பெயரில்லா வண்ணங்கள் நிறைய உண்டு

Posted by அகத்தீ Labels:

 


பெயரில்லா வண்ணங்கள் நிறைய உண்டு

 

 

எல்லா வண்ணங்களுக்கும் பெயர் வைத்தாகி விட்டதா ?

சூரியன் மறையும் பொழுதில் .உதிக்கும் பொழுதில்

மழை மேகத்தில்  ஓடி ஒளியும் பொழுதில்

நிலவு தோன்றும் பொழுதில் ,மறையும் பொழுதில்

நிலவு வானில் ஓடி ஒளியும் பொழுதில்

இயற்கை தீட்டும் சித்திரங்களின் வண்ணங்களை

பெயரிட்டு சுட்டிக்காட்ட இயலுமா ?

பெயரில்லா வண்ணங்கள் நிறைய உண்டு

 

 

அடர்வனத்தின் வண்ண பேதங்கள்

நந்தவனத்தின் வண்ண ஓவியங்களை

எந்தப் பெயரால் சுட்டுவாய் ?

சூரியனின் வண்ண நாட்டியத்தில்

மலர்களின் வண்ண புன்சிரிப்புகளை

சொற்களால் சொல்லிவிடமுடியுமா ?

பெயரில்லா வண்ணங்கள் நிறைய உண்டு

 

 

ஒற்றையாய் எதையும் பார்ப்பவன் கோளாறு

கண்ணில் அல்ல மூளையில்

பண்மையில் மனம் கிறங்கி ரசிப்பவன்

இதயமும் மூளையும் ஒரே லயத்தில்

 

இயற்கையின் பன்முகங்களை ரசிக்காதவனிடம்

இதயத்தை மூளையை எதிர்பார்ப்பது சிரமம்தான்.

இயற்கை சமநிலை குலையும் வேளை

நியாயத் தீர்ப்பு வழங்க யாரும் மிஞ்சமாட்டார்கள் !

இயற்கையை நாள் தோறும் உற்றுப் பாருங்கள்

உங்கள் மனசு விசாலமாகக்கூடும் !

 

 

 

சுபொஅ.

18/9/2022.

உரைச் சித்திரம் : 19. முதுமையில் அசைபோட்டு மகிழ…

Posted by அகத்தீ Labels:

 

 


உரைச் சித்திரம் : 19.

 

முதுமையில் அசைபோட்டு மகிழ…

 

லை முழுதும் நரைத்து பஞ்சுப் பொதியாகி ,தாடியும் மீசையும் வெண்மையாகி,கூன் விழுந்து , நடை தளர்ந்து , எலும்பும் தோலுமாய் மெலிந்து ,கோலூன்றி நடக்கும் தாத்தா ,பாட்டிகளை நான் சிறுவனாக இருந்த போது நிறையப் பார்த்திருக்கிறேன். பொக்கை வாய் திறந்து அவர்கள் சிரிப்பதை பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.லொக் லொக்கென அவர்கள் இருமிக்கொண்டே இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

 

கூன் ,ஊன்றுகோல் ,பொக்கைவாய் ,நரை , லொக் லொக்கென இருமல் ஐந்தும் அப்போது முதுமையின் அடையாளங்களென நினைத்திருந்தேன். இன்று அப்படிப்பட்ட அடையாளங்களோடுள்ள தாத்தா பாட்டிகளைத் தேட வேண்டியுள்ளது . நான் சொல்லும் பழைய அடையாளங்களை என் பேரன் நம்ப மறுக்கிறான் .

 

இன்று மருத்துவம் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறது. வசதி இருந்தால் மருத்துவமும் நவீன வசதிகளும் முதுமையின் பழைய அடையாளங்கள் பலவற்றைத் துடைத்து எறிந்துவிடும் .ஆனால் முதுமை இல்லாமல் போவதில்லை . இன்றைய முதுமையின் துயர் , வலி வேறு .

 

இன்று சில அதிமேதாவிகள் கதைக்கிறார்கள் , “ அன்று மனிதன் நூறு வயதுவரை ஆரோக்கியமாக இருந்தான் . இன்று சீக்கிரம் செத்துவிடுகிறான் .”

 

இந்த வாதம் அறியாமையின் உச்சம் . அன்று குழந்தை இறப்பு விகிதம் அதிகம் ,பேறுகால மரணம் ,தொற்றுநோய் மரணம் என எல்லா வயதினரும் செத்துக் கொண்டிருந்தனர் .இந்தியா விடுதலை அடையும் போது தனிமனித சராசரி வாழ்நாள் வெறுமே சுமார் 30 ஆண்டுகளே .இன்று எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் . அன்று பிறந்ததில் பாதி செத்துப் போயின .ராஜராஜ சோழனுக்கும் அவுரங்க சீப்புக்கும் அதுதான் நிலை . இன்றைய மருத்துவ முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடவே கூடாது . அதில் நடக்கும் கொள்ளை மோசடி தனி .இங்கு நான் பேசப்போகிற பொருளோடு அது தொடர்பற்றது என்பதால் தவிர்க்கிறேன்.

 

இன்றைய முதுமையை நாம் நேரில் பார்க்கிறோம் .அதன் பிரச்சனைகளைப் பிறிதோர் இடத்தில் பேசுவோம் .சங்க கால முதுமை எப்படி இருந்தது ? நாலடியார் இதுகுறித்து நிறையப் பேசி இருக்கிறது . எல்லாமே  “யாக்கை நிலையாமை” எனும் தத்துவ நோக்கின்பால் பட்டதே

 

 “ மூப்பு நிச்சயமாக வரும் .நாம் முதுமை எய்துவிடுவோம் . என்பதை நன்குணர்ந்த நல்லறிவாளர்கள்  இளமையிலேயே துறவு பூண்டுவிடுவாராம் ; ஆனால் இன்னொருசாரார் என்ன செய்வாராம் ? இளைமைக் காலம் நெடுநாள் நீடிக்காது என்பதைப் பற்றி கவலைப்படாமல் இளமைப் பருவத்தில் தடுப்பாரின்றி மகிழ்ந்து கூத்தாடுவாராம் ; ஆயின் முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் திரிவாராம்..”

 

அந்த முதுமைக் காலம் எப்படி இருக்குமாம் ?

 

 “ நண்பர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுவிட நட்பெனும் கயிறு அறுந்து போகுமாம் ; உற்றார் உறவுகள் சுற்றத்தார் அன்பும் அப்படித்தான் இற்றுப் போகுமாம் ; [ ஆணாதிக்க மனோ நிலையிலிருந்து நாலடியார் சொல்கிறது ] பெண்களும் அன்பு குறைந்து ஒதுங்கிச் சென்றுவிடுவாராம் ; இதை எல்லாம் யோசித்துப் பாரப்பா ! கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் முதுமைத் துன்பம் வந்து விடும்! அதற்குப் பிறகும் உயிரோடு இருப்பதில் என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை.”

 

என சலித்துக் கொள்கிறது நாலடியார்.அதன் பின் கேட்கிறது…

 

 “வாய் பேச முடியாது நாக்கு குழற , பற்களெல்லாம் கொட்டிவிழ , பொக்கை வாயாக ,கோல் ஊன்றித் தள்ளாடி தடுமாற அப்படிப்பட்ட முதுமையிலும் சிற்றின்ப வேட்கையோடு அலைகிறவரைக் கண்டு பிறர் எள்ளி நகையாட மாட்டாரா ? இது தேவையா ? இப்படி வெட்கம் கெட்டு அலைவோர் பேரின்ப வீடுபேற்று நெறியில் செல்லும் வாய்ப்பேதும் இல்லையே !”

 

சுற்றி சுற்றி நாலடியார் எங்கே வருது பாருங்கள் ?

 

 “முதுகு வளைந்து கூன் விழுந்து , உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தடியை ஊன்றி நடக்கவும் இயலாமல் தள்ளாடி வீழ்ந்து கிடக்கும் இவள் மீது ;எந்த நொடியிலும் சாவை எதிர்பார்த்து கிடக்கும் இவள் மீது  காம மயக்கம் கொண்ட மனிதா ! இவள் தாய் இப்படி தடியூன்றி நின்ற பொழுது இவள் இளமை பூத்து நின்றிருக்கக்கூடும் ; ஆனால் இன்று எண்ணிப்பார் ! இந்த நிலையில்லா யாக்கை மீது மயக்கம் கொள்ளலாமோ ?”

 

 

யாக்கை நிலையாமையைச் சொன்னது சரி ! ஆயின் அதற்காக எல்லாவற்றையும் இளமையிலேயே விட்டொழி என்பது என்ன நியாயம் ?

 

புறநானூறு [பாடல் : 243.] வேறொரு காட்சியை வரைந்து காட்டுகிறது . இப்பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை .தொகுத்தவர் சூட்டிய பெயர் தொடித்தலை விழுத்தண்டினார்.

 

 “ நான் சிறுவனாய் ஓடி விளையாடிக் களிப்புற்றிருந்த அந்தக்காலம் மீண்டும் வருமா ? பூமியைக் கிளறி மண்ணை எடுத்து அதில் அளவாகத் தண்ணீரை ஊற்றி நன்கு இறுகப் பிசைந்து அழகு அழகாக பொம்மைகள் செய்வேன் .அதுவும் பெண் பொம்மைகளாய்ச் செய்வேன் . நந்தவனத்துக்கு ஓடிப்போய் அழகு அழகாய் வண்ண நறுமலர் கொய்து பொம்மைக்கு சூட்டி மகிழ்வேன் .ஒற்றை மலராகவும் அணிவிப்பேன் .மாலையாகத் தொடுத்தும் மகிழ்விப்பேன் . அந்த பொம்மைப் பாவையின் பேரழகு என்னை ஈர்க்கும் ; வசீகரிக்கும் ;அது என்னைப் பார்த்து சிரிக்கும் ; புன்னகைவீசும் ; என்னோடு பேசி மகிழ்விக்கும் . அது எனக்கு மட்டுமே தெரியும் .”

 

 “ நானும் என்னொத்த சிறுவர் சிறுமியரும் நீராடச்  செல்வோம் ; ஆம் ,வெறுமே குளிப்பதல்ல ;நீரில் ஆட்டம் போடச் செல்வோம் . எங்களுக்குள் பால் வேறுபாடு தலைநீட்டாது ; ஒருவரை ஒருவர் கட்டியணைத்து குதித்து விளையாடுவோம் .மேலிருந்து பொத்துபொத்தென குதிப்போம். மகிழ்ச்சி கூச்சலிடுவோம் .கத்துவோம். தண்ணீரில் விழுந்து நீச்சலடித்து மூழ்கி முக்குளித்து எழுந்து ஆரவாரம் செய்து களித்திருப்போம் .எங்கள் அன்பும் களிப்பும் அந்த நீரைப்போல் தூய்மையானது ; குற்றம் குறை காண முடியாது. எங்களின் பூரிப்பும் களிப்பும் அளவிட முடியாதது .”

 

 

என் வயதொத்தவர் மேற்கண்டவாறு ஆடிக் களித்திருக்க முடியும் ? எம் பேரப்பிள்ளைகளுக்கு இந்த வாய்ப்பு அருகிவிட்டதே ! இப்பாடல் தொடர்ந்து வரையும் காட்சி என்னை இளம்பருவத்துக்கே கூட்டிச் சென்றுவிட்டது .

 

 

 “ அந்த குளத்தங்கரையில் பழைய மருத மரம் ஒன்று செழித்து ஓங்கி நின்றது. அதன் கிளைகளில் ஒன்று குளத்து நீரை காதலித்ததோ என்னவோ ? குறுக்கே நீரை நோக்கி தாழ்ந்து நீண்டு திரண்டு கிடந்தது .” ஆஹா ! திரைப்பட காட்சி அல்ல, நேற்றைய தலைமுறை கண்டு களித்த காட்சி .

 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கள்ளத்தனத்தை கல்லாத, அறியாத வயது எங்களுக்கு .என்னொத்த அந்தச் சிறுவர்களுடன், அந்த மரத்தில் ஏறி நடந்து குளத்தின் ஆழமான இடத்திலே குதிப்போம் . பார்ப்பவர்கள் வியப்பாரென்று எண்ணி, தண்ணீர் தெறித்துச் சிதறுமாறு, பொத்துபொத்தென்று குதிப்போம் .குளத்தின் அடிச்சென்று மண்ணள்ளி வந்து மேலே உள்ளோரிடம் காட்டும் போது அடைந்த களிப்பிற்கு இணையாய் இன்னொன்றைச் சொல்ல முடியாது.அடடாவோ ! அடடா !.”

 

 “கள்ளம் கபடுமில்லாத பெருநட்பும், மகிழ்ச்சியும், [ அன்றையச் சூழலில்]கல்வி கற்றிராத அந்த இளமையில் இயற்கை எமக்குத் தந்த கொடை அல்லவா ? அஃது வாழ்வில் ஒருபோதும் திரும்பி வாராது . தலைப்பகுதியில் அழகிய வேலைப்பாடு செய்த நீண்ட  ஊன்றுகோலை  ஊன்றிவாறு  நடுங்கிக்கொண்டே நடக்கின்ற இந்த முதுமையில், அவ்வப்போது இருமல் வருகிறது. சிறிதே பேச முடிகின்றது. என்ன செய்ய ? இதுதானே முதுமை ! எனது முதுமையைக் கண்டு நானே இரங்குகிறேன். ஆயினும் கண்கள் கலங்க வருத்தப்பட ஏதுமில்லை .இது இயற்கையானது. இளமை நிலையாமையை இளமையில் அறிந்தவர் யார்?” என அப்பாடல் முடியும் .

 

இளமை நிலைக்காது என தத்துவம் சொன்னாலும் இளமையை வெறுத்தொதுக்கச் சொல்லாமல் இளமையைக் கொண்டாட்டமாய் வர்ணித்துள்ளதே புறநானூற்றின் சிறப்பு . நாலடியார் சமணம் சார்ந்த நூல் ஆதலால் துறவு நோக்கி உந்தித்தள்ள முயல்கிறது .புறநானூறோ இயற்கையோடு இயைந்து வாழ்வதை விதந்தோதுகிறது .

 

பருவங்களை வகுத்த தமிழ் இலக்கண நூல்கள் , பேதை .பெதும்பை, மங்கை ,மடந்தை ,அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என பெண்ணுக்கு ஏழு பருவங்களை முப்பது வயதுக்குள்ளேயே பகுத்து பிரித்துவிட்டது . பாலன் ,மீளி , மறவோன் ,திறவோன்,விடலை ,காளை ,முதுமகன் என ஏழு பருவங்களை அதே முப்பதுக்குள் ஆணுக்கும் வகுத்துக் கொடுத்தது .ஆயின் இதனை 72 வயதுவரை என நீட்டித்து இன்று கயிறு திரிப்போர் உண்டு . அன்றைக்கு முப்பது வயதைத் தாண்டுவதே பெரும்பாடாய் இருந்திருக்கிறது போலும்.

 

போகட்டும் ! எல்லா வயதும் எல்லா பருவமும் வாழ்வதற்கே ! அந்தந்த வயதில் அததற்குரிய வாழ்வை வாழ்வதே நன்று .கழிவிரக்கமும் தேவையில்லை . மூப்பை எண்ணி இப்போதே கலங்கவும் வேண்டாம் !அறிவுபூர்வாய் யோசித்து திட்டமிட்டு வாழ்வீர் !

 

வாசிக்க முடியும் வரை – எழுத முடியும் வரை – பேச முடியும் வரையே வாழவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். முடிவு என் கையில் இல்லையே !

 

முதுமையில் அசைபோட்டு மகிழ…

இளமையில் மானுடம் பயனுற வாழ்க !

 

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார். [ நாலடியார்.11]

 

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி. [நாலடியார் .12]

 

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு. [நாலடியார்.13]

 

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. [நாலடியார்.14]

“இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.”

புறநானூறு-243, பாடியவர் பெயரில்லை.

 

முதுமையில் அசைபோட்டு மகிழ…

இளமையில் மானுடம் பயனுற வாழ்க !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

16/9/2022.
 பண்பாட்டு அரசியல் உரையாடலாய் ஏழு கதைகள்

Posted by அகத்தீ Labels:
பண்பாட்டு அரசியல் உரையாடலாய் ஏழு கதைகள்

 

 “ கதைத் தொகுப்பு என்று நான் வேண்டுமென்றேதான் குறிப்பிடுகிறேன். இவற்றை சிறுகதை என்றோ குறுநாவல் என்றோ அழைத்து அந்த வட்டத்துக்குள் அடக்க முடியாது.” என இரா,இளங்கோவன் அணிந்துரையில் சொல்லி இருப்பதை நானும் வழிமொழிகிறேன் .

 

 “அஞ்சுநாள் கிரிக்கெட்டும் ஆகம சாஸ்த்ரமும்,” எனும் இந்நூலில் உள்ள ஏழுகதைகளும் அரசியல் பேசுபவையே . அரசியல் என்றதும் கட்சி , கொடி என்று தேடினால் ஏமாந்து போவீர்கள் ! அரசியலின் கருத்தியல் சார்ந்த அழுத்தமான உரையாடல்கள் .பண்பாட்டு அரசியல் என வகைப்படுத்தலாம் . சனாதன அரசியலுக்கு எதிராக ராமச்சந்திர வைத்தியநாத் தமக்கே உரிய பாணியில் உரையாடுகிறார் .

 

 ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவவற்றின் தோற்றம்’ குறித்த எங்கெல்ஸ் நூலில் இருந்து ஒரு மேற்கோளுடன் ‘ உபரி மதிப்பு’ என்ற கதை தொடங்குகிறது .

“ சார் வெலையப் பார்க்காதீங்க .அதுவும் மேடம் மாதிரி வேலைக்குப் போறவங்க போட்டுண்டா க்யூட்டா இருக்கும்”

 “ அதெல்லாம் ஒண்ணுமில்லே .இவங்க வீட்லே சும்மா இருக்கிறவங்கதான் .சாதாரண சிலிப்பரே போதும்.”

பதினோரு பக்கங்களில் சொன்னதின் கதைச்சுருக்கமாய் கடைசி நெற்றியடி வசனம் . பெண்ணின் உழைப்பை கணக்கில் கொள்ளாத சமூகம் பற்றிய சித்திரம்.

 

  “தொற்றுக்கிருமிகள்” 29 பக்கங்கள் கொண்டகதை  கதை .கொரானா காலத்தில் தூய்மைப் பணியாளரின் பணியின் கடுமையை , சூழலின் நெருக்கடியை கொரானா பற்றிய தப்பான புரிதலும் மேட்டிமைதனத்தோடும் நடந்துகொள்ளும் அடுக்கக ஜென்மங்கள் , குப்பை சேகரிப்போரின் வலி எல்லாம் பேசப்பட்டுள்ளது . வெஜ் அபார்ட்மெண்ட் என்ற எள்ளலும் ; வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர் மூலமே அந்த வெஜ் அபார்ட்மெண்டில் கொரானா தொற்றும் யதார்த்தமான சித்தரிப்பு . ஆயினும் இக்கதையில் ஏதோ ஓர் முழுமையின்மை இருப்பதாய்ப் படுவது எனக்கு மட்டும்தானா ?

 

கொரானா பற்றிய இன்னொரு கதை “காலங்கடந்து போகும்” .54 பக்கங்கள் விரிந்த கதை . விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் நகரும் கதை நெடுக கொரானா குறித்த உரையாடல் . ஜக்கி வசுதேவிடம் பம்மும் அரசு நிர்வாகம் சாதாரண மக்களிடம் அதிகாரத்தைக் காட்டும் அவலம் , தீர்வு அறிவியலில்தான் ஆன்மீக ஆர்ப்பாட்டங்களும் மேலோட்டமான பஞ்சாக்கப் பேச்சுக்களும் அல்ல என உரையாடலும் காட்சியுமாய் சாட்சி சொல்கின்றன . ஏற்கெனவே ப்ளேக ,பெரியம்மை ,போலியோ போன்ற பல நோய்களுக்கு மருந்தும் தடுப்பூசியும் கண்டுபிடித்ததுபோல் கொரானாவுக்கும் கண்டுபிடிக்கப்படும் என நம்பிக்கையை விதைக்கும் கதை . கதைபோக்கில் மதவெறி ,சாதிவெறி ,மோடியின் கூத்துகள் எல்லாம் பகடி செய்யப்படுகிறது .ஓரிடத்தில் பெரியம்மா சொல்வார் , “குரோதமும் துவேஷமும் தீயாய் எரியறச்ச்சே ,வேதமாவது வெங்காயமாவது.”

 

18 பக்கங்களில் விரியும் “கர்வாப்ஸி”யும் , 32 பக்கங்களில் நீளும் “ க்யா அம்பேட்கர் நே சிர் பர் பகடி பாந்த்” கதையும் சாதியத்தின் குரூர முகத்தை எவ்வளவு பவுடர் போட்டு மறைத்தாலும் மறையாது என்பதைச் சொல்கிறது .

 

கர்வாப்ஸி செய்து மதம் மாறிய பின்னும் காதலி என்ன சாதி ,என்ன கோத்திரம் என சாதி ஆதிக்கம் விரட்ட காதலன் மனம் நொந்து காதலியோடு கிறுத்துவம் தளுவுவது நெற்றிப் பொட்டில் அறையும் செய்தி .

 

என்னதான் வசதி வந்தாலும் ஆடம்பரமாக திருமணம் செய்தாலும் அம்பேத்கர் பிறந்த மஹர் சாதியினருக்கு திருமணத்தில் முண்டாசு கட்டவும் ,குதிரையில் பவனி வரவும் அனுமதியில்லாத சாதி ஆதிக்கம் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது .ஊடவே மேல் சாதியினரின் மாறிய சடங்குகள் பார்வைகள் மாறாத சாதியம் எல்லாம் உரையாடலாய் நீள்கிறது .

 

 “ காத்தாடி மாஞ்சாவும் ப்ரொக்டார் அண்ட் காம்பிள் திருநீறும்” 37 பக்கங்களில் குழந்தைகள் தொலைத்த உலகத்தை மீட்டெடுக்க ஒரு தாத்தா மூலம் முயற்சிக்கிறார் . உரையாடல் ஊடே இன்றைக்கு கார்ப்பரேட் திணிக்கும் பண்பாடு குறித்து ஊசி சொருகுகிறார் .  “வேதிக் பார்முலா விபூதி விற்றாலும் விற்பாங்க” என்கிற நையாண்டியை ரொம்ப ரசித்தேன் .

 

28 பக்கங்களில் தலைப்புக் கதை “அஞ்சுநாள் கிரிக்கெட்டும் ஆகம சாஸ்த்ரமும்” கதை சாஸ்திரிகளின் வாழ்க்கையிலும் விளையாடும் மதவெறிக்கூட்டம் குறித்த உள்ளிருந்த குரலாய் வெளிப்படுகிறது . “ வழிபாட்டை ஜனநாயப்படுத்த வேண்டும்” என்கிற நியாயமான குரலை இக்கதை விவாதங்களூடே சொல்லுகிறது . வெறுப்பை ,மோதலை தூண்டிவிட இப்போது வழிபாடு பயன்படுத்தப்படுவதையும் கதை போகிற போக்கிலாவது அழுத்தமாகக் காட்சிப் படுத்தி இருக்கலாமோ ?

 

 “ அழுக்குப் படிந்த கற்பனையில் உருவான…” என்கிற தலைப்பில் ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய முன்னுரையை கடைசியில் படியுங்கள் .அவசியம் படியுங்கள் .கதைகளைப்போலவே கதை பிறந்த களங்களும் நம் கவனத்துக்கு உரியன.

 

 

அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ரயில்வே போராட்டம் குறித்த நாவல்  ‘ஸ்டிரைக்’ , ‘பூர்ணஹூதி’ [கதைகள்] , , ‘அஸ்வமேதம்’ ,   ‘சென்னப்பட்டிணம் மண்ணும் மக்களும்’  என சிறந்த படைப்புகளைதந்த ராமச்சந்திர வைத்தியநாத்தின் எழுத்தில் இன்னொன்றாக  “அஞ்சுநாள் கிரிக்கெட்டும் ஆகம சாஸ்த்ரமும்,” அதேசமயம் நான் மீண்டும் சொல்கிறேன் பண்பாட்டு அரசியல் உரையாடலாகவே இக்கதைகள்.

 

இரா.இளங்கோவின் அணிந்துரைக்கு தெரிந்தோ தெரியாமலோ வைத்துள்ள தலைப்பு “பொறுமை தேவை”; நூலுக்கு பொருத்தமாகத்தானே சொல்லியிருக்கிறார் !.

 

அஞ்சுநாள் கிரிக்கெட்டும் ஆகம சாஸ்த்ரமும்,

ஆசிரியர் : ராமச்சந்திர வைத்தியநாத் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு :044- 24332424 / 24332924 / 24356935 / 8778073949 , Email : thamizhbooks@ail.com / www.thamizhbooks.com

பக்கங்கள் : 224 . விலை : ரூ.220 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

12/ 9/ 2022.

  

சிறுகதை .4.இந்த வயசில தெய்வ காரியம் நல்லதுதானே

Posted by அகத்தீ Labels:

 


சிறுகதை .4.

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

இந்த வயசில தெய்வ காரியம் நல்லதுதானே

 

ஞாயிற்றுக் கிழமையின் சோம்பேறித்தனமும் அரைத் தூக்கமுமாய் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் சுரேஷ் .

 

 “ சாயங்காலம் ஆயிடிச்சு இன்னும் பொழுது விடியலையா துரைக்கு ?” என குரல் கொடுத்தவாறே வந்து அமர்ந்தார் ராமசுப்பு .

 

சற்று நேரத்தில் ராமலிங்கமும் வந்து சேர்ந்தார் . சூடான டிக்காஷன் காபியும் பஜ்ஜியும் வந்து சேர்ந்தது . அரட்டைக் கச்சேரி ஆரம்பமானது .

 

இது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாடிக்கைதான் . வானக்கூரையின் கீழ் இருக்கும் சகலதும் அங்கு அரைபடும் . அலுவலகத்தின் ஜீவன்கள் கழுவி ஊற்றப்படும் .

 

டிவி டிஸ்கஸன் மாதிரிதான் . ராமசுப்பு வலது ,ராமலிங்கம் இடது .சுரேஷ் அங்கிட்டும் இங்கிட்டும் .மூவரும் ஒரே வகுப்பு நண்பர்கள் .அலுவலகமும் ஒன்றாகப் போனது தற்செயலானது . வேடிக்கை பார்க்கவும் சமயத்தில் நக்கலடிக்கவும் அவ்வப்போது தலைநீட்டுவாள் சுரேஷின் தர்மபத்தினி தருமு என்கிற தர்மாம்பாள்.

 

நெருங்கும் பிள்ளையார் சதுர்த்தி பற்றி அன்றைய உரையாடல் நீண்டது .

 

 “ நீங்க எதையாவது பேசிக்கிட்டே இருங்க அருண் பிள்ளையார் சதுர்த்தி வசூல் அது இதுன்னு ஊர் சுற்றிகிட்டு இருக்கான் . அவன் மேல ஒரு கண்ணு வையுங்க …” தருமு குரல் கொடுத்தாள் . தன் பிள்ளையைப் பற்றிய கவலை அவளுக்கு …

 

 “ சிஸ்டர் ! அவன் என்ன பொறுக்கித்தனமாகவா ஊர் சுற்றுறான் … எல்லாம் தெய்வ காரியம் --- இந்த வயசில தெய்வ ஈடுபாடு நல்லது … கெட்ட சகவாசம் வராமல் தடுக்கும்… விநாயகன் எப்போதும் நல்ல புத்திதான் கொடுப்பான்..” ராமசுப்பு தன் அஸ்திரத்தை ஏவினார் .

 

 “ போதையும் குத்தாட்டமும் குரங்குதனமுமே பிள்ளையார் சதுர்த்தியாய் போய்க்கொண்டிருக்கிறது … இதுல பக்தி எங்கே ஒழுக்கம் எங்கே …?” ராமலிங்கம் புருவத்தை நெரித்தார் .

 

 “ காம்ரேட் ராமலிங்கம் ! உங்க அரசியல நிறுத்துங்க … இந்துக்கள புண்படுத்தாதீங்க …”

 

 “ புடிச்சா புள்ளையாரு வழிச்சா சாணின்னு இருந்தவரை ,அரசமரத்தடியில் பேசாமல் இருந்த புள்ளையாரை அரசியலில் இழுத்துவிட்டு கலவர புள்ளையாராக்கினது நீங்கதானே …”

 

“ அண்ணா ! நார்த்தில இருந்து எங்க மதினி வந்திருந்தா அங்கெல்லாம் புள்ளையாருண்ணா யாருக்குமே தெரியாதாம் கணேஷ் சதுர்த்திதானாம் … அதுமட்டுமல்ல நம்ம புள்ளையாரு மாதிரி அவரு பிரம்மச்சாரி இல்லையாம் இரண்டு பொண்டாட்டியாம்…” என சந்தேகம் கேட்கிறமாதிரி தருமு தன் பங்குக்கு கொளுத்திப் போட்டாள்.

 

 ராமசுப்பு நெளிந்தார் , “ பகவானுக்கு பல நாமங்கள் இருக்கும் ; ஒவ்வொரு ஊருலேயும் சில விஷேசம் இருக்கும் … நம்ம பகவான் அதுதான் முக்கியம்..” ராமசுப்பு சப்பைக்கட்டுக் கட்டினார் .

 

புரிந்தும் புரியாமலும் தருமு தலையாட்டினாள்.

 

 

 “ ஆமாம் அப்படியே இருந்து தொலையட்டும் ! கணபதி ஹோமம் பண்றேளே அதிலயும் புள்ளையார்னு சொல்வதில்லையே ஏன் ?” ராமலிங்கம் சும்மா கேட்டுவைத்தார் .

 

 “ அப்ப புள்ளையார் வேறு கணபதி வேறுன்னு சொல்றீங்களா ? அண்ணைக்கு முருகன் வேறு சுப்ரமணியன் வேறுன்னு நீங்க தெளிவாச் சொன்னமாதிரி இதையும் உடைச்சு சொல்லுங்க…” சுரேஷ் ஆர்வத்தைக் கிளறிவிட்டார் .

 

 “ சுகி சிவம் கூட அதையே சொன்னாரு .. யூ டியுப்ல கேட்டேன்…சுப்பிரமணியன்னா சுத்தமான பிராமணன்னு அர்த்தம்னு வேற சொன்னாரு ஆனா அவரு சமரசமா சொன்னாரு…”

 

 ராமசுப்பு மவுனம் காப்பதே நல்லதுன்னு பேசாமல் இருந்தார் !

 

“ ராமசுப்பு ! உங்க சாதில சுப்பிரமணிய ஐயர் இருக்கார் முருகய்யர் இருக்காரா ? கணபதி ஐயர் இருக்கார் .புள்ளையார் ஐயர்னு பேர் இருக்கா ? புள்ளையார்கூட சாமிதானே அந்தப் பேர ஏன் வச்சிக்கிறது இல்ல …”

 

 “ வேண்டாம் ! ராமலிங்கம் ! வேறெதாவது பேசலாமே !”

 

 “ ஏங்க பொழுது இருட்டிடிச்சு இன்னும் பையனைக் காணோம்..” தருமு அம்மாவின் வருத்தத்தை தெரிவித்தார் .

 

 “ சுரேஷ் ! உங்க பையன் இந்து முன்னணி பசங்ககூட சுத்துறது நல்லதாப் படலை .. கவனிச்சுகிட்டே இரு!” – ராமலிங்கம் அக்கறையோடு சொன்னார் .

 

 “ ஆமாம் ! ஆமாம் ! இவங்க டி ஓய் எப் ஐ ல சேர்ந்து  ‘வேலை கொடு! சோறு போடு!”ன்னு ஊர்வலத்துக்கு அனுப்பி வை ! உருப்படாம போறதுக்கு …” ராமசுப்பு எரிச்சலோடு வார்த்தைகளைக் கொட்டினார் .

 

உரையாடல் சூடாவதைக் கண்ட சுரேஷ் விவாதத்தை திசைமாற்ற எண்ணி ,  “அதை விடுங்க …நம்ம சம்சுதின் அண்ணாச்சி மகன் நிக்காஹ் எண்ணிக்கு … நல்ல பிரியாணியை விட்ரக்கூடாது …”

 

 “ ஏங்க அண்ணன பிரியாணி சாப்பிட கூப்பிடுறீங்க … நியாயமே இல்ல…” தருமு குறுக்கிட்டாள் .

 

 “ எங்களுக்கு முன்னாடி பந்தில அவருதான் இருப்பாரு !” ராமலிங்கம் உண்மையைப் போட்டுடைக்க …

 

 “ தருமு! வீட்ல போட்டுக் கொடுத்திராதே !” என ராமசுப்பு கேட்டுக்கொண்டார் .

 

அந்த நேரம் பார்த்து அருண் கையில் பிரியாணிப் பொட்டலத்தோட நுழைய வீடே சிரிப்பில் மூழ்கியது .

 

அன்றைய சபை முடிந்தது .

 

*********** ***************** ***************

 

 “ அக்கா வாங்க மாமா வாங்க !” என தருமு வரவேற்க , மருக்கொழுந்து அவ புருஷன் மலைச்சாமி ,மகன் தனுஷ்கோடி மூவரும் உள்ளே நுழைந்தனர் .

 

உள்ளே நுழைந்ததும் தனுஷ்கோடி குளித்துவிட்டு ஒரு டி ஷர்ட்டோட வந்தான் .அதில் டி ஒய் எப் ஐ இரத்ததானக் கழகம் .சென்னை என அச்சிடப்பட்டிருந்தது .

 

பேச்சு இரத்ததானம் பற்றி திரும்பியது .

 

இந்த வருஷம் அதிகம் இரத்ததானம் செஞ்சதுக்காக தமிழ்நாடு அரசு விருது வழங்கினதை ; சுனாமியின் போது நாகை சென்று பணியாற்றியதை அதற்கும் அரசு பாராட்டும் சான்றிதழ் பெற்றதை எல்லாம் தனுஷ்கோடி சொல்லிக் கொண்டிருந்தான்.

 

 “ மாமா ! நம்ம குடும்பத்திலேயே இல்லாத தனுஷ்கோடிங்கிற பேர எப்படி புடிச்சீங்க..” தருமு கேட்டாள் .

 

 “ அதுவாம்மா ! தஞ்சாவூர்ல தனுஷ்கோடின்னு ஒருத்தர் இருந்தார் .அவரு பண்ணை அடிமையா இருந்தாரு ! சாதியில மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகம் .. சாணிப்பால் சவுக்கடின்னு வதைபட்டார் .. எழுதப்படிக்கத் தெரியாதவர் … சீனிவாச ராவ்னு ஒருத்தர் வந்தார். அடித்தால் திருப்பியடின்னு சொல்லிக் கொடுத்தார். தலை நிமிர்ந்தாங்க செங்கொடி பிடிச்சாங்க .. தனுஷ்கோடி போராட்டங்களிலே முன்னுக்கு நிண்ணாரு ,ஜெயில்ல அடச்சாங்க மாறாம நிண்ணாரு .. எழுதப் படிக்க கற்றார் … தலைவர் ஆனார் எம் எல் ஏ ஆனார் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான் பையனுக்கு வச்சேன் … அவனும் டி ஓய் எப் ல சேர்ந்து நல்லது செய்யுறான் .”

 

“ போராட்டம் அது இதுன்னு போய் கெட்டுப் போயிர மாட்டானா ?” தருமு கேள்வி .

 

 “ தருமு ! பயமில்லை .தோழர்கள் ரொம்ப நல்லவங்க உதவியாய் இருப்பாங்க ,பையனும் புத்திசாலியாகவும் யோக்கியனாகவும் வருவான் … போன வாரம்கூட போதை பழக்கத்திற்கு எதிரா மாரத்தான் ஓடினான்..” மருக்கொழுந்து சொல்ல தருமு வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தாள் .

 

சாப்பிட்டபின் எல்லோரும் ஊருக்கு கிளம்பினார்கள் .

 

**** **** **** **** **** ***

 

 “ என்ன சார் ! லேட்டு ! நான் முழிச்ச பிறகு வர்றீங்க ..” சுரேஷ் கேள்வி .

 

 “ புள்ளையார் ஊர்வலம் … ஒரே டிராபிக் …” ராமசுப்பு சொன்னார் .

 

 “ நீங்க போகலையா ?” சுரேஷ் கேட்க,

 

 “ பூஜைக்கு போவாங்க , தூண்டிவிடப் போவாங்க… எங்காவது கலவரத்தில இவங்க செத்ததா வந்திருக்கா ? அங்கேயும் கலவரத்துக்கு சூத்திரர்களும் தலித்துகளும்தான் .. இவங்க வர்ண தர்மம் இவ்வளவுதான்.. இந்துன்னு சொல்றதெல்லாம் அவங்க வாழத்தான்…” ராமலிங்கம் சொல்லச் சொல்ல ராமசுப்பு கோவத்தில் கொதித்தார் .

 

தருமு கொண்டுவந்த சுண்டலும் பாயசமும் அங்கே சற்று அமைதியைக் கொண்டு வந்தது .

 

சற்றைக்கெல்லாம் வெளியே கூச்சல் . ஓடிப் போய் பார்த்தனர் .

 

புள்ளையார் ஊர்வலம் போயிட்டு இருக்கிறப்போ அவங்களில ஒருத்தன் பாக்கெட்டில் வைத்திருந்த கையெறி குண்டு வெடிச்சதில் அருண் உட்பட பலருக்கு காயம் . ஒரே அழுகை . கூப்பாடு .

 

இவங்க கொண்டுபோன குண்டு வெடிச்சதாலே முஸ்லீம்மேல பழி போட முடியல …

 

ஆஸ்பத்திரியில் வலதுகாலில் அறுவை சிகிட்சை முடிந்து படுத்திருந்தான் அருண் . அன்று குண்டு வெடித்தபோது அருணும் அவன் நண்பர்களும் போதையில் இருந்ததைச் சொல்லி தருமு புலம்பிக் கொண்டிருந்தார் .

 

“ தெய்வ காரியம்னு விட்டா அது எங்கேயோ கொண்டு சேர்த்திடிச்சே …” சுரேஷ் கவலையை சொல்லிக் கொண்டிருந்தார் .

 

  “அம்மா ! நான் இனி தப்பு பண்ணமாட்டேம்மா ! என்னை நம்பு ! அண்ணிக்கு போற வழியில முஸ்லீம்கள் இருக்கிற தெருவில வீசத்தான் குண்ட எடுத்துப் போனோம் .. இனி தப்பு பண்ண மாட்டேன் நம்பும்மா …”

 

 “ உன்னை நம்பாமல் வேறு யாரை நம்பப் போறோம் அருண் ?” தருமு கண்ணீரோடு சொன்னாள்.

 

காயம் ஆறிக் கொண்டிருந்தது .வாக்கரோடு நடைபயிற்சி செய்ய எக்சசைஸ் செய்ய பிசியோதெரபிஸ்ட் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் .

 

எல்லாம் முடிந்து படுக்கையில் உட்கார்ந்ததும் , “ அம்மா! தனுஷ்கோடி அண்ணிக்கு எனக்கு கொடுத்த பகத்சிங் எழுதிய “ நான் ஏன் நாத்திகனானேன் ?” புத்தகத்தைக் கொண்டுவா ! நான் படிக்கணும்..”

 

அருண் பேச்சில் தெளிவு இருந்தது .

 

காற்று திசை மாறுவதுகண்டு ராமலிங்கமும் சுரேஷும் தருமும் புன்னகைத்தனர் .

 

ராமசுப்பு மவுனமாய் வெளியேறிக் கொண்டிருந்தார் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

8/9/2022.