பெண் - வசை - அரசியல்

Posted by அகத்தீ Labels:ஒரு உண்மை என்னவெனில் எல்லோர் உணர்விலும்
ஆணாதிக்க மனோநிலை உறைந்து போயுள்ளது .

ஆணிடம் மட்டுமல்ல பெண்ணிடமும் இந்தக் குணம் உண்டு. சாதாரண சண்டையில் கூட எடுத்த எடுப்பில் ஆணோ /பெண்ணோ பயன்படுத்தும் வார்த்தை எது ?

கொஞ்சம் மனம் திறந்து அசைபோடுங்கள் .

தப்பு செய்தவனை திட்ட அவன் தாயை இழிவு செய்வதும் – பெண்ணெனில் அவளது நடத்தையை இழிவுசெய்வதும் எங்கும் தொடர்கிறது .

இது ஆணாதிக்கம் நம் குருதியோடு கலந்துவிட்டதின் அறிகுறி !அரசியல் மேடையில் பெண்களை
இழிவு செய்வது தொடர்வதேன் ?


குஜன் கட்சித் தலைவர் மாயாவதியை மிகவும் தரக்குறைவாகப் பேசினார் பாஜக உ.பி. துணைத் தலைவர் தயா சங்கர்  சிங் . அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது . கட்சிப் பொறுப்பிலிருந்து தயா சங்கரை நீக்கி பாஜக தன் முகத்தைக் காக்கும் முயற்சியில் இறங்கியது . பகுஜன் தொண்டர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இப்போராட்டங்களில் தயா சங்கர் சிங்கின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது அவதூறு பொழியப்பட்டதாக இப்போது மாயாவதி மீதும் அவரது கட்சிக்காரர்கள் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன . இதில் பாஜகவின் அரசியல் காய் நகர்த்தல்கள் நிச்சயம் உண்டு. எனினும்  யாராயினும் எச்சூழலிலாயினும் பெண்ணென்ற முறையில் இழிவு செய்வதை ஏற்கவே இயலாது .

இச்சம்பவம் தொடர்பாக ஜெயலலிதா ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார் அதில் தன் மீதும் இத்தகைய இழிமொழிகள் வீசப்பட்டதை நினைவு கூர்ந்தார் . மெய்தான் ஜெயலலிதா மீது  அரசியல் ரீதியாக எமக்கு கடும் விமர்சனங்கள் உண்டு எனினும் தனிப்பட்ட முறையில் – அதுவும் பெண்ணென்ற ரீதியில் இழிவு செய்வதை நாம் ஒரு போதும் ஏற்க இயலாது .

இந்த விவாதம் நடக்கிறபோது திமுக உடன் பிறப்புகள் கனிமொழி குறித்து ஜெயலலிதாவும் அவரது கட்சியினரும் உமிழ்ந்த இழிமொழிகளை சுட்டிக்காட்டி அது நியாயமா என கேள்வி எழுப்பினர் . சரிதான் . அதுவும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே !

தமிழிசை குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய இழிமொழிகளை சங்பரிவார் நினைவூட்டுகிறது . அதனையும் நாம் ஏற்கவில்லை .ஜனநாயக மாதர் சங்க ஊழியர்கள் மீது தொடர்ந்து பொழியப்படும் அவதூறுகளுகு எல்லையே இல்லை . ஆனால் அது குறித்து என்றைக்கேனும் பொதுவெளியில் ஜெயலலிதாவோ /கருணாநிதியோ கண்டித்ததுண்டா ?இல்லையே!

தமிழக அரசியல் மேடை பொதுவாக ஆபாசம் , அருவருப்பு மிக்கதாய் மாறிவருவது கவலை அளிக்கிறது . இப்போக்கு களையப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது . ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் கேள்வி.

மேற்கு வங்கத்தில் ஒரு மார்க்சிஸ்ட் ஊழியர் உணர்ச்சி வசப்பட்டு மேடையில் மம்தாவை தரக்குறைவாக விமர்சித்தபோது ; அதே கட்சியின் மூத்த தலைவர்கள் அவரைக் கண்டித்ததுடன் மன்னிப்பும் கேட்டனர் . இதுதான் நயத்தகு நாகரீகம் .தமிழகத்தில் இக்கலாச்சாரம் பூப்பது எப்போது ?

ஒரு உண்மை என்னவெனில் எல்லோர் உணர்விலும் ஆணாதிக்க மனோநிலை உறைந்து போயுள்ளது .ஆணிடம் மட்டுமல்ல பெண்ணிடமும் இந்தக் குணம் உண்டு. சாதாரண சண்டையில் கூட எடுத்த எடுப்பில் ஆணோ /பெண்ணோ பயன்படுத்தும் வார்த்தை எது ? கொஞ்சம் மனம் திறந்து அசைபோடுங்கள் . தப்பு செய்தவனை திட்ட அவன் தாயை இழிவு செய்வதும் – பெண்ணெனில் அவளது நடத்தையை இழிவுசெய்வதும் எங்கும் தொடர்கிறது .இது ஆணாதிக்கம் நம் குருதியோடு கலந்துவிட்டதின் அறிகுறி !

அதுமட்டுமா ? பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர் கதையாகிறது . அப்போதெல்லாம் எழுகிற குரலில் கணிசமான குரல் பெண்ணை முடக்குவதாகவும் ,பழமைச் சிமிழில் அடைப்பதாகவுமே அமைவது தற்செயலானதா ? ஊடகங்களில் வெளிப்படும் பெண்களுக்கு எதிரான வன்மம் நாளுக்கு நாள் பெருக்கிக் கொண்டே போகிறதே ! ஏன் ?

புகழ்மொழிகளோடும் போற்றி பஜனைகளோடும் பெண்ணை ஒடுக்குவதை நியாயப்படுத்தி அதனை வலியுறுத்தும் மதவாதமும் ; பெண்ணை வெறும் நுகர்வுப் பண்டமாகக் கருதும் உலகமய ,தாராளமயப் பொருளாதாரச் சூழலும் மேலும் மேலும் பாலின சமத்துவத்துக்கு குழிபறித்துக் கொண்டிருக்கின்றன .

இந்நிலையில் பாலினசமத்துவத்திற்கான  போர் மதவாதத்துக்கும் உலகமயத்துக்கும் எதிரானாதாகவும் இணைந்தே செய்யப்பட வேண்டும் . இந்த இரண்டோடும் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்துகொள்ளும் எந்தக் கட்சியாயினும் அது பேசும் பாலின சமத்துவம் ஊனமுடையதாகவே இருக்கும் .மாயாவதியை அவதூறு செய்யும் போது அவர்களுக்கு வரும் கோபம் எதிர்வினை ஆற்றும் போது மறந்து போகிறது .அதிமுக –திமுக லாவணியிலும் இதுவேதான் நிலை .

பாலின சமத்துவம் பேசுவதும் , எழுதுவதும் எளிது . ஆனால் பின்பற்றுவது . ஒவ்வொருவருக்குள்ளும் நடத்த வேண்டிய  பெரும் போராட்டமாகும் .அது எளிதல்ல.

பொதுவாழ்விற்கு பெண்கள் அதிகம் வரவேண்டும் ; இன்னும் சொல்லப்போனால் பாதிக்கு பாதி அவர்கள் என்கிற நிலை உருவானால் இந்தப் போக்கு கொஞ்சம் குறையலாம் . அப்போதும் முழுமையாக மாறாது ; ஏனெனில் பாலின சமத்துவம் குறித்து ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு பார்வை. பெரியாருக்கு இருந்த உறுதியும் தெளிவும் திமுக ,அதிமுகவிடம் அப்படியே உள்ளதா ? மதவாதக் கட்சிகளின் பிற்போக்குப் பார்வை சொல்லவே வேண்டாம் . கம்யூனிஸ்டுகள் பார்வை மேம்பட்டது . ஆக சமூகத்தில் ஒரு கருத்துப் போர் நடத்தாமல் வெறுமே அவ்வப்போது கண்டனங்கள் தெரிவிப்பது மட்டும் பயன் தருமா ? யோசிக்க வேண்டிய நேரம். கருத்துப் போருக்கு தயாராக வேண்டும் . வேறு வழியில்லை.

- சு.பொ.அகத்தியலிங்கம்.


கோப்பை

Posted by அகத்தீ Labels:

விஷத்தை எந்தக் கோப்பையில் கொடுத்தாலும்
விஷம் விஷம்தான்.


ஆனால் அவர் சொல்லுகிறார் :
“காவிக் கோப்பையில் குடித்தால் அது அமுதம்
பச்சைக் கோப்பையில் குடித்தால் அது விஷம்”


நான் கேட்கிறேன் :


“குடிப்பது எந்தக் கோப்பையாயினும்
விஷம் கொல்லத்தானே செய்யும்”


அவர் பதிலிடுகிறார்:
“.பச்சைக் கோப்பையில் உள்ளது விஷமே . காவிக் கோப்பையில் இருப்பது அமுதம் என்பது எங்கள் நம்பிக்கை அதை கேள்வி கேட்க நீங்கள் யார் ?”


நான் சும்மா இருக்காமல் சொன்னேன் :
“ பூமி தட்டை என்பது நம்பிக்கையாக இருந்தது ஆனால் இன்று ? பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது இதுவும் நம்பிக்கையாகத்தான் இருந்தது ? ஆனால் இன்று ? அனைத்தையும் கேள்வி கேட்டு உடைத்ததே அறிவியல் ; நம்பிக்கைகளை கேள்வி கேட்பது காயப்படுத்த அல்ல ; மெய்விசாரணையே ..”


மீண்டும் சொல்லுகிறார் :
“ இது ஆசீர்வதிக்கப்பட்ட கோப்பை ; அதிகார கிரீடம் இருக்கிறது ; இதில் இருப்பதை விஷமெனச் சொல்வதே தேசவிரோதம்...”


நான் சொல்லுகிறேன் ;


“ நீங்கள் வழக்கமான ஆயுதத்தை எடுத்துவிட்டீர்கள் ! அதுதான் உங்கள் கடைசி புகலிடம் ... உண்மையைச் சொல்லுகிறவனும் ... கேள்வி கேட்பவனும் எப்போதும் உங்களுக்கு தேசவிரோதியே..”


அவர் அதிகார குரலில் சொன்னார்:
“ நீ தேசவிரோதியாக இருக்கப் போகிறாயா ?”


நான் சொன்னேன் :
“ நான் கேள்வி கேட்பேன் . விஷம் எந்தக் கோப்பையில் இருந்தாலும் விஷம் என்பேன் .காவி, ,பச்சை ,மஞ்சள், , என கோப்பையின் வண்ணம் எதுவாக இருப்பினும் என் எண்ணம் ஒன்றே. அதன் உள்ளே இருப்பது விஷமே...”


அவர் ஓங்கி குரலெடுத்தார்:
“ நீ தேசவிரோதிதான் சந்தேகமே இல்லை .


நான் புன்முறுவலுடன் ஒப்புக் கொண்டேன் . பொய்மைக்கு அடிபணிவதைவிட மெய்க்கு பலியாவது மேலானதல்லவா ?

kavaithai

Posted by அகத்தீ Labels:*********************************************************************************************