளவோ மாறிவிட்டனர்

ஆயினும் , மனிதர்களாகவில்லை….

 

பெரியவரே ! ஏன் புலம்பிக்கொண்டிருக்கிறீர் !

காலம் தன் தேவைக்கு  ஏற்ப

புதிய அளவுகோல்களை தயாரித்துக்கொண்டே இருக்கின்றது..

கூடவே சமத்துவதுக்கான சம்மட்டிகளையும்தான்…

புது யுகத்துக்கான … புதிய மனிதனுக்கான…

போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது …

 

சுபொஅ.

12/6/24.

 


தாமிரபரணி தீரத்து வாசம் மிகுந்த….

Posted by அகத்தீ Labels:

 



 


தாமிரபரணி தீரத்து வாசம் மிகுந்த….

 

“ பாத்திரங்கள் இந்த சமூகத்தில் நாம் அன்றாடம் காணும் மனிதர்களே . நடந்த அல்லது நடக்கக்கூடிய நிகழ்வுகளை பதிவு செய்வதே சிறுகதை…….. …” என முன்னுரையில் தான் ஒரு இலக்கணத்தை வகுத்துக் காட்டியிருக்கிறார் தோழர் .வீ.பழனி .

 

அது மட்டுமல்ல ,”பாத்திரங்களைத் தேர்வுசெய்வதுதான் ஒரு படைப்பாளனின் வேலை.மற்றபடி அனைத்து நிகழ்வுகளையும் ,முடிவு உட்பட பாத்திரங்களே முடிவு செய்து கொள்கிறார்கள்…” என்றும் தோழர். வீ.பழனி வரையறுத்திருக்கிறார் .

 

இது சரியா தவறா என்பதை இலக்கிய ஜாம்பவான்கள் விவாதிக்கட்டும் .ஆயின் நூலாசிரியரின் , “தாமிரபரணி தீரத்து சிறுகதைகள்” நூலில் உள்ள எழுபது சிறுகதைகளும் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளன.

 

நூலாசிரியருக்கு தாமரபரணி தீரத்து பூகோளம் ,நீர் வளம் ,நிலவளம் ,சாதி அடர்த்தி , புழங்கு மொழி , பயிர்தன்மை,சமூகப் பிரச்சனைகள் எல்லாம் நன்றாகத் தெரியும் .ஒவ்வொரு கதையும் அதற்குச் சாட்சி . ஏனெனில் இவற்றை வரைந்து காட்டாத கதை ஒன்றுகூட இல்லை.

 

முதல் கதை  “கணக்கு பாடம்”ஜோதிடத்துக்கு எதிரான மெலிதான பகடியாக அமைந்ததால் .அடுத்தடுத்து அதைபோல் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள் . ஆயினும் “ ஒத்த தும்மல்” “ நன்று ,கடவுள் இல்லை”,” தொக்கம்” போல் சிலகதைகள் முதல் கதை தடத்தில் பயணித்துள்ளன. “பொதுவாழ்க்கை” எனும் கடைசி கதை தன்னலம் பாராது ஊருக்கு உழைக்கும் கருப்பையாவைப் பற்றியது .பொதுநலம் சார்ந்தது . ஆனால் எல்லா கதைகளையும் இப்படிச் சொல்ல முடியாது .

 

“ அவர் ஓர் கம்யூனிஸ்ட்” ,”அரசியல் வேண்டும்”,” காஸ்ட்டிரோ முடிதிருத்தகம்”  “ தலைவர் வாழ்க “ ,” கொடியேற்றுவோம்” போன்ற சில கதைகள் அரசியலை  நேரடியாகவே பேசுகிறது .

 

சாதிய ஒடுக்குமுறை சிலகதைகளில் பேசப்பட்டுள்ளது .” குடிமகன் சுப்பையா “ என்ற கதையில், மகனுக்கு வேலைகிடைக்க சாவு சடங்கு செய்யும் சுப்பையா  ஊரைவிட்டு  வெளியேறுகிறான் . அந்தக் கதையின் கடைசி வரியில் “ நாம் ஆளுக்கொரு வேலையைச் செய்ய வேண்டியதுதான் .” என முடிகிறது . அவ்வளவு சுலபமாகவா இன்றைய கிராமங்கள் இருக்கின்றன .

 

 “ சித்தி” கதையில் சாதி மாறி இரண்டாம் மணம் முடித்த கணவன் இறந்து போக ,  “,சித்தி உள்ளே வாங்க…”/ ஜெயந்தி முக்காடு போட்டுக்கொண்டு உள்ளே போகிறார் ./ காசி ,கணபதி,சேகர்.மணி தவிர மற்ற ஆண்கள் வீட்டிலிருந்து வெளியேறினார்கள். இப்படி சாதிய முகத்தை தோலுரித்து முடிகிறது . இப்படி சில கதைகள் உண்டு .

 

காதல் ,மணமுறிவு ,மறுமணம் ,சாதிமறுப்பு திருமணம் எல்லாம் இயல்பு போக்கில் இந்நூலில் சிறுகதைகளில் நடந்தேறி விடுகின்றன . அவ்வளவு எளிதாகவா சமூகம் இருக்கிறது ?

 

நூலாசிரியர் முதுகலை தமிழ் பட்டதாரி என்பதும் ,ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கம்யூனிஸ்ட் கடசி அரசியல் களப்பணியாளர் என்பதும் கூடுதல் பலம் .அவர் கண்டும் ,கேட்டும் ,அனுபவித்தும் அறிந்த பல மனிதர்களை கதாபாத்திரங்கள் ஆக்கி தாமிரபரணி தீரத்தில் நெல்லைத் தமிழில் சுவைபட தந்துள்ளார் .

 

கதைக்களம் பற்றிய நுட்பமான பல தகவல்களை வாழ்வனுபவத்தோடு அள்ளித் தெளிக்கிற நூலாசிரியர் ; கிராமங்களில் இயல்புப் போக்கில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுகிற ஆசிரியர் ; உள்ளுக்குள் கனந்து கொண்டிருக்கும் நெருப்பை காணவில்லையா ? தவற விட்டுவிட்டாரா ?

 

தாமிரபரணி தீரத்து சிறுகதைகள் ,

ஆசிரியர் : வீ.பழனி ,

வெளியீடு : அ ஆ இ பதிப்பகம் , 27,அழகர் நகர் , பெருமாள்புரம் அஞ்சல் ,பாளையங்கோட்டை ,திருநெல்வேலி – 627 007 .

தொடர்புக்கு : 94433 91196 / 63816 48023 /  

palanicpm55@gmail.com

பக்கங்கள் : 416  , விலை : ரூ.300/

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

1/06/2024.