அரசு + கோயில் + பெரும்வணிகம் = இந்துத்துவ கொடும் விஷம்

Posted by அகத்தீ Labels:அரசு + கோயில் + பெரும் வணிகம் = இந்துத்துவ கொடும் விஷம்


சு.பொ.அகத்தியலிங்கம் .

 “கடவுள் சந்தை” எனும் நூலின் தலைப்பே அதிர்ச்சியும் ஈர்ப்பும் கொண்டது .கடவுளும் மதமும் வியாபாரப் பொருளாக்கப்படுகிறதா அல்லது கூட்டாளியாகி பெரும் சீரழிவுக்கு காரணமாகிறதா? இந்நூல் பேசுவது இதைத்தான்.

“உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது.”எனும் உபதலைப்பு நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும் எனும் உந்துதலை ஏற்படுத்திவிட்டது .

நூலை வாசித்து முடித்தபின் நம்மை அறியாமலே நம்மிடம் அவ்வப்போது தலைநீட்டும் இந்துத்துவ செயல்பாடுகளை சுயஆய்வு செய்ய அகநெருப்பை மூட்டிவிடுகிறது .  

அரசு – கோயில் – பெருவணிகக் கூட்டின் மூலம் ஓங்கும் இந்துத்துவம் குறித்த மெய்விபரங்கள் நம்மிடம் புதிய விவாதத்தை தட்டி எழுப்புகிறது .

இந்நூல் அறிமுகம் உள்ளிட்டு ஆறு அத்தியாயங்களும் அதற்குமேல் பின்னினைப்புகளும் கொண்டது .

13 பக்க அறிமுகம் பகுதியில் நூலின் சாரத்தை பிழிந்து தந்திருக்கிறார் ஆசிரியர் . உலகமயமாக்கல் திறந்துவிட்ட புதிய வாய்ப்பினை இந்துத்துவம் எப்படி நுட்பமாய் கைக்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளது என்பதை எடுத்துகாட்டுவதே இப்புத்தகத்தில் ஓட்டுமொத்த நோக்கென இதில் சொல்லிவிடுகிறார் . ஆம். இதில் ஆசிரியர் தன் இலக்கை எய்துள்ளார் .

 “ இந்துத்துவ கருத்தியலும் தாராளமயப் பொருளாதாரமும் ஒத்துச் செல்லக்கூடியவை மட்டுமல்ல ,ஒன்றுக்கொன்று ஈடு செய்யக்கூடியவை.” என்கிற அய்ஜாஸ் அகமதுவின் மேற்கோள் பொருத்தமாக முதலில் இடம் பெற்றுள்ளது . 59 பக்கங்கள் நீளும் இந்த அத்தியாயம் நேருகாலப் பொருளாதாரம் ,நடைமுறை அவற்றில் நற்கூறுகள் , பலவீனங்கள் , அதையொட்டி உருவான அரசியல் போக்குகள் இவற்றை விளக்குகிறது. .

நேருவியத்தை எதிர்த்த ஒரு சாரார் சமூகப்பிளவை ஊக்குவிக்கவில்லை ஆனால் இன்னொரு சாரார் சமூகப் பிளவை முன்னிறுத்தினர் .ராஜீவ் , நரசிம்மராவ் ,வாஜ்பாய் , மன்மோகன் என தாராளமயத்தின் பக்கம் நின்றோரை மிகச் சரியாக அடையாளம் காட்டுவதுடன் , எப்படி இந்துத்துவ சிந்தனை அரசின் அனைத்து துறையிலும் மெல்ல ஊடுருவ அனுமதிக்கப்பட்டது என்பதையும் நூலாசிரியர் சுட்டுகிறார் .இந்துத்துத்துவா எழுச்சிக்கு தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு உள்ளிட்டவை கடைப்பிடித்த அரசியல் பொருளாதாரக் கொள்கை வழிகோலியதையும் சுட்டுகிறார் . இந்த அத்தியாயத்தை உள்வாங்குவது அடுத்துவரும் அத்தியாயத்தை சரியாகப் புரிய உதவியாகும் .

“கடவுளரின் நெரிசல் நேரம்” எனும் அதிர்ச்சித் தலைப்பு கொண்ட 56 பக்க அத்தியாயம் இந்திய நடுத்தர வர்க்கம் மேலும் மேலும் இந்துத்துவம் நோக்கி நகர்வதை படம்பிடிக்கிறது.சடங்குகள் ,பூஜைகள் ,வழிபாடுகள் ,யாத்திரைகள் ,யோகா ,தியானம் ,புராணம் ,பகவத்கீதை என் மத்திய தரவர்க்கம் தலைதெறிக்க ஓடுவதையும் , நிர்வாகயியலோடு கீதையை மகாபாரத்தை இணைத்து பேசுவதையும் , போலி அறிவியல் மூலம் மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்துவதையும் ,இந்த அத்தியாயம் விவரிக்கிறது .

இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறது எனில் இந்து மதம் இருப்பதால்தான் ; இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் இந்து பார்வை வேண்டும் .இது போன்ற பார்வைக் கோளாறுகள் மத்திய தரமக்களிடம் ஊன்றிவிட்டதை இந்நூல் சொல்கிறது .

வேலை ,கல்வி ,வாழ்க்கை இவற்றை கேள்விக்குறியாக மாற்றியிருக்கும் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை உருவாக்கியுள்ள நிச்சயமின்மை ;அதனால் உருவாகும் மனச்சோர்வு ,பதற்றம் ,இவையே உலகெங்கும் மதவெறி மேலோங்க காரணியாகிறது .இங்கு அதுவே நிகழினும் இந்துத்துவா பேரபாயமாய் எழக்காரணமாவதை இந்நூலாசிரியர் கவலையோடு பகிர்கிறார் . 
75 பக்கங்கள் நீளும் அடுத்த அத்தியாயம் “அரசு –கோயில் –பெருவணிக கூட்டினைவும் இந்து தேசியவாதத்தின் இழிவும்.” பற்றி உரக்கப் பேசுகிறது .சடங்கு வெளிகளும் ,அரசியலாக்கப்பட்ட பொதுவெளிகளும் எப்படி இந்து குறியீடுகளால் நிரப்பப்படுகிறது என்பதை பதைபதைப்புடன் சுட்டிக்காட்டுகிறது .
கல்வி தனியார்மயமாவதும் ,ஆன்மீக சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படுவதும் ,அரசின் ஒவ்வொரு நகர்விலும் ,அரசு நிகழ்ச்சிகளிலும் ,செயல்பாடுகளிலும் இந்துமத அடையாளமோ ,மேற்கோள்களோ எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி முன்வைக்கப்படுகிறது .

படித்த மத்தியதர வர்க்கமே போலி அறிவியலை உயர்த்திப் பிடிக்க முனைப்புடன் முன்நிற்கிறது ; தனியார்மயமாகும் உயர் கல்வி இப்போக்கிற்கு உரம் தருகிறது .

இந்தியா பெற்ற ஒவ்வொரு வெற்றியும் ,ஒவ்வொரு பெருமிதமும் இந்தியாவிலுள்ள அனைத்து மத ,சாதி ,இன ,பிரதேச மக்களின் ஒட்டுமொத்த சாதனை என்பதற்குப் பதிலாய் ; அது இந்துமதத்தின் சாதனையாய் பெருமிதமாய் பார்க்கப்படுவதை வேதனையோடு நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார் .அதே சமயம் அது இந்து சனாதன பிராமணிய மேல்சாதிப் பெருமிதமாகவும் சாதனையாகவுமே முன்னிறுத்தப்படுவதை ஆசிரியர் சொல்ல மறந்தது ஏனோ ? தலித்துகள் ,பழங்குடிகள் ,ஒடுக்கப்பட்டோர் முகமும் முகவரியும்கூட அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதையும் ஆசிரியர் இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாமோ ?

அரசு –கோயில் –பெருவணிகக் கூட்டு மதநம்பிக்கை ,மதப்பெருமிதம் என்கிற கோட்டைத் தாண்டி இந்துத்துவ மதவெறியாக வேகமாய்ப் பரிணாமம் எடுப்பதினை இவ்வத்தியாயம் விவரிக்கிறது .

ஆர் எஸ் எஸ் போன்றவற்றின் சித்தாந்தம் இந்நூலில் விமர்சிக்கப்பட்டாலும் அதன் அமைப்பு பற்றிய நேரடிய விமர்சனம் இல்லை .ஆனால் அதைவிட ஆபத்தான விஷ சித்தாந்தம் கொண்ட  ‘வாய்ஸ் ஆப் இண்டிய’ போன்ற அமைப்புகள் , சீத்தாராம் கோயல் ,ராம் ஸ்வரூப் ,அருண் ஷோரி ,குருமூர்த்தி ,பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , போன்றோரின் கருத்துகளின் விஷம் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது .

இந்து மதம் தவிர பிற அனைத்து மதத்தையும் இழிந்ததாகவும் ,தகுதியற்றதாகவும் ,அழித்தொழிக்க வேண்டுமென்றும் வாதிடுவதும் , தனியாரிடம் சகலதுறைகளையும் ஒப்படைத்துவிட்டு மக்களை விதியின் விளையாட்டுப் பொருளாய் உருட்டி விளையாட அனுமதிக்கச் சொல்வதும் இவர்களின் இயல்பு .ஆர் எஸ் எஸ் உடன் சேர்ந்து நின்றாலும் இவர்களின் விஷக்கொடுக்கு அதற்கு மேலும் நீளும் என்கிறார் .இந்த பகுதி இடதுசாரிகளே இன்னும் அதிகம் பேசாத அம்சமாகும் .

40 பக்கம் கொண்ட அடுத்த அத்தியாயம் , “ மதச்சார்பின்மையாக்கம் – ஒரு மறு சிந்தனை .” இந்தியாவை மனதிற்கொண்டு எழுதப்பட்டுள்ளது .உலகெங்கும் மதச்சார்பின்மை குறித்து நடக்கும் விவாதத்தினூடே இந்தியாவின் மதச்சார்பின்மையை அடையாளம் காட்ட ஆசிரியர் பெருமுயற்சி எடுத்துள்ளார் .

“கடந்தகாலமோ இன்றோ இந்தியாவின் எல்லா சாதனைகளுக்கும் மாபெரும் இந்து மனதைக் காரணமாகச் சொல்லும் இந்து பெரும்பான்மைவாத மன அமைப்பு வளந்துவருகிறது .மேலும் மேலும் பொதுக்களத்தில் இந்துச் சடங்குகளும் குறீயிடுகளும் சொற்களும் ஊடுருவும் போது , மத அடையாளங்கள் அற்று  மக்கள் வெறும் குடிமக்களாகத் தொடர்பு கொள்ளும்  மதச்சார்பற்ற வெளி குறைந்து வருகிறது.” என வருந்துகிறார் நூலாசிரியர் ;

 “அர்த்தமுள்ள மதச்சார்பற்ற வெளிகளையும் மதச்சார்பற்ற பொதுக் கலாச்சாரத்தையும் உருவாக்குவதைவிட இன்று இருக்கும் இந்தியாவுக்கு பெரும் சவால் வேறு எதுவுமில்லை.” என அடிக்கோடிடுகிறது இந்நூல்.

இந்நூல் தலித் ,மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோணத்தில் கூர்மையாகப் பிரச்சனைகளைப் பார்த்திருப்பின் இன்னும் தெளிவு அதிகமாயிருக்கலாம் . இருப்பினும் இந்நூலை முன்வைத்து விவாதம் துவங்குவது புது வாயில்களைத் திறக்கக்கூடும் .

இந்நூலை செப்பமுற தமிழாக்கம் செய்த க.பூரணச்சந்திரன் அவர்களுக்கும் , வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்துக்கும் வாழ்த்துகள் .

ஆசிரியர் :மீரா நந்தா , தமிழாக்கம் : க.பூரணச்சந்திரன் ,வெளியீடு: அடையாளம் ,1205/1 கருப்பூர் சாலை ,புத்தாநத்தம் 621310 .திருச்சி மாவட்டம். பக் :314 ,விலை : ரூ.300/

[ இந்த நூலறிமுகத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இன்றைய [01/10/2018] தீக்கதிர் ,புத்தகமேசையில் இடம் பெற்றுள்ளது .]


2 comments :

 1. சிகரம் பாரதி

  சிறப்பான பதிவு. ஒரு நூலை முழுமையாகப் படித்து அதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே அதன் உட்கருத்தை ஆழமாக விமர்சிக்க முடியும். அருமையான நூல் நோக்கு. வாழ்த்துகள் உங்களுக்கும் நூலாசிரியருக்கும்.

  https://www.sigaram.co

 1. சிகரம் பாரதி

  உங்கள் பதிவு எங்கள் தளத்தில்:

  Click: அஅகத்தீ | நூல் விமர்சனம் | சு.பொ.அகத்தியலிங்கம் | அரசு + கோயில் + பெரும்வணிகம் = இந்துத்துவ கொடும் விஷம் https://sigaram6.blogspot.com/2018/10/kadavul-sandhai-book-review.html
  கடவுள் | உலகம் | மக்கள் | வணிகமயமாக்கம் | அரசியல் | இந்து | மதம் | சமயம் | தேர்தல் | வாழ்க்கை | நூல் மதிப்பீடு | தமிழ் | வலைத்தளம் | சிகரம்

Post a Comment